கெட்ட பழக்கங்கள் நல்ல பாம்பைப் போல ….

கெட்ட பழக்கங்களிலிருந்து விடுவது தொடர்பாக எங்கு
எந்த செய்தி கிடைத்தாலும், தேடிப்படிப்பது என் பழக்கம்.
எனக்குத் தெரிந்தவர்கள், பழக்கமானவர்கள் யாரிடமாவது
இத்தகைய பழக்கங்கள் இருந்தால் – அவர்களை வெளியே
கொண்டு வர அந்த செய்தி எந்த விதத்திலாவது உதவுமா
என்று பார்ப்பேன்.

எழுத்தாளர்-இயக்குநர் ராஜூமுருகன் ஒரு அற்புதமான
சிந்தனையாளர். வித்தியாசமான பல விஷயங்களைப்பற்றி
அவர் மிக அழகாக, ஆழமாக எழுதுகிறார். அண்மையில்
அவரது கட்டுரை ஒன்றில்  நான் படித்ததிலிருந்து
ஒரு பகுதி –
உங்கள் பார்வைக்கும் வர வேண்டுமென்று நினைத்தேன்.
கீழே ராஜூமுருகனின் எழுத்தில் –

“கெட்ட பழக்கங்கள் நல்ல பாம்பைப் போல …
பட்டெனத் தூக்கி வீசிவிடு” என்கிறார் ராமகிருஷ்ண
பரமஹம்சர்.
நானும் அப்படித்தான் ஏதோ ஒரு நாளில் புகையையும்
மதுவையும் தூக்கி வீசினேன்.

….அந்த நண்பன் சொன்னதைப் போல அப்போது எனக்கு
முன்பு வந்து நின்ற பெரும் சவால்…இந்த வெற்றிடம் தான் !
நேரமே போகாமல் மனதைத் தவிக்க வைக்கும் வெற்றிடம்.
அடுத்து என்ன செய்வது எனப்புரியாத தவிப்பும், குழப்பமும்.

ஏக்கம், பிரிவு, கவலை, கண்றாவி என நமது அத்தனை
உணர்ச்சிகளையும் லாகிரி வஸ்துக்களிடம் அடகு வைத்து
விட்டோம் என்பதே அப்போது தான் புரிந்தது.

அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கும், அடுத்து நாம்
செய்வதற்கும் எத்தனை அற்புதங்கள் இருக்கின்றன ?
எழுத்து, வாசிப்பு,
இசை, சினிமா,
நல்ல உரையாடல்கள்,
பயணங்கள், வேலை, உணவு,
யோகா, உடற்பயிற்சி
என எவ்வளவோ விஷயங்கள்….
அத்தனையும் போதை தான் என்பதை இப்போது உணர்கிறேன்.

நாம பண்ண சீனுக்கு தியேட்டர்ல ஆடியன்ஸ்
கை தட்னாங்கன்னா... அப்ப ஜிவ்வ்வுனு இருக்கும்
பாருங்க..அது தான் உண்மையிலேயே போதை ..”
என்பார் லிங்குசாமி சார்.

“உதவி பண்றதே ஒரு போதைதாங்க... யாருக்காவது
எதாவது பண்ணிட்டா கிறுகிறுன்னு சந்தோஷமா இருக்கும்.
யாராவது வாழ்த்திட்டா பொசுக்குனு பூத்துக்கும். அதை
உணர்ந்துட்டா நாலு பேருக்கு எதாவது பண்ணிக்கிட்டே
கெடப்போம்ங்க” எனத்தோழர் அருளானந்தம் ஒரு முறை
சொன்னபோது – அடடா இதெல்லாம் தானே போதை என
உணர்ந்தேன்.

“..த்தா.. வலியை மறக்கக் குடிக்கிறியா ..?
உங்கம்மாவுக்கும், எங்கம்மாவுக்கும் இல்லாத வலியாடா ..?”
என எப்போதோ சரோ சிம்பிளாகச் சொல்லிவிட்டுப் போனது,
இப்போதும் எக்கோ அடிக்கிறது.
எங்கோ, யாருக்கோ – நாம் உருவாக்கும் கண்ணீரும்
புன்னகையும் கூடப் போதைதான்.

சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டு 48 நாட்களும்
அதிகாலையில் எழுந்து, குளித்து, சாமி கும்பிட்டு ஒரு
வாழ்க்கை வாழ்வோமே.. அது அத்தனை போதையானது.

