…………………………………………..

……………………………………………

…………………………………………….

……………………………………………
“பசியோட வலி எப்படியிருக்கும்னு எனக்கு நல்லாத் தெரியும்ணே. ஏன்னா, நானும் யாராவது சாப்பாடு தரமாட்டாங்களான்னு ஏங்கிப்போய் நின்னவன்தான். ஏதோ இன்னைக்கு குடும்பம், வாழ்க்கைன்னு ஓரளவுக்கு நிறைவா இருக்கேன். நான் என் பங்குக்கு ஏதாவது செய்யணும்ல… அதான், யாரெல்லாம் அரவணைக்க ஆளில்லாம இருக்காங்களோ அவங்களுக்கெல்லாம் போய் துணைக்குத் துணையா நிக்குறேன்…”
ரஞ்சித்திடம் பேசிக்கொண்டிருப்பதே அவ்வளவு உற்சாகமாக இருக்கிறது. ஆண்டிபட்டி எம்.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக மருந்தாளுநராகப் பணிபுரிகிறார். ஆண்டிபட்டியில் இறங்கி ரஞ்சித் பற்றி விசாரித்தால் எல்லோரின் முகமும் மலர்கிறது. அந்த அளவுக்கு மனதுக்கும் நெருக்கமாக இருக்கிறார். சமீபத்தில்தான் சிறந்த சமூக சேவகருக்கான ஆளுநர் விருதைப் பெற்றிருக்கிறார் ரஞ்சித்குமார். வாழ்த்துக்கான கைகுலுக்கலோடு தொடங்கியது எங்கள் உரையாடல்.
“பெரம்பலூர்ணே எங்க பூர்வீகம். என் பெற்றோர் வால்பாறை எஸ்டேட்ல தோட்டத் தொழிலாளர்களா இருந்தாங்க. கூடப்பிறந்தவங்க மூணு ஆண்கள், மூணு பெண்கள்னு பெரிய குடும்பம். அப்பா, அம்மாவோட வருமானத்துல அரை வயிறு சாப்பிடறதே போராட்டம்தான். பிள்ளைகளாவது பசியில இருந்து மீளட்டுமேன்னு பெரம்பலூர்ல உள்ள ஆதரவற்றோர் விடுதியில சேர்த்துப் படிக்க வெச்சாரு எங்க அப்பா. அங்கேயிருந்துதான் டி.பார்ம் வரைக்கும் படிச்சேன்.
படிப்பை முடிச்சுட்டு மூணு வருஷம் தேயிலைத் தோட்டத்துல கூலியா இருந்தேன். அதுக்குப் பிறகுதான் எஸ்டேட் ஆஸ்பத்திரில மருந்தாளுநர் வேலை கொடுத்தாங்க. ஆறு வருஷமா மாஞ்சோலையில வேலை பார்த்தேன். பல பேரோட கருணையால வளர்ந்தவன் நான். இன்னொரு மனுஷன் கஷ்டப்படும்போது அவனைத் தோள்ல சாச்சு ஆறுதல்படுத்தணும்னு நினைக்கிறேன். அதுக்கு சேவைன்னு எல்லாம் பெயர் வைக்கத் தேவையில்லை. அது ரொம்பப் பெரிய வார்த்தைன்னு நினைக்கிறேன்.
டி.பார்ம் படிக்குறப்போ கண்ணு முன்னாடி ஒரு பெரியவர் கீழே விழுந்தார். கை கால் இழுத்துக்கிச்சு. முதலுதவி செஞ்சு ஆஸ்பத்திரில சேர்த்துட்டு கைப்பைல இருந்த போன் நம்பர் மூலம் குடும்பத்துக்குத் தகவல் கொடுத்தேன். ஒரு வாரம் கழிச்சு அந்த முதியவர் குடும்பம், என்னை அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் டிரஸ்ஸெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க. இன்னொரு மனுஷனுக்கு உதவும்போது, நாம அவங்க பார்வைக்கு எப்படித் தெரிவோம்னு அந்தத் தருணத்துலதான் உணர்ந்தேன். இப்பவும் அவங்க குடும்பத்துல நானும் ஒருத்தனா இருக்கேன்.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு என்னைச் சுத்திலும் இருக்கிற மனிதர்களைக் கவனிக்க ஆரம்பிச்சேன். பஸ் ஸ்டாண்ட்ல யாராவது ஆதரவில்லாம படுத்திருந்தா போய் பக்கத்துல உக்காந்து பேசுவேன். போர்வை வாங்கித் தருவேன். குடும்பம் பத்திக் கேட்பேன். பிள்ளைங்க மேல கோபத்துல வந்தவங்க, பிள்ளைகளோட புறக்கணிப்பால வந்தவங்கன்னு ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதை இருக்கும். சில பேரை குடும்பத்தோட இணைச்சிருக்கேன்.
ஒருத்தருக்கு உதவறதுக்காக, இன்னொருத்தர்கிட்ட உதவி கேட்க தயங்கவேமாட்டேன். இல்லேன்னு சொன்னாலும் கவலைப்பட மாட்டேன். நிறைய நல்ல நண்பர்கள் கூட இருக்கிறது பலம். தேயிலை எஸ்டேட்ல வேலை பார்த்தப்போ விபத்துல சிக்குன ஒருத்தருக்காக ரத்ததானம் செஞ்சேன். அதோட பயன் தெரிய ஆரம்பிச்ச பிறகு, அதைத் தொடர்ந்து செய்ய ஆரம்பிச்சேன். 17 வருஷமா மூணு மாசத்துக்கு ஒருமுறை ரத்தத்தானம் செஞ்சுகிட்டிருக்கேன்…” ஆத்மார்த்தமாகப் பேசுகிறார் ரஞ்சித்குமார்.
