அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக …..????

……………………………………………….

……………………………………………….

உத்தர பிரதேசத்தில் கோயில் நகரமாக விளங்கும் அயோத்தி, ஃபைசாபாத் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்டதாகும். இத்தொகுதியில் “கோயில் அரசியலே’ கோலோச்சும் என நினைத்தால், அது தவறு.

கடந்த கால தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, இங்கு “கோயில் அரசியலை’விட ஜாதி ரீதியிலான காரணி முன்னிலை வகிப்பதை அறிய முடியும். இம்முறையும் இது விதிவிலக்காக இல்லை.

……………………….

தினமணி நாளிதழின் கட்டுரை –
Published:16th May, 2024
https://www.dinamani.com/amp/story/india/2024/May/15/will-bjp-win-in-ayodhya

……………………….

ஃபைசாபாத் தொகுதியில் கடந்த இரு தேர்தல்களிலும் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றவர் லல்லு சிங். இப்போது மூன்றாவது முறையாகக் களம்காண்கிறார். தொழில்முறையில் ஒப்பந்ததாரராக உள்ள இவர், அயோத்தி பேரவைத் தொகுதியில் 5 முறை எம்எல்ஏ-வாக பதவி வகித்தவர்.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ஸ்ரீராமர் கோயில் மற்றும் அதையொட்டிய மேம்பாட்டு நடவடிக்கைகளால் பாஜக மீது பொதுவான ஒரு நல்லெண்ணம் நிலவுகிறது. இந்தப் பின்னணியில், இவர் போட்டிக் களத்தை எதிர்கொண்டுள்ளார்.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் 2.8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிகண்ட லல்லு சிங்குக்கு 2019-ஆம் ஆண்டில் இந்த வித்தியாசம் 65,000-ஆக சரிந்தது. தொடர்ந்து மூன்றாவது முறையாகப் போட்டியிடுவதும், சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணியின் வலுவான வேட்பாளருடன் மோதுவதும் அவருக்கு சவால்களாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

உத்தர பிரதேசத்தில் கடந்த முறை தனித்தனியாக களமிறங்கிய சமாஜவாதியும் காங்கிரஸும் இம்முறை “இந்தியா’ கூட்டணியின்கீழ் களம்காண்கின்றன. ஃபைசாபாத் தொகுதியில் சமாஜவாதி சார்பில் அவதேஷ் பிரசாத் களமிறக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆட்சியில் அமைச்சராக இருந்த இவர், ஒன்பது முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவர்.

கடந்த 2019 தேர்தலில் பாஜகவுக்கு 5,29,021 வாக்குகளும், சமாஜவாதிக்கு 4,63,544 வாக்குகளும், காங்கிரஸுக்கு 53,386 வாக்குகளும் கிடைத்தன. இந்த முறை பாஜகவை வீழ்த்துவோம் என்பது சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணியின் நம்பிக்கையாக உள்ளது.

பாஜக வேட்பாளர் லல்லு சிங், தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர். இங்கு தாக்கூர் மற்றும் பிற உயர் ஜாதியினரின் ஆதரவு இருப்பதால், அவரையே மீண்டும் களமிறக்கியது பாஜக. அத்துடன், யாதவ சமூகம் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் ஒரு பகுதியினரின் ஆதரவும் பாஜகவுக்கு இருக்கிறது.

சமாஜவாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். இத்தொகுதியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தலித் சமூகத்தினர் உள்ளனர்; அதோடு, தங்களது பாரம்பரிய வாக்கு வங்கியான யாதவ சமூகம்-முஸ்லிம்களின் வாக்குகளும் சேர்ந்து, தங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும் என்பது அக்கட்சியின் அரசியல் கணக்காக உள்ளது.

ஃபைசாபாத் தொகுதியில் மற்றொரு முக்கிய அம்சமாக இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அரவிந்த் சென்னும் களத்தில் இருக்கிறார். இவர், மூத்த அரசியல்வாதியும் ஃபைசாபாத் தொகுதியில் மூன்று முறை எம்.பி.யாக பதவி வகித்தவருமான மித்ராசென் யாதவின் மகன். யாதவ சமூகத்தின் வாக்குகளை அரவிந்த் சென் பிரிப்பார் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

இவர்கள் தவிர, பகுஜன் சமாஜ் சார்பில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த சச்சிதானந்த் பாண்டேவும் களத்தில் உள்ளார். அதேநேரம், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஃபைசாபாதில் இச்சமூகத்தினரின் எண்ணிக்கை இல்லை.

மக்களவைத் தேர்தலின் ஐந்தாவது கட்டத்தில் (மே 20) இத்தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

.
………………………………………………………………………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.