……………………………………………………

…………………………………………………….
சமீபத்தில் தமிழக அரசு வழங்கியிருக்கும் ஓர் அனுமதி, ஒட்டுமொத்தத் தமிழக அரசியலையும் பரபரப்பாக்கியிருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் அதானி நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு மின்சாரவாரியத்துக்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில், கிட்டத்தட்ட 6,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதி அளித்து, எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை உண்டு பண்ணி இருக்கிறது அரசு….!
இது குறித்து விகடன் தளத்தில் வெளியாகியிருக்கும் பரபரப்பான செய்தியொன்று கீழே –
…………………………………………………..
அதானி – சபரீசன் சந்திப்பு ….? புகையும் நிலக்கரி ஊழல் …!
“இந்த அனுமதி அளிக்கப்பட்ட சில நாள்களிலேயே அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி திடீரென சென்னைக்கு வந்திருக்கிறார்.
அவர், முதல்வரின் மருமகன் சபரீசனைச் சந்தித்துப் பேசியிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. நிலக்கரி இறக்குமதி முறைகேடு புகார் சரியாக விசாரிக்கப்பட்டால், அதானி நிறுவனம் தொடங்கி முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் வரையில் பலருக்கும் சிக்கல் ஏற்படும். ‘அதற்காகத்தான் மருமகனை அதானி சந்தித்தாரோ..?’ என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியிருக்கிறது” என்கிறார்கள் விவரப்புள்ளிகள்.
நிலக்கரி இறக்குமதி முறைகேடு புகாரின் பின்னணி என்ன… அதானி – சபரீசன் சந்திப்பு நிகழ்ந்ததா..? களமிறங்கி விசாரித்தோம்…
‘2012 – 2016 ஆண்டு காலகட்டத்தில், தமிழ்நாடு மின்சாரத்துறைக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் குறைவாக இருந்ததாக’ புகார்கள் வெடித்தன. தவிர, ‘விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து சென்னைக்கு நிலக்கரியை எடுத்து வந்த போக்குவரத்துச் செலவுகளிலும் முறைகேடுகள் நடைபெற்றதாக’ குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த முறைகேட்டை முதலில் வெளிக்கொண்டு வந்தது ‘அறப்போர்’ இயக்கம்தான். 2018-ல், ‘நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு’ எனத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் அவர்கள் புகாரளிக்கவும்தான், இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து தி.மு.க-வும் பேசத் தொடங்கியது.
அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், “நிலக்கரி இறக்குமதியில் ‘பூனைக்குட்டி’ அல்ல… ‘ஊழல் திமிங்கிலமே’ வெளியே வந்திருக்கிறது” என அறிக்கையெல்லாம் வெளியிட்டார். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் அந்தப் புகாரை விசாரிக்க ஏனோ மறந்துபோய்விட்டார்.
இந்தச் சூழலில்தான், ‘தமிழக மின்சாரத்துறைக்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக’ காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார். ஒரு பத்திரிகைச் செய்தியை மேற்கோள் காட்டி அவர் முன்வைத்தக் குற்றச்சாட்டு, கடந்த மே மாதம் தேசிய அளவில் பேசுபொருளானது. காங்கிரஸ் தரப்பிலிருந்தும் தமிழக அரசுக்கு அழுத்தம் வந்ததாகக் கூறப்படுகிறது. நெருக்கடிகள் முற்றவே, 2018-ல் அறப்போர் இயக்கம் அளித்த புகார்மீது விசாரணை நடத்த, தற்போதுதான் அனுமதி அளித்திருக்கிறது தி.மு.க அரசு.
மும்மடங்கு விலை… திடீரென உயர்ந்த கலோரி… மர்மம் என்ன….?
நிலக்கரி இறக்குமதி முறைகேடு புகார் குறித்து, மின்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “2012 – 2016 காலகட்டத்தில், தமிழகத்திலுள்ள அனல்மின் நிலையங்களின் மின் உற்பத்திக்காக, 2.44 கோடி மெட்ரிக் டன் நிலக்கரியைக் கொள்முதல் செய்தது அப்போதைய அ.தி.மு.க அரசு.