பெற்றோரை இழந்து தவித்து நின்ற ஏழு பழங்குடிக் குழந்தைகள் உட்பட 59 பிள்ளைகளை துயரிலிருந்து மீட்டு காப்பகத்தில் சேர்த்திருக்கிறார் ரஞ்சித். மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரிந்த 196 பேரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்து குடும்பத்தோடு இணைத்திருக்கிறார். பீகார், அசாம், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களையும்கூட காவல்துறை மூலம் அவர்கள் ஊருக்கே அனுப்பி வைத்திருக்கிறார். தலசீமியாவால் பாதிக்கப்பட்ட 33 குழந்தைகள் சிகிச்சை பெறவும் உதவியிருக்கிறார். இதயப் பிரச்னை, உதட்டுப் பிளவு, பார்வைக்கோளாறு போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ரஞ்சித்குமார் ஏந்தலாக இருந்து பொறுப்பேற்று சிகிச்சை பெற உதவுகிறார்.
ரஞ்சித்குமாரின் மனைவி தெய்வமலர், ஆதரவற்றோர் இல்லத்தில் காப்பாளராக இருந்தவர். குழந்தைகள்மீது அவர் காட்டிய அன்பும் அக்கறையும் ரஞ்சித்குமாரைக் கவர, இருவீட்டார் சம்மதத்தோடு இல்லறத்தில் இணைந்திருக்கிறார்கள்.
“எங்க ரெண்டு பேரையும் பிழைக்கத் தெரியாதவங்க, கோமாளிகள்னு நிறைய பேர் கிண்டல் பண்ணுவாங்க. அதையெல்லாம் நாங்க கண்டுக்கிறதேயில்லை. காசு பணமெல்லாம் பெரிய பிரச்னையில்லை. கஷ்டம்னு தவிச்சு நிக்குற ஒரு மனுஷனுக்கு பக்கத்துல நின்னு ‘நான் இருக்கேன், கவலைப்படாதீங்க’ன்னுஆறுதல் சொல்லிப் பாருங்க. அவங்க கஷ்டத்துல பாதி தீர்ந்திடும்.
கஷ்டம் எங்களுக்குப் புதுசில்ல. சம்பாதிக்கிறதுக்கு ஏத்தமாதிரி வாழப் பழகியிருக்கோம். எங்க பிள்ளைகளுக்கும் அதைக் கத்துத் தந்திருக்கோம்.
கொரோனா எல்லோருக்கும் வாழ்க்கைன்னா என்னன்னு கத்துக்கொடுத்திருக்கு. நம்பிக்கை மட்டும்தான் அப்போ தேவையாயிருந்துச்சு. எப்பவும் அதுதான் தேவை. அந்த நேரத்துல எந்த மனத்தடையும் இல்லாம ஓடி ஓடிப்போய் மத்தவங்களுக்காக நின்னாரு. இன்னைக்கும் எங்காவது பார்த்தா, ‘நீங்க இல்லேன்னா அன்னைக்கு நாங்க கஷ்டப்பட்டிருப்போம்’னு கையைப் பிடிச்சுக்கிட்டு சிலர் கலங்குவாங்க. அந்தத் தருணம்தான் வாழ்க்கையை நிறைவாக்குது…” என்று நிறையும் கண்களோடு சொல்கிறார் தெய்வமலர்.
“ரஞ்சித்கிட்ட சொல்லிட்டா அவர் பார்த்துக்குவார்னு இந்தப்பகுதியில ஒரு நம்பிக்கை உருவாகியிருக்கு சார். சாதிச் சான்றிதழ் இல்லேன்னாகூட ரஞ்சித்கிட்ட வாராங்க. அவர் கூட்டிட்டுப் போய் முறைப்படி விண்ணப்பிக்க வச்சு அதிகாரிகள்கிட்ட பேசி வாங்கித்தருவார். வந்த வேலை முடிஞ்சுட்டா நன்றி சொல்லணும்னு கூட எதிர்பார்க்காம அடுத்த வேலையைப் பார்க்க ஓடிடுவார் மனுஷன். அவர் பார்க்குற வேலையை இந்த அரசாங்கம் நிரந்தரமாக்கிட்டா நிம்மதியா இருப்பார்.
தனக்கு தனக்கு என எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கும் காலத்தில் மற்றவர்களின் துயரத்தைத் துடைக்கிற இந்த மனிதரின் பணியை நிரந்தரப்படுத்தி உற்சாகப்படுத்த வேண்டும் அரசு! ( நன்றி – விகடன் தளம் …)
ரஞ்சித் குமாரை – சிறந்த சமூக சேவகர் என்று தேர்ந்தெடுத்து கௌரவித்த தமிழக அரசு, அவர் தனது சமூக சேவையை – ( தனது சொந்த, குடும்ப – வாழ்வாதார பிரச்சினைகளை மறந்து ) தொடர்ந்து செய்ய இது மிகவும் உதவியாக இருக்கும்.
.
……………………………………………………………………………………………………………………………



நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…