போகிற போக்கில் …(1 )

……………………………………..

இந்தப் பிரபஞ்சத்தில் அற்புத ரகசியங்கள் பல உண்டு.

பல ஆண்டுகளாக தொடர்ந்து யோசித்துக் கொண்டிருக்கும்
சில விஷயங்ளைப்பற்றி இங்கே உங்களுடன் கலந்து பேசவும்,
உங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளவும்
விரும்புகிறேன்.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும்,
மனித, விலங்கின – உயிர்களும் அடிப்படையில்
எப்படி உருவாகின்றன….?

நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வானம் ….

ஆகிய பஞ்சபூதங்களால் உருவானவை தான்
இந்த உலகில் இருக்கும் அனத்துமே … எதுவுமே
இதில் விதிவிலக்கல்ல…

தாவரங்கள், விலங்குகள் மற்றும் அனைத்து
பிரபஞ்ச சக்திகளும் இவற்றால் உருவானவையே…

உண்மையில், படைக்கப்பட்ட எதுவும் “அழிவது கிடையாது” –
மாறாக “உருமாறுகின்றன” –
என்பது பொதுவாக ஆன்மிகத்திலும் சரி, விஞ்ஞானத்திலும் சரி…
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு கருத்தாக இருந்து வருகிறது.

ஒரு உயிர் மடிந்து விட்டாலோ, சில பொருட்கள் உடைந்து
தூக்கி எறியப்பட்டு விட்டாலோ, மக்கி விட்டாலோ – அவை
அழிந்து விட்டன என்று, பொதுவாக – நாம் அவற்றை
அத்தோடு மறந்து விடுகிறோம்….

ஆனால், அவை அழிவதில்லை;
மாறாக வேறு உருக்கொண்டு, வேறு வடிவில்
மீண்டும் இந்த மண்ணில் தான் தொடர்ந்து உலவுகின்றன.
பல சமயங்களில் நம்மால் அவற்றை
உணர முடிவதில்லை;

பஞ்சபூதங்களால் உருவாக்கப்பட்ட ஜீவராசிகள், இறப்பிற்கு பிறகு,
மீண்டும் இந்த பஞ்சபூதங்களிலேயே கலந்து, கரைந்து
விடுகின்றன.

தமிழின் மிகப்பழைய இலக்கியமான
தொல்காப்பியம் கூட –

” நிலம், தீ, நீர், வளி, விசும்பொடு
ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ” – என்கிறது….

இது பல படிகளில், பல நிலைகளில் – யோசிக்கப்பட
வேண்டிய விஷயம்.

முதலாவதாக ஒரு சின்னக் கேள்வி …

பிறந்தது முதலே நாம் பேசினோம்…
தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம் –
நம்மால் பேசப்பட்ட “இந்த வார்த்தைகள்” அவற்றின்
செயல்பாடு முடிந்த பிறகு என்ன ஆகின்றன…?

எதற்குமே அழிவில்லை என்பதை அடிப்படையாகக்கொண்டு
பார்த்தால் – நாம் பேசிய இந்த வார்த்தைகள்
“பிரபஞ்சத்தில்/அண்டவெளியில்” கலந்து விடுகின்றன
அல்லவா…?

நாம் பேசியது மட்டுமல்லாமல், நம் அப்பா, அம்மா, தாத்தா,
பாட்டி – அவர்களின் முன்னோர்கள் என்று உலகம் தோன்றிய
காலம் முதல் அனைவரும் பேசியவை இந்த பிரபஞ்சத்தில்
கலந்து தானே இருக்க வேண்டும் .. ?

அழிந்திருக்க வாய்ப்பில்லையே….?

கடலில் கரைத்த பெருங்காயம் என்பார்கள்….
கடல் நீரை பரிசோதித்துப் பார்த்தால் – அதில் பெருங்காயத்தின்
தடயமே இருக்காது… ஆனால், அதில் பெருங்காயம் கரைக்கப்பட்டு,
கலந்து இருப்பது உண்மை தானே….?

அதே போல், நாம் பேசிய பேச்சுகளும், இந்த பிரபஞ்சத்தில்
கலந்து தானே இருக்க வேண்டும்….?


இது ஒரு பக்கமிருக்கட்டும்….


எங்கோ, அமெரிக்காவிலோ, ஆப்பிரிக்காவிலோ,
ஆஸ்திரேலியாவிலோ, ஐரோப்பாவிலோ – உலகில் எந்த
மூலையிலோ இருக்கும் நமது உறவினர்களுடன், நண்பர்களுடன் –
நொடியில் தொடர்பு கொண்டு பேசுகிறோம்… சில சமயம் வீடியோ
வடிவத்திலும் அவர்களைக் காண்கிறோம்…

இது எப்படி சாத்தியமாகிறது….?

நாம் பேசுவது – இந்த மூலையில் மின்காந்த அலையாக மாற்றப்பட்டு,
பெறப்படும் மூலையில் மீண்டும் அந்த மின் காந்த அலைகள்,
ஒலியலைகளாக மாற்றப்பட்டு அடுத்தவர் கேட்க முடிகிறது.

இதை சுலபமாக சொல்லி விடலாம்…

ஆனால், இந்த தொழில் நுட்பம்,
முதலில்,பேச்சொலியை, மின் காந்த அலைகளாகவும், பின்னர்
மீண்டும் ஒலியலைகளாகவும் மாற்றும் தொழில் நுட்பம்
எப்படி நிகழ்கிறது…? இது எப்படி கண்டுபிடிக்கப்பட்டது….?
பின்னர், இதுவே வீடியோ பேச்சில், ஒளியலைகளாகவும்
மாற்றப்படுவது எப்படி….?

இந்து மதத்தில் – வேதங்கள் யாராலும் படைக்கப்படவில்லை;
வானத்தில் ஒலிக்கப்பட்ட அவற்றை ஆதிகாலத்தில் மூத்த ரிஷிகள்,
கிரகித்து, எழுதினார்கள் என்று சொல்லப்படுகிறது.

கிறிஸ்தவத்தில் கூட, 10 கட்டளைகள், மோசஸ் அவர்களுக்கு,
வானத்திலிருந்து அசரீரி மூலம் சொல்லப்பட்டதாகத்தான்
இருக்கிறது….

நண்பர்கள் யாராலாவது கூட இதைப்பற்றி இன்னும் கூடுதல்
விவரங்கள் தர முடியுமென்று நம்புகிறேன்.

மீண்டும் தொடர்வோம்…..

.
………………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல். Bookmark the permalink.