கடவுள் என்பவன் – கவிஞர் கண்ணதாசன் பார்வையில் …!!!

…………………………………..

…………………………………..

  • கடவுள் என்பவன் ஆகாயத்தின் மேலிருந்து
    மனிதனை ஆட்டி வைப்பான்;
  • மனிதன் ஆட்டம் கொஞ்சம் அதிகமானால்
    அடக்கியும் வைப்பான்
  • பூலோகத்தில் வாழும்போது
    புகழையும் கொடுப்பான்;
    பின்னர் புகழுக்காக வாழும்போது
    புரட்டியும் எடுப்பான்.
  • பூவிலே கொஞ்சம் தேனை வைப்பான்;
    அங்கே தேன் வைத்ததை தேனீக்கும் சொல்வான்;
    பின்னர் அந்தத் தேனடை இருப்பதை
    மனிதனுக்கும் சொல்வான்.
  • கேட்கும் திறனை கூர்மையாக எலிக்கு வைப்பான்;
    அந்த எலியே கேட்க முடியாமல் நடக்கும்
    பாதங்களை பூனைக்கும் வைப்பான்.
  • ஓடும் திறனை கூட்டுகின்ற கால்களை
    மானுக்குக் கொடுப்பான்; பின்னர்
    அந்த மானை பிடிக்கின்ற சக்தியை புலிக்கும் கொடுப்பான்.
  • அற்புதமாய் சிந்திக்கின்ற ஆறறிவைக் கொடுப்பான்;
    அதை முழுதும் பயன்படுத்தாத மனிதர்களையும் படைப்பான்.
  • தவம் பல செய்தால் (மனிதன்) கேட்பதைக் கொடுப்பான்;
    அவனே தறிகெட்டு நடந்தால் கொடுத்ததைப் பறிப்பான்.
  • நாட்டை ஆள விட்டு அழகு பார்ப்பான்;
    அவனே கொள்ளையடித்தால்
    கொடுத்தவன், தானே பிடுங்கவும் செய்வான்.
    (இங்கே தான் கொஞ்சம் பிசறுகிறது …. இல்லையா ..!!! )

  • புரியாதவனுக்கு புதிராய் இருப்பான்; தன்னைப்
    புரிந்தவனுக்கு அறிவாய் இருப்பான்.
  • கடல் முழுதும் தண்ணீரை வைப்பான்;
    தாகம் எடுத்தால் தவிக்கவும் வைப்பான்.

  • மாளிகையில் வாழ்பவன் ஆயுளை
    அற்பமாய் முடியச் செய்வான்;
    சாலையோரம் வாழ்பவனை நூறாண்டு வாழ வைப்பான்.

-தன்னை வெளியே தேடினால்
விளையாட்டுக் காட்டுவான்;
உள்ளத்தின் உள்ளே தேடினால் ஓடி வந்து நிற்பான்.

.
……………………………………………

( கீழே – வளர்பிறை திரைப்படத்திற்காக எழுதியது …!!! )

பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

தென்னை இளநீருக்குள்ளே
தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே
தேங்காயை போல் இருப்பான் ஒருவன்
அவனை தெரிந்து கொண்டால்
அவன் தான் இறைவன்

முற்றும் கசந்ததென்று
பற்றறுத்து வந்தவருக்கு
சுற்றமென நின்றிருப்பான் ஒருவன்
அவனை தொடர்ந்து சென்றால்
அவன் தான் இறைவன்

கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன்
அந்த ஏழையின் பேர்
உலகில் இறைவன்

பூஜ்யத்துக்குள்ளே ஒரு
ராஜ்யத்தை ஆண்டு கொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

அவனை புரிந்து கொண்டால்
அவன்தான் இறைவன்

.

………………………………………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.