……………………………………..

……………………………………….
நொச்சிக்குளம்- மலைச் சாரலில் அமைந்திருக்கும் ஓர் அழகிய சிற்றூர். நெல் வயல்களும், தென்னந்தோப்புகளும், மாந்தோப்புகளும், வாழைத்தோட்டங்களும், புல்வெளிகளும், ஆறும், அருவியும், நீரோடும் வாய்க்கால்களும், ஓடைகளும், குளங்களும் சூழ அமைந்திருக்கும் செழிப்பான ஊர்.
சிற்றூர் என்றாலும், அங்கும் ஒரு நடுநிலைப் பள்ளி இருந்தது. அதே ஊரைச் சேர்ந்த பிச்சையா ஆசிரியராகப் பணியாற்றுகிறார். அவர் பெருந்தனக்காரரும்கூட! அவருக்குச் சொந்தமாக ஏராளமான நஞ்சை நிலங்களும், தென்னந்தோப்புகளும், மாந்தோப்புகளும் இருந்தன. அந்த ஊரிலேயே பெரியவீடு அந்த ஆசிரியருடையதுதான். அதனை, ‘பெரிய வீடு’ என்றுதான் சொல்வார்கள்.
அந்த ஊரில் அவருக்குப் பெரிய அளவில் மரியாதை இருந்தது. அதற்கு அவரது சொத்துகள் மட்டுமே காரணம் அல்ல. அவர் மிகவும் நேர்மையானவர். அர்ப்பணிப்போடு பாடம் நடத்துவதும், மாணவர்கள் நலனில் அக்கறை கொள்வதும், சாதி, மதம் பாராமல் ஏழை மாணவர்களின் மேற்படிப்புக்குத் தேவையான பொருளுதவியைச் செய்வதுமான அவரது நற்குணங்களும் அதற்குக் காரணம். அவரிடம் உதவி பெற்ற பல மாணவர்கள் படித்துப் பட்டமும் பெற்று, பெரிய பதவிகளை அடைந்திருக்கின்றனர்.
சின்ன ஊர் என்றாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினரும் வசிக்கின்றனர். இவர்களிடையே பிரச்னைகள் வரும்போது, இருதரப்பினரும், முழு நம்பிக்கை வைத்து, பிச்சையா வாத்தியாரை அணுகுவார்கள். ஒரு தரப்பினர், சில வேளைகளில், அவரது சொந்த சாதியினராகவும் இருப்பதுண்டு. ஆனாலும், அவர்கள் நம்பிக்கை வீண் போகாத விதத்தில் நடுநிலையோடு பிரச்னையை அணுகி, தீர்வையும் பிச்சையா வாத்தியார் சொல்வார். அவர் மீது உள்ள நன்மதிப்பு, நம்பிக்கை காரணமாக அவர்களும் அதனை ஏற்றுக் கொள்வார்கள். அந்த ஊர் மக்கள் சுமுகமாக வாழ்ந்து வருவதற்கு, பிச்சையா வாத்தியாரின் பங்கு முதன்மையானது.
இப்படி ஊருக்கெல்லாம் பிரச்னையைத் தீர்த்துவைக்கும் பிச்சையா வாத்தியாருக்கு, அவரது வீட்டிலேயே ஒரு பிரச்னை காத்திருந்தது என்பதை ‘சிலம்பின்’ மூன்றாவது விதி என்றுதான் சொல்லவேண்டும்.
பிச்சையா வாத்தியாருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் என்று இரு பிள்ளைகள். மகளுக்குத் திருமணமாகி, இரண்டு குழந்தைகளும் உண்டு. திருமண வயதைக் கடந்தும் மகனுக்குப் பெண் கிடைக்கவில்லை. காரணம், அந்த மகனுக்குப் பிறவி முதலே காது கேட்காது. ஆனால், பேச முடியும். அப்படி ஒருவகையான உடல் ஊனம். ஆனாலும் அறிவுக்கூர்மை உள்ளவன். காது கேட்காது என்பதால் மற்றவர்கள் அவனுடன் உரையாடுவது சாத்தியமற்றது. அதுவே அவனை வீட்டிலும், வெளியிலும் ஒரு முரட்டுப்பிள்ளையாக மாற்றிவிட்டது.
