க்ரேஸி ……

……………………………….

……………………………………

நான் திருச்சியில், பாதுகாப்புத்துறை உற்பத்தி தொழிற்சாலையில்
பணி புரிந்து வந்த காலம், 1977-78 என்று நினைக்கிறேன்…
தொழிற்சாலையின் சார்பாக ஒரு விழா – மத்திய அரசு நிகழ்வு –
எனவே, அரசு சடங்குகள் அதிகம்… அப்போது விழா நிகழ்ச்சிகளின்
ஒரு பகுதியாக ஒரு தமிழ் நாடகம் போட முடிவுசெய்யப்பட்டு,
ஜி.எம். அவர்கள், என்னிடம் அதற்கான பொறுப்பை கொடுத்தார்…

அப்போது சென்னையில், பரபரப்பாக பேசப்பட்டு வந்த ‘ க்ரேசி தீவ்ஸ்
இன் பாலவாக்கம் ‘ என்கிற நகைச்சுவை நாடகத்தை ஏற்பாடு
செய்தோம்… அப்போது க்ரேஸி மோகனை நேரில் சந்தித்து பேசக்கூடிய
வாய்ப்பு எனக்கு கிடைத்தது…அப்போது எஸ்.வி.சேகரும் அவருடன்
இருந்தார்….. மிக மிக எளிமையான, சரளமாக பழகும் குணம் கொண்டவர் மோகன்.

பிற்பாடு -அவர் கலையுலகில் – உயரே, உயரே பறந்தார். மிகுந்த புகழ்….
பரபரப்பு …நாடகம், சினிமா என்று மிகவும் பிஸி…..ஆனாலும், அவர்
எளிமை மாறவில்லை….

அவரைப்பற்றிய ஒரு கட்டுரையை வலைத்தளத்தில் பார்த்தேன்.
இங்கே போட வேண்டும் என்று தோன்றியது. கீழே – தமிழ் எக்கோ-வுக்கு
நன்றியுடன்….

…………………………….

இதே ஜூன் 10.,,2019

*என் அந்த கால ஆனந்த விகடன் கேபின்மேட் கிரேஸி மோகன் நினைவு நாளின்று*

முன்னொரு காலம் ”படத்துக்கு ஆரு வசனம் தெரியும்ல’’ அப்படீன்னு ஒரு படம் ரிலீஸாகும் போதே ரசிகர்கள் பேசிக்கொண்டது நடந்திருக்கிறது. அண்ணா வசனம், கலைஞர் வசனம், இளங்கோவன் வசனம், ஆரூர்தாஸ் வசனம், ஸ்ரீதர் வசனம், பாலமுருகன் வசனம், பாலசந்தர் வசனம், பாக்யராஜ் வசனம், ஏ.எல்.நாராயணன் வசனம், சுஜாதா வசனம், பாலகுமாரன் வசனம் என்று வசனம் எழுதியவர்களுக்காகவே படம் பார்த்ததெல்லாம் உண்டு.

அந்த வகையில் ஒரு வசனத்தைக் கேட்டு குபீரென கைதட்டி சிரித்திருப்போம். அப்படி நாம் சிரித்துமுடிக்கும் வரையெல்லாம் காத்திருக்காமல் சிரிப்பலை அடங்குவதற்குள் மேலும் சில ஜோக்குகள் நம்மைக் கடந்து போயிடும். அதுனால் இரண்டரை மணி நேர சினிமாவில், மொத தபா பார்க்கும்போது, 36 இடங்களில் சிரிச்சிருப்போம். செகண்ட் தபா பார்க்கறச்சே 57 இடங்களில் சிரிப்போம். இப்படி ஒவ்வொரு முறையும் பார்க்கப் பார்க்க, சிரிப்பின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்.

அப்படி ஒரு மேஜிக் வசனகர்த்தான் கிரேஸி மோகன் .

