…………………………………………….

……………………………………………..

…………………………………………….

…………………………………………………
(அலகாபாத் )ப்ரயாக்ராஜ்-ல் நடந்துகொண்டிருக்கும் மஹாகும்பமேளா
பற்றி நிறைய வித்தியாசமான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன…
அதில் ஒன்று கீழே –
பாபா காலபுருஷ்… 95 வயது நிறைந்து முதுமையில் இருக்கும் இவர்தான் தற்போது பிரயாக்ராஜ் (முன்னாள் அலகாபாத்) நகரில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு வந்திருக்கும் மூத்த அகோரி சாது. ‘‘இதற்கு முன்பு இங்கு ஏழு கும்பமேளாக்களுக்கு வந்திருக்கிறேன்’’ என்று சொல்லும் பாபா காலபுருஷ், எதிர்காலம் குறித்துக் கணித்துச் சொல்லும் தகவல்கள் அவ்வளவு உவப்பானதாக இல்லை. காலநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து அவர் எச்சரிக்கிறார்.
‘‘மனிதர்கள் மறந்துவிட்டதை நதி நினைவு வைத்திருக்கும். பூமியின் சுவாசம் மாறியிருப்பதை இப்போது பார்க்கிறேன். கங்கை மாதாவின் கண்ணீர் நிலங்களை வந்து மூழ்கடிக்கும். இமயமலையின் பனிப்படலங்கள் பலவும் காணாமல் போகும். புனித நதிகள் பலவும் பாதை மாறிப் பயணம் செய்யும். எதெல்லாம் நிரந்தரம் என மனிதர்கள் நினைக்கிறார்களோ, அந்த எல்லாமே அடுத்த நான்கு ஆண்டுகளில் மாறும். இப்போது பாலைவனமாக இருக்கும் பகுதியில் வரும் தலைமுறையினர் கும்பமேளா கொண்டாடுவார்கள்’’ என்கிறார் அவர். ஏற்கெனவே இவர் சொன்ன பல கணிப்புகள் பலித்திருக்கின்றன என்று ஆன்மிகவாதிகள் சொல்கிறார்கள்.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா, ஜனவரி 13 தொடங்கி பிப்ரவரி 26 வரை நடைபெறுகிறது.
இந்தக் கும்பமேளாவில் பலரும் அச்சத்துடனும் ஆச்சர்யத்துடனும் பார்ப்பது அகோரிகளை! உடலெங்கும் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக்கொண்டு
நீண்ட சடாமுடியுடன் கூட்டம் கூட்டமாக வலம் வருகிறார்கள் இவர்கள்.
பலரது உடலில் ருத்ராட்ச மாலையைத் தவிர ஆடை என எதுவும் இல்லை. நடுக்கும் குளிரில் நிர்வாணமாக எந்தச் சலனமும் இல்லாமல் நடமாடுகிறார்கள். உத்தரப்பிரதேசச் சுற்றுலாத் துறை தனியாக ‘அகோரிகளைப் பார்க்கும் சுற்றுலா’ என ஒன்றை இந்தக்
கும்பமேளாவில் அறிமுகம் செய்திருக்கிறது.
கும்பமேளாவில் அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள்,
மதத் தலைவர்கள், தொழிலதிபர்கள் என்று எத்தனையோ பிரபலங்கள்
புனித நீராட வருகிறார்கள். அத்தனை பேரையும் தாண்டி கவனம் ஈர்ப்பது அகோரிகள்தான். கும்பமேளாவில் முதலில் நீராடும் உரிமை பெற்றவர்கள் அகோரிகளும் நாகா சாதுக்களும்தான்!
இவர்கள் நுனிநாக்கு ஆங்கிலத்தில் உரை நிகழ்த்துவதில்லை, தங்க நாற்காலியில் அமர்வதில்லை, கைகளை உயர்த்தி ஆசீர்வதிப்பதில்லை,
‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று மக்களுக்கு ஆறுதல் கூறுவதில்லை, பிரச்னைகளுக்குப் பரிகாரம் சொல்வதில்லை. ஆனாலும் மக்கள் கூட்டம் இவர்களை விடாமல் பின்தொடர்கிறது.
‘அகோரப் பசியுடன் மனித உடல்களைத் தின்பதால்தான் இவர்கள் அகோரிகள் என்று பெயர் பெற்றார்கள்’ என்று திகிலான ஒரு கதை
இவர்கள் பற்றிப் பரவுகிறது. அது உண்மையில்லை. ‘அகோரி’ என்ற வார்த்தை ‘அகோர்’ என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது.
