
……………………………………………………………………………………………………………………………………………………………..
பாண்டிச்சேரியோடு என் சகவாசம் நீண்டநாளுக்கானது…
இனிமையான அனுபவங்கள்….
பாண்டிச்சேரி பீச், மணக்குள விநாயகர் ஆலயம்
அரவிந்தர் ஆசிரமம், கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு
என்று நேர் நேராக தெருக்கள்….
பட்டாணிக்கடை மூலை,
பிஸியான டூப்ளே ஸ்ட்ரீட் India coffee house,
கிழக்கு நோக்கி எந்த தெருவில் நடந்தாலும், நேராக
பீச்சில் கொண்டு போய் விடும் நேரான தெருக்கள்….
எக்கச்சக்கமான சினிமா தியேட்டர்கள்…
ஆனால், கடைசியாக நான் பாண்டிச்சேரி சென்றே
பல வருடங்களாகி விட்டது.
1960-களில் என் அம்மா,அப்பா, தம்பி,தங்கை எல்லாரும்
பாண்டிச்சேரியில் இருந்தார்கள். நான் பணி நிமித்தமாக
எங்கெங்கோ இருந்தேன். ஆனால், அவ்வப்போது, அவர்களைப்
பார்க்க பாண்டிச்சேரி போய் வருவேன்… இடையில் சில மாதங்கள்
தொடர்ந்தும் இருந்தேன்…
அப்போதெல்லாம் அது மிகச்சிறிய ஊர்…
ஊரின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு
நடந்தே போய் விடலாம். மிஞ்சி மிஞ்சிப்போனால்
3 கி.மீ.இருக்கும்… அவ்வளவு தான்…
இப்போது ஊர் எக்கச்சக்கமாக பரந்து விரிந்து விட்டது….
பாண்டிச்சேரியின் பின்னணி வித்தியாசமானது…
சற்று விசித்திரமானது….
இந்தியாவின் மற்ற பகுதிகள் பிரிட்டனின் காலனியாக
இருந்தபோது, பாண்டிச்சேரி ஃப்ரெஞ்ச் காலனியாகவும்,
கோவா போர்ச்சுக்கீஸ் காலனியாகவும் இருந்தன..
1947 ஆக்ஸ்டில், இந்தியா பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை
பெற்றபோது இந்த இரண்டு காலனிகளும் விடுதலை
பெறவில்லை…
போர்ச்சுக்கீஸ், கோவாவை விட்டு அகல மறுத்து விட்டது.
இந்திய அரசு பேச்சு வார்த்தை நடத்திப் பார்த்தது.
போர்ச்சுக்கல் ஒத்துழைக்கவில்லை. இறுதியில்
பேச்சு வார்த்தைகள் பலன் அளிக்காத நிலையில்,
இந்திய ராணுவம், டிசம்பர் 1961-ல் வலுக்கட்டாயமாக
கோவாவிற்குள் நுழைய, மூன்றே நாட்களில் போர்ச்சுக்க்கல்
சரணடைய வேண்டியதாகி விட்டது.
பாண்டிச்சேரியில் நிலைமை வேறு மாதிரி. ப்ரெஞ்ச் அரசு நேரடியாக சுதந்திரத்தை மறுக்கவில்லை… ஆனால் அதை பாண்டிச்சேரி மக்களின் விருப்பத்திற்கு விட்டு விடுவதாகச்
சொல்லி தப்பித்துக் கொண்டது.
பாண்டிச்சேரியில் ப்ரெஞ்சு அரசுக்கு ஆதரவாக, French India
Socialist Party, என்கிற ஒரு பெரும்பான்மை கட்சி,
இயங்கி வந்தது. அவர்கள் தாங்கள் பிரான்சுடன் தொடர்ந்து
இணைந்திருப்பதையே விரும்புவதாக அறிவித்தனர்.
இந்த கட்சிக்கு எட்வர்ட் குபேர் தலைமை தாங்கினார்….