இருமுடி கட்டிக்கொண்டு பரதேசியாகக் கிளம்பும் பயணம் …
ஆன்மிகம்  தவிர்த்தும் –  ஓர் அற்புதம்.
இந்த மனசையும், மனிதர்களையும் இருமுடியாகக்
கட்டிக்கொண்டு ஆயுசுக்கும் பரதேசியாக வாழ்வதே
ஆகச்சிறந்த போதைதான் !

“சுரண்டல் அரசே – சுரண்டல் அரசே..
அந்நியச் சந்தையில் மக்களை விற்காதே..”
எனத் தகிக்கும் தார் சாலையில் கோஷம்
போட்டுத் திரும்பும்போது வரும் ஒரு சின்ன நிறைவும் –

…….
கெட்ட பழக்கங்களை விடுவதே ஒரு போதைதான்.
“அவுரு இப்போ தண்ணி எல்லாம் அடிக்கறது இல்ல …”
“ஆமாமா … மொகத்தை பாத்தாலே தெரியுதே…
இப்பதான் தெளிவா இருக்கு …” என யாராவது
பேசும்போது மனசு உற்சாகமாகும்.

…..எதற்காக இந்தப் போதைப் பழக்கங்கள் ?

எல்லாவற்றையும் மறக்க என்கிறது எல்லாக் குரலும்.
எல்லாவற்றையும் மறந்து விட முடியுமா ?
எதையும் மறக்க முடியாது ….
கடக்கத்தான் முடியும் ..
என்பதை உணர்ந்து கொள்ளவே இத்தனைக் காலமும் ஆயிற்று.
நினைத்துக் கொள்வதும் –
ஒதுக்கிக் கொள்வதுமே நிதரிசனம்  எனப் புரிகிறபோது
எந்தப் போதையும் தேவையில்லை !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to கெட்ட பழக்கங்கள் நல்ல பாம்பைப் போல ….

  1. Dharma's avatar Dharma சொல்கிறார்:

    Nice !!!!!!!!!!!!

  2. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    முருகன் திருப்பூரிலும் சில வருடங்கள் இருந்து இருப்பார் போல. அளவு கடந்த ஞானம் பெற்றவர்கள் அத்தனை பேர்களுக்கும் திருப்பூரை விட்டு கடந்து சென்றவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

    அந்த ஞானத்தை தேடிக்கொண்டுருப்பவன் என்கிற முறையில் முருகன் எழுத்தில் வடிப்பது கருத்தல்ல. சமகாலத்தின் எதார்த்தம்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக ஜோதிஜி,

      நீண்ட நாட்கள் ஆயிற்று.

      .
      எங்கெங்கோ சுற்றினேன்.
      எவ்வளவோ இடங்கள் போனேன். ஆனால் –
      நான் இன்னும் திருப்பூர் வந்ததே இல்லை !

      திருப்பூர் வந்தால் தான் ஞானம் பிறக்குமோ ?

      சென்னையை விடவுமோ ?

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  3. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    //எல்லாவற்றையும் மறந்து விட முடியுமா ?
    எதையும் மறக்க முடியாது ….
    கடக்கத்தான் முடியும் ..//
    மிகச்சரியான வார்த்தைகள்.
    நிறையபேர் கடந்து செல்லாமல் struck-காகிவிடுகின்றனர்.
    ஓடினால்தான் ஆறு
    தேங்கிவிட்டால் அது சாக்கடையாகிவிடும் என்பதே நிதர்சனம்

  4. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    குழந்தையாக இருக்கையில் தாயிடமும் தந்தையிடமும் ஒரு போதை , மாணவ பருவத்தில் பள்ளி செல்லும்போது படிப்பில் ஒரு போதை , வளர்ந்தபின்
    வேலைக்கு செல்லும்போது ஒரு போதை , அடுத்தவர்களுக்கு நன்மை செய்யும்போது அதில் ஒரு போதை. இது போன்ற நல்லவிதமான போதை மனித வாழ்வில் தொடரட்டும். மதுஅருந்தும்போது ஒரு போதை , பொய் சொல்லுவதில் ஒரு போதை. அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்வதில் ஒரு போதை.
    இது போன்ற கெடுதல் செய்வதில் இருக்கும் போதையை பாம்பெனக்கருதி வெட்டி விடுவதற்குரிய போதையை வளர்த்து கொள்ளவேண்டும்.

  5. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    அருமையான பதிவு.
    நன்றி.

  6. அனுபவங்கள் இருந்தால் தான் இவ்வளவு விரிவாக எழுத முடியும்…

    முடிவில் சொன்னது 100/100 உண்மை…

    இதுவம் கடந்து போகும்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.