எம்.எல்.ஏ.க்கு கிடைத்தது ……….

எம்.எல்.ஏ.க்கு கிடைத்தது ……….

நீண்ட  நாட்களுக்குப்  பிறகு  மனதுக்கு நிறைவான
ஒரு காட்சியை  நேற்றைய தினம் தொலைக்காட்சி
செய்தி நிகழ்ச்சி  ஒன்றில்  கண்டேன்.


ஒரு கிராமத்து சூழ்நிலை.
வெள்ளை பேண்ட், ஷர்ட்  போட்ட  ஒரு ஆசாமி
நிற்கிறார்.  அவர் எதிரே  நிறைய கிராமத்து பெண்கள்.
நடுவில் இரண்டு மூன்று விடலைப்பையன்களும் !
அதென்ன அவர்கள் கைகளில் …?
ஆமாம் … துடைப்பங்கள்,  முறங்கள், சிறு சிறு குச்சிகள்.

பெண்கள்  அந்த ஆளை நெருங்குகிறார்கள்.  அவர் ஏதோ
சமாதானம் சொல்ல முயற்சிப்பது  போல் தோன்றுகிறது.
திடீரென்று  ஒரு பெண்  அவர் மீது கையை வைத்து
நெட்டித் தள்ளுகிறார்.  உடனே  ஒவ்வொருவராக
நிறைய பெண்கள்  அவரை கையாலும்,  கையில் உள்ள
துடைப்பம் போன்றவற்றாலும்  அடிக்க ஆரம்பிக்கிறார்கள்.  

அவர் லேசாக பின்னால் நகர்கிறார்.
அவர்கள் மேலும் முன்னேறுகிறார்கள்.
இன்னும் பலமாக “மொத்து” விழ ஆரம்பிக்கிறது.
அந்த விடலைப்பையங்கள்  ஆனந்தமாக அதை
ரசித்து  நடனம்  ஆடுகிறார்கள் !
அந்த  ஆள் இன்னும் வேகமாகப் பின் வாங்குகிறார்.
அந்தப்  பெண்கள்  முன்னேறுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் முற்றிலுமாகத் திரும்பி  வேகமாக
ஓடத்துவங்குகிறார். அந்த பெண்கள்  அவரைத் துரத்திக்
கொண்டே  அவர் கார்  வரை  ஓடுகிறார்கள். காரில் ஏறித்
தப்பித்து வேகமாகப் பின் வாங்குகிறார் அவர்.

விஷயம்  இது தான் –

ஆந்திராவில், விசாகப்பட்டினம் மாவட்டம்,
அரக்குலோயா என்ற  ஊரில் ஆதிவாசிகள் அதிக அளவில்
வசித்து வருகிறார்கள்.
அங்கு  பீங்கான் பொருள்கள் தயாரிக்கப்  பயன்படும்
‘சைனோ கிளே’ என்ற விலை உயர்ந்த களிமண்
கிடைக்கிறது. இங்கு  கிடைக்கும் களிமண்ணை சுரங்கம்
அமைத்து வெட்டி எடுக்க முயற்சி  நடக்கிறது.  அதற்கு
அந்த பகுதி எம்.எல்.ஏ.வும் ஆதரவாக  இருக்கிறார்.ஆனால் –
அந்த பகுதியை சேர்ந்த கிராம  மக்கள் அங்கு சுரங்கம்
தோண்டப்படுவதை விரும்பவில்லை.  எனவே எதிர்ப்பு
தெரிவிக்கிறார்கள்.  அவர்களுக்கு சமாதானம் சொல்ல
வந்த  எம்.எல்.ஏ.க்கு  கிடைத்த மரியாதை தான் –
மேலே  நான் கூறியுள்ள  தொலைக்காட்சி செய்தியாக
வந்தது.

நகரங்களில் – மக்கள் கூட்டம் கூட்டமாக
கூடி  “இருக்கி”றோம். ஆனால் “தனித்தனியே” தான்
வாழ்கிறோம்.  பக்கத்து வீட்டுக்காராருடன் கூட தொடர்பு
கிடையாது.
ஆனால் கிராமங்களில் மக்கள் கூடி “வாழ்கிறார்கள்”.
நல்லது கெட்டதுகளில் ஒன்றாக பங்கு கொள்கிறார்கள்.
ஊருக்கு ஒரு பிரச்சினை என்றால் எல்லாரும் ஒன்று
திரண்டு எதிர்கொள்கிறார்கள்.

பொதுவாக -கூட்டத்திற்கு என்று எப்போதுமே
ஒரு விசேஷ குணம் உண்டு.
mob psychology என்று கூறுவதுண்டு.  கூட்டத்தில்
இருக்கும்போது நம் குணமே மாறி விடுகிறது.
அசாத்திய தைரியம் வந்து விடுகிறது.

