கவிஞர் தாமரை’யின் துயர அனுபவங்கள் ….

……………………………………….

……………………………………….

எனக்குப் பாடல் எழுத அரை நாள் போதும் …..

படிதாண்டத்தான் அரை ஆயுசு தேவையாயிருந்தது……!!!

………………………………….

ஏழு வயதிலேயே கதைப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தவள் நான். எங்களை வளர்த்த பெரியம்ம அன்னையும் அண்ணனையும் அடிக்கடி திரைப்படங்களுக்கு அழைத்துச்செல்வார். திரைப்படத்திற்கு போகும் வழியில் அப்பா புத்தகங்களோடு எதிரே வந்தால் திரைப்படத்தைக் கைவிட்டு அப்பாவுடன் வீடு திரும்புவேன்.

தெருவிலேயே படித்துக்கொண்டு வருவேன் என்பதால் அப்பா என்னைத் தூக்கிக்கொள்வார். என் படிப்பார்வம் அப்படிப்பட்டது.

படிப்பறிவு பெற்றதில் என் பெற்றோர்கள் முதல் தலைமுறையினர். அம்மா பள்ளியில் படிக்கும்போது மாலையில் பலகாரம் விற்க நேர்ந்ததையும், கல்லூரியில் சேர்ந்த பிறகும் அப்பா தறி நெசவு செய்ய நேர்ந்ததையும் சிறுவயதில் தெரிந்து கொண்டதால் – நான், அண்ணன், தங்கை மூவருமே படிப்பு விசயத்தில் படுசுட்டியாக இருந்தோம். பெற்றோர்கள் கோவையில் ஆசிரியர்களாக சாராரண நீலையில் இருந்தாலும் எங்களைக் கொஞ்சமும் வறுமை தெரியாமல் வளர்த்தார்கள்.

பள்ளியில் சேர்ந்தபோது அண்ணனை விட்டுப் பிரியமாட்டேன் என்று அழுததால் பல மாதங்கள் அவனுடனே இரண்டாம் வகுப்பில் உட்கார வைத்தார்கள். முதலில் இரண்டாம் வகுப்பு படித்துவிட்டு பின்னர் முதல் வகுப்புக்கு வந்ததாலோ என்னவோ, எப்போதுமே படிப்பு விசயத்தில் இரண்டுபடி முன்னதாக இருந்தேன். டபுள் பிரமோஷன் கொடுக்கலாம் என்று யோசித்தவர்கள் வயது விசயத்தில் சிக்கல் எழலாம் என்பதால் அது கைவிடப்பட்டது.

சிறு வயதிலிருந்தே எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. யாரும் சொல்லித்தரவில்லை. கும்பிட்டாலும் கும்பிடாவிட்டாலும் எல்லோர் வாழ்க்கையிலும் எல்லாமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பது எப்படியோ அந்த வயதில் தெரிந்து விட்டது.

அதே போல் விலங்குகளை துன்புறுத்துவதையும் தாங்கிக்கொள்ள் முடியாதிருந்தது. புலால் மறுப்பு இயல்பாக வந்துவிட்டது. பட்டுப்பூச்சிகளை கொன்று செய்கிறார்கள் என்பதால் பட்டாடை அணிய மறுத்துவிட்டேன். சாதி, அர்த்தமற்ற சடங்குகள், மதத்திணிப்பு, பெண்கள் ஆண்களுக்குக்க் கீழேதான் என்பது-ஆகியவற்றை எப்போதும் எதிர்த்தேன். பிடிவாதக்காரி என்று பெயர் வந்துவிட்டது. வீட்டில் நான் தனித்தீவு. என் எண்ணங்கள் எல்லாமே, ச்மூகம் ஒரு குடும்பத்திற்கு, குறிப்பாகப் பெண்களுக்கு விதிதிருந்த விதிகளுக்கு எதிராகவே இருந்தது.

