……………………………………………….

……………………………………………….
” மரணம் ஒரு கருப்பு ஆடு.
அது சில நேரங்களில், நமக்குப் பிடித்தமான ரோஜாப்பூவைத்
தின்று விடுகிறது! –
என்னையும் என் எழுத்தையும் மஞ்சள் வெளிச்சத்துக்குக்
கொண்டு வந்தவர் சுஜாதா.
1995-ம் ஆண்டு கணையாழி, ‘தசரா’ என்ற அமைப்பிடம் கைமாறியது. அதற்கான விழா சென்னை ராணி சீதை மன்றத்தில் ஜெயகாந்தன்,
சுஜாதா, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கமல்ஹாசன்
போன்றோர் பங்கேற்க நடைபெற்றது.
சுஜாதா பேசும்போது, கணையாழி இதழுக்குக் கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும் சுகமான சுமையைத் தான் ஏற்றிருப்பதாகவும்,
இவ்விதழில் தனக்கு மிகவும் பிடித்த கவிதை ஒன்று
வெளிவந்திருப்பதாகவும் கூறி என்னுடைய ‘தூா்’ கவிதையைப்
படித்துக் காட்டினார்.
அரங்கம் கைதட்டல்களால் அதிர்ந்தது. “முத்துக்குமார் என்ற ஒருவர்
எழுதி இருக்கிறார். அவர் யார்? எங்கிருக்கிறார் என்றே தெரியாது..!”
என்று சொல்ல, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த நான் கை தூக்கினேன்.
“இதை எழுதிய முத்துக்குமார் நீங்களா” என்று கேட்டார். “ஆமாம்” என்றேன். “கைதட்டுங்கள் அந்தக் கவிஞனுக்கு” என்று சுஜாதா
சொல்ல அரங்கம் மீண்டும் கைதட்டல்களால் அதிா்ந்தது.
அப்போது, முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு நபர் மேடைக்குச்
சென்று சுஜாதா காதில் ஏதோ சொல்ல… “இந்தக் கவிதையை எழுதிய முத்துக்குமாருக்கு இவா் ஆயிரம் ரூபாய் பரிசு கொடுக்கிறாா்.
வாங்க முத்துக்குமாா்.. வந்து வாங்கிக்கங்க… உண்மையிலேயே
ஆயிரம் ரூபா!” என்று சுஜாதா குழந்தை ஆனாா்.
நான் மேடைக்குச் சென்று பணத்தை வாங்கினேன். இருபது, ஐம்பது
ரூபாய்த் தாள்கள். அந்தப் பணத்தை நான் எண்ண ஆரம்பித்ததும்,
அரங்கம் சலசலப்புக்குள்ளானது.
நான் அதில் ஐந்நூறு ரூபாயைக் கணையாழியின் வளா்ச்சிக்கு
என்று கொடுத்தேன். அரங்கம் மீண்டும் கை தட்டல்களால் அதிர்ந்தது.
ஒரு திரைப்படத்தின் திருப்புமுனைக் காட்சிபோல அமைந்த இந்தச் சம்பவமே, ஒற்றையடிப் பாதையில் திரிந்து கொண்டிருந்த
என் கவிதைப் பயணத்தை தண்டவாளப் பாதைக்குத் தடம் மாற்றியது.
அன்றிலிருந்து அவர் இறக்கும் வரை எனக்குப் பல ஆச்சர்யங்களைத் தந்தவர் சுஜாதா.
அவர் இறந்த செய்தி கிடைத்ததும் அப்பல்லோ விரைந்தேன்.
அவரை நான் எப்போது சந்தித்தாலும், “உங்களுக்கு நான் நிறைய
நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்” என்பேன்.
பதிலுக்கு அவர், “என்னுடைய ஆசிகள்” என்று தலைமேல்
கை வைத்து வாழ்த்துவார்.
இன்று அவா் கைகள் உயர்த்தப்படவே இல்லை.
அந்த ஆசிகள் மட்டும் பத்திரமாய் என் நெஞ்சில்…!”
“சுஜாதாவின் ஆசிகள் என்றும் நெஞ்சில்”
சுஜாதா மறைந்தபோது கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய
நினைவஞ்சலி… நன்றி – விகடன் சுஜாதா மலா் 2012 – மற்றும் “தாய் இதழ்”…
……………………………………………………………………………………………………………………………………………………………………………………….



நிஜமான சாமியாரா இல்லை ….