மேலே  பார்த்தது அந்த மாதிரி ஒரு நிலை தான்.
தங்களுக்கு பிடிக்காததை செய்ய முயலும் எம்.எல்.ஏ.வை
பெண்கள் துடைப்பத்தால் அடித்து விரட்டும் அளவிற்கு
துணிச்சலுடன் செயல்படுகிறார்கள்.

திரைப்படங்களைப் பார்த்தோ என்னவோ, வர வர நாம்
எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து ரொம்பவே பயப்பட ஆரம்பித்து
விட்டோம்.
உண்மையில்  நிலைமை தலைகீழாக இருக்க வேண்டும்.
பொது மக்களின் ஊழியர்கள்  அவர்கள்.  எனவே அவர்கள்
தான் மக்களைப் பார்த்து பயப்பட வேண்டும்.

எனவே நாம் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை மாற்றிக்
கொள்ள வேண்டும். தவறைக்  கண்டித்து தைரியமாகக்
கேள்வி கேட்க பழகிக் கொள்ள வேண்டும்.  இதைத்
தனியாக  செய்ய முடியாது.  முதலில் நாம் கூட்டமாக
சேர்ந்து எதிர்ப்பை  வெளிப்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்.

அன்னா ஹஜாரே உண்ணாவிரதம் இருந்தபோது,
மக்கள் பெரிய அளவில் தாமாகவே முன்வந்து ஆதரவு தெரிவித்தது
இந்த குணத்தின் அடிப்படையில் தான்.

இன்னொரு விஷயம் –  பல சமயங்களில்  நாம் நம்மை
எதாவது ஒரு கட்சியுடன் நம்மையும் அறியாமலே
பிணைத்துக்கொண்டு விடுகிறோம். அது தான் நமது
அடிப்படைத் தவறு.  
கட்சி உறுப்பினர் வேறு – பொது மக்கள் வேறு.
கட்சிக்காரருக்கு தான்,  தன் கட்சி செய்வதை எல்லாம்
ஆதரிக்க   வேண்டிய கட்டாயம்.

பொது மக்கள் -எல்லாவற்றிற்கும் பொதுவாகவே
இருக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் எதுவாக இருந்தாலும் – அவற்றின்
நல்ல செயல்களை ஆதரிக்க வேண்டும் – தவறுகளை
கண்டிக்க வேண்டும்.  தேவை ஏற்பட்டால்,
எந்த வித தயக்கமும் இன்றி, அரசாங்கத்தை
மாற்றக் கூடிய மனப்பக்குவத்துடன்  இருக்க வேண்டும்.

போன தேர்தலில் இந்த கட்சியை எதிர்த்து ஓட்டுப்
போட்டோமே – இந்த தேர்தலில் எப்படி ஆதரித்து
ஓட்டுப் போடுவது  என்கிற யோசனை தேவையற்றது.
தேவைக்கேற்ப  ஆட்சியை மாற்றுவது தான் ஜனநாயகத்தின்
அடிப்படை அம்சமே !

அப்போது தான் ஆட்சியில்  இருப்பவர்களும், பயத்துடனும்
பொறுப்போடும்  இருப்பார்கள்.

ஜனநாயகத்தின் உண்மைப் பயனை  நாம் பெற
வேண்டுமானால்,  பொது மக்கள் எந்த அரசியல் கட்சியையும்
சாராமல் இருந்து, அரசியல் கட்சிகளையும், அவற்றின்
செயல்களையும்  கண்காணித்து, எடை போட்டு –
அவற்றின் தரத்திற்கேற்ப -ஆதரவு அளிக்கவோ, எதிர்ப்பு
தெரிவிக்கவோ வேண்டும்.

பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்து விட்டு – அந்த இறைவனே
தவித்தது போல்,  இவர்களை எம்.எல்.ஏ.க்களாக்கி விட்டு
நாமே  இவர்களைக் கண்டு அஞ்சும் நிலையை
உருவாக்கிக் கொள்ளக்கூடாது.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to எம்.எல்.ஏ.க்கு கிடைத்தது ……….

  1. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    நானும் அந்த படப் பதிவைப் பார்த்தேன். இப்படி மக்கள் ஒன்றிணைந்து போராடுவது கண்டு பெருமைப்படுவதா அல்லது மக்களை இந்த நிலைக்கு ஆளாக்கியிருக்கும் அரசியல்வாதிகளை நினைத்து வருத்தப்படுவதா என்பதுதான் தெரியவில்லை.

    ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. பெண்கள் பொதுவாக அமைதி விரும்பிகள். எதையும் அனுசரித்து நடப்பவர்கள். ஆனால் அவர்களுக்கே ஆவேசம் வந்தால் …. அதைத் தான் அந்தப் படத்தில் பார்க்க முடிந்தது.

    இறைவா, எங்களுக்கும் அந்த ஒற்றுமையையும், மன வலிமையையும், திட சிந்தையையும் தருவாயாக!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.