இப்படியும் ஒரு புத்தகக்கடை …!!!

………………………………………

………………………………………..

நீண்ட தாடி, நெற்றியில் குங்குமம் என பழுத்த சாமியார் போல் இருக்கிறார் பாண்டியன். ‘‘என் பேரு நூல் பாண்டியன்’’ என்று சிரிக்கிறார்.
தமிழகத்தின் மிகப்பெரிய அறிவுப்புதையல் இருக்கிறது இவரிடம்.
வடபழனி, கே.கே.நகர், அசோக் நகர் மூன்றும் சந்திக்கும் சிக்னலில் நாகாத்தம்மன் கோயிலுக்கு எதிரில் இருக்கிறது, பாண்டியன் நடத்தும்
ஓம் ஆதிபராசக்தி பழைய புத்தகக் கடை.

பாண்டியனிடம் சில லட்சம் புத்தகங்களுக்கு மேல் இருக்கின்றன. தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு தொடங்கி பத்துக்கும் மேற்பட்ட மொழிகளிலும் நூல்கள் உண்டு. எல்.கே.ஜி தொடங்கி முதுமுனைவர் படிப்பு வரைக்குமான பாடநூல்கள், துணைப்பாட நூல்கள், நோட்ஸ்கள், போட்டித்தேர்வு – நுழைவுத்தேர்வு நூல்கள், இதிகாசங்கள், புராணங்கள், இலக்கியங்கள், சிறார் நூல்கள், மிகப் பழைமையான மருத்துவ நூல்கள் என இவரிடம் இல்லாத நூல்களே இல்லை. முதற்பதிப்பு நூல்கள், அச்சில் இல்லாத நூல்களும் இவரிடம் ஏராளம் உள்ளன. 300 சதுர அடியிலான கடை, 1,400 சதுர அடியிலான குடோன், ராமாபுரத்தில் இருக்கும் வீடு என எல்லா இடங்களிலும் கால் வைக்க இடமில்லாமல் நிறைந்திருக்கின்றன நூல்கள்.

‘‘43 வருஷ சேமிப்பு… இதே மாதிரி இன்னும் ஒரு பங்கு இருந்துச்சு. 2015 வெள்ளத்துல மொத்தமா ஒரு குடோனே தண்ணி புகுந்து வீணாப்போச்சு. லட்சக்கணக்கான புத்தகங்கள் காலி…’’ இழப்பையும் சிரித்துக்கொண்டுதான் சொல்கிறார் பாண்டியன்.

பாண்டியன் படித்தது, 10-ம் வகுப்புதான். புத்தகம் தேடி வரும் மாணவர்களுக்கு அவர் தருகிற சாய்ஸ்கள் வியக்க வைக்கின்றன. நுழைவுத்தேர்வோ, பட்டப்படிப்புகளோ, எந்தெந்தப் பதிப்பாளர்களின் நூல்கள் சிறந்தவை என்பதில் தொடங்கி எப்படிப் படிக்க வேண்டும் என்பது வரை ஓர் ஆசிரியருக்குரிய கண்டிப்புடன் சொல்கிறார் பாண்டியன். தினமும் 200-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. ஏராளமானோர் நேரில் வருகிறார்கள். பெரும்பாலும் அவ்வப்போதே தேடியெடுத்து, கேட்கும் நூல்களைத் தந்துவிடுகிறார். சில பேரை ஓரிரு நாள்கள் கழித்து வரச்சொல்கிறார்.

‘‘பாதி வாழ்நாள் இந்தப் புத்தகங்களுக்குள்ளேயே போயிடுச்சு. காலையில 7 மணிக்குக் கிளம்புனா ராத்திரி 11 ஆயிடும் வீட்டுக்குப் போக. கடைக்கும் குடோனுக்குமே 25 முறைக்கு மேல அலைய வேண்டியிருக்கும். புத்தகங்கள் இருக்குன்னு சொல்றவங்ககிட்ட வாங்கப் போக வேண்டியிருக்கும். இருக்கிற புத்தகத்துல தேறாதுன்னு நினைக்கிறதை பழைய பேப்பர் கடையில போடணும். அப்படி தினமும் 50 கிலோவுக்கு மேல போகும்’’ என்கிறார் பாண்டியன்.

பாண்டியன் பிறந்தது தேவகோட்டையில். அப்பா பெயர் மெய்யப்பன்.

