திமுக-வுக்கும் சங்கர மடத்திற்கும் என்ன சம்பந்தம்….???

……………………………………………………

………………………………………………….


…………………………………………..

‘திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல.
எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால்
அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு!

இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு
இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது
கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்.

1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி
அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்ற பொறுப்பு
தரப்பட்டது.

பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா
ஒப்புக்குத்தான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு
இளைஞர் அணி, தலைமைக் கழகத்துக்கு இணையான அணியாக மாற்றப்பட்டது.

அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால்… அன்பகம் ஸ்டாலினுக்கு.

இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்…
கட்சியின் மாவட்டச் செயலாளர்களாகவே வலம் வந்தார்கள்.
அதன் பிறகு அமைச்சரவையில் ஸ்டாலின் ஆட்களுக்குப்
பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில் கோட்டா வந்தது.
ஸ்டாலின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். அதன் பிறகு
பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர்,
துணை முதலமைச்சராகவும் ஆனார்.

இன்று, ஆட்சியும் கட்சியும் இவரது கண் அசைவில் தான்
நடக்கின்றன.

——————————————

மேலே இருப்பது – நான் எழுதியது அல்ல….

விகடன் ஆசிரியராக இருந்த –
திருவாளர் ப.திருமாவேலன் – முன்னொரு காலத்தில்,
விகடன் தளத்தில் எழுதியவை –
https://www.vikatan.com/anandavikatan/2011-mar-30/politics/4078.html )

——————————————-

நேற்றைய மின்னம்பலம் செய்தியிலிருந்து சில பகுதிகள் கீழே –
https://minnambalam.com/k/2019/06/02/34 )

திமுக தலைவர் ஸ்டாலின் மகனும், முரசொலி டிரஸ்டின் நிர்வாக
இயக்குனருமான உதயநிதியை கட்சியின் இளைஞரணி மாநிலச்
செயலாளராக நியமிக்க வேண்டும் என்று திமுகவின் பல்வேறு
மாவட்ட அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன.

அதன் அடிப்படையில் திமுகவின் தலைமைக் கழகத்தைச் சேர்ந்த
முக்கிய அமைப்பான சட்டத் திட்ட திருத்தக் குழு கூட்டத்திலும்
நேற்று (ஜூன் 1) தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் அது உதயநிதிக்கு பாராட்டுத் தீர்மானமாக
மாற்றப்பட்டிருக்கிறது.

இளைஞர்களின் ஈர்ப்பு நாயகன் –

திமுகவின் சட்ட திட்ட திருத்தக் குழு மாநில நிர்வாகிகள் கூட்டம்
நேற்று காலை 10 மணியளவில் அறிவாலயத்தில் நடந்தது. மாநில
அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நடந்த இந்தக்
கூட்டத்துக்கு சட்ட திட்ட திருத்தக் குழுவின் செயலாளர் மூத்த
வழக்கறிஞர் வில்சன், பாலவாக்கம் சோமு ஆகியோர் முன்னிலை
வகித்தனர். குழுவின் இணைச் செயலாளர்கள், உறுப்பினர்கள்
கலந்துகொண்டனர்.

”இந்தக் கூட்டத்தில் முதலில் உதயநிதிக்கு மாநில இளைஞரணிச்
செயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்று தீர்மானம்
நிறைவேற்றப்பட இருந்தது. அதற்கான வாசகங்களும் எழுதப்பட்டன.

ஆனால் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘இப்போதைக்கு
வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுங்க’ என்று
ஆலோசனை வழங்க, அதன்படியே தீர்மானம் மாற்றப்பட்டது”
என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

பின், ‘தமிழகம் முழுதும் இரவு பகல் பாராமல்
பட்டிதொட்டி முதல் பட்டணம் வரை
திமுக கூட்டணிக்காக சூறாவளி பிரச்சாரம்
மேற்கொண்ட –

இளைஞர்களின் ஈர்ப்பு நாயகன்,
முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர்
உதயநிதி அவர்களுக்கு
இக்கூட்டம் தனது நெஞ்சார்ந்த நன்றியையும்
வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது” என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் சட்ட திட்ட திருத்தக் குழுவினர்.

( சட்ட திட்ட திருத்தக்குழுவுக்கும் இந்த தீர்மானத்திற்கும்
என்ன சம்பந்தம்……? இதுவும் அந்த குழுவின் பொறுப்புகளில்
ஒன்றோ…? )

அதேநேரம் தீர்மானத்தில் உதயநிதிக்கு இளைஞரணி
மாநிலச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்ற வாசகங்கள்
இடம்பெறவில்லையே என்று உறுப்பினர்கள் சிலர்
வருத்தப்பட்டனர்.  

அந்தக் குறையைப் போக்க… (  )சட்ட திட்ட திருத்தக் குழுவின்
அனைத்து நிர்வாகிகளும் கையொப்பமிட்டு தனியாக ஒரு
கடிதத்தை கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் அளிக்க முடிவு செய்தனர்.

