ரங்கராவ் நாகேஷிடம் கேட்ட சம்பளம் – இரண்டு பெக் விஸ்கி …!!! நாகேஷ் சொன்ன ஒரு சுவாரஸ்யமான சம்பவம் …!!!

…………………………………..

………………………………..

நகைச்சுவை நடிகர் நாகேஷ் கதாநாயகனாக நடித்து அனைவரையும் பிரமிக்க வைத்த படம் 1964-ம் ஆண்டு வெளியான ‘சர்வர் சுந்தரம்’ –

படப்பிடிப்பின்போது, தனக்கும் நடிகர் எஸ்.வி.ரங்காராவுக்கும் இடையே நிகழ்ந்த சுவாரஸ்யமானச் சம்பவத்தை, ஒரு வார இதழுக்காக நாகேஷ் பகிர்ந்து கொண்டார். அதன் ஒரு பகுதி மட்டும் இங்கே. ( சினி ராக்கெட் … உதவியுடன் …))

…………………………………….

“சர்வர் சுந்தரம் படம் தொடங்கி முதல் நாள் படப்பிடிப்புக்கு நான் போனேன். அந்த கேரக்டருக்கு உரிய கோட் சூட் உடையோடு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நான் போய் இறங்கினேன்.

படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் தனியாக ரம்மியமான சூழலுடன் கூடிய ஒரு இடம் இருக்கும்.

காற்றோட்டமான அந்த இடத்தில், ஷாட் இல்லாத நேரத்தில் நடிகர்கள் அந்த இடத்தில் கூடியிருப்பார்கள். நான் போகும்போது ரங்காராவ் தனது நண்பர்களோடு அமர்ந்திருந்தார்.

என்னைப் பார்த்ததும், “டேய்… இங்க வாடா, என்ன ஹீரோவா நடிக்கிறாயாமே. ஹீரோ ஆயிட்டதால எங்களையெல்லாம் மதிக்காமல் போறியா” என்று என்னை கிண்டலாகக் கேட்டார்.

நான் அதெல்லாம் இல்லீங்கப்பா என்று சொன்னேன். “அப்பா அப்பான்னு சொல்றீயே… நீ ஹீரோவாக நடிக்கிற படத்தில் நான் இருக்க வேண்டாமா… போடா போய் எனக்கு சான்ஸ் கேட்டுட்டு வா” என்று என்னை அனுப்பினார்.

விளையாட்டுக்கு சொல்கிறாரா, கேலி செய்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால், இயக்குநர் பஞ்சு அவர்களிடம் சென்று ரங்காராவ் இப்படி சொல்கிறார் என்றேன்.

உடனே அவர் சீரியஸாகவே யோசித்து, நீ ஆக்ட் பண்றமாதிரி ஒரு காட்சிப் படத்தில் வருகிறதல்லவா அந்தக் காட்சியில் டைரக்டரா ரங்காராவை நடிக்க வைத்து விடலாம் என்று சொல்லிவிட்டார்.

அந்தக் காட்சியில் நடிகையாக மனோரமாவை நடிக்க வைத்தார்கள். அவர் வழக்கம்போல் அவரது பாணியிலேயே நடித்தார்.

அப்போது ஸ்பாட்டில் இருந்த ரங்காராவ், “அம்மா நீ இப்படி நடித்தால் சரியாக இருக்காது, நீயே ஒரு நடிகையாக நடிக்க வேண்டும். உதாரணமாக நீ சரோஜா தேவி மாதிரி ஆக்ட் பண்ணு” என்று சொல்லி விட்டார்.

அந்தக் காட்சியில் அப்படியே சரோஜா தேவியை கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்தியிருப்பார் மனோரமா.

அவர் நடக்கும்போதும், மேக்கப் போடும்போதும், ஜூஸ் கேட்கும்போதும் அலட்டும் அலட்டல் அழகாக செய்து காட்டியிருப்பார் மனோரமா.

டைரக்டராக ரங்காராவ் மனோரமாவை தாஜா பண்ணுவதும் என்னை அலட்சியம் செய்வதும் அந்தக் காட்சியே நன்றாக வந்திருக்கும்.

……………………….

……………………..

ஒருவழியாகப் படப்படிப்பு முடிந்துவிட்டது. ரங்காராவ் மிகவும் அழகாக நடித்துக் கொடுத்துவிட்டார்.

சரி இப்ப அவருக்கு என்ன சம்பளம் தருவது என்ற பேச்சு வந்தது. யாருக்கும் அவரிடம் போய் கேட்க பயம்.

இயக்குநர் பஞ்சு சாரோ, என்னைப் பார்த்து “நீதானே அழைச்சுட்டு வந்த… அதனால் நீதான் போய் கேட்க வேண்டும். எங்களுக்கு தெரியாது” என்று சொல்லி விட்டார்.

நான் மெதுவாகப் போய் ரங்காராவிடம் போய் நின்றேன்.

“என்னடா.. எப்படி இருந்தது” என்று கேட்டார்.

“அப்பா உங்களுக்கு எவ்வளவு சம்பளம் தரவேண்டும் என்று கேட்டேன்”.

“டேய்… எவ்வளவுடா தருவ” என்று கேட்டார்.

நான் பயந்து போய் “நீங்க எவ்வளவு கேட்குறீங்களோ, அதைத் தருவேன்” என்றேன்.

உடனே அவர் “டேய்… போடா ராஸ்கல்… சம்பளம் எதுவும் வேணாம். ரெண்டு பெக் விஸ்கி மட்டும் போதும்டா… வா நீயும் என்னோடு வந்து சாப்பிடேன்” என்று சாதாரணமாகக் கேட்டார். அதெல்லாம் ஒருகாலம்.” என்று சொல்லி முடித்தார் நாகேஷ்.

………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.