அண்ணாவின் புரட்சிப் படைப்பு – “வேலைக்காரி” …!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…



பேசும் படம் துவங்கிய காலகட்டத்திலிருந்து, தமிழ்த்
திரைப்படங்கள் பெரும்பாலும், இதிகாச, புராணக்கதைகளை
அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டன.
இடையிடையே சில சரித்திர திரைப்படங்களும்,
அபூர்வமாக சில சமூகப் படங்களும் உருவாயின.

——————–

அறிஞர் அண்ணா….என்கிற சி.என்.அண்ணாதுரை….!!! ( பகுதி -13 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… – பார்க்க

——————-

ஆனால், இவையெல்லாமே அடிப்படையில் –

கதையை விட,
வசனத்தை விட,
பாடல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தன.

கதாநாயகர்களுக்கு –
நடிக்கத் தெரிகிறதோ இல்லையோ,
முக லட்சணம் இருக்கிறதோ இல்லையோ,
ஏற்ற இறக்கங்களுடன், வசனம் பேச வருகிறதோ இல்லையோ –
நன்றாகப் பாடத் தெரிந்திருப்பது மட்டுமே
போதுமானதாக இருந்தது.

இரண்டரை – 3 மணி நேர படங்களில் –
45 பாடல்கள், 50 பாடல்கள் என்று பெரும்பகுதியை பாடல்களே
ஆக்கிரமித்துக் கொண்டன. 53 இனிமையான பாடல்களைக்
கொண்ட படம் என்று ஒரு விளம்பரத்தைக் கூட பார்த்த
ஞாபகம் எனக்கு இருக்கிறது.

இந்த நிலையை உடைத்தெறிந்து, தமிழ் சினிமாவின்
அடித்தளத்தையே அடியோடு மாற்றியது 1949-ல் வெளிவந்த
அண்ணாவின் “வேலைக்காரி” திரைப்படம்.

“நல்லதம்பி” என்கிற மகத்தான தோல்விப்படத்தைத் தொடர்ந்து
வெளிவந்த மிகப்பெரிய வெற்றிப்படம் வேலைக்காரி…

கதைக்கும், வசனத்திற்கும் முக்கியத்துவத்தை ஏற்படுத்திய
முதல் தமிழ் திரைப்படம் வேலைக்காரி.

வேலைக்காரி-யை அண்ணா முதலில் நாடக வடிவில் தான்
எழுதினார்… மேடை நாடக / திரைப்பட நடிகரான
“நடிப்பிசைப் புலவர்” என்று திமுகவினரால் பட்டம் சூட்டப்பட்ட

கே.ஆர்.ராமசாமி “கிருஷ்ணன் நாடக சபா” என்கிற பெயரில்
ஒரு நாடக கம்பெனியையும் நடத்தி வந்தார்.

முதலில், கே.ஆர்.ராமசாமி நாடகமாகப் போடுவதற்காகத்தான்
வேலைக்காரி கதையை அண்ணா எழுதினார். அது நாடகமாக
அரங்கேறி, மகத்தான வெற்றியையும் பெற்றது. அந்த நாடகம்
பெற்ற புகழைப் பார்த்த, ஜூபிடர் பிக்சர்ஸ் முதலாளி
சோமசுந்தரம், அதே கே.ஆர்.ராமசாமியையே கதாநாயகனாக
வைத்து, அதை திரைப்படமாக தயாரிக்க முன்வந்தார்.

ஒரு தனியறையில் உட்கார்ந்துகொண்டு, மூன்றே நாட்களில்,
வேலைக்காரி’க்கான திரைப்பட, வசன வடிவை உருவாக்கித்
தந்தார் அண்ணா.

ASA சாமி இயக்க, C.R.சுப்பராமன், S.M.சுப்பையா நாயுடு
ஆகியோர் இசையமைத்தனர்.

வேலைக்காரியில் அப்படி என்ன புதுமை…?

அந்தக்கால வெற்றிகரமான ஆங்கிலப்படங்கள் சிலவற்றிலிருந்து
(The Count of Monte Cristo, The Life of Emile Zola போன்றவை…)
படத்திற்கான மையக்கருத்து எடுக்கப்பட்டு அதை அப்போதைய
தமிழக சமூகச் சூழலுக்கேற்ப மாற்றி திரைக்கதை
உருவாக்கப்பட்டது.

