பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்தியா இந்து நாடு என்றுஅறிவிக்கப்படுமா ..… ??? எல்.கே.அத்வானி தந்த பதில் –

………………………………………………..

…………………………………………………

நீண்ட நாட்களுக்கு முன்னர், எல்.கே.அத்வானி அவர்கள்
விகடனுக்கு அளித்த பேட்டி- கேள்வி, பதில் …..

கேள்வி:
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்தியா
‘இந்து நாடு’ என்று அறிவிக்கப்பட்டு விடுமோ?

அத்வானி: ஒரு பிரிட்டிஷ்காரரிடம், ‘பிரிட்டன் ஒரு கிறிஸ்தவ நாடாக ஆக்கப்படுமா?’ என்று கேட்டால் அப்படி கேட்டவரைப் பார்த்து அவர் சிரிப்பார். பிரிட்டன் கிறிஸ்தவ நாடாக மாற்றப்படவில்லை. ஆரம்பத்திலிருந்தே அது கிறிஸ்தவ நாடாகவே இருந்து வந்திருக்கிறது.

ஆனால், இந்தியாவை ஒரு இந்து நாடு என்று சொன்னால், சிலர் பதறிப்போகிறார்கள். இந்தியா, இந்தியாவாக இருப்பதற்குக் காரணமே,
அது இந்து நாடு என்ற காரணத்தினால்தான். அதே சமயம், இந்துக்கள் அல்லாதவர்களும் நமது தேசத்தின் வளர்ச்சிக்குத்துணை புரிந்திருக்கிறார்களென்பதை நான் ஏற்கிறேன்.

டொனால்ட் ஈகின் ஸ்மித் என்பவர் ‘India as a secular state’ என்ற புத்தகத்தில்,‘இந்தியா ஒரு மிக்‌ஸட் ஸ்டேட் என்று கூறுபவர்கள் இந்தியாவுக்கு
இந்து மதம் வழங்கியுள்ள கலாசாரத்தைக் குறைத்துக்காட்டவே விரும்புகிறார்கள்’என்று கூறுகிறார்.

‘இந்தியாவில் பல மதங்கள், பல இனங்கள்… ஆனால், இந்து மதத்தைப்
போல நீண்ட சரித்திரம் எதற்கும் இல்லை. இந்து மதம் இல்லையெனில், இந்தியா ஒரு இடுகாடு’என்று அன்னிபெசண்ட் கூறியதையும் இந்த இடத்தில் நான் கூற விரும்புகிறேன்.

கேள்வி:
இந்தியாவில் இந்துக்கள் அல்லாதவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப்படவேண்டும் என்பதுதான் பாரதிய ஜனதாவின் கொள்கையா?

அத்வானி: 1947-க்குப் பின்பு, இந்து-முஸ்லீம் என்று மதங்களின் அடிப்படையில்தான் நாடு பிளவு பட்டது. அப்போது பாகிஸ்தான்
தன்னை ஓர் இஸ்லாமிய நாடு என்று பிரகடனப்படுத்திக் கொண்டது. முஸ்லீம்களை முதல் தரக் குடிமக்கள் என்றும், முஸ்லிம் அல்லாதவர்களை இரண்டாம் தரக் குடிமக்கள் என்றும் அறிவித்தது.

அதனால் நூற்றுக்கணக்கில் இந்துக்கள் கொல்லப்பட்டார்கள். பல லட்சம் பேர் வீடு இழந்தார்கள். இருந்தாலும், அப்போது இந்தியா தனது
அரசியல் சட்டத்தை அறிவித்தபோது, தன்னை மதச்சார்புள்ள நாடாக அறிவித்துக்கொள்ளவில்லை.

மக்களையும் அவர்களின் மத நம்பிக்கைகளையும் வைத்து உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று இந்தியா ரகம் பிரிக்கவில்லை.

ஆகையால் –
இந்தியா 1947-லேயே வேண்டாம் என்று தள்ளிய முறையை நாங்கள் ஒருபோதும் கொண்டு வரமாட்டோம்.

அதே சமயம், மதச்சார்பின்மை என்ற பெயரால் சிறுபான்மையினருக்கு மட்டும் தனியாக அதிகச் சலுகைகளைக் கொடுப்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில், மதச்சார்பின்மையில் அனைவரும் சமம்..!

கேள்வி:
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வேரூன்றுமா?

அத்வானி: தமிழகத்தைப் பொறுத்தவரை ஓட்டுக்கள் தி.மு.க., அ.தி.மு.க. என்று இரண்டு பக்கங்களில் மட்டுமே பிரிகின்றன. ஆகையால் ஒரு மூன்றாவது கட்சி உள்ளே நுழைவது கடினமாக இருக்கிறது. காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகள்கூட ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் பின்னால் நிற்கும் நிலைதான் இங்கே இருக்கிறது. கர்நாடகம், ஆந்திரம், கேரளா ஆகிய தென்மாநிலங்களில் எங்கள் கட்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது. விரைவில் தமிழகத்திலும் பாரதிய ஜனதா கட்சி வேரூன்ற
நிறைய சாத்தியங்கள் உள்ளன.

கேள்வி:
உருவ வழிபாட்டில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?

அத்வானி: நான் உருவ வழிபாடு செய்வது கிடையாது. பூஜை,
சடங்குகளும் செய்வதில்லை. ஆனால், இவற்றில் தவறு இருப்பதாகவும் எனக்குப் படவில்லை.

(நன்றி – ஆனந்த விகடன் – 25-11-1990 )

………………………………………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.