……………………………………………….

…………………………………………………..
அண்ணாமலை அவர்களின் தற்போதைய நிலை குறித்து ஜூனியர் விகடன் சொல்வது –
ஓ.பி.எஸ்., டி.டி.வி விலகல், எடப்பாடி – செங்கோட்டையன் மோதல் என ஏற்கெனவே தேசிய ஜனநாயகக் கூட்டணி கலகலத்துப்போயிருக்கிறது. இந்தச் சூழலில், ‘`தி.மு.க ஒரு மிக பயங்கரமான கட்சி. 45 – 47 சதவிகித வாக்குகள் வைத்திருக்கிறார்கள். மக்களிடம் அந்தக் கட்சிக்கு எதிரான மனநிலை இல்லை’’ எனக் கூறி, கூட்டணிக்குள் எரியும் நெருப்பில் பெட்ரோலை அள்ளி ஊற்றியிருக்கிறார் அண்ணாமலை…!
கடந்த ஏப்ரலில், அண்ணாமலையிடம் இருந்த தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் பதவி பறிக்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர் பதவிக்குக் காய்நகர்த்தியவருக்கு, டெல்லி முட்டுக்கட்டை போட்டது. இதில் கடும் அதிருப்தியடைந்தவர், கட்சி நிகழ்வுகளைப் புறக்கணிப்பது, கூட்டணிக்கு எதிராகக் கருத்துகளைச் சொல்வது, ஆதரவு ஐடி விங் மூலம் நயினாருக்கு நெருக்கடி கொடுப்பது, ‘அண்ணாமலை அன்பு கூட்டம்’ எனத்
தனி ரூட்டில் பயணிக்கத் தொடங்கியது என, ஏகத்துக்கும் எதிர்த் திசையில் பயணித்தார் அண்ணாமலை. இதற்கெல்லாம் உச்சமாக அமைந்திருக்கிறது, அவரது சமீபத்திய பேட்டி.
‘தி.மு.க-வுக்கு எதிரான மனநிலை இல்லை…!’
9.9.2025 அன்று ‘இந்தியா டுடே கான்கிளேவ்’ நேர்காணலில் பங்கேற்ற அண்ணாமலை, “2026 தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பது அகில இந்தியத் தலைமையின் முடிவு.
2026-ல் பா.ஜ.க தனியாக ஆட்சியமைக்கும் நிலையில் இல்லை. விஜய் வருவதால் வாக்குகள் சிதறும். அ.தி.மு.க முதன்மையான எதிர்க்கட்சியாகவும், தி.மு.க-வுக்குச் சவால்விடுவதாகவும் இருக்கிறது. இப்போது பா.ஜ.க ஈகோவோடு தனித்துச் சென்றால், 2024 முடிவு 2026-லும் நடக்கலாம். எனவேதான், அகில இந்தியத் தலைமை, ஆழமாகக் கணக்கிட்டு முடிவெடுத்திருக்கிறது.
ஒருங்கிணைந்த கூட்டணி தேவை என்பதை எடப்பாடியும் அறிவார். தி.மு.க ஒரு மிக பயங்கரமான கட்சி. 2021, 2024 தேர்தலைப் பார்த்தால், அவர்கள்
45 – 47 சதவிகித வாக்குவங்கியை வைத்திருக்கிறார்கள்.
ஆளுங்கட்சிக்கு எதிரான உணர்வு இன்னும் மக்களிடம் உணரப்படவில்லை. அவர்களின் கூட்டணி மிகவும் வலுவாகவும், ஒருமித்ததாகவும் இருக்கிறது.
ஒருவேளை டிசம்பர், நவம்பர், ஜனவரியில் எங்கள் கூட்டணி முன்னிலை பெறத் தொடங்கலாம். இப்போது, நாங்கள் அதற்கான அடித்தளத்தை அமைக்கிறோம். தமிழ்நாட்டில் 18 முதல் 39 வயது வரை 2.28 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். அரசியல்ரீதியாக நாங்கள் இன்னும் அவர்களுடன் இணையவில்லை. அவர்களுக்கு ஏற்ப உரையாடலை மாற்ற வேண்டும்.
