நீதிபதிகளின் புரட்சி – பல கோடி ரூபாய் பேரம் சம்பந்தமான குற்றச்சாட்டுகள்……..!!!



இரண்டு-மூன்று நாட்களுக்கு முன்னதாக ” மங்களம் பாடிய பிறகும் தொடரும் கச்சேரி – செத்துப்போன ஜஸ்டிஸ் லோயாவும் – 4 நீதிபதிகளின் புரட்சியும்….!!! ” என்கிற தலைப்பில் விமரிசனம் வலைத்தளத்தில் ஒரு இடுகை வெளிவந்தது. அதில் கூறப்பட்டிருந்த விவகாரங்கள் இன்னமும்
தீர்க்கப்படாத நிலையிலேயே தான் உள்ளன.

இந்த நிலையில் விகடன் செய்தி தளத்தில் வெளியான ஒரு செய்திக் கட்டுரை மேலும் பல தகவல்களை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இவற்றையும் விமரிசனம் தள வாசக நண்பர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில் அதனை கீழே தந்திருக்கிறேன்…

———————————————————————————

(லிங்க் – https://www.vikatan.com/news/article.php?aid=113529#rss)

இந்திய நீதித்துறை வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில், நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி உள்ளனர். அதுவும் அந்தச் சந்திப்பில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மேல் புகார் தெரிவித்துள்ளது கூடுதல் அதிர்ச்சியும் பரபரப்பும் நிறைந்த செய்தி! இந்த விவகாரத்தின் பின்னணியில் பல
வில்லங்கங்கள் இருந்தாலும், முக்கியமானவையாக இரண்டு காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

ஒன்று, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கலாகும் வழக்குகளை சக நீதிபதிகளுக்கு ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறார்;

இரண்டு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான சில வழக்குகளை சந்தேகம் மற்றும் சர்ச்சைக்குரிய வகையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையாண்டார் என்பதே!

சந்தேகமே இல்லாமல், நீதித்துறை மீதும் மத்திய பி.ஜே.பி அரசாங்கத்தின் மீதும் மிகப்பெரிய களங்கத்தை இந்த விவகாரம் ஏற்படுத்தி உள்ளது. அதிருப்தி நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ள இந்த இரண்டு காரணங்களுக்குப் பின்னால், விவகாரமான இரண்டு முக்கியக் காரியங்கள் உள்ளன. நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில், 4 நீதிபதிகளும் அதைத்தான் சுட்டிக்காட்டினர்.

முதல் விவகாரம், லக்னோவில் செயல்பட்ட, ‘பிரசாத் கல்வி அறக்கட்டளை’க்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி உள்பட 46 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு தடை விதித்தது தொடர்பான வழக்கு!

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அந்த வழக்கில், சாதகமான தீர்ப்பை பெற்றுத் தருவதற்கு இடைத்தரகர்களாக ஒடிஷா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஐ.எம். குத்ரோஸி உள்ளிட்டவர்கள் செயல்பட்டனர் என வில்லங்கம் கிளம்பியது. அதில் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர்.

ஆனால், அப்படிப்பட்ட சூழலிலும் பிரசாத் அறக்கட்டளை தொடர்பான வழக்கில், ‘மத்திய அரசு தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு
தீர்ப்பளித்தது. ஆனால், மத்திய அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும் அந்த உத்தரவின்பேரில், தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் உறுதியாக நின்றன.

நிலைமை இவ்வளவு மோசமாக வெளிப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும், அதை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனி விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டுமென்றும் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் 8-11-2017
அன்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

அந்த மனு நீதிபதி செல்லமேஸ்வரிடம் விசாரணக்கு வந்தது.

அவர், அந்த மனுவை தலைமை நீதிபதி உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

ஆனால், செல்லமேஸ்வர் உத்தரவை ரத்து செய்த அரசியல் சாசன அமர்வு, ‘இவ்விஷயத்தில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் முடிவே இறுதியானது’ என்றது.

