…………………………………………………

பல சமயங்களில், தமிழன் என்று சொல்லி காலரை தூக்கி விட்டுக் கொள்ளும் நாம் அந்த பெருமையை தகர்க்கும் செயல்கள் நடைபெறும்போது, அதற்கும் பொறுப்பேற்கத் தானே வேண்டும்….???
ஆனால் செய்கிறோமா …??? கண்டும் காணாமலும்,
எருமை மாட்டின் மீது எண்ணை மழை பெய்வது போல் சொரணையே
இல்லாமல் கடந்து போய்க்கொண்டே இருக்கிறோம்….
கீழே – அராத்து’வின் கட்டுரையொன்று….
அராத்து சொல்லும் கருத்தை தான் நானும் சொல்ல விரும்புகிறேன்….
………………………………………..……………..
முட்டை கேட்ட மாணவனை வெளக்குமாற்றால் அடித்த விடியோவை பார்த்திருப்பீர்கள்.
இப்போது அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். காவல்துறை ஆக்ஷன் வேண்டுமென்றால் இப்போதெல்லாம் விடியோ வெளியாக வைரல் ஆக வேண்டியிருக்கிறது.
வைரல் விடியோ இப்போது முதல்வர் ரோலில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது எனலாம்.
நான் அடிக்கடி சொல்வதுதான். ஏழை எளியவர்கள் என்றாலே நல்லவர்கள், கிராமத்து மாந்தர்கள் வெள்ளந்தியானவர்கள் , அவர்களிடம் தான் தூய அன்பு கொட்டிக்கிடக்கிறது என்று ரொமாண்டிசைஸ் செய்வதை நிறுத்தித் தொலையுங்கள்.
இந்த கூழ்ப்பானைக்குள் அமர்ந்துகொண்டு இலக்கியம் எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள்தான் இதைப்போன்ற ரொமாண்டிஸிஸ கருத்தாக்கங்களை முன்னெடுத்து, கொஞ்சமே கொஞ்சம் பணம் சம்பாதிப்பவனுக்கு குற்றவுனர்ச்சி ஏற்படுத்தினார்கள். பிறகு அது ஒரு கேன்ஸர் போல அனைவரிடத்திலும் பரவியது.
அதன்பின்பு அரசியல்வாதிகள் அதை ஒரு கூர்மையான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டார்கள். பெரும் பணக்காரர்களும் கார்ப்பரேட்களும் கூட இவர்களை ரொமாண்டிசைஸ் செய்து தங்கள் மிகை நடிப்பை பறை சாற்றினார்கள்.
நல்லவன் , கெட்டவன், கேடு கெட்டவனெல்லாம் ஒட்டுமொத்தமாக எந்த குழுவிலும், தொகுப்பிலும் இருப்பதில்லை.
அனைத்து தொகுப்பிலும் இவர்கள் கலந்து கட்டித்தான் இருப்பார்கள்.
பணக்கார வர்க்கத்தில் இருக்கும் ஒரு கேடுகெட்டவனுக்கு சற்றும் குறைவில்லாமல் ஏழை வர்க்கத்தில் ஒருவன் அல்லது ஒருத்தி இருப்பாள்.
தேசப்பற்று , மொழிப்பற்று எல்லாம் கொஞ்சமும் இல்லாமல் கறாராக மதிப்பட வேண்டும் என்றால்,
ஒட்டு மொத்த இந்திய ஆன்மா கேவலமாக அழுகி தொங்கிக்கொண்டு இருக்கிறது. அதில் தமிழ்நாடும் விலக்கு அல்ல.
சும்மா தமிழரின் பழம்பெருமை பேசிக்கொண்டிருப்பதில் புண்ணியமில்லை. யாதும் ஊரேவாம் , யாவரும் கேளிராம். அரசு கொடுத்த முட்டையைக் கேட்டதற்கு சொந்த கிராமத்தில் இருக்கும் சிறுவனை ஜாதி சொல்லி வெளக்குமாற்றால் அடிப்பதுதான் நிதர்சனம்.
ஒரு தமிழர் சாதனை படைத்தால், அதை தமிழரின் சாதனையாக பறை சாற்றிக்கொள்கிறோம்.
ஆணவக் கொலை , கூட்டு வன்புணர்வு , சாதி ரீதியான கேவலமான மோதல்கள் , சிறுவனை வெளக்குமாற்றால் அடித்தல் போன்ற கேடுகெட்ட அசிங்கமான சம்பவங்கள் நடக்கையில் , தமிழர் என்ற ஒரு சமூகமாக , ஒரு இனமாக ஒவ்வொருவரும் அசிங்கப்பட்டு கூனிக்குறுக வேண்டுமா இல்லையா?
அப்படி ஒவ்வொருவரும் அசிங்கப்படாத வரையில், சும்மா ரொமாண்டிசைஸ் செய்துகொண்டிருக்கும் வரையில் இவை எவையும் மாறாது. அனைத்தையும் சட்டத்தால் மட்டுமே மாற்ற முடியாது.
தமிழ் இனம் தன்னை சுயபரிசோதனை செய்துகொண்டு, ஹிப்போக்ரஸியில் இருந்து வெளிவந்தால் மட்டுமே விடிவு. இல்லையெனில் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அடைந்திருந்த நாகரிகத்தில் இருந்து இன்னும் பின்னோக்கித்தான் போய்க்கொண்டு இருப்போம்.
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….