யோசிக்க ஆரம்பித்த நாளிலிருந்து, சமூகத்தில் இத்தனை முரண்பாடுகள், வேற்றுமைகள் என்ற சிந்தனை என்னை வாட்டியெடுத்தது. உலகம் சமநிலையில் இல்லை, ஏதோ ஒரு மாபெரும் அநீதி சூழ்ந்த இடமாகவே எப்போதும் இருக்கிறது. ஏன், ஏன், ஏன் என்று எப்போதும் கேள்விகள்

இன்னொரு கேள்வியும் என்னை வாட்டியது. வாழ்க்கை என்பது என்ன? படித்து, சம்பாதித்து கல்யாணம் செய்து, குழந்தைகள் பெற்று அவர்களை வளர்த்துவிட்டு சாக வேண்டும். இதுதான் வாழ்க்கை என்றால் ஒரு முழு நீள வாழ்க்கை வாழ்வதற்கு எனக்குப் பொறுமை இருக்கவில்லை. வாழ்க்கை என்பது வேறு ஏதாவதாக இருக்காதா என்று தோன்றிக்கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் நான் வாழ இந்த உலகம் தகுதியற்றது என்றும், இன்னொரு கட்டத்தில் இந்த உலகத்தில் வாழ எனக்குத் தகுதியில்லை என்றும் தோன்ற ஆரம்பித்தது

உச்சகட்டமாக ஏதாவது நள்ளிரவில் கதவைத் திறந்துகொண்டு புத்தர் போல வெளியே கிளம்பப்போகிறேன் என்று கூட எதிர்பார்த்தேன். நல்லவேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை.

எனது துரதிஷ்டம், இத்தகைய குழப்பங்களில் நான் சிக்கித்தவித்த அந்த இளம் வயதில் எனக்கு சரியான வழிகாட்டி யாரும் இல்லை. நிறையப் படித்தேனே தவிர, இதைப்படி அதைப்படி என்று சரியான சமயத்தில் சரியான புத்தகங்களை கொடுக்க யாரும் இல்லை. என் பாடப் புத்தகத்தில் கார்ல்மார்க்ஸ் இல்லை. பெரியார், பாரதியார் வாழ்க்கை வரலாறுகள் இல்லை. அறிந்துகொள்ளுதல் விபத்தாகத்தான் நிகழ்ந்தது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விசயம், பதினைந்து வருடங்களுக்கு மேலாக என்னை வருத்திக் கொண்டிருக்கும் ஒற்றைத் தலைவலி. ’தீவிர மைக்ரேன்’ என்று பிற்பாடு மருத்துவர்கள் சொல்லும்வரை வீட்டில் யாருக்கும் இதுபற்றித் தெரிந்திருக்கவில்லை.

சராசரி அன்றாட வாழ்க்கை என்பதே எனக்குக் கிடையாது. என் வாழ்க்கையை நான் வாழவில்லை. தலைவலிதான் வாழ்ந்திருக்கிறது.

போதாமைக்கு அவ்வப்போது கண், காது, மூக்கு, தொண்டை என்று ஏதாவது அறுவைச் சிகிச்சை நடந்து கொண்டேயிருந்தது. எழுத முடியாமல் கைகள் வலுவிழந்தன. மருந்துகளின் பக்க விளைவால் அதீத ஜாபக மறதி. இப்படி நடமாடும் மருத்துவக் கிடங்காக நான் இருந்தபோது, சிலரை இழந்தேன். சிலரை அடைந்தேன். இந்த நோய்களால் ஒரு நன்மை விளைந்தது. உடல் நலம் ஒரு பங்கு தேறியபோது மன பலம் பத்து மடங்கு கூடியது.

இதழியலும் இலக்கியமும் படிக்க விரும்பினேன். ஆனால் பொறியியலோ, மருத்துவமோ தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. ’

படித்து நல்ல நிலையில் அமர்ந்தபிறகு, எழுதுவதை யார் தடுக்கப்போகிறார்கள்’ என்ற அறிவுரை நியாயமானதுதான். 

