காலமும் – சமயோசிதமும் ….!!!

………………………………

…………………………………

கதை தான்…. உருவகக் கதை …!!!

முன்பொரு காலத்தில் மகிழ்ச்சி, வருத்தம், தற்பெருமை போன்ற
உணர்வுகளும், அன்பு போன்ற பண்புகளும் ஒரு தீவில் வாழ்ந்துவந்தன.
ஒரு நாள் அந்தத் தீவு மூழ்கப்போகும் செய்தி வந்தது. அவசரமாகத்
தப்பிக்க நினைத்து, கிடைத்த படகுகளில் ஒவ்வோர் உணர்வும்
தப்ப முயன்றது.

‘அன்பு’ தப்பிக்க இறுதி வரை முயன்றது. ஆனால், அதற்கு உதவியே
கிட்டவில்லை. தீவு கிட்டத்தட்ட பாதிக்கு மேல் மூழ்கத் தொடங்கியிருந்தது. ஒவ்வொருவரிடமும் சென்று ‘அன்பு’ உதவி கேட்க ஆரம்பித்தது.

சற்றுத் தொலைவில் ஒரு படகில் விரைந்துகொண்டிருந்த
‘தற்பெருமை’ யிடம் உதவி கேட்டது . தற்பெருமையோ, ‘‘நீ முழுதும் நனைந்துள்ளாய்! நீ ஏறினால் என் படகும் நனைந்துபோகும்!’’
என்று கூறிவிட்டது.

துயரத்திடம் போய் உதவி கேட்டது அன்பு. ‘‘சோகத்தால் தவிக்கும் நான்
தனிமையை விரும்புகிறேன்’’ எனக் கூறிவிட்டது துயரம். இப்படி மற்ற
உணர்வுகள் கைவிட்டுவிடவே, பரிதவித்தது அன்பு.

அப்போது எங்கிருந்தோ வந்த ஞானம் அன்பே, வா... வந்து என் படகில் ஏறிக்கொள்’’ என்றது. அந்தப் படகில் ஏறித் தப்பித்தது அன்பு. நிறைவில் ஞானத்துக்கு நன்றி சொன்னது. அப்போது ஞானம்உன்னைக் காப்பாற்றியது நான் அல்ல; ஆகவே நீ எனக்கு நன்றி சொல்லத் தேவையில்லை’’ என்றது ஞானம்.

அன்பு திகைத்தது! “உதவிக்குக் கை கொடுத்து, படகில் ஏற்றியது
நீங்கள்தானே… அப்படியிருக்க, வேறு யாருக்கு நான் நன்றி உரைக்க முடியும்?’’
எனக் கேட்டது.

இப்போது ஞானம் சொன்னது… “நான் கருவி மட்டுமே. உனக்கு உதவும்படி
என்னைத் தூண்டியது காலமே.’’

‘‘ஏன் ‘காலம்’ என்னைக் காப்பாற்ற வேண்டும்?’’ எனக் கேட்டது அன்பு.
’ஞானம்’ ஆழமாகப் புன்னகைத்துவிட்டுச் சொன்னது,

‘‘காலத்தால் மட்டும்தானே உன்னைப் புரிந்துகொள்ள முடியும்….?…!’’

அன்பை மட்டுமல்ல, பிரச்னைகளைப் புரிந்துகொள்ளவும்
காலம் அவசியப்படுகிறது…..!!!

.
……………………………………………..

சமயோசிதம் ….

சூழலுக்கேற்ப துரித முடிவெடுக்கும் திறனை, `presence of mind’
என்பார்கள். இது நிகழ் நொடியை அனுபவித்து வாழ்வோருக்கே
எளிதில் வசமாகும்.

மன்னர் ஒருவர் இருந்தார். அவரின் ஆட்சிக்கு நான்கு அமைச்சர்கள்
பேருதவியாக இருந்தார்கள். அவர்களில் ஒருவரைத் தலைமை அமைச்சராகத்
தேர்வு செய்ய எண்ணினார் மன்னர். நால்வரும் திறமையில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல.