அந்த ஊனமுற்றப் பையனுக்கு, பின்னாளில் மகளால் பிரச்னை வரக் கூடாது என்று அந்தத் தந்தை நினைத்தார். அதன் காரணமாக, தனது சொத்தில் ஒரு பகுதியைத் தனது மகளுக்கு கொடுத்து, மீதமுள்ள சொத்துக்கும் அவளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று எழுதி வாங்கிக் கொண்டார்.
காலத்துக்கேற்ப எதிர்பார்ப்புகளும் மாறுகிறது அல்லவா? என்னதான் சொத்துகள் ஏராளமாக இருந்தாலும், இன்றைய காலத்தில், செல்போன் பயன்படுத்த முடியாத (பேசுவதற்கு), பைக், கார் ஓட்ட முடியாத ஓர் இளைஞனைக் கட்டிக் கொள்ள எந்தப் பெண்தான் சம்மதிப்பாள்? காது கேளாமை தடையாக இருந்தது. இவையெல்லாம் மகனுக்குப் பெண் கேட்டுப் போன இடங்களில், பிச்சையா வாத்தியாருக்குக் கிடைத்த கசப்பான அனுபவங்கள். பிச்சையா வாத்தியாருக்கும் அந்த உண்மை புரியாமல் இல்லை.
நேர்மையான மனிதர் என்றால் பாசம் இருக்காதா என்ன? தனது மகனுக்கும் ஒரு திருமணம் செய்துவைக்க முடியவில்லையே என்ற கவலை பிச்சையா வாத்தியாருக்கும் இருந்துகொண்டே இருந்தது.
பெண்ணுக்காக எங்கெங்கோ அலைந்து சலித்தவருக்குக் கார்த்திகை மாத மையிருளில் ஒளிர்ந்த மின்னல் கீற்றுப்போல ஒரு வெளிச்சம் கிடைத்தது. பெற்றோரை இழந்து, உறவினர் வீட்டில் பல இன்னல்களுக்கு இடையே வளர்ந்த ஓர் அழகான இளம்பெண் அந்த முரட்டு ஊனமுற்றப் பையனைக் கட்டிக் கொள்ள சம்மதித்தாள்.
மிகவும் எளிமையாக, தனது மகனின் திருமணத்தை பிச்சையா வாத்தியார் நடத்தி முடித்தார். காலம் வழக்கம்போல் ஓடியது. மூன்று ஆண்டுகள் கழிந்தன. அவர்களுக்குக் குழந்தை இல்லை.
இதுபோன்ற சூழலில், ஆண் பிள்ளையைப் பெற்றவர்கள், தங்கள் வீட்டுக்கு மருமகளாக வந்தப் பெண்ணைக் குறை சொல்வதையே வழக்கமாக வைத்திருப்பார்கள்.
அது, பெற்றோர் முடிவு செய்த திருமணம் என்றாலும், காதல் திருமணம் என்றாலும் அதுதான் பொதுநிலை. அதனால் தங்கள் பிள்ளையிடம்தான் குறை உள்ளது என்பதை அறிந்தும், சிலர் தங்கள் மகன்களுக்கு இரண்டாம் திருமணமும் செய்துவைக்கின்றனர். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் அசுரத்தனமாக வளர்ச்சியைப் பெற்றிருக்கும் 21-ஆம் நூற்றாண்டிலும் அதே நிலைதான் நீடிக்கிறது.
பிச்சையா வாத்தியாரின் மனைவியும் இதற்கு விதிவிலக்கல்ல. ‘தனது மருமகளோ ஊனமுற்ற மகனுக்கு வாழ்வளிக்க வந்தவள்’ என்பதையும் மறந்து, பிள்ளை இல்லை என்பதைச் சாக்காக வைத்து, மருமகள் ஒரு மலடி என்று குற்றம்சாட்டி, அவளை ஏசி, பேசி சொற்களால் தேள்போலக் கொட்டிக் கொண்டிருந்தாள்.