அதற்கு ‘அச்சமற்றது என்பதே அர்த்தம். இயற்கை நிலையிலான
உணர்வைக் குறிப்பவர்களே அகோரிகள். பயமும் வெறுப்புணர்வும்
இல்லாமல், எல்லோரையும் எல்லாவற்றையும் பாரபட்சம் இல்லாமல் பார்ப்பவரே அகோரி.
தீவிர சிவபக்தர்களான இவர்கள், இமயமலைப் பகுதிக் காடுகளில் வசிக்கிறார்கள். கூட்டமாகவும் இருப்பார்கள், தனியாகவும் இருப்பார்கள். கும்பமேளா தவிர பிற காலங்களில் இவர்கள் குழுவாக வெளியே வருவதில்லை. கூச்ச சுபாவம் உள்ளவர்கள். பொதுமக்கள் தங்கள் அருகே வருவதை விரும்பாதவர்கள்.
குழுவிலிருந்து தனியே வெளியில் சென்றாலும் அகோரிகள் தங்கும் இடம் மயானம்தான். மரணம் குறித்த அச்சத்தை நீக்க, சுடுகாட்டில் எரியும்
சிதைக்கு அருகே அமர்ந்துதான் தியானம் செய்வார்கள். சுடுகாட்டுச் சாம்பலை உடலில் பூசிக்கொள்வார்கள். ‘உலகத்தில் எதுவுமே
நிரந்தரமில்லை, வாழ்க்கை முடிந்தவுடன் அனைத்துமே சாம்பலாகிவிடும்’ என்பதைக் குறிக்கிறது இந்தச் சாம்பல். சவத்திலிருந்து சிவத்தை
அடைவதே தங்களின் வாழ்க்கை மார்க்கம் என்று கருதுகிறார்கள்
இவர்கள். கங்கையில் வீசப்படும் சடலங்களை இவர்கள் உண்பதாகவும்
சிலர் சொல்வதுண்டு.
இவர்களுக்கு ‘குரு’ என்று யாரும் கிடையாது. சிவபெருமானை மட்டுமே தங்கள் குருவாக ஏற்றவர்கள். பைரவ வடிவில் இருக்கும் சிவபெருமானை
உச்ச சக்தியாக நம்புகின்றனர். சிவபெருமானைத் தவிர, காளி தேவியையும் வணங்குவார்கள். தூமாவதி, பகளாமுகி மற்றும் பைரவி வடிவில் இருக்கும் இக்கடவுளை வணங்குகிறார்கள்.
உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஆத்மாவும் சிவபெருமான் என்று அவர்கள் நம்புகின்றனர். ‘சிற்றின்பம், கோபம், பேராசை, பயம், வெறுப்பு, பெருமை, பாகுபாடு, உடைமை கொண்டாடுதல் போன்ற உலகப் பிணைப்புகளால் ஆத்மா தவிக்கிறது. இந்தப் பிணைப்புகளிலிருந்து விடுபட்டு மோட்சத்தை எட்டுவதே வாழ்க்கை’ என அகோரிகள் நம்புகின்றனர். எல்லாவற்றையும் கடந்து, பிறப்பதும் இறப்பதுமான உலகச்சுழற்சியிலிருந்து விடுதலை
அடைந்து முற்றும் துறந்த நிலையில் தாங்கள் உள்ளதாக நம்பும்
அகோரிகள் ஆடைகளை அதனால்தான் அணிவதில்லை.
அவர்களுக்கு எதுவும் புனிதமானதும் இல்லை, எதுவும் அசுத்தமானதும் இல்லை. கையில் ஒரு கம்பு, இன்னொரு கையில் மண்டை ஓடு. இதுதான் அகோரிகளின் அடையாளம். அந்த மண்டை ஓட்டைப் பாத்திரமாகப் பயன்படுத்தி, அதில் உணவு வாங்கிச் சாப்பிடுவார்கள். (இந்த உடலே
ஆத்மா தங்கியிருக்கும் ஒரு பாத்திரம்தான் என்பது அகோரிகளின்
தத்துவம்!) சைவமோ, அசைவமோ எந்த உணவையும் ஏற்பார்கள். போதையும்கூட அவர்களுக்கு விலக்கு இல்லை.