‘‘அப்பா டைப்பிஸ்ட்டா இருந்தார். சேலம், சென்னைன்னு பல இடங்கள்ல வேலை பாத்தார். அவர் ஒரு புத்தகப்புழு. செய்தித்தாள், வார இதழ்கள் தொடங்கி புத்தகங்களா வாங்கிக் குவிப்பார். வீட்டுல பெரும்பகுதி புத்தகங்கள்தான் இருக்கும். வீடு மாறும்போது அந்தப் புத்தகங்களை எடுக்க மட்டுமே தனி வாகனம் பிடிப்போம். இப்பவும் மனுஷனுக்கு 98 வயசாகுது. காலையில கையில காபிக்கு முன்னாடி பேப்பர் இருக்கணும். பக்கத்துல
பத்துப் புத்தகங்களாவது வச்சிருப்பாரு.

ஆரம்பத்துல மயிலாப்பூர்ல குடியிருந்தோம். ஸ்கூல் படிக்கும்போதே காலையில வீடுகளுக்குப் பேப்பர் போடுவேன். 80-கள்ல கே.கே.நகருக்கு பேப்பர் போட யாரும் போகமாட்டாங்க. கடுமையான நாய்த்தொல்லை. நான் அந்தப்பகுதியைக் கேட்டு வாங்கிப் போடுவேன். ஒரு செட்டு 60 பேப்பர். ஒரு நாளுக்கு 6 செட்டு போடுவேன். பேப்பர் போட்ட வீடுகள்ல பழக்கம் புடிச்சு, போட்ட பேப்பரையெல்லாம் திரும்ப வாங்குவேன். அப்படிப் பழைய பேப்பரை வாங்கும்போது அவங்ககிட்ட இருந்த புத்தகங்களையெல்லாம் சேர்த்துக் கொடுப்பாங்க. அப்படிச் சேர்ந்த புத்தகங்களே ரெண்டாயிரத்துக்கு மேல!

இதையே ஏன் விற்பனை செய்யக்கூடாதுன்னு தோணுச்சு. பி.டி.ராஜன் சாலையில பிளாட்பாரத்துல அடுக்கி வச்சு விற்பனை செய்ய ஆரம்பிச்சேன். நிறைய பேரு தேடி வர ஆரம்பிச்சாங்க. சிலர் என்கிட்ட இல்லாத புத்தகங்களைக் கேட்டாங்க. அவங்களுக்கு மார்க்கெட்ல தேடி வாங்கிக்கொடுக்க ஆரம்பிச்சேன். அப்படித்தான் சென்னையில இருக்கிற பழைய புத்தகங்கள் ஹோல்சேல் மார்க்கெட்கூட தொடர்பு கிடைச்சுச்சு.

புதுப் புத்தகங்களைவிட பாதிக்கும் குறைவான விலையில நான் புத்தகங்கள் தருவேன். அது வாசிப்பு அதிகமிருந்த காலம். அதனால வியாபாரம் பெரிசாச்சு. நிறைய எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்களெல்லாம் வர ஆரம்பிச்சாங்க. நிறைய பேர் அவங்ககிட்ட இருந்த புத்தகங்களைக் கொண்டு வந்து தந்தாங்க. அப்படியே எண்ணிக்கை கூடிடுச்சு.

சிங்காரச் சென்னை திட்டம் வந்தப்போ, மாநகராட்சி அதிகாரிகள் பிளாட்பாரத்துல இருந்த கடைகளையெல்லாம் அகற்றினாங்க. அந்த அதிகாரிங்களே அவங்க பிள்ளைகளுக்கு என்கிட்ட நிறைய புத்தகங்கள் வாங்கியிருக்காங்க. அதனால எனக்கு மட்டும் கொஞ்சம் டைம் கொடுத்து ‘கடையை மாத்திங்கங்கய்யா’ன்னு சொன்னாங்க. 1983-ல இதை ஆரம்பிச்சேன். எந்தப் புத்தகமா இருந்தாலும் தேடிக் கண்டுபிடிச்சுக் கொடுத்ததால வாடிக்கையாளர்கள் நிறைய ஆகிட்டாங்க’’ என்கிறார் பாண்டியன்.

பாண்டியனிடம் இருக்கும் பல உயர்கல்வி பாடப்புத்தகங்கள் அட்டைகூடக் கசங்காமல் இருக்கின்றன. அதுபற்றிக் கேட்டால், ‘‘இப்பல்லாம் யாரும் புத்தகத்தைப் பிரிச்சுப் படிக்கிறதே இல்லை. கேள்விக்குப் பதிலை மட்டும்தானே படிக்கிறாங்க. அதுக்கு நோட்ஸ் வாங்கிடுவாங்க. இப்போ நிறைய பேர் பி.டி.எப் வாங்கி மொபைல்ல படிச்சிடுறாங்க. பிளாஸ்டிக் கவர்கூடப் பிரிக்காம நிறைய புத்தகங்கள் வரும்’’ என்கிறார்.