நடுத்தரக் குடும்பங்களில் பொழுதுபோக்கிலிருந்து மரணம் வரை எல்லாவற்றையும் பொருளாதார நிலைதான் தீர்மானிக்கிறது.  இறுதியாண்டுத் தேர்வு முடிவு வருவதற்குள், பிரபலமான ஒரு தொழிற்சாலையின் நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்று, மூச்சுவிட அவகாசமின்றி உடனே பணியில் சேர்ந்தேன்.

அங்கு பணிபுரிந்த வருடங்கள்தான் என் அப்பாவித்தனைத்தை அடியோடு ஒழித்து, வாழ்க்கையுடன் நேரடி பரிமாற்றத்தை ஏற்படுத்தின. தொழில்நுட்பப் பிரிவில் ஒரே பெண் நான்தான். எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆண்கள். அவர்களுடைய எல்லா முகங்களையும் அங்கேதான் கண்டேன்.

என் துறையைச் சேர்ந்த ஒருவர் பட்டப்பகலில் என் அறையிலேயே என்னை மடக்கி இப்போ (காதலுக்கு) பதில் சொல்லப்போறியா இல்லையா? என்று அச்சுறுத்தியபோது வெலவெலத்து நடுங்கி மூலையில் ஒடுங்கியது ஓர் உதாரணம்.

அலுவலகத்தில் எல்லோரும் குழுகுழுவாகப் பிரிந்து இச்சம்பவத்தைப் பற்றிப் பேசி மாய்ந்தார்கள். இனி இங்கே வேலை செய்வது சாத்தியமில்லை என்று ராஜினாமா கடிதம் கொடுத்தேன். 

என் மேலதிகாரி அதை வாங்கி கிழித்துப் போட்டுவிட்டு  ’நீ எங்கே போனாலும் இதுமாதிரி நிகழத்தான் செய்யும். அங்கிருந்து வேறு இடத்திற்கு போவாயா? யாராவது துரத்திக் கொண்டே இருப்பார்கள். நீ ஓடிக்கொண்டே இருப்பாய், அப்படித்தானே? என்றார்.

என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த முத்தான அறிவுரை இது!

அதன்பின் எத்தனையோ முறை மூலைகளில் மடக்கப்பட்டும் துரத்தப்பட்டும் இருக்கிறேன். ஆனால், ஒடுங்கவும் இல்லை. ஓடவும் இல்லை. ஒரு பெண்ணின் கீழ் வேலை செய்ய ஆண்கள் விரும்புவதில்லை. பிரதமர், முதல்வர், ஆட்சியர் போன்ற உயர் அதிகாரப்பதவிகள் மட்டும் விதிவிலக்கு.

ஏற்பாட்டுத் திருமணங்களில் எப்போதுமே எனக்கு நம்பிக்கை இருந்ததில்லை. சாதி, பணம் இவற்றை மட்டுமே வைத்து தீர்மானிக்கப்படுபவை தான் நம் திருமணங்கள்…! அதை ஏற்றுக்கொள்ள உறுதியாக மறுத்துவிட்டேன்.

ஓர் அம்மையார் தன் மகனின் கல்வி, வேலை, அழகு அறிவு ஆகியவற்றைப் பட்டியலிட்டு பெரிய தொகை சீராகக் கேட்டார். இந்தத் தகுதிகளுக்காக யாராவது சீர் கொடுக்க வேண்டுமென்றால் நீங்கள்தான் எனக்குக் கொடுக்க வேண்டும். அவை எனக்குத்தான் கூடுதல் என்றேன்.

‘நீ எப்படி வாழ்ந்திடறேன்னு பார்க்கிறேன்’ என்று சாபமிட்டுவிட்டுப் போனார். இன்னொருவர், ‘பையன் புகைபிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை, கெட்ட சகவாசம் கிடையாது’ என்றார். நானும்தான் புகைபிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை, கெட்ட சகவாசம் இல்லை என்றேன். திகைத்துப் போனார்.