இந்த முறை நடப்பது, இருமுனைப் போராட்டம் அல்ல. மும்முனைப் போராட்டம். எனவே, என்.டி.ஏ முழு வேகத்துடன் களத்துக்குச் செல்ல வேண்டும். இளைஞர்களைத் தட்டியெழுப்ப வேண்டும்” என்று பேசினார்.
இந்தப் பேட்டியில், அண்ணாமலை தி.மு.க-வை விதந்தோதிப் பேசியது, கட்சிக்குள் பிரளயமாக வெடிக்கவே, `எனது ஆங்கிலப் பேட்டியைத்
தமிழில் தவறாக மொழிபெயர்த்து விட்டனர். மக்களின் மனநிலை
நவம்பர், டிசம்பரில்தான் தெரியும். தேர்தலுக்கு முன்பே மக்கள் எங்கள் பக்கம் வந்துவிட்டார்கள் எனச் சொல்வதில் பலனில்லை. தி.மு.க-மீது எதிர்ப்பு அலை இருக்கிறதா, இல்லையா என்பது தேவையற்ற பேச்சு’ என்றெல்லாம் விளக்கம் கொடுத்தார்… !!!
………………
இது குறித்து பத்திரிகையாளர் குபேந்திரன் சொல்வது –
“எடப்பாடியை வீழ்த்த நினைக்கும் அண்ணாமலை..!”
அண்ணாமலையின் விளக்கங்களை மறுக்கும் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், “அண்ணாமலை பேசியது உண்மைதான். அதைத் தவறாக மொழிபெயர்த்து விட்டார்கள் என்பது ஏற்கத்தக்கது அல்ல.
‘தி.மு.க-வின் ஊழல் ஃபைல்கள்’ என வெளியிட்டதுடன், கவர்னரிடமும் புகாரளித்தவர்தான் அண்ணாமலை.
அ.தி.மு.க-வுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டபோது, அமித் ஷாகூட, ‘தி.மு.க 39,000 கோடி ஊழல் செய்திருக்கிறது’ என்றாரே… நெல்லை பூத் கமிட்டி மாநாட்டிலும், ‘ஊழல் மிகுந்த கட்சி’ என தி.மு.க-வை விமர்சனம் செய்தாரே… மக்களிடம் தி.மு.க-வுக்கு எதிரான மனநிலை இல்லை என்றால், எதற்காக தி.மு.க ஒரு ஊழல் கட்சி என்கிறீர்கள்… ??
எடப்பாடியால் தலைவர் பதவியை இழந்ததால், அவரை வீழ்த்த அண்ணாமலை திட்டமிடுகிறார். அவருடன் டி.டி.வி-யும் இணைந்து செயல்படுகிறாரோ எனச் சந்தேகம் எழுகிறது.
இதற்கெல்லாம் மேலாக, சமீபத்தில் பல கோடிக்கு அண்ணாமலை
நிலம் வாங்கியதாகவும், அதற்கு தி.மு.க ஆதரவு இருப்பதாகவும் பா.ஜ.க-வினர் சமூக வலைதளங்களில் பரப்பிவருகின்றனர். இதில் அண்ணாமலை டென்ஷனின் உச்சத்தில் இருக்கிறார்.
கட்சிக்கு எதிராகச் செயல்பட்டால், அகில இந்தியத் தலைமை தன்னைக் கட்சியிலிருந்து வெளியேற்றும் என எதிர்பார்க்கிறார். பிறகு தனிக்கட்சி தொடங்கி, தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கலாம் அவர். ‘எடப்பாடியை வீழ்த்தத்தான் இந்தக் கூட்டணி’ என அதற்கு நியாயமான விளக்கம் கொடுக்கலாம் எனவும் கணக்கு போடுகிறார்.
