“ஆள்காட்டி விரல் “- அம்பை சிறுகதை …

…………………………………………..

…………………………………………….

அவனைப் பற்றிய புள்ளிவிவரம் பின்வருமாறு :

பெயர் – ராஜன். வயது 34. ஆராய்ச்சிப் பொருள் – ஃப்ரான்ஸின் வெளிநாட்டுக் கொள்கை, ஆராய்ச்சி செய்த வருஷங்கள் – 10. ஆராய்ச்சியின் முன்னேற்றம் – முன்னேறுகிறது.
நிதி நிலைமை – பரிதாபம். வேலை –
ஆராய்ச்சி எதிர்காலத்திட்டம் – எதிர்காலம்?
ஆரோக்கியம் – ஒரு முறை ஷஹாத்ரா போனதுண்டு.

(ஷஹாத்ராவில் ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி உண்டு…..

அவனைப் பற்றிய சுவையான சம்பவங்கள் –
முதல் வருடம் – காதலில் தோல்வி; தற்கொலை முயற்சி.
இரண்டாம் வருடம் – காதலில் தோல்வி; தற்கொலை முயற்சி.
மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம்,
எட்டாம் வருடங்கள் – முதல் இரண்டு வருடத்தின் தொடர்ச்சி.

ஒன்பதாம் வருடம் – உடையே இல்லாமல் புல்வெளியில்
நடனம்.

பின்பு ஷஹாத்ரா. )

பளிங்குப் படிகள். அதில் ஏறி மேலே போனால் இடது பக்கத்தில்
மூன்றாவது அறை. அங்குதான் அவனுக்கு இன்டர்வ்யூ நடந்தது.
அந்த ஆராய்ச்சிப் பள்ளியில் நுழைய. “டிகால் யார் ?”
அவன் சொன்னான்.

“அவர் மூக்கைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”

ஆள்காட்டி விரல் ஹாஸ்யம் அவனுக்குப் புரியாத ஒன்று.

டிகாலின் மூக்கைப் பற்றிய கார்ட்டூன்கள் பற்றியும் அவன் சொந்த அபிப்பிராயத்தையும் அவன் சொன்னான். சிரிப்பு.

“நீ ஏன் ஐ. ஏ. எஸ். செய்யக் கூடாது?” “எனக்கு மேஜையில் உட்கார்ந்து செய்யும் வேலை பிடிக்காது.” உயர்த்திய புருவங்கள்.

“ஆராய்ச்சியில் பற்று இருக்கிறதா?” “ஆராய்ச்சி செய்து
இருண்டு கிடக்கும் சரித்திரப் பகுதிகளில் ஒளிபரப்புவதுதான் என் லட்சியம்” “என்ன ஒளி ? மின்சார ஒளியா?” சிரிப்பு.

“புரொபஸர், அவன் கூறுவது அறிவு ஒளி என்ன, சரிதானே ?”
“ஆமாம்” சிரிப்பு: அவனுக்கு இடம் கிடைத்துவிட்டது.

அவனுடைய ஊர் கடலூர் அருகே உள்ள பண்ணுருட்டி.
டெல்லிக்கும் பண்ணுருட்டிக்கும் இடைவெளி அதிகம்.
பிரதான வீதியில் (ஒரே ஒரு பிரதான வீதிதான்) கடைகளுக்கு வெளியே அமர்ந்து, புகையிலை கடித்தவாறு முந்திரிப்பருப்பு வியாபாரப் பேச்சும், யார் வீட்டில் யார் பெண் வயதுக்கு வந்தாள் என்ற விவரமும்,
உள்ளூர் பஞ்சாயத்து போர்டின் ஊழல்களுமே பண்ணுருட்டியின் உலகம். டெல்லிக்கும் பண்ணுருட்டிக்கும் இடைவெளி அதிகம்தான்.

வாசகசாலையில் அமர்ந்து அவன் ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கா
பற்றிப் படித்தான்.

காலைச் சிற்றுண்டி சாப்பிடும்போது ஜன நாயகம் பற்றி விவாதித்தான்.

நேருவை, காந்தியை (பண்ணுருட்டி ஆட்கள் சூடம் கொளுத்திக்
கன்னத்தில் போட்டுக்கொள்ளும் நபர்களை) அவன் அறிவுபூர்வமாக நோக்கிக் குறைகளைச் சுட்டிக்காட்டினான். அவனைச் சுற்றியும்
பெரிய பேச்சுக்களே.

நிக்ஸனின் வியட்நாம் கொள்கையின் தோல்விக்குக் காரணம் என்ன ? பயாஃராவைப் பற்றிய அவன் அபிப்பிராயம் என்ன ?
தென் ஆப்பிரிக்காவின் உள்நாட்டுக் கொள்கையைப் பற்றி
அவன் உணர்வுகள்,
ஹங்கேரியின் 1956 புரட்சி, உண்மையான புரட்சிதானா?
ஆகாயத்தில் ரத்ன பீடம் அமைத்து உட்கார வைத்தது போலிருந்தது.