இன்ஜினியரிங்க் படிச்சவர். புகழ் பெற்ற டிவிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தார். ஆனாலும் மனசு முழுக்க எழுத்திலும் அந்த எழுத்து முழுக்க நாடகத்திலும் இருந்ததால் ’கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ எனும் நாடகத்தை எழுதினார். அது செம ஹிட்டு.பார்த்தவர்கள் எல்லோரும் குலுங்கிச் சிரித்தார்கள். அப்படி மனம் விட்டுச் சிரிப்பதற்காகவே மீண்டும் வந்து பார்த்தார்கள். மோகன் ரங்காச்சாரி ஆர்.மோகன் என்றானார். பிறகு யார் மோகன் என்று எல்லோரும் கேட்க… கிரேஸி மோகன் ஆனார்….!!!

கிரேஸி மோகனின் கதை வசனத்துக்கு அவரின் சகோதரர் பாலாஜி ஹீரோவானார். மோகன் கிரேஸி மோகனானது போல், பாலாஜி மாது பாலாஜி என அடையாளம் காணப்பட்டார். இதெல்லாம் கிரேஸியின் ஆரம்ப சாதனைகள்.இவரின் கதை, டைமிங் காமெடிகள் பாலசந்தரையே அட்ராக்ட் பண்ணிபுடுச்சு. அழைச்சு வியந்து பாராட்டி கோடம்பாக்கத்துக்கு கைப்பிடித்து அழைத்து வந்தார். இவரின் நாடகம் சினிமாவாயிற்று. அதுதான் ‘பொய்க்கால் குதிரைகள்’.

குரு பாலசந்தரை ஈர்த்தது போலவே சிஷ்யன் கமலையும் கிரேஸியின் எழுத்துகள் ஈர்த்ததில் வியப்பில்லை. ’சத்யா’ படப்பிடிப்பு சுடுகாட்டில் நடந்துகொண்டிருந்தது. அப்போது சாலையில், ஸ்கூட்டரில் போய்க்கொண்டிருந்த கிரேஸி மோகனை அழைத்தார்.

அவர்களின் சந்திப்பு சுடுகாட்டில் நடந்தது. அந்த சுடுகாட்டில் பிறந்தது அவர்களின் நட்பு. ‘அபூர்வ சகோதரர்கள்’ மூலம் வசனகர்த்தாவாக அறிமுகப்படுத்தினார். தெறித்துச் சிரித்தார்கள் ரசிகர்கள். அந்த வகை வசனங்கள், தமிழ் சினிமாவுக்குப் புதிதாக இருந்தன. எண்பதுகளின் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள். திரும்பத் திரும்பப் பார்த்து கொண்டாடினார்கள். குள்ள கமலுக்காகவும் குட்டிகுட்டி காமெடிகளையும் ரொம்பவே ரசித்தார்கள்.‘இந்திரன் சந்திரன்’, ‘மகளிர் மட்டும்’, சதிலீலாவதி’ என கமல் தொடர்ந்து கிரேஸி மோகனைப் பயன்படுத்தினார். கமல் கிரேஸி கூட்டணி என்றாலே சிரிப்புக்குப் பஞ்சமில்லை என்பது ஒவ்வொரு படத்திலும் நிரூபணமாகிட்டே இருந்துச்சு.

அப்பேர்ப்பட்டவர் விகடனில் எங்களுக்கான கேபினில் திடீரென்று மிகப் பெரிய டேபிள் மற்றும் பிரமாண்டமான சேர் எல்லாம் வந்தன. அதைப் பார்க்கும் போதே தெரிந்தது – வரப் போகிறவர் கொஞ்சம் மேலிட செல்வாக்கு மிகுந்தவர் என்று புரிந்தது. ஆனால் வரப் போவது யார் என்பதை சொல்ல மறுத்து விட்ட நிலையில் வந்தவமர்தவர்தான் -கிரேஸி மோகன். ஜஸ்ட் இரண்டரை ஆண்டுகள் உடன் பயணிச்ச போது கிடைச்ச அனுபவம் இன்னிக்கும் ஸ்மைலியை வரவழைக்குது.

………………………………………………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.