இதுகுறித்து உடனடியாக கருத்துத் தெரிவித்த, மூத்த வழக்கறிஞரும் மனுதாரருமான பிரசாந்த் பூஷண் ‘இந்த நாள் நீதித்துறையின் கறுப்பு நாள்’ எனக் காட்டமாக விமர்சித்தார்.

அவரைப்போலவே, அந்த நேரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்தனர். இதே நேரத்தில் இரண்டாவது விவகாரமும் கிளம்பியது.

அந்த இரண்டாவது விவகாரம், பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித்ஷா தொடர்புடையது. 2004-ம் ஆண்டு குஜராத் முதல்வராக பதவி வகித்துவந்த நரேந்திர மோடி அமைச்சரவையில், அமித் ஷா உள்துறை அமைச்சராக இருந்தார்.

அந்த நேரத்தில், நரேந்திர மோடியை கொல்லத் திட்டம் தீட்டியதாக சொராபூதின் மற்றும் அவரது மனைவி கவுசர்பாய் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டு, 2005-ம் ஆண்டு என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். காந்தி நகர் அருகே அவர்கள்
பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில போலீஸார் இணைந்து அவர்களை என்கவுன்டர் செய்தனர்.

லஸ்கர் இ தொய்பா என்ற அமைப்பின் தூண்டுதலின் பேரில், சொராபூதினும் அவரது மனைவியும் மோடியைக் கொல்லத் திட்டமிட்டதாக அப்போது சொல்லப்பட்டது. இந்த என்கவுன்டரை நேரில் பார்த்த ஒரே சாட்சி பிரஜாபதி என்பவர்.

இவரும் சொராபுதினும் மார்பிள் வியாபார விஷயமாகத் தொடர்பு வைத்திருந்தவர்கள். இதையடுத்து, 2006-ம் ஆண்டு போலீஸ் கஸ்டடியில் இருந்த பிரஜாபதியும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அது நாடு
முழுவதும் விவாதங்களையும் விமர்சனங்களையும் கிளப்பியது; பெரும் சர்ச்சையானது.

அடுத்தடுத்து அரங்கேற்றப்பட்ட இந்த என்கவுன்டர் சம்பவங்கள் போலியானவை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

அதையடுத்து, தனிநீதிமன்றம் அமைத்து சி.பி.ஐ அந்த வழக்குவிசாரணையை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பிலேயே அந்த வழக்கு நடைபெறும் என்றும் குறிப்பிட்டது.

குஜராத் டி.ஐ.ஜி வென்சரா, ராஜஸ்தான் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் ஆகியோர் சொராபுதின் என்கவுன்டரில் கைதுசெய்யப்பட்டனர். எஸ்.பி-க்கள் ராஜ்குமார் பாண்டியன், விபூல் குமார் ஆகியோருக்கும் இந்த என்கவுன்டரில் தொடர்பு இருந்தது.

அமித்ஷாவின் போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில், டி.ஐ.ஜி வென்சாரா, எஸ்.பி-க்கள் ராஜ்குமார் பாண்டியன், விபூல் குமார் ஆகியோரிடம் அவர் தொடர்ச்சியாகப் பேசியிருப்பது தெரியவந்தது.

‘உள்துறை அமைச்சர் ஒருவர் நேரடியாக எஸ்.பி ரேங்க் அதிகாரிகளிடம் பேச வேண்டிய அவசியமில்லை. அமைச்சர் பதவியில் உள்ளவர் உள்துறைச் செயலர் தலைமைச் செயலாளர், சிறப்பு அதிரடிப் படைத் தலைவர்களிடம்தான்
ஆலோசனை நடத்த வேண்டும். மாறாக எஸ்.பி ரேங்கில் உள்ளவர்களிடம் பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது?’
என்று விசாரணை அதிகாரிகள் சந்தேகித்தனர்.