அந்தக்கால சமூக அவலங்களைச் சாடும் விதமாக,
பணக்காரர், ஏழை, உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி மனிதர்கள்
என்று பிரிக்கப்பட்ட சமூகத்தைச் சாடும் சூடான வசனங்களைக்
கொண்டு உருவாக்கப்பட்டது இந்தப்படம்.

படம் வெற்றி பெற – படத்தின் நாயகனாக நடிக்கும்
கே.ஆர்.ராமசாமி, ஒரு கட்டத்தில் விரக்தி அடைந்து, காளி
கோவிலில் விக்கிரகங்களை அவமதிக்கும் விதத்தில்
செயல்படுவதும், பூஜை உபகரணங்களை தூக்கி எறிவதும்,
காளியை அவதூறான வார்த்தைகளால் ஏசுவதும் ஒரு
முக்கியமான காரணம். இந்தப்படம் வெளியானதும்,
இந்த காட்சிகளை எதிர்த்து, சில மத அமைப்புகள் படத்திற்கு தடை
விதிக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தின….
இவை படத்திற்கான கூடுதல் விளம்பரமானது.

இந்தப்படத்திற்கு கூடுதல் விளம்பரமாக, கல்கி வார இதழின்
ஆசிரியர் ரா.கிருஷ்ணமூர்த்தியின் விமரிசனம் அமைந்தது.
“வேலைக்காரி” ஒரு மிகசிறந்த சமூக சீர்திருத்தப்படம் என்று
வரவேற்ற கல்கி, அண்ணாவை, அறிஞர் அண்ணா என்று
அழைத்து, பிற்காலத்தில் அண்ணா இதே முறையில் தொடர்ந்து
அனைவராலும் அழைக்கப்பட வழி வகுத்தார்.

வேலைக்காரியில் அண்ணா எழுதிய சில வசனங்கள்-வார்த்தைகள்
மிகவும் புகழ் பெற்றன.

” சட்டம் ஒரு இருட்டறை –
அதில் வக்கீல்களின் வாதம் ஒரு விளக்கு…
ஆனால், அது ஏழைக்கு கிட்டாத விளக்கு…”

” கத்தியை தீட்டாதே – புத்தியை தீட்டு…”

” ஒன்றே குலம்; ஒருவனே தேவன்…”

– போன்றவை அவற்றில் சில.

பிற்காலத்தில், கருணாநிதி உட்பட பலர் இதேபோல், கூர்மையான
சொற்களைக் கொண்டு, திரைப்பட வசனங்களை எழுத, இதுவே
முன்னோடி ஆனது.

இந்தப்படத்தின் பாடல்கள் அந்தக்காலத்தில் பாராட்டப்பட்டன.
இன்றைய காலகட்டத்தில் இவற்றை ரசிப்பது கடினம்.
இருந்தாலும், மாதிரிக்கு சிலவற்றை கீழே தந்திருக்கிறேன்.

————————————-

இன்னமும் பாராமுகம் –

————
ஓரிடந்தனிலே நிலை நில்லா –


————

நீ தான் அல்லாமல் துணை யார் –

——————————————–

அந்தக் காலத்தில் -1949 – ஒரு திருப்புமுனையாக
அமைந்த படம் என்பதையும்,
இன்றைய சூழ்நிலையில் இதை ரசிப்பது கடினம்
என்பதையும் மனதில் கொண்டு –

“வேலைக்காரி” திரைப்படத்தை பார்க்க விரும்புவோர்க்கு –

.
—————————————————————————————————————–

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to அண்ணாவின் புரட்சிப் படைப்பு – “வேலைக்காரி” …!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே…

  1. புவியரசு சொல்கிறார்:

    பழைய விஷயங்கள் சில மிக சுவாரஸ்யமாக
    இருக்கின்றன. அந்தக் காலத்தில் நாம் இல்லையே
    என்று மனம் ஏங்கக் கூட செய்கிறது. 🙂

  2. பிங்குபாக்: ( பகுதி -15 ) .. நினைக்கத் தெரிந்த மனமே… (“பேசும் படம்” -காலம் … ) | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.