இதற்கு நேர்மாறாக, பிச்சையா வாத்தியார் தனது மகனைச் சந்தேகிக்கிறார். அவனிடம் அன்பாகப் பேசி, மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார். அவனைப் பரிசோதித்த மருத்துவர், அவனது விந்தில், உயிரணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், அதனை சரிசெய்வதற்கான மருத்துவ முறைகள் இருப்பதாகவும் சொல்கிறார்.
அதற்கான மருத்துவம் செய்துகொள்வதற்கு, மகனும் உடன்படுகிறான். சில மாதங்களில், அவனது மனைவி கருவுற்றிருப்பது உறுதி செய்யப்படுகிறது. ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. அந்தக் குழந்தை, விண்ணிலிருந்து தேவதை ஒன்று மண்ணுக்கு இறங்கிவந்தது போல கொள்ளை அழகு, அம்மா சாயல்.
குழந்தை பிறந்தவுடன் அனைவரும் , குழந்தையைப் புரட்டி எடுத்து, கைகளால் சுண்டி, காது கேட்கிறதா என்று பரிசோதிக்கின்றனர். குழந்தைக்குக் காதுகேட்கிறது என்பது உறுதியானது. பிறகு, குழந்தைக்குப் பேச்சும் வந்துவிட்டது.
பிச்சையா வாத்தியாருக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல, மன ஆறுதலும்கூட. தனது மகனுக்குத் திருமணம் செய்துவைத்தது தவறோ என்று சில நேரங்களில் கவலைப்பட்டவருக்கு அது உண்மையாகவே ஆறுதல்தான்.
காலம் ஓடியது. மேலும் இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. ஆனாலும் ஒரு பெண் குழந்தைக்குப் பிறகு, அந்தப் பெண் மீண்டும் சூல் கொள்ளவில்லை. சரி, ஒரு குழந்தை கிடைத்ததே பெரும் பாக்கியம். அதன்பிறகு இயல்பாகவே குழந்தை இல்லை என்று பிச்சையா வாத்தியார் நம்பிக் கொண்டிருந்தார்.
ஆனாலும், அதுபற்றி அவ்வப்போது தனது மனைவியிடம் பேசுவதுண்டு. அப்படி ஒருநாள் பேசிக் கொண்டிருந்தபோது, மகனும், மருமகளும் ‘சேர்ந்திருப்பதாக’ தெரியவில்லை என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள் வாத்தியாரின் மனைவி.
காரணம் கேட்டபோது, ‘தெரியவில்லை’ என்று சொல்லிவிட்டாள். எல்லா அம்மாக்களையும்போல, வாத்தியாரின் மனைவியும் முரடனாகவே இருந்தாலும், தனது மகனை விட்டுக் கொடுத்துப் பேசுவதில்லை.
மனதில் அதிர்ச்சி ஏற்பட்டாலும், அதனை வெளிக்காட்டாமல், தனிமையில் மகனை அழைத்து, அதுபற்றிப் பேசலானார். ஆரம்பத்தில் பிடிகொடுக்காமல் பேச ஆரம்பித்தவன், போகப்போக அதற்கான காரணத்தைச் சொல்ல ஆரம்பித்தான். ‘அடுத்தக் குழந்தை, தன்னைப்போல ஊனத்துடன் பிறந்துவிட்டால் என்ன செய்வது என்னும் அச்சம் காரணமாக, மனைவியுடன் சேர்வதில்லை’ என்றான்.
முதல் குழந்தை பிறக்கும் வரையிலும்கூட தனக்கு ஒருவிதத் தவிப்பு இருந்ததாகவும் அவன் கூறியதில் நியாயம் இருக்கவே செய்தது. தனது குழந்தையின் மழலையைக்கூடக் கேட்கமுடியாத அளவுக்கு அவன் துயறுற்றவன் அல்லவா?
அவனது அந்தச் செயல் நியாயமானதுதான் என்றாலும், அந்த அப்பாவிப் பெண் தேவையின்றி தண்டிக்கப்படுவதாகப் பிச்சையா வாத்தியார் உணர்ந்தார். அதனால், அவர் தனது மகனிடம், மாற்றுவழி ஒன்று இருப்பதாகக் கூறுகிறார்.