இதையடுத்து 2010-ம் ஆண்டு போலி என்கவுன்டர் வழக்கில் அமித் ஷா கைதுசெய்யப்பட்டு சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், மூன்று மாதங்கள் கழித்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

குஜராத்தில் போலி என்கவுன்டர் வழக்கு விசாரணை நடந்தால், நேர்மையாக நடைபெறாது என்பதால், 2012-ம் ஆண்டு இவ்வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டது. நீதிபதி பிரிஜ்பால் லோயா வழக்கை விசாரித்து வந்தார்.

அப்போது, வழக்கில் அமித்ஷா ஆஜராகாமல் தவிர்த்துவந்தபோது நீதிபதி லோயா கடுமை காட்டினார்.

இப்படி வேகமாக அந்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், 2014-ம் ஆண்டு பி.ஜே.பி மத்தியில் ஆட்சி அமைத்தது. அதே ஆண்டில் போலி என்கவுன்டர் வழக்கின் விசாரணை முடிந்து, 2014-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தீர்ப்பளிக்கப்படும் நிலைக்கும் வந்தது. தீர்ப்பு எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருந்த
நிலையில், டிசம்பர் 1-ம் தேதி நீதிபதி லோயா திடீரென்று மரணம் அடைந்தார்.

நாக்பூரில் நடந்த சக நீதிபதியின் மகள் திருமணத்தில் பங்கேற்கச் சென்ற நீதிபதி லோயாவுக்கு, ரவிபவன் என்ற விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தபோது, கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

லோயாவுக்குப் பிறகு, பொறுப்பேற்ற நீதிபதி எம்.பி. கோசவி டிசம்பர் 30-ம் தேதி அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தார். ”குஜராத்தில் தீவிரவாதிகள் தலையீடு அதிகமானதால், கீழ்நிலையில் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம் அவசியம் கருதி அமித்ஷா பேசியிருக்கலாம். அதனால், போன்
அழைப்புகளை முக்கிய சாட்சியங்களாக எடுத்துக்கொள்ள முடியாது” என்றும் சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

அதேவேளையில், நீதிபதி லோயா மரணத்தில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுவிக்க லோயாவுக்கு 100 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாகவும் உறவினர்கள் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த செய்தியாளர் பி.ஆர்.லோனே, ‘நீதிபதி லோயா சாவில் மர்மம் இருப்பதாகவும் சுதந்திரமான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்றும்’ ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

சர்ச்சைக்குரிய அந்த வழக்கை, நேற்று முன் தினம் (11-1-2018), உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு,

நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.எம். சந்தனாகௌடர் அடங்கிய அமர்வுக்கு மாற்றியது. அதில்தான் உச்சகட்ட சர்ச்சை வெடித்தது. அந்த வழக்கை மூத்த நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற தற்போது அதிருப்தி தெரிவித்துள்ள 4 நீதிபதிகளின்
வேண்டுகோள் ஆகும்.

அதை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா புறக்கணித்தார். அதற்கு அடுத்த நாளே, அதிருப்தி நீதிபதிகள் நான்கு பேரும் மக்கள் மன்றத்திடம் முறையிட வந்துவிட்டனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக் காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிகிறது. சீனியாரிட்டி அடிப்படையில் ரஞ்சன் கோகய் அடுத்து தலைமை நீதிபதியாக நியமிக்கப்படலாம். தீபக் மிஸ்ராமீது
அதிருப்தி தெரிவித்த நான்கு நீதிபதிகளில் ரஞ்சன் கோகயும் ஒருவர்!

———————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to நீதிபதிகளின் புரட்சி – பல கோடி ரூபாய் பேரம் சம்பந்தமான குற்றச்சாட்டுகள்……..!!!

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    இரண்டையும் படித்தேன். நேரடியாக எழுதாமல் எழுதுகிறேன்.