‘அதானி குளோபல் பிரைவேட் லிமிடெட்’, ‘நாலெட்ஜ் இன்டர்நேஷனல் ஸ்ட்ராட்டஜி சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்’, ‘செட்டிநாடு லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட்’, ‘எம்.எஸ்.டி.சி லிமிடெட்’ ஆகிய நிறுவனங்களிடமிருந்து 12,250 கோடி ரூபாய்க்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நிறுவனங்களில், 1.19 கோடி மெட்ரிக் டன் அளவில் மின்சார வாரியத்துக்கு அதிக அளவு நிலக்கரியை சப்ளை செய்தது அதானி நிறுவனம்தான். பிரச்னையும் அங்கேதான் வெடித்தது.
இந்தோனேசியாவைச் சேர்ந்த ‘ஜோன்லின்’ என்ற நிறுவனத்திடமிருந்து 69,925 மெட்ரிக் டன் நிலக்கரியை, டிசம்பர் 2013-ல் கொள்முதல் செய்திருக்கிறது அதானி நிறுவனம். கொள்முதல் செய்யப்பட்ட நிலக்கரியின் எரிதிறன் அளவு 3,500 கிலோ கலோரி. அதை ஒரு மெட்ரிக் டன் நிலக்கரியை 28 அமெரிக்க டாலர் (2,332 ரூபாய்) என்ற மதிப்பில் கொள்முதல் செய்திருக்கிறார்கள்.
ஆனால், நிலக்கரிக்கான பில், நேராகத் தமிழக மின்சார வாரியத்துக்கு வரவில்லை. அதானி நிறுவனத்துக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட ‘சுப்ரீம் யூனியன் இன்வெஸ்டார்ஸ்’ என்கிற நிறுவனத்துக்குப் போயிருக்கிறது.
அங்கே, ஒரு மெட்ரிக் டன் நிலக்கரிக்கு 33.75 அமெரிக்க டாலர் (2,811 ரூபாய்) என விலையை மாற்றி, புதிய பில்லை அதானி நிறுவனத்துக்குத் தந்திருக்கிறார்கள். அந்த பில்லிலும் முறைகேடு செய்திருக்கிறது அதானி நிறுவனம்.
அதாவது, ஒரு மெட்ரிக் டன் 91.91 அமெரிக்க டாலர் (7,650 ரூபாய்) என மும்மடங்கு விலையை உயர்த்தி, தமிழக மின்சார வாரியத்துக்குப் புதிய பில்லை அளித்திருக்கிறது அதானி நிறுவனம். அதோடு, 3,500 கிலோ கலோரி என இருந்ததை, 6,000 கிலோ கலோரி எனத் தரத்தை முறைகேடாக உயர்த்தி மோசடி செய்திருக்கிறார்கள்.
இவையெல்லாம் 2017-ல் வெளிவந்த சிஏஜி அறிக்கையிலேயே தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருக்கின்றன. ‘டிசம்பர், 2013-ல் இந்தோனேசியாவிலிருந்து கப்பலில் ஏற்றியனுப்பப்பட்ட நிலக்கரி, பிப்ரவரி 2014-ல் தமிழ்நாட்டில் இறக்குமதியானபோது விலையும் தரமும் திடீரெனப் பல மடங்கு உயர்ந்ததன் மர்மம் என்ன?’ என்பதுதான் கேள்வி.
24 கன்டெய்னர் கப்பல்கள்… தரக்குறைவான நிலக்கரி சப்ளை… போக்குவரத்துச் செலவில் முறைகேடு….!