“இது ராஜன் தரப்போகும் முதல் ஸெமினார் பேப்பர். ராஜனின்
ஆழ்ந்த அறிவு பற்றி எல்லோருக்கும் தெரியும். சிரிப்பு ) – (ஏன் ?)
ராஜன் தன்னை இருண்ட பகுதிகளில் ஒளிபரப்ப – இருண்ட பகுதி,
எந்தப் பகுதி? ஹா! ஹா! – (சிரிப்பு) – (புரியவில்லை ) அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறான்…” புரொபஸர் அவனை அறிமுகம் செய்து வைக்கிறார் …
அவன் தன் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படிக்கும் முன்.

பேப்பர் முடிந்த பின் – “என்ன ராஜன், இப்படியே ஒளிபரப்பிக்
கொண்டிரு நிறைய.” “சரி ஸார்.” சிரிப்பு.

எண்ணெய் தடவி, படிய வாரி இறுக்கப் பின்னிய கூந்தல்தான்
அவனுக்குப் பழக்கம். பூ வேறு வைக்கோல் போர் போல.
இங்கு பூவில்லாமல் இருந்தாலும் கலையழகுடன் வாரப்பட்ட கூந்தல்; வாசகசாலையிலும், வெளியிலும் தயக்கமில்லா, சரிசமமான
சிந்தனை, நடத்தை; பேச்சு.

இந்தப் பெண்கள் அறிவுஜீவிகள். மாதம் மூன்று நாட்கள் மூலையில் உட்காருபவர்கள் அல்ல.

———-அவன் காதலித்தான் – பல முறைகள்… !!!

“ஸ்வதேஷ், நான் உன்னைக் காதலிக்கிறேன்.”
“ஏன் ?” மெளனம்.
“நீ ஒரு அருமையான முட்டாள். நான் உன்னைவிடச் சின்னவள் –
இதைப் பற்றி நீ விசாரித்தாயிற்று, நான் ஒரு பிராமணப் பெண்.
இதைப் பற்றி என்னிடமே கேட்டிருக்கிறாய். நான் ஆராய்ச்சி
செய்கிறேன். இவைதான் என் தகுதிகள். என்னைப் பண்ணிக் கொண்டு
உன் பண்ணுருட்டி சமூகத்திடம், “பார்த்தாயா, என் டெல்லி வெற்றியை?” என்று கொக்கரிக்க வேண்டும் உனக்கு ….

காதல் என்றால் என்னவென்று உனக்குத் தெரியவேண்டிய
அவசியமில்லை. இன்னொரு தடவை என்னிடம் வராதே. என் செருப்பு இப்போதுதான் புதிதாக வாங்கியது.”

இவர்களைப் போலவே அவனும் ஆராய்ச்சி செய்தான். விஸ்கி
குடித்தவாறே புரட்சி பற்றிப் பேசினான். பெண்கள் முன்னேற்றம் பற்றி விவாதித்தான் – அப்படியும் அவன் ஒரு அறுந்த பட்டம்தான்.

அங்கு போகிறானே ராஜன், அவன் வித்தியாசமானவன்.
வெறும் வெளியில், தடித்த கோடுகள் ஆழமாகப் பதிந்த ஓர்
ஆள்காட்டி விரல் தெரிந்தது. நகப் பூச்சு பூசிய ஆள்காட்டி விரல்.
அழுக்கு நிறைந்த ஆள் காட்டி விரல். முட்டுகள் அருகே கோணிய ஆள் காட்டி விரல். நகம் கழுகின் மூக்குபோல் வளைந்த ஆள்காட்டி விரல்.
சிகரெட் கறை படிந்த கறுத்த ஆள் காட்டி விரல். ஆள்காட்டி விரல் சிரிக்குமோ…? சிரிக்கும் ஒலி கேட்டது.
ஆள் காட்டி விரல்கள் அவனையே சுட்டிக்காட்டின.

அதோ போகிறானே, ராஜன், ஒரு ஸீரியஸ் முட்டாள். தற்கொலையை
அவன் பிரமாதமாகத் திட்டமிட்டான். ஸ்வதேஷுக்கு ஓர் உருக்கமான கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு : “எனக்கும் உனக்கும் இடையே
ஒரு பிளவு; சமுதாயத்தின் ஓரவஞ்சனையின் விளைவு;
நீ தனியாகப் படுக்கிறாய் – நானும் அப்படியே.
வெகு நாட்களுக்குப் பிறகு நான் தனியாக, நீ தனியாகப் படுப்போம் – சுடுகாட்டில்.”