ஏற்கெனவே ஒரு பெண் குழந்தை பிறந்துவிட்ட நிலையில், மருமகளுக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்துவிடலாம் என்கிறார். காரணம், ஊர் கூடி திருமணம் செய்துவைப்பதே, ஆண்-பெண் உறவை சட்டப்படி முறைப்படுத்துவதற்குத்தானே.
அதிலும் குறிப்பாகச் சொல்வதானால், பெண்ணின் ‘உறவுத் தேவையை’ முறைப்படுத்துவதற்கு என்றும் சொல்லலாம். ஆண் இந்தச் சட்டகத்துக்குள் அடங்குவதும் இல்லை, ஊரும் உறவும் அதைப்பற்றிக் கவலைகொள்வதும் இல்லை. இதனையெல்லாம் நன்றாகவேப் புரிந்துவைத்திருந்தார், பிச்சையா வாத்தியார்.
பெண்ணியம் பேசுவோரும், பகுத்தறிவு பேசுவோரும், பெரும் புரட்சியாளர்களாகவும் முற்போக்காளர்களாகவும் தங்களைக் காட்டிக் கொள்பவர்களும், குடும்பக் கட்டுப்பாடு என்றால் அதனைப் பெண்கள்தான் செய்ய வேண்டும் என்னும் ஒருமித்த ஆணாதிக்கக் கருத்துடைய பிற்போக்குவாதிகளாகவே இருக்கிறார்கள்.
பிச்சையா வாத்தியாரும், தனது மருமகளுக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்துவிடலாம் என்று ஆலோசனை வழங்கியதில் வியப்பதற்கு எதுவும் இல்லை.
உடல் ஊனமுற்ற தனது மகனைவிடவும் பத்து வயது இளையவளான தனது மருமகளின் ‘உடல் தேவையை’ கருத்தில் கொண்டே ‘கர்ப்பத்துக்கு மட்டும் கதவை சாத்துவோம்’ என்னும் திரைப்பாடல்போல மருமகளுக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்துவிடலாம் என்று கூறுகிறார்.
மகன் அதற்கு ஒத்துக்கொள்ளாதது, அவருக்கு வியப்பை ஏற்படுத்தியது. தனது மகனின் முட்டாள்தனமான நடவடிக்கையால், ஓர் அப்பாவிப் பெண் பழிவாங்கப்படுவதாகவே அவர் நம்பினார். அதனால், தனது முயற்சியைக் கைவிடாமல், அடிக்கடி அதுபற்றி தனது மகனுடன் பேசிவந்தார்.
ஆரம்பத்தில் சாதாரணமாகப் பேசிவந்த மகன், போகப் போக வெறி கொண்டு கத்திப் பேச ஆரம்பித்தான். அதற்கான காரணத்தை அறிந்துகொள்ளமுடியாமல் குழம்பிப்போனார் பிச்சையா வாத்தியார். கூடவே அவருக்கு சந்தேகமும் வந்தது.
அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய ஒருவர் பிச்சையா வாத்தியாருக்கு நண்பராக இருந்தார். அவர் மீது, அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர் நீதிமன்றத்தில், மானஇழப்பு வழக்கு ஒன்று தொடுத்திருந்தார். அந்த வழக்கும், அதன் தீர்ப்பும் சுவாரசியமானது.
தலைமை ஆசிரியர், அந்த ஆசிரியரைப் பிறர் முன்னிலையில் ஏசி அவமானப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒவ்வொருமுறையும், அந்த ஆசிரியர் எழுந்து, தலைமை ஆசிரியர் முன்பு மவுனமாக நின்றுகொண்டிருப்பார்.
ஆனால், மனதுக்குள் தலைமை ஆசிரியரைக் கெட்ட வார்த்தைகளில் திட்டிக் கொண்டிருப்பார். ஒருமுறை, மனதுக்குள் திட்டியதில், அந்தக் கடைசி வார்த்தையான ‘…..’ வெளியிலும் வந்துவிட்டது. அதற்காகத்தான் மானஇழப்பு வழக்கு.
