……………………………………………………….

…………………………………………………………

…………………………………………………………
சென்னையின் மையப்பகுதியில் ஒரு காலத்தில் இப்படியொரு
கனவுத் தொழிற்சாலை இருந்தது என்று சொன்னால் இப்போதுள்ள
பல இளைய தலைமுறையினர் நம்பவே சிரமப்படுவார்கள்.
ஆனால் அன்றைக்கு அது நிஜம்.
அகன்ற மௌண்ட் சாலை. முன்னால் கிளைவிரித்து நீண்ட வயதான மரம்.
உள்ளே பசுமை அடர்ந்த மரங்கள் சுற்றிலும் வெண்மையான காம்பெளண்டுச்
சுவர். முகப்பில் அழகான தோற்றம். .
மேலே குழல் ஊதிய இரட்டையர்களின் சிலை.
கீழே ஜெமனி ஸ்டூடியோஸ் என்கிற எழுத்துக்கள்.
அதற்கும் கீழே சிறிதாக ‘’மூவி லேண்ட்’என்கிற சிற்றெழுத்துக்கள்.
உள்ளே இயக்குநர்களின் அறைகள்.
ஒரு பிரிவ்யூ தியேட்டர். பெரிய ஃப்ளோர்கள். ஒலிக்கூடங்கள். தோட்டங்கள். உடை, மேக்கப் பிரிவுகள் என்று பிரம்மாண்டத்தை உணர வைக்கும் ஜெமினி ஸ்டூடியோ இருந்தது இந்த இடத்தில் தான்.
அந்த இடத்தின் சின்ன நினைவாகத் தான் அதற்கு அருகில் இன்றைக்கு
இருக்கிறது ‘ஜெமினி’ மேம்பாலம்.
பல ஆச்சர்யங்களை உணர வைத்த ஜெமினி ஸ்டூடியோ உருவானதே வித்தியாசமான ஆச்சர்யம்.
1940….அப்போதைய மௌண்ட் ரோட்டில் இருந்த விஸ்தாரமான
மோஷன் பிக்சர்ஸின் ஸ்டூடியோ ஏலத்திற்கு வந்தது.
ஏலத்திற்குப் பல பேர் விண்ணப்பித்திருந்தார்கள்.
வாசன் ஏலக் கவரில் விண்ணப்பித்த தொகை விசித்திரம்.
“எண்பத்தாராயிரத்து நானூற்று இருபத்தேழு ரூபாய்,பதினோரணா,
ஒன்பது பைசா”.
வாசனுக்கே ஏலத்தில் வெற்றி.
இடத்தை மெருகுபடுத்தினார்கள்.
பெயரை ‘’மூவி லேண்ட் – ஜெமினி ஸ்டூடியோ’’ என்று மாற்றினார்கள்.
திறப்புவிழா அமோகமாக நடந்தது. திறந்து வைத்தவர் ராஜா சர் முத்தையா செட்டியார்.
அவ்வளவு தான்.
சாம்பிராணி விழுந்த மாதிரி கனவுப்புகை. அசுர உழைப்பு, அபாரமான வேலைத்திறன், அருமையாக அவருடன் ஒத்துழைத்த சகாக்கள்,
திறமையான நிர்வாகம்- ஜெமினியைக் குறுகிய காலத்தில் அண்ணாந்து
பார்க்க வைத்தார் எஸ்.எஸ்.வாசன்.
“மதனகாம ராஜன்” துவங்கிய ஜெமினியைக் கவனிக்க வைத்தது
1943ல் வெளிவந்த ‘மங்கம்மா சபதம்’..
“நந்தனார்”- கவனிக்கப்பட்டது.
தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து மூன்று ஆண்டுகளில்
வாசனே இயக்கி எடுத்த படம் ‘ சந்திரலேகா’.
வெளியான ஆண்டு 1948.
பிரம்மாண்டம் என்ற சொல்லுக்கான அன்றைய அர்த்தம் ‘சந்திரலேகா’.
அதில் இடம் பெற்ற முரசு நடனம் இன்றைக்கும் ஓர் ஆச்சர்யம்..!
600க்கும் மேற்பட்ட பிரதிகள். லட்சக்கணக்கில் விளம்பரங்கள் என்று
இந்தி மொழியிலும் வெளியான சந்திரலேகா வசூலில் செமை ஹிட்.
நாடு முழுக்கப் பேசிப்பட்டது ஜெமினி.