‘‘பாண்டியன் அதிகம் கோபப்படுவார், அலையவிடுவார் என்றெல்லாம் சொல்கிறார்களே?’’

‘‘ரெண்டுமே 100 சதவிகிதம் உண்மை. பழைய புத்தகம்னா குப்பைன்னு நிறைய பேர் நினைக்கிறாங்க. இதுக்குப் பின்னாடி என் வாழ்க்கையே இருக்கு. இதையெல்லாம் தேடிப் பிடிச்சு வாங்குறது, பாதுகாக்கிறதெல்லாம் சாதாரண வேலையா? குவியலாக் கிடக்கிற இதுக்குள்ள எவ்வளவு பொக்கிஷங்கள் இருக்கு தெரியுமா? ஒரு புத்தகம் கேட்டு வருவாங்க… அதைத் தேடிப் பிடிச்சு எடுத்துக் கொடுப்பேன். 500 ரூபா புத்தகம்னு வைங்க, 300 ரூபா கேட்பேன்.

‘ஆன்லைன்ல 200 ரூபா தான் போட்ருக்கு. நீங்க இவ்ளோ சொல்றீங்களே’ன்னு கேப்பாங்க. எனக்குக் கோபம் வரும். அதேமாதிரி ஒரு புத்தகம் கேட்டு வரும்போது, அதைவிட பெஸ்ட்டா வேற ஒண்ணு சொல்லுவேன். அதைப் புரிஞ்சுக்கலேன்னா கொஞ்சம் கோபப்படுவேன். எல்லாம் அவங்களுக்காகத்தான். அதேமாதிரி பதிப்பிலேயே இல்லாத ஒரு புத்தகம் கேப்பாங்க. என் குடோன் புத்தகக் கடல். அதுக்குள்ள தேடி எடுக்கணும்னா ரெண்டு நாள் ஆகும். நான் வேலைக்கு ஆள் வைக்கலே. ஆள் வச்சு சம்பளம் கொடுக்கிற அளவுக்கு வருமானம் இல்லை. கால தாமதம் ஆகும்தான். ஆனா தர்றேன்னு சொன்னா உறுதியா கொடுத்திடுவேன்’’ என்கிறார் பாண்டியன்.

‘கூகுள்’ சுந்தர்பிச்சை, பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பாண்டியனின் வாடிக்கையாளர்.

‘‘அந்தத் தம்பி பக்கத்துல உள்ள ஸ்கூல்லதான் படிச்சுச்சு. வீடும் இந்தப்பக்கம்தான். பத்தாவது படிக்கும்போதே எம்.எஸ்ஸி புக் கேப்பாப்புல. என் வாடிக்கையாளர்களா இருந்த நிறைய பிள்ளைங்க இப்போ ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்னு இருக்காங்க. வெளிநாடுகள்ல பெரிய பெரிய கம்பெனிகள்ல வேலை செய்றாங்க. ஜெயகாந்தன்ல இருந்து இந்திரா சௌந்தர்ராஜன் வரைக்கும் ஏகப்பட்ட எழுத்தாளர்கள் வந்து போயிருக்காங்க. இப்பவும் நிறைய பேர் வருவாங்க. வெளியூர்ல இருக்கிற எழுத்தாளர்களுக்கு கூரியர்ல அனுப்பி வைப்பேன். நிறைய உதவி இயக்குநர்கள் வருவாங்க. ரஷ்யன் நாவல்களைக் கேட்டு வாங்குவாங்க’’ என்கிறார் பாண்டியன்.

பாண்டியனின் மனைவி பெயர் விஜயலெட்சுமி. இரண்டு மகன்கள், கார்த்திக், கதிரவன். இருவரும் மென்பொருள் பொறியாளர்கள்.

‘‘நான் இப்படியொரு வேலையைச் செய்ய பெரிய சப்போர்ட் என் மனைவிதான், கட்டுக்கட்டா வந்து சேர்ற புத்தகங்களை ராத்திரி, பகல் பாக்காம பிரிச்சுப் பிரிவு வாரியா அடுக்குறது அவதான். என் பிள்ளைகளுக்கும் இதுல ஆர்வம் இருக்கு. கொஞ்ச காலம் கழிச்சு அவங்க கையில இதை ஒப்படைச்சிடலாம்னு பாக்குறேன்…’’

  • மகிழ்ச்சி தொனிக்கச் சொல்கிறார் பாண்டியன்.
    (நன்றி – விகடன் தளம் …)

……………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அறிவியல், இணைய தளம், இந்தியன், சமூகம், சினிமா, பொது, Uncategorized and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.