வழக்கு விசாரணையின்போது, எதிர்க்கட்சி வழக்குரைஞர் கேட்ட கேள்விகளுக்குப் பதில்சொல்லும்போது, அந்த ஆசிரியர், ‘நான் எவ்வளவோ சொன்னேன். இந்த …… தான் கேட்கவில்லை என்று உணர்ச்சிவசப்பட்டு நீதிமன்றத்திலேயே அந்த வார்த்தை சொல்லிவிட்டார்.
நீதிபதி, அந்த ஆசிரியரைத் தண்டிப்பதற்குப் பதிலாக, ‘இது இவரது இயல்பாக இருக்கிறது. திட்டமிட்டுத் தலைமை ஆசிரியரை அவமானப்படுத்துவது இவரது நோக்கமல்ல’ என்று சொல்லி வழக்கை தள்ளுபடி செய்துவிட்டார்.
அப்படித்தான், ஒருநாள், உணர்ச்சிவசப்பட்ட அந்த முரட்டு மகனின் ஆழ்மனதில் இருந்த அந்தரங்கம் சொற்களாக வெளிப்பட்டுவிட்டது.
‘குடும்பக் கட்டுப்பாடு செய்தால், அவள் வேறு எவனுடனாவது உறவு வைத்துகொள்வாள்’ என்று உடல் ஊனமுற்றவனாகவே இருந்தாலும், தனது ஆணாதிக்கக் கருத்தை, தனது சந்தேகப் புத்தியை வெளிப்படுத்திவிட்டான்.
மகனிடம் இருந்து முற்றிலும் எதிர்பாராத அந்தப் பதிலைக் கேட்ட பிச்சையா வாத்தியார் அதிர்ச்சியடைந்தார். உடல் கூசியது. என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்துநின்றார்.
தன்னுடைய மகனின் உடல் ஊனத்தைக் கண்டு மனச்சோர்வு அடையாமல், அவனை நம்பிக்கையுடன் வளர்த்துவந்தவர் பிச்சையா வாத்தியார். ஆனாலும், மகனின் உள்ளத்தில் உண்டாகியிருக்கும் ஊனம் அவரை நிலைகுலையச் செய்துவிட்டது. உடல் ஊனத்தை எதிர்கொள்ள பல வழிகள் உண்டு. உள்ளத்தின் ஊனத்தை அப்படியெல்லாம் சரிசெய்துவிட முடியாது என்பது பிச்சையா வாத்தியாருக்கும் தெரியும்.
உடல் ஊனமுற்ற மகனுக்கு வாழ்க்கைப்பட்ட அந்தப்பெண்ணை, மருமகளாகப் பார்க்காமல், மகளாகவேப் பார்த்துவந்தவர், பிச்சையா வாத்தியார்.
அவளது ‘நலன்’ வேண்டி, தனது மகனின் உள்ளத்தில் உருவாகியிருக்கும் ஊனம் காரணமான கோணல் புத்தியை எப்படி சரிசெய்வது என்றும் சிந்திக்கலானார். சோர்ந்துவிடாமல், தொடர்ந்து முயன்றுகொண்டிருக்கிறார், மிகவும் கவனமாக…???
ஊருக்கெல்லாம் நேர்மையாகத் தீர்ப்பு வழங்கும் பிச்சையா வாத்தியாரின் வீட்டுப் பஞ்சாயத்து, வெளியுலகுக்குத் தெரியாமல், முடிவின்றி நீண்டுகொண்டே செல்கிறது. வீட்டிலும்கூட, பிச்சையா வாத்தியார் தனது மருமகள் பக்கம் நின்று நேர்மையாகவே தீர்ப்பு கூறினார்.
அவரது தீர்ப்புக்கு ஊர் கட்டுப்பட்டதுபோல, அவரது மகன் கட்டுப்படவில்லை என்பதுதான் முரண்.
பஞ்சாயத்து முடியுமா?,, இல்லை பிச்சையா வாத்தியார் ஆயுள்தான் முடியுமா? ( சு. இராமையா … )
……………………………………………………………………………………………………………………………………………………………………………………



நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…