……………………………………………….

………………………………………………
நியாயமான வழிகளில் பணம் சேர்க்க சில வழிமுறைகளைப்பற்றி படித்தேன்….
நண்பர்களின் பார்வைக்காக கீழே தந்திருக்கிறேன் – சிரமங்கள் ஏதுமில்லை; யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்….
1. நீங்கள் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கு அர்த்தம் கொடுங்கள். ‘இந்தப் பணத்தை இந்தச் செலவுக்காக சம்பாதிக்கிறேன்’, அல்லது ‘இதில் முதலீடு செய்ய சம்பாதிக்கிறேன்’ என்று பணத்துக்குக் காரணம் தேடுங்கள்.
2. ‘ஆறு மாதத்துக்குள் இவ்வளவு சேமிப்பேன்’, ‘ஒரு வருடத்துக்குள் பைக் வாங்கப் பணம் சேர்ப்பேன்’, ‘வீட்டுக்கடனை 10 ஆண்டுகளில் அடைப்பேன்’ என்பது போல குறுகிய கால, நீண்டகால நிதி இலக்குகள் தேவை.
3. பட்ஜெட் போட்டுச் செலவு செய்யுங்கள். அநாவசிய செலவுகள் குறையும், எவ்வளவு சேமிக்கிறோம் என்ற உண்மையும் தெரியும்.
4. செலவுகள் போக மிஞ்சுவதைச் சேமிக்கலாம் என நினைக்காதீர்கள். பட்ஜெட் போடும்போதே சேமிப்புக்காக என்று தனியாக ஒரு தொகையை எடுத்து வைத்துவிடுங்கள்.
5. முதல் வேலையில் சேர்ந்த முதல் மாதத்திலேயே உங்கள் ஓய்வுக்கால பணத்தேவைகள் பற்றி யோசிக்க ஆரம்பிக்க வேண்டும். சரியான பென்ஷன் திட்டம் ஒன்றில் முதலீடு செய்ய அப்போதே ஆரம்பியுங்கள்.
6. அவசர செலவுகளுக்காக என்று ஒரு தொகை தனியாக வைத்திருங்கள். யாரிடமும் அந்த நேரத்தில் கடன் வாங்க வேண்டிய தேவை இருக்காது.
7. நாளைய நேரத்திலிருந்து இரண்டு மணி நேரத்தை இன்று கடன் வாங்கிச் செலவு செய்ய முடியுமா? மாதக்கடைசியில் கடன் வாங்குவதும் இப்படியானதுதான். அந்தப் பழக்கத்தைக் கைவிட்டாலே, நீங்கள் பணக்காரர் என்ற உணர்வு வரும்.
8. இன்று 100 ரூபாய் சேமித்தால், 30 ஆண்டுகள் கழித்து அதன் மதிப்பு பெரியது. 50 லட்ச ரூபாய் வீட்டுக்கடனில் தவணைக்கு மேல் ஒரு லட்சம் ரூபாய் கூடுதலாகக் கட்டினாலும், வட்டி நிறைய குறையும். சிறிய தொகையை அலட்சியமாக நினைக்காதீர்கள்.
9. ‘நமக்கு வயதாகிவிட்டது. இனிமேல் சேமிப்பதும் முதலீடு செய்வதும் வேஸ்ட்’ என எந்த வயதிலும் நினைக்காதீர்கள். 60 வயதிலும் முதலீட்டைத் தொடங்கியவர்கள் உண்டு.
10. இளம் வயதில் ரிஸ்க் அதிகமுள்ள பங்குச்சந்தை போன்ற முதலீடுகளைச் செய்யுங்கள். திருமணம், குழந்தைகள் என்று பொறுப்புகள் கூடும்போது, பாதுகாப்பான முதலீடுகள் பக்கம் போய்விடுங்கள்.
11. தேவையற்ற செலவுகளைக் குறைப்பதும் ஒருவகை சேமிப்புதான். இரண்டு ஷூக்கள் இருக்கும்போது வாங்கும் மூன்றாவது ஷூ, பேருந்தில் போக முடிகிற இடத்துக்குக் காரில் போவது போன்றவற்றை கவனமாகத் தவிர்த்துவிடுங்கள்.
12. மருத்துவக் காப்பீடு, டெர்ம் பிளான் போன்ற காப்பீடுகளை இளம் வயதிலேயே எடுத்துக்கொள்ளுங்கள். எதிர்பாராத மற்றும் அவசர சூழல்களில் நிலைகுலைந்து போகாதபடி இவை தடுக்கும்.
13. கடைகளுக்குப் போகும்போதோ, ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போதோ, என்னென்ன வாங்க வேண்டும் என்ற பட்டியலை வைத்துக்கொள்ளுங்கள். தேவையற்ற எதையும் வாங்காதீர்கள்.
