……………………….

………………………..

……………………………………………….
தமிழ்த் தாத்தா உ.வே.சா……..
உ.வே. சாமிநாதையர் அவர்களை “தமிழ்த் தாத்தா” என்று முதலில் அழைத்தவர் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள்…..
கல்கி கிருஷ்ணமூர்த்தி, உ.வே. சாமிநாதையரின் தமிழ்ப் பணி மற்றும் தொண்டுகளைப் பாராட்டி, அவரை “தமிழுக்குப் பாட்டியாக ஒüவையார் இருப்பது போல், தமிழுக்குத் தாத்தா உ.வே.சா. இருக்கிறார்” என்று கூறி, “தமிழ்த் தாத்தா” என்று அழைத்தார்
ஒரு சமூகம் தன் முன்னோர்கள் வரலாற்றை, கலாச்சாரத்தை, வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள துணை நிற்பது முற்கால இலக்கியங்கள்.
அந்த வகையில் தமிழ்ச் சமூகத்தின் பழங்கால வரலாற்றை பிற்கால சந்ததியினர் அறியத் தந்தவர் உ.வே. சாமிநாதர்.
உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் அவர்ளின் மகனாகப் பிறந்தார். எனவே உ. வே. சாமிநாத ஐயர்; சுருக்கமாக உ.வே.சா.
தமிழறிஞரான உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் அழிந்து போகும் நிலையில் ஓலைச் சுவடிகளிலிருந்தப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றையும் தேடித்தேடி, அச்சிட்டுப் பதிப்பித்தவர். தமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டினால், இவரைத தமிழ்த்தாத்தா என மக்கள் அன்போடு அழைத்தனர்.
அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர் – உ. வே.சாமிநாத ஐயர் அவர்கள்.
இவர் தொண்ணூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப் பதித்தது மட்டுமின்றி 3000 -க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்து ஏடுகளையும் சேகரித்திருந்தார்.
…………………
“ கைத்தொழில் கொடுத்துங் கற்றல் கற்றபின் கண்ணுமாகும்
மெய்ப்பொருள் விளைக்கும் நெஞ்சின் மெலிவிற்கோர் துணையுமாகும்
பொய்ப்பொருள் பிறகள் பொன்னாம் புகழுமாம் துணைவியாக்கும்
இப்பொருள் எய்தி நின்றீர் இரங்குவ தென்னை என்றான் ”
மேற்கண்ட பாடல் –
சைவம் அதிகம் தழைத்தோங்கியிருந்த பாண்டி நாட்டினிலே சமணமும் சமம் பெற்றிருந்தது என்பதை உணர்த்தும் திருத்தக்கதேவரின் நூல் தமிழர்களுக்கு கிடைத்தது என்றால் அதற்கு காரணம் உ. வே. சா. …….. சிலம்பும், மணிமேகலையும் அச்சு வடிவில் வந்ததற்கு காரணமும் அவரே.
………………
பிப்ரவரி 19, 1855ஆம் ஆண்டில் கும்பகோணத்துக்கு அருகே உள்ள “உத்தமதானபுரம்” எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் மற்றும் சரசுவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார் உ. வே.சாமிநாத ஐயர் அவர்கள். இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சாமிநாத ஐயர், தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார்.
பின்னர் தன் 17-ம் வயதில் தஞ்சாவூர் திருவாவடு துறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்,
தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த. உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
கும்பகோணத்தில் தமிழாசிரியராகப் பணியில் இருந்தபோது தொடங்கிய ஓலைச்சுவடிகள் தேடும் பணியானது அவரது இறுதிக்காலம் வரைத் தொடர்ந்தது.
ஆற்றுப்படை நூல்கள், புராண நூல்கள் என சுமார் 90க்கும் மேற்பட்ட நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்து படியெடுத்து பதிப்பித்து தந்துள்ள சாமிநாதர் தமிழறிஞர்களால் தமிழ்த் தாத்தா என போற்றப்படுகிறார்.
அற்புதமான எழுத்தாற்றல், நகைச்சுவை இழையோடும் ஆற்றொழுக்கான பேச்சாற்றல் கொண்ட சாமிநாதருக்கு சென்னைப் பல்கலைக்கழகம் 1932 -ம் ஆண்டில் முனைவர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
இவரது பேச்சைக் கேட்ட காந்திஜி -இவரிடம் தமிழ் பயில ஆசை கொண்டார் என்பது இவரது பேச்சாற்றலுக்கு சான்றாகக் கூறப்படும் ஒன்று.