நிலக்கரியின் தரம், அதிலிருக்கும் கலோரியின் அளவுகோலை மதிப்பிட்டுத்தான் பிரிக்கப்படும். அதற்கு ‘கார்’ என்று பெயர். கலோரியின் அளவு அதிகமிருந்தால்தான், அந்த நிலக்கரியை எரியூட்டும்போது தேவையான அளவு மின்சாரம் உற்பத்தியாகும். தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்யும் நிலக்கரி, டெண்டர் விதிமுறைகளின்படி குறைந்தபட்சம் 5,000 கிலோ கலோரி இருக்க வேண்டும். ஆனால், அதானி சப்ளை செய்தது 3,500 கிலோ கலோரிகொண்ட தரக்குறைவான நிலக்கரிதான். அதை எரியூட்டுவதன் மூலமாக எதிர்பார்த்த அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது.
800 கிராம் அளவுள்ள நிலக்கரியை எரிக்கும்போது, அதிலிருந்து ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும். ஆனால், தரக்குறைவான நிலக்கரியைக் கொள்முதல் செய்தால், இரு மடங்கு நிலக்கரியை எரித்தால் மட்டுமே ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்த வித்தியாசத்தை, நிலக்கரி இழப்பை அதிகாரிகள் கணக்கில் எழுதுவதில்லை.
எவ்வளவு நிலக்கரிக்கு, எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்கிற கணக்கு நிர்வாகத்திடம் இல்லை. நிலக்கரி தீர்ந்தவுடன் புதிய டெண்டர், அதில் புதிய மோசடி என ஒரு சங்கிலித்தொடராகவே இந்த முறைகேடு நடைபெறுகிறது. இந்த மோசடியால் ஏற்படும் இழப்பு, இறுதியில் மின்கட்டண உயர்வாகப் பொதுமக்களின் தலையில் வந்து விழுகிறது.
அதானியிடமிருந்து தரக்குறைவான நிலக்கரியைக் கொள்முதல் செய்து, அதற்குத் தரம் அதிகமுள்ள நிலக்கரிக்கான தொகையை வழங்கியிருக்கிறது தமிழக மின்சார வாரியம். 2014 – 2016 காலகட்டத்தில் மட்டுமே 24 கன்டெய்னர் கப்பல்களில் இப்படித் தரக்குறைவான நிலக்கரியை மின்சார வாரியத்துக்கு அதானி நிறுவனம் சப்ளை செய்திருப்பதாகத் தெரிகிறது. தவிர, விசாகப்பட்டினத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு நிலக்கரியைக் கொண்டுவர, போக்குவரத்துச் செலவாக 1,267 கோடி ரூபாயைக் கணக்கு காட்டியிருந்தது மின்வாரியம்.
ஆனால், உண்மையில் சவுத் இந்தியா கார்ப்பரேஷன் மேற்கொண்ட இந்தப் பணிக்கு மொத்தமே 239 கோடி ரூபாய்தான் செலவாகியிருந்தது. இந்த வகையில், 908 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட காலகட்டத்தில், மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் நத்தம் விசுவநாதன். ‘டான்ஜெட்கோ’ சேர்மனாக ஞானதேசிகன் இருந்தார். நிலக்கரி இறக்குமதி முறைகேடு புகார் தீர விசாரிக்கப்பட்டால், இவர்கள் இருவரும் பல கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டியிருக்கும்” என்றனர் விரிவாக.
6,000 கோடி ரூபாய் முறைகேடு… சிக்கலில் நத்தம் விசுவநாதன்… புகையும் நிலக்கரி ஊழல்…!
நிலக்கரி ஊழல் தொடர்பாகத் தொடர்ந்து பேசிவரும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனிடம் பேசினோம். “தமிழ்நாடு மட்டுமல்ல… இந்தியா முழுவதும் நடந்த நிலக்கரி ஊழல்களில் அதானி குழுமத்துக்குத் தொடர்பிருக்கிறது.