அகோரி மரபு என்பது பல நூறு ஆண்டுகள் பாரம்பரியத்தைக் கொண்டது. காபாலிகர்கள் மற்றும் காளாமுகர்கள் என்று அழைக்கப்பட்ட தாந்திரிக
சைவ மரபின் தொடர்ச்சி இவர்கள். அதனால்தான் ‘இறந்தவர்களை உயிர்பிழைக்கச் செய்யும் மந்திரம் இவர்களிடம் இருக்கிறது’ என்று கண்மூடித்தனமாக இவர்களைத் தேடிப் பலர் போகிறார்கள்.
மந்திர தந்திரங்களைப் பயன்படுத்தி மயானங்களில் வழிபாடு செய்த அகோரிகளின் வழிபாட்டு முறைகளை ஒழுங்குபடுத்தியும், சீர்திருத்தியும் தெளிவான வழிகாட்டுதலைத் தந்தவர் பாபா கினாராம். இவர் எழுதிய ‘விவேக்சாரா’ என்பதே அகோரிகளின் புனித நூலாகக் கருதப்படுகிறது.
உத்தரப்பிரதேசத்தின் ராம்கார் என்ற கிராமத்தில் 1658-ம் ஆண்டு
பிறந்தவர் பாபா கினாராம். ‘பிறக்கும்போதே முழுமையாக பற்களுடன் பிறந்த தெய்விகக் குழந்தை கினாராம். பிறக்கும்போது அழவும் இல்லை, மூன்று நாள்கள் வரை பால் குடிக்கவும் இல்லை. நான்காம் நாள்
மும்மூர்த்திகள் துறவி உருவில் வந்து கினாராம் காதில் ஏதோ
சொன்னார்கள். அதன்பின் குழந்தை அழுது பால் குடித்தது’ என்கிறது
பாபா கினாராம் சரிதை.
11 வயதில் துறவறம் ஏற்ற கினாராம், வட இந்தியா முழுக்கப் பயணம் செய்தார். ‘தத்தாத்ரேயரை சந்தித்தபிறகு அவர் அகோரி பாதைக்கு மாறினார். அகோரி சாஸ்திரத்தின் ரகசியங்களை அவருக்கு தத்தாத்ரேயர் அருளினார். பிறகு பலுசிஸ்தான் பகுதியில் ஒரு குகையில் அவருக்கு ஹிங்க்லாஜ் மாதாவின் தரிசனம் கிடைத்தது. கினாராமுக்கு
மந்திர உபதேசம் அளித்து, கையில் மண்டை ஓட்டையும் அருளினார் ஹிங்க்லாஜ் மாதா. அதன்பிறகு பல நாடுகளுக்குப் பயணம் செய்து பல அற்புதங்களை பாபா நிகழ்த்தினார்’ என்கிறது அவர் சரிதம்.
1771-ம் ஆண்டு பாபா கினாராம் சமாதி அடைந்தார். அவருடைய சமாதி வாரணாசியில் உள்ளது. அந்த இடத்தில் ஹிங்க்லாஜ் மாதாவின் சக்தி எந்திரத்தை அவர் பொருத்தியுள்ளார். இன்றைக்கும் அகோரிகளின்
காக்கும் கடவுளாக விளங்குவது ஹிங்க்லாஜ் மாதா. கினாராம் சமாதிக்குச் செல்வதையே புனித யாத்திரையாக அகோரிகள் கருதுகின்றனர்.
அகோரிகள் போலவே நிர்வாணமாக வலம் வந்தாலும் முற்றிலும் வேறானவர்கள் நாகா சாதுக்கள். இவர்களை ‘தத்தாத்ரேயர் உருவாக்கிய படை’ என்பார்கள். அறிவாலும் ஆயுதத்தாலும் சனாதன தர்மத்தைக்
காக்கும் படையாக இவர்களை ஆதிசங்கரர் ஒழுங்குபடுத்தினார்
என்பார்கள்.
மண்டை ஓடு குத்திய திரிசூலம், வாள் என ஆயுதங்களைத் தரித்தபடி
இவர்கள் நடமாடுவார்கள். நீளமாக சடாமுடி வளர்த்தவர்கள், பயங்கர
நீளமாக நகம் வளர்த்தவர்கள், முள் படுக்கையில் இருப்பவர்கள், வித்தியாசமான வாகனங்களில் வருபவர்கள் என கும்பமேளாவில்
அதிகம் கவனம் ஈர்ப்பவர்கள் இவர்கள்தான். நெற்றியில் குங்குமப் பொட்டு, உடலெங்கும் சந்தனம், கழுத்திலும் கைகளிலும் பெரிய மாலைகள் என்று அலங்கரித்துக்கொண்டு ஆக்ரோஷமாக நடனமாடியபடி கும்பமேளாவில் இவர்கள் நீராடுவது வித்தியாசமான காட்சி.