அதற்கு காரணங்களும் இருந்தன. பாண்டிச்சேரி மக்களுக்கு
ஃப்ரான்ஸ், பிரெஞ்ச் குடியுரிமை அளித்திருந்தது. அவர்கள்
சகஜமாக ஃப்ரான்ஸ் போய் வர முடிந்தது. பாண்டிச்சேரி
மக்கள் நிறைய பேர் ஃப்ரென்ச் ஆர்மியில் சேர்ந்திருந்தனர்.
அவர்களுக்கு நல்ல சம்பளம் கிடைத்தது. 35 வயது
ஆனாலேயே ராணுவத்திலிருந்து முழு பென்ஷனுடன்
ஓய்வு பெற்று விடலாம்…. பென்ஷனாக நல்ல தொகை…
இந்த சலுகைகளை எல்லாம் விட்டு விட அவர்களுக்கு
மனம் வரவில்லை. இந்திய சுதந்திர போராட்டத்தின்
விளைவுகள் அவர்களை ஈர்க்கவில்லை.
ஆனால், இன்னொரு பிரிவான பாண்டிச்சேரி தொழிலாளர்
வர்க்கம், அங்கிருந்த மூன்று பருத்தி ஆலைகளையே
நம்பி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தது….
20ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே அவர்கள்
வாழ்க்கைத்தரம் மிக மோசமான நிலையில் இருந்தது.
அவர்களின் நலனை காக்க கம்யூனிஸ்ட் கட்சி தீவிரமாக
போராடி வந்தது. தனியார் முதலாளிகளிடம் இருந்த
இந்த மில்களில் கடுமையான வேலை நேரங்கள்.
மிகக்குறைந்த சம்பளம்… கட்டுப்பாடுகள்…
கம்யூனிஸ்ட் கட்சியினர் பாண்டிச்சேரி ஃப்ரான்சிலிருந்து
விடுபட்டு சுதந்திர இந்தியாவுடன் சேருவதையே விரும்பினர்.
1930-களிலேயே அவர்கள் ஃப்ரெஞ்ச் ஆதிக்கத்தை எதிர்த்து
குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
ஆனால், பெரும்பான்மை மக்களின் விருப்பம் என்கிற
முகமூடியின் கீழ் ப்ரெஞ்ச் அரசு சுதந்திர கோரிக்கையை
மறுத்து வந்தது.

கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப்போராட்டத்தை துவங்கியது.
இந்த இயக்கத்தை தோழர் வி.சுப்பையா தலைமை தாங்கி
நடத்தினார். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது.
சுப்பையாவின் தலைக்கு விலை பேசப்பட்டது….
சுப்பையா தலைமறைவாகி, இயக்கத்தை தொடர்ந்து
நடத்தினார்…..
அந்த சமயத்தில் சுப்ரமணிய பாரதி, ஆங்கில அரசின்
கைது வாரண்டிலிருந்து தப்ப, பாண்டிச்சேரியில் தஞ்சம்
புகுந்திருந்தார்…..

ஏற்கெனவே இந்தியா பத்திரிகையை பாண்டிச்சேரியிலிருந்து
வெளியிடத்துவங்கி இருந்தார் பாரதி.

பாண்டிச்சேரியில் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கைகளை
ஆதரித்து தொழிலாளர்களின் நலனை முன்வைத்து “சுதந்திரம்”
என்கிற பெயரில் பாரதி ஒரு பத்திரிகையை நடத்தினார். அந்த
பத்திரிகையும் ஃப்ரெஞ்ச் அரசால் தடை செய்யப்பட்டது. மில்
தொழிலாளர்கள் ரகசியமாக அதை வாங்கிப் படித்தனர்….


இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பாண்டிச்சேரியிலும்
கொஞ்சம் கொஞ்சமாக அதன் தாக்கம் தெரியத் துவங்கியது.
சுதந்திர கோரிக்கை தீவிரம் அடைந்த நிலையில்,
இந்திய அரசும் அதற்கு ஆதரவு கொடுத்தது.
ஃப்ரென்சு அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தியது.
நிலைமை மாறுவதை உணர்ந்து கொண்ட ஃப்ரென்ச் ஆதரவு
கட்சியினர் தங்கள் நிலையையும் மாற்றிக்கொண்டனர்.
எட்வர்ட் குபேர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்…
பாண்டிச்சேரி இறுதியாக 1954, நவம்பர் 1 – முதல் சுதந்திரம்
பெற்று, இந்தியாவுடன் இணைந்தது. 1954-லேயே
நடைமுறையில் அமலுக்கு வந்து விட்டாலும், எட்டு
ஆண்டுகள் கழித்து, மே, 1962-ல் தான் ஃப்ரெஞ்ச்
பாராளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,
அதிகாரபூர்வமாக அக்டோபர், 1962-ல் இந்தியாவுடன் இணைப்பு
அறிவிக்கப்பட்டது.
இதில் பரிதாபம் என்னவென்றால் – சுதந்திரத்திற்காக
முழு மூச்சுடன் ஆயுதம் ஏந்தி போராடிய கம்யூனிஸ்ட்
தலைவர் சுப்பையா – கடைசி வரை ஆட்சிக்கு வரவே இல்லை. எதிர்க்கட்சி தலைவராகவே இருந்தார்….
அந்த காலகட்டங்களில், பாண்டிச்சேரியில் இரண்டே கட்சிகள்
தான். காங்கிரஸ் -கம்யூனிஸ்ட்….
காங்கிரசில் சேர்ந்த குபேர் சில காலம் பாண்டிச்சேரி
முதலமைச்சராக இருந்தார். குபேர் அவர்களைப் பற்றி
சில வரிகளாவது இங்கே சொல்லியே ஆக வேண்டும்…
( நான் நிறைய தடவை அவரை மிகஅருகிலிருந்து
பார்த்திருக்கிறேன்….. ரசித்திருக்கிறேன்…!!!)
மிகவும் பாப்புலரான ஆசாமி குபேர்.
பொது மக்கள் அவரை மிகவும் விரும்பினர்.
ஆசாமி செக்கச்செவேலென்று பரங்கிப்பழம்
மாதிரி இருப்பார். ( இவரது தந்தை பிரென்சுக்காரர்…
தாய் இந்தியர்…) எப்போதும் சிரித்த முகம்.
எல்லாரிடமும் சகஜமாகப் பழகுவார்.
சில சமயங்களில், பாண்டிச்சேரியின் முக்கிய கடைவீதியாகிய
டூப்ளே ஸ்ட்ரீட்டுக்கு வருவார். அங்கே இருக்கும் ஏழை,
எளியவர்கள், ரிக்ஷாகாரர்கள் எல்லாரும் அவரை சூழ்ந்து
கொண்டு விடுவார்கள்…. அவர் எல்லாரிடமும் சகஜமாக
பேசிக்கொண்டே பாக்கெட்டில் கையை விட்டு (வெள்ளை
அரை ஜிப்பா அணிந்திருப்பார்…) கிடைக்கிற நோட்டுகளை
கத்தையாக எடுப்பார். அங்கே இருப்பவர்கள் எல்லாருக்கும்
எண்ணாமலே கொடுத்துக் கொண்டிருப்பார். சில சமயங்களில்
ஜிப்பாவின் இரண்டாவது பாக்கெட்டிலும் கரன்சி இருக்கும்.
அதையும் எடுத்து கொடுத்துக் கொண்டே இருப்பார்.
முழுவதும் தீரும் வரை கொடுத்துக் கொண்டே இருப்பார்….
வள்ளல் என்றால், நான் நேரில் பார்த்த நிஜ கொடை வள்ளல்
அவர் தான்…. அதெல்லாம் குபேர் காலத்துடன் தீர்ந்தது…
( பிற்காலத்தில் ஒரு தடவை எம்.ஜி.ஆர். அவர்கள் இதே மாதிரி
கத்தைப் பணத்தை ஜிப்பா பாக்கெட்டிலிருந்து எடுத்து எண்ணாமலே
கொடுத்ததை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது….!!! )
இன்னமும் நிறைய எழுதலாம். ஆனால் இடுகை ஏற்கெனவே
நீண்டு விட்டது. இருந்தாலும் இரண்டு விஷயங்களை மட்டும்
சொல்லிவிட்டு முடித்து விடுகிறேன்….
தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்த நேரம் அது.
ஒவ்வொரு சனிக்கிழமை மாலையானதும், மெட்ராசி’லிருந்து “குடிமக்கள்” வந்து பாண்டிச்சேரியில் குவிந்து விடுவார்கள்.
பாண்டிச்சேரியில் மேலண்ட புல்வார் ஒரு முக்கியமான தெரு.
வெளியூரிலிந்து வருபவர்களுக்காக –
அந்த தெருவில் நிறைய கைகாட்டி’கள் இருக்கும்…
அதில் என்ன எழுதப்பட்டிருக்கும் தெரியுமா…?
“கள்ளுக்கடைக்கு போகும் வழி — ”
கடைக்கு அருகே நெருங்கியதும் “இதோ கள்ளுக்கடை”…!!!
இன்னொரு விசேஷம் – மேலண்ட புல்வாரில் ஒரு ஒண்ணரை
கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளாக 8 சினிமா தியேட்டர்கள்…!
அப்போதெல்லாம் ஏ.சி. கிடையாது. தியேட்டர்களில் மூன்று
வகுப்புகள். சேர், முதுகில் சாயும் வசதிகொண்ட பென்ச்,
சாய முடியாத வெறும் பென்ச்….
புதுப்படம் எது ரிலீசானாலும், பாண்டிச்சேரியில் அன்றே
பார்த்து விட முடியும்…காரணம் 600 பென்ச் டிக்கெட்
கொடுப்பார்கள். நெருக்கியடித்து உட்கார்ந்து படம் பார்த்துவிட்டு
வெளியே வரும்போது ஒவ்வொருவரும் வியர்வையில்
குளித்திருப்பார்கள்…!!!
மறக்க முடியாத ஒரு அனுபவமாக, திரு.ஜெயகாந்தன் அவர்களை
நான் சந்தித்து, அவருடன் சில மணி நேரங்கள் இருக்க முடிந்ததும்
பாண்டிச்சேரியில் தான். ( சற்றே மாற்றப்பட்ட மறுபதிவு )
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



[…] […]