அப்போதெல்லாம் ஊசிப்பட்டாசு போல் வெடிப்பேன்.  நேர்மை, வாக்குசுத்தம், சமூக உணர்வுகளை மற்றவர்களிடம் எதிர்பார்த்தேன். (சாணக்கியன்: ஏமாந்து போனாரோ?).

பெண், மனைவி, தாய் என்பவளுக்கு சமூகம் தைத்து வைத்த சட்டையில் என்னை பொருத்திக்கொள்ள முடியவில்லை. நிர்பந்தங்களுக்குப் பணிந்து அதற்குள் புகுந்திருந்தால் மூச்சுத் திணறியே செத்திருப்பேன். என் அளவுகளுக்கு தகுந்த சட்டையை நான் தைத்துக் கொண்டேன்.

பெற்றோர்கள் முற்போக்கு சிந்தனை உடையவர்கள்தான். ஆனால், சமூகத்தை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. நான் நம்புவற்றை என் வாழ்க்கையில் கூட கடைபிடிக்காவிட்டால் எப்படி என்பது என் கட்சி.

ஒரு கட்டத்தில் முரண்பாடுகள் முற்றி வீட்டைவிட்டு வெளியேறினேன். அதன்பிறகு எத்தனையோ துன்பங்கள், சோதனைகள், வலிகள். ஆனால், நான் தோற்றுவிட்டேன் என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு மீண்டும் என் வீட்டிற்குள்  நுழையவே இல்லை. சித்திரக்கதை சாகசக்காரி மாடஸ்ட்டி பிளெய்சியின் ‘I will fight my own battles’ என்ற வார்த்தைகள் இன்றைக்கும் என் மேஜையை அலங்கரிக்கின்றன.

வேலையை விட்டுவிட்டு வீட்டில் தனியாகப் பைத்துத் தீர்க்க ஆரம்பித்தேன். பணிவிலகலில் கிடைத்த பணம், நிலம், கொஞ்சம் நகைகள் எல்லாவற்றையும் ஒரு நெருங்கிய உறவினருக்கு கொடுத்து ஏமாந்தேன்.

திரும்ப வாங்குவதற்கும்,வன்முறையைச் சமாளிப்பதற்கும் காவல்நிலையம், நீதிமன்றம், பஞ்சாயத்துகள், பயமுறுத்தல்கள் என்று எல்லாவற்றையும் ருசிபார்த்தாயிற்று. ஒரே ஆறுதல் எழுத்து….! பரிசுகள், விருதுகள் புதிய நம்பிக்கை கொடுத்தன. திரையுலகப் பிரவேசம், சென்னைக்கு இடம்பெயர்தல் என கனவிலும் நினைத்துப் பார்க்காதவை எல்லாம் நிகழ்ந்தன.

திரையுலகில் எனக்கென்று வலுவான அடித்தளம் அமைந்துள்ளது. இனிமேல் – மேல் நோக்கிய பயணம்தான். எப்படி தனிப்பெண்ணாக இருந்து பாடல் எழுதுகிறீர்கள் என்று வியக்கிறார்கள்.

எனக்குப் பாடல் எழுத அரை நாள் போதும்.

படிதாண்டத்தான் அரை ஆயுசு தேவையாயிருந்தது.

கொள்கையா, குடும்பமா என்று வந்தபோது கொள்கையும், உறவா தன்மானமா என்றபோது தன்மானத்தையும், வசதிகளா, சுதந்திரமா என்றபோது சுதந்திரத்தையும் தேர்ந்தெடுத்தேன்.


நம்ப இயலாத அளவு, அன்பு, அரவணைப்பு உள்ளிட்ட அனைத்து இயற்கைத் தேவைகளையும் இழந்தேன். என்ன சாதித்தேன்?