இரட்டைச் சகோதரர்கள் ஊதிய குழல் சத்தம்
தேசம் முழுக்கக் கேட்டது.
கே.பி. சுந்தரம்பாளுக்கு அன்றைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை
ஊதியம் கொடுத்து எடுத்த ‘ அவ்வையார்’ படத்திற்குப் பிறகு
ஜெமினியின் இன்னொரு அழகான மேஜிக் ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’.
இந்தியில் 24.
தெலுங்கில் 19.
இன்னும் குஜராத்தி, மலையாளம் உட்படப் பல மொழிப்படங்களை எடுத்து
நாட்டின் கவனத்தையே ஈர்த்துக் கொண்டிருந்த ஜெமினி ஸ்டூடியோவுக்கு
வட இந்திய நடிகர்களிலிருந்து பலர் வந்திருந்தாலும்,
சிறப்பு விருந்தினரைப் போலப் பார்வையிட்டுப் பாராட்டியவர்
சீனப்பிரதமரான சூ என் லாய்.
வெற்றியைப் போலவே தோல்வியையும் பாவித்த வாசன் தான் தயாரித்த
‘ஞான சௌந்தரி’’ படம் தோல்வி எனத்தெரிந்ததும் எந்தத் தயக்கமும்
இல்லாமல் அந்தப் படச்சுருள்களைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டார்.
“தனிமனித ஆராதனை எனக்குப் பிடிக்காது.
ஒரு மனிதனை முன்னிறுத்துவதைவிட, அவனது ஸ்தாபனத்தை
முன்னிறுத்துவது தான் சரி’’- என்று சொல்லி வாழ்ந்து கொண்டிருந்த, ஊழியர்களால் ‘பாஸ்’ என்றழைக்கப்பட்ட வாசன் மறைந்தது 1969ல்.
அந்த ஆண்டில் கூட இந்தியில் “ஷத்ரஞ்” என்கிற படத்தை இயக்கியிருந்தார்
வாசன். அவருக்குப் பிறகு சில படங்களைத் தயாரித்து இயக்கியவர்
அவருடைய மகனான பாலசுப்பிரமணியன்.
கடைசியாக அவர் இயக்கி வெளிவந்த படம்
‘எல்லோரும் நல்லவரே’.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக துடிப்பான இதயத்தைப் போல அண்ணாசாலையில் இயங்கிக் கொண்டிருந்த ஜெமினி ஸ்டூடியோ
மூடப்பட்டது 1975ல்.
மூடுவது ஏன் என்று கேட்ட கேள்விக்கு அற்புதமான ‘ஆசிரியரான ‘ பாலசுப்பிரமணியன் மனம் விட்டு வெளிப்படையாகச் சொன்ன பதில். ‘’ “எனக்குத் திரைப்படத் துறையில் நீந்தத் தெரியவில்லை’’
மும்பை படவுலகையும் சென்னை நோக்கித் திரும்பிப் பார்க்கவைத்த
ஸ்டூடியோ இருந்த இடத்தில் இன்று பல அடுக்குமாடி வணிகக் கட்டிடங்கள்.
முன்பு செல்லுலாய்டுக் கனவுலகம் விரிந்த இடத்தில் இப்போது
போக்குவரத்து இரைச்சல் அதிகரித்துப் போய் குழல் ஊதிய இரட்டைச்
சிறுவர்களின் அழகான சின்னம் காணாமல்போய்விட்டது.
‘மறைந்ததெல்லாம் காண்பமென்றோ’ பாரதியின் வரியைப் போல,
திரும்பிவருமா உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் நிரம்பிய
அந்த அழகான கனவுலகம்….?
( நன்றி – மணா-வின் ” தமிழகத் தடங்கள்” நூலில் இருந்து….)
………………………………………………………………………………………………………………..…



நிஜமான சாமியாரா இல்லை ….