    இரண்டு குரூப் இருவேறு மாதிரியா சிந்திக்கிறாங்க. அதில் ஒரு குரூப் பாஜகவுக்கு ஆதரவா இருப்பதுபோலவும் இன்னொரு குரூப் எதிர்ப்பா இருப்பதுபோலவும் தோணுது. அப்போ, யார் சொல்வது சரின்னு எடுத்துக்கறது. அடுத்த குரூப், தங்களுக்கு வாய்ப்பளித்த காங்கிரசுக்கு சார்பா இதெல்லாம் செய்கிறார்கள் என்று ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது?

    ப்ரமோத் மஹஜன், பாஜக ஆட்சிக்கும் வரும் என்று நிலையிருந்தபோது கொல்லப்பட்டார் (அவருடைய சகோதரன், பிறகு மன’நிலை பிறழ்ந்தவர்னு சொல்லிட்டாங்க).

    நீதிபதி லோயா அவர்களின் மகனே, அந்த நிகழ்வில் சந்தேகம் இல்லைனு சொல்லிட்டார் (அதையும் நம்ப முடியாது. யாராவது அரசியல்வாதிகளை, அதிலும் பவர்ஃபுல் ஆட்களைப் பகைத்துக்கொள்வார்களா?)

    எம்.கே நாராயணன் அவர்கள், காவல் பணியிலிருந்து, பாதுக்காப்பு ஆலோசகராக 5 வருடங்கள் பணியாற்றி (அதாவது சோனியாவின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தார் என்று சொல்லலாமா?) மேற்கு வங்க ஆளு’நராக பதிவி பெற்றார். இதுபோல் ஏகப்பட்ட அதிகாரிகளுக்கு காங்கிரஸ் அரசு, பதவி விலகிய உடனே அரசியல் பதவி கொடுத்திருக்கு.

    முன்னாள் சிபிஐ இயக்கு’நர், யார் யாரையெல்லாம் (குற்றவாளிகளை) பார்த்தார் என்றெல்லாம் செய்திகள் வந்ததே. (அவரும் தன்னைப் பதவியில் அமர்த்திய காங்கிரஸ் சார்பான வேலைகளைத்தான் செய்துவந்தார்)

    நம்முடைய நிலைக்கு (அதாவது யார் சார்பா பேச நினைக்கிறோமோ அதன்படி) ஏற்றவாறுதான் இதையெல்லாம் புரிந்துகொள்கிறோம்னு நினைக்கறேன்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      புதியவன்,

      நான் வேறு முறையில் இதை அணுகுகிறேன்.

      ஒரு மிகப்பெரிய அரசியல்வாதி சம்பந்தப்பட்ட வழக்கு… ஒருவேளை, அதன் முடிவு எதிராக அமையுமானால் –
      அவரது எதிர்காலத்தை மட்டும் அல்லாமல், அவரது கட்சியின் தலைமையையும், அவரது கட்சியின் எதிர்காலத்தையும் தகர்க்ககூடிய ஒர் வழக்கு….

      ஒரே நீதிபதியின் கீழ் விரைவாக தொடர்ந்து நடத்தி முடிக்கப்படவேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்திரவுடன் துவங்கும் வழக்கு –

      முதலில் விசாரிக்கும் நீதிபதி, பாதியிலேயே மாற்றம் செய்யப்பட்டு, வழக்கிலிருந்து அகற்றப்படுகிறார்.
      காரணம் வெளிப்படையாகத் தெரியவில்லை…

      2-வதாக வரும் நீதிபதி – அகால வயதில் துர்மரணம் அடைகிறார்.

      மூன்றாவதாக வரும் நீதிபதி – 15 நாட்களுக்குள் வழக்கை விசாரித்து, குற்றம் ஏதும் நடக்கவில்லை என்று சாதகமாக
      தீர்ப்பளிக்கிறார்….