அவர்களில் ஒருவரைத் தேர்வு செய்ய விநோத போட்டியை முன் வைத்தார்
மன்னர். விநோத முறையிலான பூட்டு ஒன்று உள்ளது. நாளை அது அவைக்குக் கொண்டு வரப்படும். நால்வரில் யார் மிகக் குறைந்த நேரத்தில் பூட்டைத் திறக்கிறார்களோ, அவர்கள் தலைமை அமைச்சர் ஆவார் என்று
அறிவித்தார் மன்னர்.

அமைச்சர்கள் விநோதமான பூட்டைத் திறப்பதற்கான முறைகள் எந்த நூலில்
உள்ளன என்று தேட ஆரம்பித்தார்கள். பலரிடமும் விசாரித்தார்கள்.
அவர்களில் ஒருவர் மட்டும் சில நூல்களை ஆராய்ந்தார், சிலரிடம் பேசினார். அவ்வளவே. மேற்கொண்டு அலட்டிக்கொள்ளாமல் உறங்கப் போனார்.
மற்றவர்கள் தூங்காமல் பூட்டின் சூட்சுமத்தை அறிவதிலேயே நேரம்
கழித்தார்கள். அவர்களுக்கு எதுவும் புலப்படவில்லை.

மறு நாள் அவை கூடியது. பூட்டு கொண்டு வரப்பட்டது. நால்வரில் மூவர்
பதற்றத்தோடு இருந்தார்கள். எவ்வித முயற்சியுமின்றி சூட்சுமம்
தெரியவில்லை என்று கூறி ஒதுங்கிக்கொண்டார்கள். பூட்டின் அருகில் கூட செல்லவில்லை.

நான்காவது அமைச்சர் மட்டும் பூட்டை நெருங்கினார். சில நொடிகள்
உன்னிப்பாகக் கவனித்தார். அவருக்குச் சூட்சுமம் புலப்பட்டது.
அந்தப் பூட்டு பூட்டப்படவே இல்லை என்பதுதான் அந்த சூட்சுமம்.
எளிதில் தலைமை அமைச்சர் என்ற ஸ்தானத்தை வென்றார்.

……..

மகாபாரதத்தில் ஒரு சம்பவம். குருக்ஷேத்திர யுத்த களம்.
கொடிய அஸ்திரத்தைக் கொண்டு அர்ஜுனனின் தலைக்குக் குறி வைத்தான்
கர்ணன். அர்ஜுனனின் உயிரைக் காவு வாங்குவதற்காகவே கர்ணன்
பெற்றிருந்த அஸ்திரம் அது. எவராலும் தடுக்க இயலாத வல்லமை கொண்டது.

ஒரு நொடிப்பொழுதுதான்…
கர்ணன் அஸ்திரத்தை ஏவியதும், தேரோட்டியாக இருந்த கண்ணன்,
தன் பாதத்தால் தேர்த்தட்டை ஓர் அழுத்து அழுத்தினார். தேரானது குறிப்பிட்ட
அளவு மண்ணில் அழுந்த, சிரத்தைக் குறிபார்த்து வந்த அஸ்திரம் அர்ஜுனன் மகுடத்தை வீழ்த்தி விட்டுச் சென்றது; தலைக்கு வந்தது தலைப்பாகையோடு
போனது என்பார்களே, அப்படித் தப்பித்தான் அர்ஜுனன்.

பிரச்னைகளைக் கண்டு பகவான் கண்ணன் மலைக்கவில்லை. அந்த நொடிப்பொழுதின் தீவிரத்தை உணர்ந்து செயல்பட்டார். அதனால்தான்
அந்த யுத்தத்தைப் பாண்டவர் பக்கம் வென்று கொடுத்தார்.

இப்படி சமயோசிதமாகச் செயல்படும் பாங்கு, ஒவ்வொரு நொடியையும்
உள்நோக்கி ரசித்து வாழும் அன்பர்களுக்கே உரித்தானது. `இந்த நொடியில் வாழுங்கள்’ என்றே ஞானநூல்கள் பலவும் வழிகாட்டுகின்றன.
அப்படி வாழும் அன்பர்களே நொடிப்பொழுதில் முடிவெடுக்கும்
ஆளுமை மிக்கவர்கள் ஆவார்கள்.

(படித்தது ….!!!)

.
…………………………………………………..

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to காலமும் – சமயோசிதமும் ….!!!

  1. sparklemindss's avatar sparklemindss சொல்கிறார்:

    Very good thoughts and examples on Mindfulness!

    thank you

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.