இதைப் பெயரெழுதாமல் நோட்டீஸ் போர்டில் குத்தி வைத்தான். தற்கொலைக்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே அவன் அதிகமாகக் குடித்தான். தலையைக் கலைத்துக்கொண்டான். யார் கேட்டாலும் பெருமூச்செறிந்து, “அவள் பெயரை நான் சொல்லி என்ன பயன் .. ?
ஒருத்தி என்னை நிராகரித்தாள்” என்றான்.
ஸ்வதேஷுக்குத் தூது. அவள் எக்காளச் சிரிப்பு.

தூக்க மாத்திரைகளை அவன் உட்கொண்டான். ஆஸ்பத்திரியில்
கண் விழித்தான். முதல் தற்கொலை முயற்சி முற்றும்.
பிறகு பல முயற்சிகள், பல கவிதைகள். அவனுக்குப் பட்டம்
சூட்டினார்கள்: ஸய்ஸைட் எக்ஸ்பர்ட் – சாகாமல் தற்கொலை செய்துகொள்வது எப்படி …? ராஜனைக் கலந்தாலோசியுங்கள்.
ஃப்ரான்ஸின் வெளிநாட்டுக் கொள்கை பின்தங்கியது.

அறிவுஜீவியான ஒரு பெண். அவளுடன் சர்ச்சைகள், விவாதங் கள். அவளுடன் படுப்பதுகூட ஒரு வித அறிவுப் பசியைத் தணிக்கத் தான்
என்று தோன்ற வேண்டும். ஒரே ஒரு அறிவு ஜீவியான பெண்.

நீக்ரோப் பிரச்சினைகள்; வியட்நாம் போர்; மாணவர் புரட்சி –
பேசி அலுத்து விட்டது. வியட்நாம் பற்றி இருவர் ஆராய்ச்சி செய்தாயிற்று. வியட்நாம் பிரச்சினை தீரவில்லை .

“நீ ஆராய்ச்சி செய்து உன் கருத்துபற்றித் தெரிவித்தாயே …?
யாருமே கவனிக்கவில்லையே ஹரிஷ்?”
“எனக்குப் பட்டம் கிடைத்ததோ, இல்லையோ?”
“அவ்வளவுதானா?”
“அவ்வளவுதான் முட்டாளே! நம் வாசகசாலையில் பிரச்சினைகள் தீருவதில்லை .”

ஃப்ரான்ஸ் பற்றிய இவன் கருத்துக்கள் விலைபெறாதா…?
ஃப்ரான்ஸ் பற்றிய அக்கறை போயிற்று. ஒரே ஒரு அறிவுஜீவியான பெண் – இவன் கர்வத்தை நிலைநாட்ட, இவனுள் முறிந்துபோன துகள்களைப் பொறுக்கி எடுத்துத் தர….

அவதிப்படும் சில தருணங்களில், இந்த உடல் வேதனையைத்
தணிக்க யாராவது ஒரு பெண் போதும் என்று தோன்றினாலும்,
மீண்டும் அவன் பழைய எதிர்பார்ப்புக்கே வந்தான், வேகமாக
ஓர் அம்பாஸடர் கார் வந்தது. கறுப்புப் புள்ளிகளுடன், ஆனந்தமாகக்
குதித்த ஒரு நாய் வீறிட்டது. ரத்தம், நசுங்கிப்போன கால்கள் தரையில் கிடக்க உடல் மட்டும் துள்ளும் துடிப்பு, பின் சாவு.
மீண்டும் கார்கள் வந்தன. செத்த பிணத்தின் மேல் ஏறின. போயின.

“பாபு, அந்த நாய்….”

“ராஜன் ப்ளீஸ். ஃப்ரான்ஸில் மாணவர் புரட்சிபற்றி நாம்
விவாதிக்கிறோம் நாயைப் பார்க்கிறாய் நீ.”
“அந்த நாயின் உடம்புக்கு மதிப்பு இல்லையா?”
“நீ இங்கே காருக்குக் கீழே வந்தால் உன் உடம்புக்கும்
இதே மதிப்புத்தான். சரி, மாணவர் புரட்சிபற்றிப் பேசுவோம்.”

வேலை கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் கிடையாது.
ஏனோ கிடைக்கவில்லை. சார்மினார் போய், பீடியும் போய் வெறும் உதடுகளை நக்கும் நிலை. நடக்கும்போது சுற்றியும் ஆள்காட்டி
விரல்கள் தெரிந்தன. அசையாத, நீண்ட, பழிக்கும் விரல்கள்.

“ஏய் ராஜன், ஃப்ரான்ஸின் வெளி நாட்டுக் கொள்கை என்னவாயிற்று?”