2012-2016 காலகட்டத்தில், தமிழக மின்சார வாரியத்துக்குத் தரக்குறைவான நிலக்கரியை சப்ளை செய்த வகையிலும், நிலக்கரியின் விலையை உயர்த்திக் கொள்ளையடித்ததிலும் சுமார் 6,000 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடத்திருக்கிறது. இந்த முறைகேட்டில், அதானி நிறுவனத்தின் பங்கு மட்டும் கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய். இவையெல்லாம், அப்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்த நத்தம் விசுவநாதனுக்கும், ‘டான்ஜெட்கோ’ சேர்மனாக இருந்த ஞானதேசிகனுக்கும் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.
நத்தத்திலுள்ள தனது கல்லூரியில் பிரமாண்டமாக கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைத்தார் விசுவநாதன். அதற்கான பணம், நிலக்கரி முறைகேட்டில் கிடைத்த ஊழல் பணமாக இருக்குமோ எனச் சந்தேகம் எழுகிறது. இது குறித்தெல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகாரளித்து விசாரிக்கக் கோரினோம்.
2018-ல் அளித்த புகாருக்கு, ‘இந்தப் புகாரை விசாரிக்கலாமா..?’ என அனுமதி கேட்டு பிப்ரவரி 2023-ல்தான் தமிழக அரசுக்குக் கடிதமே எழுதியது லஞ்ச ஒழிப்புத்துறை. அவர்களின் கடிதத்தை ஒன்றரை வருடம் கழித்து இப்போதுதான் பிரித்துப் படித்திருப்பார்கள் போல… விசாரிக்க ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள். இந்த முறைகேடு புகாரில் இன்னும் எஃப்.ஐ.ஆர் போடப்படவில்லை.
இதற்கிடையே, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையைத் தொடங்கியிருப்பதாகத் தகவல் வெளியான அடுத்த ஒரு வாரத்தில் அதானி நேரடியாகத் தமிழ்நாட்டுக்கு வந்து சென்றிருக்கிறார். முதல்வர் தரப்பினரையும் அதானி சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பால், நிலக்கரி இறக்குமதி ஊழல் புகார் நீர்த்துப்போகவும், வழக்கையே ஊற்றி மூடவும் வாய்ப்புகள் இருக்கின்றன. புகையும் அந்தச் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால், ‘நிலக்கரி ஊழல் தொடர்பாக விசாரணையைத் தொடர்ந்து நடத்துவோம்’ என முதல்வர் ஸ்டாலினும், மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் மக்களுக்கு உறுதியளிக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்ட அதானி நிறுவனத்தை பிளாக் லிஸ்ட் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
அதானி – சபரீசன் சந்திப்பு…? புகையும் நிலக்கரி ஊழல்…!
அறப்போர் ஜெயராமன் சொல்வதுபோல, புகையும் நிலக்கரி ஊழல் புகாரில் நத்தம் விசுவநாதன், ஞானதேசிகன் தொடங்கி அதானி வரையில் பலருக்கும் சிக்கல்கள் முளைத்திருக்கின்றன. இதை முன்னிட்டு, சில சந்திப்புகளும் நடந்ததாகத் தெரிகிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய விவரமறிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், “வழக்கமாக, பிசினஸ் டீல்களை முடிப்பதற்கு கெளதம் அதானி வெளியே வருவதில்லை. அவர் சார்பாக அவருடைய உறவுகளும் மேனேஜர் களும்தான் டீல்களைப் பேசி முடிப்பார்கள். அப்படிப்பட்டவர் சென்னைக்குத் திடீரென வருகை தந்ததும், நட்சத்திர ஹோட்டலில் நான்கு மணி நேரம் தங்கியிருந்ததும்தான் பரபரப்பாகி யிருக்கிறது. சென்னையிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த அதானியை, முதல்வரின் மருமகன் சபரீசன் நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். தமிழகத்தில், 40,000 கோடி ரூபாய்க்கு அதானி குழுமம் செய்யவிருக்கும் முதலீடுகள், இந்தியா – ரஷ்யா இடையேயான ‘ஈஸ்டர்ன் மேரிடைம் காரிடார்’ திட்டத்தில் காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தின் மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட விஷயங்களோடு, நிலக்கரி இறக்குமதி முறைகேடு புகார் விசாரணை நிலவரம் குறித்தும் பேசியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
‘ஓ.சி.சி.ஆர்.பி’ என்கிற அமைப்பு, கடந்த மே மாதம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், தமிழக மின்சார வாரியத்துக்கு நிலக்கரி சப்ளை செய்ததில் அதானி நிறுவனம் பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, ஆதாரங்களுடன் தரவுகளை அடுக்கியிருந்தது. அதைக் கையில் எடுத்துத்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியிருந்தார்.