      இந்த நிலையில், சந்தேகங்களைப் போக்க –

      ஜஸ்டிஸ் லோயா அவர்கள் இயற்கையான முறையிலேயே மரணம் அடைந்தார் என்றாலும் கூட, மறு விசாரணை நடத்தி அவர் இறப்பைப்பற்றிய சந்தேகங்களை தீர்த்து வைப்பது தானே சம்பந்தப்பட்டவர்களுக்கு கூட நல்லது…?

      விசாரணை நடப்பதால் யாருக்கு, என்ன நஷ்டம்…? அதனை மறுக்கவும், தவிர்க்கவும் – தீவிரமாக முயற்சிகள்
      நடப்பது தானே பிரச்சினைகளின் மூல காரணம்…??

      சில விஷயங்களை ஓரளவிற்கு மேல் எழுத இயலாது…. நீங்கள் திறந்த மனதோடு இந்த விஷயத்தை ஆழ யோசித்துப் பாருங்கள்…..உங்களுக்கும் புதிய எண்ணங்கள் தோன்றக்கூடும்…

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

        உங்க பாயின்ட் புரியுது கா.மை சார். நான் அவங்க பக்கத்துல இருந்து சிந்திக்கிறேன் (அவங்க point of view). அத்தனை காங்கிரஸ் சார்பான (அல்லது பாஜக எதிர்ப்பான) நீதிபதிகள் இருந்தபோதும், உண்மையின் சார்பாக நின்று (அல்லது நீதியைக் குலைக்காமல், தேவையில்லாமல் குழப்பாமல்) நடுனிலையாக நடந்துகொண்டிருந்ததால் சதாசிவம் அவர்களுக்கு கவர்னர் பதவி கொடுத்திருக்கலாமா (அப்போது எல்லா விதத்திலும் காங்கிரஸ் அரசு, குஜராத்துக்கு, அந்த மானில முதல்வர் மோடிக்கு தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்தது)

        யார் நேர்மையானவர் என்பதைக் கண்டுபிடிப்பதே சிக்கலாயிருக்கு நம்ம தேசத்துல. ‘கறை’ இல்லாமல் பெரிய இடங்களில் பதவிக்கு வருவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது (அது நீதித் துறையாக இருந்தாலும் சரி, அரசியல் பதவியாக அல்லது அதிகாரிகளுக்கான பதவியாக இருந்தாலும் சரி). கேள்விப்படும் விஷயங்கள் அதைத்தான் சுட்டுகின்றன.

  2. தமிழன்'s avatar தமிழன் சொல்கிறார்:

    இந்தச் செய்தியைப் படித்திருப்பீர்கள். ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்றுகிறது. சமீபத்தைய ‘அரசு எதிர்ப்புப் பேரணி’, அதைத் தொடர்ந்த ‘பழைய வழக்குகள்’ உயிர் பெறுவது போன்றவை. தொகாடியா பெயரை, மோடி பெயரைக் கேள்விப்படுவதற்கு முன்னரே கேள்விப்பட்டிருக்கிறேன்.

    https://tamil.oneindia.com/news/india/encounter-conspiracy-against-me-says-togadia-308552.html

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:


      தமிழன்,

      நீங்களாகவே மீண்டும் என்னை கேள்வி கேட்க வைக்கிறீர்கள்…

      10 வருடங்களுக்கு முன்னதாக, தடையை மீறி பொதுக்கூட்டத்தில் பேசியதாக தொகாடியா மீது போடப்பட்ட வழக்குக்காக, தற்போது –
      ராஜஸ்தானிலிருந்து, குஜராத் வரை வந்து அவரை போலீஸ் துரத்தும் அளவிற்கு மிகச்சாதாரண பழைய வழக்குகளே தோண்டப்படலாம் என்றால்,

      3 வருடங்களுக்கு முன்னர், 2014-ல் செத்துப்போன ஜட்ஜ் லோயா அவர்களின் வழக்கை, சந்தேகம் தீர
      மீண்டும் ஒரு முறை விசாரிப்பதில் என்ன தவறு…?

      அதை ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு தவிர்க்கிறார்கள்….???

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.