அதன்படி திமுக இளைஞரணிச் செயலாளர் பதவியை
உதயநிதிக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து
திமுக தலைவரின் முகவரியிட்டு கடிதம் தயாரித்தனர்.

மாலை 6.30க்கு ஸ்டாலின் அறிவாலயம் வந்தார்.

சட்ட திட்ட திருத்தக் குழு நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது
காலையில் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை
அவரிடம் கொடுத்தனர்.

படித்துக் கொண்டே வந்த ஸ்டாலின், ……சட்ட திட்ட திருத்தக்குழு
நிறைவேற்றிய தீர்மானத்தை வாசித்துவிட்டு, ’இது நல்லா இருக்கு’
என்று பாராட்டினார்.

அப்புறம் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்த ஸ்டாலினிடம்,
சட்ட திட்ட திருத்தக் குழுவின் செயலாளரான மூத்த வழக்கறிஞர்
வில்சன்,

‘தலைவரே… நம்ம சின்னவருக்காக ஒரு சின்ன கோரிக்கை…’

என்று சொல்லி அந்த கடிதத்தை ஸ்டாலின் கையில் கொடுத்தார்.
உதயநிதிக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பதவி கொடுக்க
வேண்டும் என்று தலைமையை கேட்டுக் கொள்ளும்
அந்த கோரிக்கைக் கடிதத்தைப் படித்துப் பார்த்த ஸ்டாலின்
நிமிர்ந்து, ‘இது சின்ன கோரிக்கையா? பெரிய கோரிக்கையாச்சே? ‘
என்று சொல்லி சிரித்திருக்கிறார்.

அதன் பிறகு, ‘நாங்க தம்பிய பார்த்துவிட்டு வந்துடுறோம் தலைவரே’
என்று குழுவினர் கேட்க புன்னகைத்தபடி விடை கொடுத்திருக்கிறார்
ஸ்டாலின்.

அதன் பின் நேற்று இரவு 7.30 மணிக்கு மேல் செனடாஃப் சாலையில்
உள்ள ஸ்டாலின் வீட்டுக்கு சட்ட திட்ட திருத்தக் குழுவினர் சென்றனர்.

சில நிமிடங்களில் அவர்களை வரவேற்ற உதயநிதியிடம்,
‘தலைவர் கலைஞருக்குனு ஒரு ஸ்டைல் இருக்கு.
அப்புறம் உங்க அப்பாவுக்குனு ஒரு ஸ்டைல் இருக்கு.
இப்ப இந்த தேர்தல் பிரச்சாரத்துல
உங்களுக்குனு இயல்பா ஒரு ஸ்டைல் அமைஞ்சிருக்கு.
அது எல்லாருக்கும் பிடிச்சிருக்கு’ என்று சட்ட திட்ட திருத்தக் குழு
உறுப்பினர் ஒருவர் சொல்ல நன்றிங்க என்றிருக்கிறார் உதயநிதி.

—————————————————————————

சங்கர மடத்தில் அடுத்த பீடாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு
என்று சில விதிமுறைகள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம்…

திமுக-வில்….???

– ஒரு வேளை … இது தான் விதிமுறையோ…???

( ஒரு பழைய இடுகையின் மறுபதிவு … !!! )

.
———————————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to திமுக-வுக்கும் சங்கர மடத்திற்கும் என்ன சம்பந்தம்….???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான் தலைவன் ஆகணும் என்று சொல்லியிருப்பாரோ?

    திமுக என்பது தனியார் கம்பெனி. அதில் பல்வேறு லெவல்களில், ப்யூன், செக்யூரிட்டி முதற்கொண்டு பொது மேலாளர் பதவி வரை, பலர் பணி புரிகின்றனர். அதிகபட்சம் பொதுமேலாளர் பதவி மாத்திரம்தான் ஒருவர் முன்னேற வாய்ப்பு (குடும்ப உறுப்பினர்கள் அந்தப் பதவிக்குப் போட்டியிடவில்லை என்றால்). அடிக்கும் ஜால்ராவுக்கு ஏற்றபடி பதவி உயர்வு கிடைக்கும். ஒன்றும் இல்லை என்றால், சட்டமேற்பார்வை அணி, இலக்கண அணி என்று ஒரு அணியை உருவாக்கி அதில் மெம்பர், துணைத்தலைவர் என்று ஒரு பதவி கிடைக்கும்.

    இந்த கம்பெனிக்கு பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக, அந்த அந்த பொசிஷனில் வேலையாட்கள் ரிடையர் ஆகும்போது அவரது மகன் மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுக்கப்படும்.

    அது சரி.. விகடனில் வாசன், அதற்கப்புறம் பாலசுப்ரமணியன், அதற்கப்புறம் திறமை இல்லாவிட்டாலும் ஸ்ரீநிவாசன் இவங்களுக்குத்தானே பதவி. திருமாவேலன் அந்த இடத்துக்கு ஆசைப்படுவாரா? இல்லை நினைத்துத்தான் பார்க்கமுடியுமா?

பின்னூட்டமொன்றை இடுக