14. பெரிய பட்ஜெட்டில் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதென்றால், குறிப்பிட்ட சீசன்களில் அறிவிக்கப்படும் தள்ளுபடிகள், சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
15. ஏதாவது வாங்க வேண்டும் என்ற ஆசை எழுந்தால், 48 மணி நேரம் அதைத் தள்ளிப் போடுங்கள். ‘இது நமக்கு அவசியம் தேவை’ என்று அப்போதும் தோன்றினால் மட்டுமே அதை வாங்குங்கள்.
16. கிரெடிட் கார்டுகளை கவனமாகப் பயன்படுத்துங்கள். அதில் செலவழிப்பதும் உங்கள் பணம்தான், அந்தந்த மாதத்துக்குள் முழுசாகக் கட்டாமல் விட்டால் அந்தத் தொகைக்குப் பெரிய வட்டி உண்டு.
17. பணம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாப்பாக ஒரே இடத்தில் வையுங்கள். எவ்வளவு முதலீடு செய்தோம், எவ்வளவு சேமித்தோம் என அவ்வப்போது பார்ப்பது இன்னும் செய்ய உத்வேகம் தரும்.
18. பண விஷயத்தில், சங்கடம் தரும் முடிவுகளைத் தயங்காமல் எடுங்கள். நிறைய சேமித்தாலும், பொருள்களை வாங்குவதைத் தவிர்த்தாலும் வாழ்வில் சிரமப்படுவீர்கள். ஆனால், இதுபோன்ற முடிவுகள்தான் உங்களுக்குப் பண நிறைவு தரும்.
19. கட்டணங்கள், தவணைகள் போன்றவற்றை உரிய காலத்தில் செலுத்திவிடுங்கள். உங்களை நாணயமானவராகக் காட்டவும், நஷ்டங்களைத் தவிர்க்கவும் இது உதவும்.
20. பொழுதுபோக்குகள், கேளிக்கைகள் தேவை. ஏனெனில் இப்போதைய மகிழ்ச்சியை இழந்துவிடக்கூடாது. சேமிப்புகள், முதலீடுகள்தான் எதிர்கால மகிழ்ச்சியை உறுதிசெய்யும். இரண்டையும் பேலன்ஸ் செய்யுங்கள். ( உதவிக்கு நன்றி – விகடன் தளம் ….)
……………………………………………………………………………………………………………………………………………..



இதில் சொல்லாதது ஒன்று இருக்கிறது. எப்போதும் பிள்ளைகளிடம் தங்களிடம் இவ்வளவு பணம் இருக்கிறது, இவ்வளவு சம்பாதிக்கிறேன் என்று சொல்லாதீர்கள். மிகச் சாதாரண குடும்பம் போல வளருங்கள், உங்களுக்கு எவ்வளவு பண வரவு இருந்தாலும். அவர்களுக்கு அவசியமானதைக்கூட நீங்கள் ரொம்ப யோசித்துச் செலவழிப்பதாகக் காட்டிக்கொள்ளுங்கள்.
நான் கடைபிடித்தது, ஒருபோதும் க்ரெடிட் கார்ட் வைத்துக்கொள்ளாதது. அதனால் எனக்கு எப்போதுமே மன நிம்மதி. எதற்காகவும் கடன் வாங்கியது இல்லை. அது தரும் சந்தோஷத்திற்கு இணை எதுவும் கிடையாது, காரணம் நமக்கு எந்த அசம்பாவிதம் நேர்ந்தாலும் (வேலை போவது, அல்லது வேறு பிரச்சனைகள்), நம்மால் நம்முடன் இருப்பவர்களுக்குச் சுமை கிடையாது.
இப்போ நினைத்து, நாம் செய்தது தவறோ என்று நினைப்பது, அசையாச் சொத்துக்கள் வாங்க, வங்கிக் கடன் போட்டு வாங்க முயலாதது. ஒருவேளை செய்திருந்தால் நிறைய சொத்துகள் சேர்த்திருக்கலாம், ஆனால் அன்றைய காலகட்டத்தில் தெரியாது என் அலுவலக வாழ்க்கை எவ்வளவு முன்னேற்றம் கொடுத்திருக்கும் என்று.
என்னுடைய அனுபவம் சொல்வது, எதுவுமே நம்முடைய முயற்சியினால் வந்ததில்லை. வந்ததன் காரணமும் தெரியாது, வரவு நின்றதன் காரணமும் தெரியாது, வரவேண்டியது வராததன் காரணமும் தெரியாது. அனைத்துக்கும் காரணம் இறைவன் என்றுதான் என் மனது எனக்குச் சொல்கிறது.