உ.வே சாமிநாத ஐயர், மட்டும் தோன்றியிருக்காவிட்டால், தமிழுலகிற்கு சிலப்பதிகாரத்தைப் பற்றித் தெரியாமலே போயிருக்கும். அகநாநூற்றிற்கும், புறநாநூற்றிற்கும் வேறுபாடு தெரிந்திருக்காது. மணிமேகலை மண்ணோடு மறைந்திருக்கும். இப்படி நூற்றுக்கணக்கான நூல்களை அழிவிலிருந்து காப்பாற்றி பதிப்பித்து நமக்குத் தந்தவர் உ.வே.சாமிநாத ஐயர் ….
தன்னுடைய சொத்துக்களை கூட விற்று, பல தமிழ் இலக்கிய நூல்களை பதிப்பித்தார்… தமிழ்த் தாயின் தலைமகனான உ. வே.சாமிநாத ஐயர். இத்தகைய அரிய சேவைக்காக அவரின் சீரிய முயற்சிகளும், தாராளம், பட்ட சிரமங்களும் ஏராளம்; இருப்பினும் தமிழ் மீது கொண்ட பற்றினால், மனம் தளராது இச்சேவையில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள்.
சங்க இலக்கியங்களை இன்று நாம் படிப்பதற்கு உ.வே.சாமிநாத ஐயர் அவர்களே காரணம் என்று தாராளமாகச் சொல்லலாம். சங்ககால மக்களின் வாழ்க்கை, பண்பாடு போன்றவற்றைப் பற்றி இன்று நமக்குத் துல்லியமாகத் தெரிகிறது என்றால் உ.வே.சாமிநாத ஐயரின் அருந்தொண்டே காரணம்; இல்லையென்றால் ஓலைச்சுவடிகளில் இருந்த இலக்கியங்கள் –
கரையானுக்கு இரையாகி, மண்ணோடு மண்ணாகியிருக்கும். இவ்விலக்கியங்கள் இல்லாத தமிழையும், தமிழிலக்கியத்தையும் யாராலும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
இவர் ஏட்டுச்சுவடிகளைப் பார்த்து அப்படியே அவைகளை பதிப்பித்தல் மட்டும் செய்யவில்லை. சிதைந்து, மறைந்து விட்ட அடிகளையும் சொற்களையும் கண்டு முழுப்பொருளும் விளங்கும் படி செய்தார்;
ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு போன்ற செய்திகளையும் தொகுத்து வழங்கி, இந்த நூல்களை குறித்த முழு புரிதலுக்கும் வழி வகுத்தார் உ.வே சாமிநாத ஐயர் அவர்கள். அவர் தோன்றிய காலத்தில் இருந்த தமிழின் நிலைக்கும், அவர் மறைந்த காலத்தில் உயர்ந்து நின்ற தமிழின் நிலைக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடுண்டு.
இவருடைய வாழ்க்கை வரலாறு தமிழ் மீது அன்பு கொண்ட அனைவரும் போற்றும் ஒரு புதையல். சிறிய வயதில் இவரிடம் யாராவது ஆங்கிலம் இவ்வுலக வாழ்விற்கும், வடமொழி ஆன்மீக வாழ்விற்கும் பயன்படும் என அறிவுறுத்தினால், என் அன்னைத் தமிழானது, இவ்வுலகம் மற்றும் அவ்வுலக வாழ்வு இரண்டிற்கும் இன்றியமையாதது எனக் கூறுவாராம்.
உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் பதிப்பித்த நூல்கள் எண்ணற்றவை; இவரது தமிழ்த்தொண்டும் நிகரற்றது; யாராலும் இன்று நினைத்துக்கூட பார்க்க முடியாதது.
உ. வே. சாமிநாத ஐயர் அவர்களை ஒரு குறுகிய மனப்பான்மையோடு, அவரை ஜாதி என்னும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைத்துவிட நினைப்பதென்பது அன்னை தமிழுக்கு செய்யும் மாபெரும் துரோகம். உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் தமிழ்த் தொண்டை யாராலும் மறைத்துவிட முடியாது ..வருங்கால தலைமுறையினருக்கு இவரைப் பற்றி சரியான தகவலைக் கொண்டு சேர்ப்பது நமது கடமை.