அகோரிகள் போல இவர்கள் நாடோடி வாழ்க்கை வாழ்வது இல்லை. இமயமலைப் பகுதிகளில் ‘அகாரா’ என்ற பெயரில் இருக்கும் மடங்களில் இவர்கள் வசிக்கிறார்கள். இப்படி 13 அகாராக்கள் அங்கு இருக்கின்றன.
ஒரு தலைமை குரு, அவருக்குக் கீழே உப குருக்கள், சீடர்கள் என்று ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு இது. ஒவ்வொரு கும்பமேளாவின்போதும்
இந்த அகாராக்கள் புதிய சீடர்களைச் சேர்த்துக்கொள்கின்றன.
இதற்கான தேர்வு நடைமுறை ஆறு மாதங்களுக்கு முன்பாகவே ஆரம்பித்துவிடும். விண்ணப்பம் செய்தவர்களின் பின்னணி குறித்து
நீண்ட விசாரணை நடத்தித் தேர்வு செய்வார்கள். தேர்வானவர்கள் கும்பமேளாவுக்கு வந்து மொட்டை அடித்துக்கொண்டு நீராடி முடித்து நிர்வாணமாக நிற்க வேண்டும். அவர்களை ‘பால நாகா சாது’
என அறிவித்து தீட்சை தருவார்கள் குருமார்கள்.
இவர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. உலக வாழ்விலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக, தன் குடும்பத்தினருக்கும் தனக்கும்
பிண்ட தானம் வைத்து, இறந்தவர்களுக்கான சடங்குகளைச் செய்ய
வேண்டும். தன்னையும் தன் குடும்பத்தினரையும் இறந்துவிட்டவர்களாகக் கருதுவதற்கே நெஞ்சுரம் வேண்டும்.
அதன்பின் யாசகம் செய்து வாழ வேண்டும். ஒருநாளில் ஒருவேளை
மட்டுமே சாப்பிட வேண்டும். ஏழு வீடுகளில் மட்டுமே யாசகம் செய்ய வேண்டும். அந்த ஏழு வீடுகளில் அன்று உணவு கிடைக்காவிட்டால், நாள் முழுக்கப் பட்டினி கிடக்க வேண்டும். யாசகம் செய்யாத நாள்களில் மலைகளில் கிடைக்கும் கிழங்குகள், பழங்கள், மூலிகைகளைச் சாப்பிட்டுக்கொள்ளலாம். யோக, ஆன்மிகப் பயிற்சி என்று
ஆண்டுக்கணக்கில் செய்ய வேண்டும்.
நாகா சாதுக்களில் பெண்களும் உண்டு. அவர்களும் அகாராக்களில்தான் இருப்பார்கள். குடும்ப உறவுகளைத் துறந்து, பந்த பாசங்களைத் துறந்து
ஆறு முதல் பன்னிரண்டு ஆண்டுகள் அவர்கள் விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இவர்களும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் பிண்ட தானம் வைத்து, எல்லோருமே இறந்ததாகக் கருதி மறுபிறவி எடுத்துவிட்டே இங்கு வருகிறார்கள்.
ஆண் நாகா சாதுக்களைப் போல இவர்கள் நிர்வாணம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தைக்கப்படாத நீளமான காவி உடையை
உடலில் போர்த்திக்கொண்டு, நெற்றியில் பெரிய திலகம் இட்டிருப்பார்கள். கும்பமேளாவில் இவர்களுக்குத் தனியாகக் குடில்களும் நீராடும்
வசதிகளும் உண்டு.
ஒருபக்கம் ஐ.ஐ.டி-யில் படித்து ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் பேக்கேஜில் வேலைக்குச் செல்ல முண்டியடிக்கும் இளைஞர்கள் நிறைந்த இந்தியாவில், இன்னொரு பக்கம் அகோரிகளாகவும் நாகா சாதுக்களாகவும் மாறவும்
பலர் காத்திருக்கிறார்கள் என்பதுதான் விநோதம்….!!! ( உதவிக்கு நன்றி -விகடன் தளம் )
.
………………………………………………………………………………………..…………



நிஜமான சாமியாரா இல்லை ….