அதானிக்கு தேசிய அளவில் நெருக்கடி முற்றிய நிலையில்தான், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு அனுமதியும் கிடைத்தது. இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சி யாகத்தான், சபரீசனைச் சந்தித்துப் பேசியிருக் கிறார் கெளதம் அதானி. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு இந்தச் சந்திப்பு நடந்ததாகத் தெரிகிறது. இவர்களின் சந்திப்பால், பல ஆயிரம் கோடி ரூபாய் நிலக்கரி இறக்குமதி முறைகேடு புகார் புதைக்கப்பட்டுவிடக் கூடாது” என்றனர்.
இறுதியாக, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் விளக்கம் கேட்டுப் பேச முயன்றோம். ஆனால், அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. அவரின் உதவியாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “அமைச்சரிடம் விஷயத்தைத் தெரிவிக்கிறேன்” என்றார். ஆனால், மீண்டும் அழைத்தபோது, “நான் வேலையாக இருக்கிறேன். திரும்ப அழைக்கிறேன்” என்று கூறி, நமது அழைப்பைத் துண்டித்துவிட்டார். முதல்வரின் மருமகன் பெயர் அடிபடுவதாலோ என்னவோ, அமைச்சர் தரப்பிலிருந்து மூச்சுப் பேச்சே இல்லை.
சந்தேகங்களைக் களைவாரா முதல்வர்?
அதானி மீது நிலக்கரி ஊழல் வெடித்த காலகட்டத்தில், சி.பி.ஐ விசாரணை கேட்டவர்தான் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின். பிப்ரவரி 7, 2018-ல் அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு மின்சார வாரியம் 12,250 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரியை இறக்குமதி செய்திருக்கிறது. இறக்குமதியாளர்களில், ராமநாதபுரத்தில் அப்பாவி மக்களின் நிலங்களை அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்கும் அதானி நிறுவனத்தின் கம்பெனியும் ஒன்று. குஜராத்தைச் சார்ந்த அதானி நிறுவனத்தின் பின்னணிக் கதையையும், அதற்கும் பா.ஜ.க-வுக்குமுள்ள நெருக்கமான தொடர்பையும் நாடே அறியும். சூரிய ஒளி மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்க இந்தத் தனியார் நிறுவனத்துக்குத்தான் அ.தி.மு.க அரசு டெண்டர் கொடுத்தது. தரமற்ற நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து உடனடியாக சி.பி.ஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனச் சீறியிருந்தார்.
ஆனால், அவர் கையிலிருக்கும் அரசாங்கமே, முறைகேடு புகாரை விசாரிப்பதற்கு ஒன்றரை வருடம் கழித்து, தாமதமாக அனுமதி வழங்குகிறது. யார்மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்தாரோ, அந்த அதானியை அவர் மருமகன் சபரீசன் சந்தித்துப் பேசியிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. அதனால், ‘நிலக்கரி இறக்குமதி முறைகேடு புகார் விசாரணை நீர்த்துப்போய்விடுமோ..?’ எனச் சந்தேகங்கள் கிளம்புகின்றன. சந்தேகங்களைக் களைய வேண்டிய இடத்திலிருக்கும் முதல்வர், என்ன செய்யப்போகிறார்? ( நன்றி – விகடன் தளம் …)
……………………………………………………………………………………………………………………………………



நிஜமான சாமியாரா இல்லை ….