உ.வே.சாமிநாத ஐயர் இல்லையென்றால்,இன்று தமிழ் இலக்கியங்களே இல்லை என்றாகி இருக்கும். தமிழ் இலக்கியங்கள் இருக்கும் வரை உ.வே.சாமிநாத ஐயரின் புகழும் நிலைத்திருக்கும்.
தேடித்தேடிச் சேர்த்த ஓலைச்சுவடிகளை பாதுகாத்தளித்த தமிழ்த் தாத்தா 1942 -ம் ஆண்டு ஏப்ரல் 28-ல் இவ்வுலகை விட்டு மறைந்தார். ஆனாலும், சிலப்பதிகாரப் பாடல்களாக, திருமுருகாற்றுப்படை பாடல்களாக தமிழ் கூறும் நல்லுலகில் உ.வே.சா. இன்றும் வாழ்ந்தே வருகிறார்….
………………………………………………………………………………………………………………………………………………………
உ.வே.சா. அவர்களைப்பற்றி திரட்டப்பட்ட, மேலும் சில விவரங்கள் ……
குன்னத்தைச் சேர்ந்த தமிழ்ச்சான்றோரும், செல்வப்பெருந்தகையுமான சிதம்பரம் பிள்ளைதான் உ.வே.சாமிநாத அய்யர் குடும்பத்திற்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். அங்குள்ள அக்ரஹாரத்தில் தங்கிக்கொண்டு பெருமாள் கோயில் தெருவிலுள்ள சிதம்பரம்பிள்ளை வீட்டில் கல்வி கற்றார்.
ஒவ்வொரு மாதமும், உ.வே.சாமி நாத அய்யர் குடும்பத்திற்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. சிதம்பரம் பிள்ளை வீட்டுத் திண்ணையில் அமர்ந்துதான் இசைப்பாடல்களைப் பாடி, உ.வே. சாமிநாதரின் தந்தையார். ஊர்மக்களை மகிழ்வித்து வந்தார். அதற்கும் தனியே ஊதியம் வழங்கப்பட்டது.
செங்குணம் என்றழைக்கப்படும் இப்போதைய கிராமத்தில் ‘சின்னப் பண்ணை என்ற அடைமொழி கொண்ட விருத்தாசலம் ரெட்டியார் குடும்பத்திலும் தமிழ் பயில்வதற்காக தங்கியிருந்தார்.
அப்போதுதான், பாக்களைப் படைக்கும் திறன் வளர்க்கும் இலக்கண நூலான யாப்பருங்கலக் காரிகையைக் கற்றுத் தேர்ந்தார். பெரம்பலூர் பள்ளி ஆசிரியரிடம் திருக்குறள் நூலிருப்பதை அறிந்து அவரிடம் சென்று நேரடியாக திருக்குறளையும் பெற்றுக் கொண்டார்.
இப்போதைய வ.களத்தூரில் தங்கி இசைப்பாடல்களைத் தன் தந்தையோடு சேர்ந்து உ.வே.சாமிநாத அய்யர் உரக்கப்பாடியுள்ளார். 14 வயதில் பால்ய விவாகத்திற்காகத் தனது சொந்த ஊரான உத்தமதான புரம் சென்றார்.
விவாகம் முடித்து அரும்பாவூர் நாட்டார் வழிகாட்டுதலால் மேல் கல்வி பெற மாயவரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையைச் சந்தித்து கல்வி கற்றார்.
இடையே காரை கிருஷ்ண சாமி ரெட்டியார் ஏற்பாட்டின் பேரில் அங்கு தங்கி கதை இசைப் பாடல்களைப் பாடிவந்தார். இலந்தங்குழி கிராமத்தில் உள்ள நிலங்களை சன்மானமாகவும் பெற்றுள்ளார்.
விருத்தாசலம் ரெட்டியார் உடல்நிலை குன்றியிருந்தபொழுது, அவர்களுடைய குலதெய்வமான அருள்நிறை நீலியம்மன் மீது ‘நீலி அம்மன் இரட்டைமணி மாலை’ என்ற வெண்பா நூலினை இயற்றிப் பாடினார்.
பலநூறு படைப்புகளைப் பதிப்பித்த பெருமைகொண்ட உவே. சாமிநாத அய்யர், தானே படைத்த இலக்கண நூல் இது மட்டுமே.
………………………………………………………………………………………………………………………………………………………….……………………..



நிஜமான சாமியாரா இல்லை ….