சாதி, மதம், சடங்குகள், ஆடம்பரம், பால் பேதம் ஆகியவற்றை என் மனதைவிட்டு அடியோடு ஒழித்திருக்கிறேன். மேடையில் சீர்திருத்தம் பேசும் யாரையும் நிமிர்ந்து பார்த்துப் பேசும் யோக்கியதை எனக்கு இருக்கிறது. ‘ நீ செய், நான் செய்கிறேன்’ என்று இதுவரை என்னிடம் யாரும் சொன்னது கிடையாது. அந்த மகா வார்த்தைகளுக்காக இன்னமும் என் காதுகள் காத்திருக்கின்றன.

இத்துறையில் ஆபத்தான ஆண்களையும் எனக்குத் தெரியும்; அருமையான ஆண்களையும் தெரியும். ஆணாதிக்கத்தை எதிர்ப்பது என்பது ஆண்களை எதிர்ப்பதல்ல.

ஆண்களில் எனக்கு அருமையான் நண்பர்கள் உண்டு. ஆண்களுக்கும் போராட்டம், வலி, வேதனைகள் உண்டு. ஆண்களுக்கு ஆறு பிரச்சினைகள் என்றால் ஆண்களையும் சேர்த்து பெண்களுக்கு ஏழு பிரச்சனைகள்.  இருவருக்கும் ஆறுதான் என்று வருகிறபோது பெண்விடுதலை கிடைத்ததாக நம்பலாம்.

( குமுதம் 19-10-2000 இதழில் இருந்து… )

இதன் பின்னர், தன் விருப்பப்படி செய்துகொண்ட திருமணத்திற்குப் பிறகு, தாமரை அவர்களுக்கு நிகழ்ந்த துன்பங்கள் – வேறு விதம். …

…………………………………………………

தமிழ் தேசியம், திராவிட தேசீயம் என்று இங்கே அலம்பல் செய்து கொண்டிருக்கும் வாய்ச் சவடால் வீரர்களில்
ஒருவரின் முகமூடி மட்டும் தான் கவிஞர் தாமரையின்
மூலம் கிழிபட்டிருக்கிறது…

இவர் போல் இன்னும் இங்கே உலவிக்கொண்டிருக்கும் எத்தனை எத்தனையோ போலிகளை மக்கள் அடையாளம் கண்டுகொள்ளப்போவது எப்போதோ …!!!

……………………………………………….

……………………………………………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , . Bookmark the permalink.

1 Response to கவிஞர் தாமரை’யின் துயர அனுபவங்கள் ….

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    // பிரதமர், முதல்வர், ஆட்சியர் போன்ற உயர் அதிகாரப்பதவிகள் மட்டும் விதிவிலக்கு.// அப்படி எனக்குத் தோன்றவில்லை. வேறு வழியில்லாமல் பெண்ணின் கீழ் பெரும்பாலானவர்கள் வேலை செய்வார்கள். ஆனாலும் மனதில் ‘இவளுக்கு என்ன தெரியும்’ என்ற எகத்தாளம் இருக்கத்தான் செய்யும். உண்மையைச் சொன்னால், எனக்குமே பெண்ணின் கீழ் பணிபுரிவது பிடித்ததில்லை, எப்போதும் அதிகாரத்தைக் காட்டிவந்திருக்கிறேன் அல்லது புறக்கணித்திருக்கிறேன். இது நாம் வளர்ந்த சூழ்நிலை அல்லது பார்த்த சமுதாயம் காரணமாக இருக்கலாம்.

    ஒருவேளை கம்யூனிஸ்டுகள் மாத்திரம்தான் எல்லோரையும் தோழர் என்றே விளிப்பதால், சரிசமமாகப் பார்க்கிறார்களோ இல்லை வெளி உலக இமேஜுக்காகப் பொறுத்துப்போகிறார்களா?

    //தமிழ் தேசியம், திராவிட தேசீயம் என்று// – மாட்டிக்கொள்ளாதவரை எல்லோரும் உத்தமன் போல் வேஷம் போடுவார்கள். வைரமுத்து, தியாகு போன்ற சிலரின் முகமூடிகள் பெண்கள் தைரியமாக வெளியே வந்து சொன்னதால் கிழிந்திருக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.