இது அகில இந்தியத் தலைமைக்கும் தெரியும். அதனால்தான், அவரை வெளியில் அனுப்பாமல் வைத்திருக்கிறார்கள். அவர் சம்பாதித்த பணத்தை, கட்சிக்குள்ளேயே செலவுசெய்ய வைப்பார்கள். என்றார் அழுத்தமாக. ( நன்றி – ஜூனியர் விகடன் ….)
…………………………………………………………………………………………………………………………………………………………………………………



குபேந்திரனெல்லாம் 200ரூ உ.பி. பத்திரிகையாளர் போர்வையில் உலவும் திமுக அடிவருடி. திமுகவின் ஊழல்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா இல்லை குறிப்பிடத்தக்க சதவிகித மக்கள், தாங்கள் மாத்திரம் யோக்கியமானவர்களா, காசு வாங்கிக்கொண்டுதானே வாக்களிக்கிறோம், இலவசங்களைப் பெறுகிறோம், அதனால் திமுகவின் ஊழல்கள் பெரிய பிரச்சனை இல்லை என்று நினைக்கிறார்களா என்பது தெரியவில்லை.
தலைப்பு அண்ணாமலை அவர்கள் பேசியதைப் பற்றியது. அவர் மீது நல்லெண்ணம் உடையவர்கள் பாஜக தமிழகத்தில் பெரும்பான்மையினராக உள்ளனர். அகில இந்தியத் தலைமை ஒரு கணக்குப் போட்டு திமுகவிற்கு எதிராக கூட்டணி அமைக்கிறது. எனக்கென்னவோ, அமித்ஷா மற்றும் பாஜக தலைமை தமிழகத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. அல்லது அவர்கள் மிகத் தவறான முடிவுகள் பலவற்றை எடுக்கிறார்கள். இதற்குக் காரணம் நீதித்துறையின் நம்பகத்தன்மையா என்பது புரியவில்லை. பாஜகவின் வாக்கு சதவிகிதத்தைக் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தவர் அண்ணாமலை. எதற்காக முருகனை அமைச்சராக்கினார்கள், தமிழிசை போன்றவர்கள் பாஜகவிற்குச் செய்தது என்ன என்பதெல்லாம் புரியாத விஷயங்கள்.
திமுக பணத்தை வைத்து டிடிவி, ஓபிஎஸ் போன்றவர்களைப் பிரிக்கிறார்கள். இவர்களை எதிர்த்து எடப்பாடி அவர்கள் எவ்வளவு தூரம் வெற்றிபெறமுடியும் என்று பார்க்கணும். அதிமுக கஷ்டமான நிலையைக் கடக்கிறது என்று தோன்றுகிறது. இந்தத் தேர்தல் அதிமுகவின் நிலையைத் தெளிவாக்கும் (எடப்பாடி அவர்கள் தலைமையிலான அதிமுக).
தற்போது நடப்பது பலவும் சந்தேகத்தை எழுப்புகின்றன. அமைதியான செங்கோட்டையன் பிரச்சனையை எழுப்புவது. அமித்ஷாவைப் பார்ப்பது…. அண்ணாமலை மீது கறை படிவது, அல்லது அத்தகைய செய்திகளை ஊடகங்கள் பரப்புவது.
அண்ணாமலை ஒரே நேரத்தில் இரண்டு பெரிய கட்சிகளையும் எதிர்த்தது தவறான ஸ்ட்ராடஜியோ என்று தோன்றுகிறது. அண்ணாமலையின் பேட்டியில் தவறு இருப்பது போலத் தெரியவில்லை. திமுக கூட்டணி தற்போது 41 சதம் வாக்குகளுடனும், அதிமுக 25லும் இருப்பதுபோலத்தான் தெரிகிறது. பாஜகவுடன் சேர்ந்து 33 வரலாம். இதில் விஜய் யாருடைய வாக்குகளைப் பிரிப்பார், அதனால் திமுக கூட்டணிதான் அதிகமாகப் பாதிக்கப்படும் (10 சத வாக்கிழப்பு) என்று நான் நினைப்பது சரியா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கணும்.