“இருண்ட பகுதிகள் என்ன ஆயின ?” –
“அவனுக்கு வேண்டிய இருண்ட பகுதி இன்னும் கிடைக்க வில்லை !…. ஹாஹ்ஹா …”

சென்னையிலிருந்து சாரி சாரியாக வந்தார்கள் தொழிலாளர்கள்.
டில்லியில் வேலை தேடி, பாராகம்பா ரோடின் முனையிலும் வேறு பல
தெருப் பகுதிகளிலும் வாசம். நல்ல குளிர் காலம். செத்தார்கள்.

விஸ்கி பாட்டில் துணையோடு புரட்சி நடக்கும் அறைக்குப் போனான், “இவர்களுக்காக ஒன்றும் செய்ய முடியாதா?”
“ராஜன், நீ உன் தீஸிஸை முடி முதலில்.”
அவன் ஒரு கவிதை எழுதினான் :

அடுத்த அறையில் புரட்சிக்கான ஆயத்தம் நடக்கிறது.
சிவந்த கண்கள், சிலிர்க்க வைக்கும் பேச்சுக்கள்,
தீர்மானங்கள்; திட்டங்கள். ரத்தம் கொதிக்கும் குமுறல்கள்.
ஆயத்தம் நடக்கும் புரட்சிக்காக. வாங்கி வந்த விஸ்கியின் வீர்யம் ஒடுங்கும்வரை.

ஆள்காட்டி விரல்கள் மழையாகப் பெய்யுமோ… ? பெய்தன.
ஊசிகளாகத் துளைத்துச் சதையைப் பிய்த்தன. நகங்கள் நீண்டு புண்களைக் குடைந்தன. கழுகின் வாயாய்ச் சதையைச் சுவைத்தன. பாம்பின் நாக்காய்க் குருதியை நக்கின.

உடையைக் கழற்றிப் போட்டுவிட்டு அவன் ஓடினான்.
ஷஹாத்ரா கொண்டு போனார்கள். பணிவிடை செய்தார்கள்.
திரும்பி வந்தான். கான்டீனில் அமர்ந்தான். டிகால் பற்றிப் பேச ஆரம்பித்தான். கான்டீனின் மறு முனையில் ஒரு சிறு நளினமான
விரல் அவனை நோக்கி நீண்டது.

அந்த விரலின் முனை துப்பாக்கி முனையாய்த் தோன்றி
அவனைக் கொன்றது.

சிறுவேலை ஒன்று கிடைத்தது. அவன் வயது 34. அவன் ஒரு ஆராய்ச்சி உதவியாளன். சம்பளம் 538 ரூபாய். அவன் ஒரு ஜீனியஸ். (பத்து வருடம் ஆராய்ச்சி செய்யவில்லையா என்ன?) இது அவனுக் கேற்ற வேலை
இல்லை. போனால் போகிறது.

இதை நிரூபிக்க வேண்டும், அவன் தகுதியை உணரச் செய்ய வேண்டும். யாரை…? ஓர் அறிவுஜீவியான பெண்ணை , சிவப்புப் புடவையில் அசையும் அந்தப் பெண்ணை . கறுப்பு லுங்கியில் நடக்கும் அந்தப் பெண்ணை .
பற்கள் எடுப்பாகத் தெரியச் சிரிக்கும் அந்தப் பெண்ணை .

வந்தபோது மூக்குப் பொட்டுடன் வந்து, இப்போது ஸ்லீவ்லெஸ்
ரவிக்கையில் வளைய வரும் அவளிடம்.

சதா படிக்கும் அந்தப் பெண் கூடத் தேவலை. புதிதாகச் சேர்ந்தவள்.
“நான் பத்து வருஷமாக இங்கே ஆராய்ச்சி செய்கிறேன்.” “ஓ! சந்தோஷம்.”
“ஃப்ரான்ஸின் வெளிநாட்டுக் கொள்கைபற்றி.”
“நல்ல ஆராய்ச்சிப் பொருள்.”
“வெகு சீக்கிரம் முடித்துவிடுவேன்.” “சந்தோஷம்.”
“என்னை நீ கல்யாணம் செய்துகொள்வாயா?”

முகமெல்லாம் சிரிப்புடன் விரலை நீட்டி, “உன்னையா?” என்றாள் அவள்.

விரலின் நுனியிலிருந்து நெருப்புக் கங்குகள் பறந்து வந்தன.
சுற்றியும் நெருப்பை உமிழும் விரல்களே தோற்றமளித்தன.

“விரல்களை நீட்ட வேண்டாம்…” அவன் குரலெடுத்துக் கத்தி,
உடைகளைக் களைந்தான்.

ஆராய்ச்சி செய்து களைத்தபோது பேச ஒரு சுவையான சம்பவம் உருவாகியது.

( ‘சுதேசமித்திரன்’ – தீபாவளி இதழ் 1972 )

…………………………………………………………………………………………………………………………………………………………………….……..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக