….
….
….
(முதல் பகுதியின் தொடர்ச்சி…)
இங்கே மேலே செல்வதற்கு முன்னால், 20-ஆம் நூற்றாண்டின்
முற்பகுதியில் தமிழக நாடக மேடையை முற்றிலுமாக
ஆக்கிரமித்து, அதை அடியோடு மாற்றி வடிவமைத்த பம்மல்
சம்பந்த முதலியார் அவர்களைப் பற்றி பல சுவாரஸ்யமான
விஷயங்களை இங்கே அவசியம் சொல்லியாக வேண்டும்.
( தமிழில் பாய்ஸ் நாடக கம்பெனிகளை உருவாக்கி திறம்பட
செயல்பட வைத்தவர்களில் ஒருவரான தலைமை ஆசிரியர்
தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களுக்கும் இதில்
பெரும் பங்குண்டு. இவரைத் தொடர்ந்து அவருக்கு வருவோம். )
தமிழ் நாடக உலகின் தந்தை என்று மதிக்கப்படுபவர்
பம்மல் திரு.சம்பந்த முதலியார்…
19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், உள்ளே நுழைந்தார்
பம்மல் முதலியார் – தமிழ் நாடகமேடைக்கு புத்துணர்வும்
புதுப்பொலிவும் தந்தார். அதுவரை இதிகாச நாடகங்களையும்,
புராண நாடகங்களையும் மட்டுமே நடத்தி வந்த தொழில்முறை
நாடகக் குழுவினரின் போக்கை மாற்றி, அவர்கள் வரலாறு
மற்றும் சமூக நாடகங்கள் நடிக்கத் தூண்டுகோலாக அமைந்தார்.
“கூத்தாடிகள்” என்றழைக்கப்பட்டு வந்தவர்களின் நிலையை
உயர்த்தி “கலைஞர்கள்” என்று அழைக்கப்படும் நிலையை
உருவாக்கினார்.
ஷேக்ஸ்பியரின் ஆங்கில நாடகங்களையும்,
வடமொழி நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்த்து,
அவற்றிற்கு புதிதாக நாடக வடிவம் தந்து
தமிழ் நாடகமேடையில் ஒரு புதிய உலகத்தை
உருவாக்கினார். முற்றிலும் பாடல்களாலேயே நிறைந்திருந்த
தமிழ் நாடகங்களில், வசனங்களுக்கு முக்கியத்துவம்
உண்டு பண்ணினார்.
பம்மல் சம்பந்த முதலியார் பிறந்தது 9.2.1873-ல்.
சென்னையில். முதலில் மாநிலக் கல்லூரியில் படித்து
பட்டமும், பின்னர் சட்டக் கல்லூரியிலும் படித்து பி.ஏ., பி.எல்.
பட்டமும் பெற்றார். சில காலம் வழக்கறிஞராகவும்,
பின்னர் நீதியரசராகவும் பணியாற்றினார். 24.9.1967-ல்
மறைந்தார்.
சம்பந்த முதலியாரின் தந்தை பம்மல் விஜயரங்க முதலியார்,
தாயார் மாணிக்கவேலம்மாள் . விஜயரங்க முதலியார் முதலில்
தமிழ் ஆசிரியராகவும், பின்னர் இன்ஸ்பெக்டர் ஆஃப் ஸ்கூல்ஸ்
என்கிற அரசு உத்தியோகத்திலும் இருந்தவர்.
அவர் பல தமிழ்ப் புத்தகங்களை வெளியிட்டு வந்தார்.
அதன் காரணமாக அவர்கள் வீட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன.
படிக்கத் தெரிந்த நாள் முதல் சம்பந்தம் இந்த புத்தகங்களை
யெல்லாம் ஒன்றொன்றாக ஆர்வமுடன் படித்து பழக்கமானதால்
தானும் எழுத வேண்டும் என்கிற அவா அவரிடம் இயல்பாகவே
எழுந்தது.
அவரது சிறு வயதில் அவரது தாயார் உணவு ஊட்டும்போது,
ராமாயணம், பாரதம், பெரிய புராணம் போன்றவற்றிலிருந்து
தினமும் ஒரு புதுக் கதை சொல்வதை வழக்கமாகக்
கொண்டிருந்தார். தான் நாடக ஆசிரியன் ஆனதற்கு, இவைகளே
காரணம் என்று தனது “நாடக மேடை நினைவுகள்”
என்கிற புத்தகத்தில் கூறுகிறார் சம்பந்தம்.
அந்தக் காலத்தில் நடை பெற்ற நாடகங்கள் இரவு முழுவதும்
விடிய விடிய நடக்கும். அதே போல் எல்லா நாடகங்களும்
மங்களமாகவே முடியும்.
இந்த பழக்கத்தை மாற்றி, இன்பமும் துன்பமும் கலந்த
முடிவுகளுடன் நாடகங்களைப் படைத்தார் முதலியார்.
இரவு பூராவும் நடந்த நாடகங்களை மூன்று மணி நேரத்துக்குள்
சுருக்கிய பெருமையும் அவரையே சாரும்.
பெல்லாரி கிருஷ்ணமாச்சார்யலு என்பவரது சரச வினோத சபா
என்கிற நாடகக்குழு சென்னையில் முகாம் போட்டு,
பல நாடகங்களை நடத்தினார்கள். இந்த நாடகங்கள் சம்பந்தத்தை
வெகுவாகக் கவர்ந்தன.
மேலும் இந்த பெல்லாரி குழுவில் –
வழக்கறிஞர்கள், நல்ல வேலையிலிருந்தவர்கள்,
படிப்பறிவு மிகுந்தவர்கள் ஆகியோர் பங்கேற்று,
தொழில் முறையில் இல்லாமல், பொழுதுபோக்குக்கு என்றே
நாடகம் நடத்தியது அவரிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து,
சென்னை ஜார்ஜ் டவுனில் -1891-ம் வருடம் ஜூலை ஒன்றாம் தேதி,
சுகுண விலாச சபை என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.
அப்போது அவருக்கு வயது 18 என்பது குறிப்பிடத்தக்கது.
….

1895-ல் எடுக்கப்பட்ட பம்மலின் சுகுண விலாச சபா நாடகக்குழுவினரின் படம்….. மேற்படி படத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஆண்களே ….
….
( இந்த சுகுண விலாச சபா இன்றும் சென்னையில் இயங்குகிறது
என்பதை அறிந்தால் ஆச்சரியம் உண்டாகிறது அல்லவா…?
அது எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்தால்,
இன்னும் ஆச்சரியம் கூடும்… விவரங்கள் அடுத்த பகுதியில்….)
அதே சமயத்தில் சென்னைக்கு விஜயம் செய்த
ஒரு பார்சி நாடகக் குழு சம்பந்தத்தை ஈர்த்தது. முக்கியமாக
அவர்களது மேடை அமைப்புகள், உடை அலங்காரங்கள்,
பின்னணிப் படுதா, பக்கத் திரைகள், மேலே தொங்கட்டான்கள்,
ஜாலர்கள் எல்லோரையும் கவரும் வண்ணம் இருந்தன.
அவர்களது நேரம் தவறாமையும்,
ஒரு காட்சிக்கும் மற்றோர் காட்சிக்கும் இடையே இருந்த
இடைவெளியும், அவருக்கு மகிழ்ச்சியளித்தன. தன்னுடைய
நாடகங்களிலும் இதே போல் அமைப்புகள் இருக்க வேண்டும்
என்றெண்ணியவர், பின்னர் இதை நடைமுறையிலும்
நிறைவேற்றிக் காட்டினார்…
சுகுணவிலாச சபை நடத்திய நாடகங்களில் அனைத்திலும்
சம்பந்தம் அவர்கள் தான் கதாநாயகன்.(ஹீரோ)
ரங்கவடிவேலு முதலியார் என்பவர் தான் ஹீரோயின் –
இதே அமைப்பு 1895-லிருந்து 1923ம் வருடம் வரை
தொடர்ந்திருக்கிறது.
பம்மல் சம்பந்தம் 529 முறை நாடக மேடையில் தோன்றி
இருக்கிறார். 109 வெவ்வேறு நாடகப் பாத்திரங்களில்
நடித்திருக்கிறார்.
அவர் எழுதி அச்சிட்டுள்ள நாடகங்களின் தொகை 68 –
அவரது அனுமதியுடன் 1891-லிருந்து, 1934ம் வருடம் வரை
சுகுண விலாச சபையாராலும்,
….

பம்மல் சம்பந்தம் தன் கைப்பட எழுதிய அனுமதிக் கடிதம் …
…..
சென்னையிலும், வெளியூர்களிலும் உள்ள மற்ற சபைகளாலும்,
அவரது நாடகங்கள் 4070 முறை மேடையேறியுள்ளன.
அரசு பதவியிலிருந்து 1928ல் ஓய்வு பெற்ற பிறகு,
அடுத்த ஏழு வருடங்கள் வரை சுகுண விலாச சபையில் மிகவும்
ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட ஒரு
மனக்கசப்பின் காரணமாக சபையின் நடவடிக்கைகளில் தனது
ஈடுபாட்டைக் குறைத்துக் கொண்டார்.
ஆனால் நாடக மேடையில் தோன்றும் அவர் ஆர்வம்
அவருக்கு சற்றும் குறையவில்லை என்பது,
ஐம்பதுகளின் ஆரம்பத்தில் – கிட்டத்தட்ட 80 வயதில் –
நடராஜா அமெச்சூர் குழு (தோட்டக்கார விசுவனாதன் தலைமையில்)
சுகுண விலாச சபையில் ஒரு நாடகம் நடத்திய போது,
தானே வலிய வந்து தோட்டக்காரனின் அண்டை வீட்டுக்காரனாக
இரண்டு நிமிடம் மேடையில் தோன்றி வசனம் பேசி
ரசிகர்களிடையே பலத்த கரகோஷத்தைப் பெற்ற நிகழ்வின்
மூலம் தெரிய வந்தது.
—————
தொடரும்….
.
———————————————————————————————————————————–
அடுத்து வரும் தலைமுறை, இந்த நாடகங்கள் எப்படி இருந்திருக்கும் என்று அறிந்திருக்கவே அறிந்திருக்காது.
பம்மல் சம்பந்த முதலியாரின் ஒரு நாடகத்தை (சபாபதி) அதே பெயரில் ஏ.வி.எம் அவர்களின் நிறுவனம் 1940களில் படமெடுத்தது. எனக்கு ரொம்பப் பிடித்த நகைச்சுவைத் திரைப்படங்களில் அதுவும் ஒன்று. காளி என்.ரத்னம், சாரங்கபாணி போன்றோரின் நடிப்பும் சிறப்பாக இருக்கும்.
அதிலுள்ள பாத்திரங்கள், அவர்கள் பேசும் தன்மை போன்றவை, அந்தக் காலத்து கலாச்சாரத்தை (முதலியார்கள் வீட்டில் நடப்பது) பிரதிபலிக்கும்.
சங்கரதாஸ் சுவாமிகள், இவருக்கு மூத்தவர். அவருடைய நாடகங்கள், நிறைய பாடல்களோடு கூடியவை – அதற்கு முந்தைய காலகட்ட நாடகக் கூத்தை ஒட்டியவை. சம்பந்த முதலியார், உரைநடைக்கு முக்கியத்துவம் கொடுத்து சமூக நாடகங்கள் செய்தவர்.
பிங்குபாக்: நாடகமே உலகம் – பகுதி -3 (சபாபதி’யிலிருந்து சில நகைச்சுவை காட்சிகள் ….) | வி ம ரி ச ன ம் – காவிர
பிங்குபாக்: நாடகமே உலகம் – பகுதி -3 (சபாபதி’யிலிருந்து சில நகைச்சுவை காட்சிகள் ….) | வி ம ரி ச ன ம் – காவிர