`ஜெகன் மோகனா… சந்திர பாபுவா?’ – குழப்பத்தில் பாஜக…..! சுவாரஸ்யமான ஆந்திர அரசியல் … !!!

…………………………………………

………………………………………….

ஆந்திர அரசியல் பற்றி ஒரு சுவாரஸ்யமான அரசியல் கட்டுரையை
வெளியிட்டிருக்கிறது விகடன்…. அதிலிருந்து கொஞ்சம் கீழே –

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான
தெலுங்கு தேசம் கட்சிக்கு பா.ஜ.க-வின் கதவுகள் நிரந்தரமாக
மூடப்படுகின்றன என்று ஐந்தாண்டுகளுக்கு முன்பு அறிவித்தார்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

ஆனால், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, அதே அமித் ஷாவின் வீட்டுக்கதவுகள்
சந்திரபாபு நாயுடுவுக்காகத் திறந்திருந்தன. கடந்த வாரம் (பிப். 7)
அமித் ஷாவைச் சந்தித்தார் சந்திரபாபு நாயுடு.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், கூட்டணிப் பேச்சுவார்த்தையில்
அரசியல் கட்சிகள் படு பிஸியாக இருக்கின்றன. அந்த வகையில்தான்,
அமித் ஷா – சந்திரபாபு நாயுடு சந்திப்பு நிகழ்ந்தது.

சமீபத்தில், முறைகேடு வழக்கு ஒன்றில் சந்திரபாபு நாயுடுவை கைது செய்து
சிறையில் அடைத்தது ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு.
ஜாமீனில் அவர் வெளியே வந்தார். மீண்டும் ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று தீவிரம் காட்டிவரும் சந்திரபாபு நாயுடு, பா.ஜ.க-வுடன்
கூட்டணி சேர்ந்தால்தான், தனது கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று நினைக்கிறார்.

ஆனால், சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி சேர பா.ஜ.க-வுக்கு சில உள்ளூர்
தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். அதையொட்டித்தான், சில
மாதங்களுக்கு முன்பு, ஆந்திர மாநில பா.ஜ.க தலைவராக இருந்த சோம வீரஜு மாற்றப்பட்டு, பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராக மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் மகள் புரந்தரேஸ்வதி நியமிக்கப்பட்டார். என்.டி.ராமராவின் இன்னொரு மகள்தான் சந்திரபாபு நாயுடுவின் மனைவி என்பது
குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு தேசம் கட்சியைவிட, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேருவதில்தான், பா.ஜ.க-வுக்கு கூடுதல் விருப்பம். ஜெகனும் பா.ஜ.க-வுடன் இணக்கமாகவே இருந்துவருகிறார். அவர், என்.டிஏ கூட்டணியில் இல்லாவிட்டாலும் மத்திய அரசுக்கு பல மசோதாக்களை நிறைவேற்றுவதில் தொடர்ந்து ஆதரவு அளித்துவருகிறார். ஆனால், கூட்டணி என்ற பேச்சை மட்டும் அவர் விரும்பவில்லை.

மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பதால், ஜெகன் மீதான வழக்குகளை
மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
அவரது வீட்டுக்கு அமலாக்கத்துறை அனுப்பப்படுவதில்லை. இதுதான்
அவர்களின் டீல். ஆனால், கூட்டணிக்கு மட்டும் வந்துவிடாதீர்கள்
என்கிறார் ஜெகன்.

ஏனென்றால், பா.ஜ.க-வுடன் கூட்டணி என்று போய்விட்டால், சிறுபான்மை
வாக்குகளை அவர் இழக்க வேண்டியிருக்கும். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸின்
எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். ஒரு கட்டத்தில், ஒய்.எஸ்.ஆர்.
காங்கிரஸையே பா.ஜ.க விழுங்கக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று
ஜெகன் அஞ்சுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

எனவே, ஜெகன்மோகன் ரெட்டி சரிப்பட்டு வரமாட்டார் என்ற ஏமாற்றத்துடன்,
சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைப்பதற்கான பேச்சுவார்த்தையில்
பா.ஜ.க இறங்கியிருக்கிறது.

மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்க வட மாநிலங்களில் கிடைக்கும் வெற்றியே
போதும் என்று பா.ஜ.க நினைத்தாலும், கடந்த தேர்தலைக் காட்டிலும் கூடுதல் இடங்களில் இந்த முறை வெற்றிபெற வேண்டும் என்று பா.ஜ.க தலைவர்கள் விரும்புகிறார்கள். குறிப்பாக, 370 இடங்களில் வெற்றிபெறுவோம் என்று
பிரதமர் மோடி நாடாளுமன்றத்திலேயே அறிவித்திருக்கிறார்.

அப்படியென்றால், கடந்த முறை பெற்ற இடங்களைவிட (303), கூடுதலாக 67 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற வேண்டும். வடமாநிலங்களை மட்டுமே நம்பியிருந்தால், அத்தனை தொகுதிகள் கிடைக்காது. எனவே, தென்
மாநிலங்களில் கூடுதலாக வெற்றிபெற வேண்டும் என்று பா.ஜ.க நினைக்கிறது.

எனவேதான், எப்படியாவது அ.தி.மு.க-வை மீண்டும் தன் பிடிக்குள்
கொண்டுவந்துவிட வேண்டும் என்று பல முயற்சிகளில் பா.ஜ.க ஈடுபடுகிறது.
ஆனால், எந்தக் காலத்திலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்பதில்
எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். ஆனால், சந்திரபாபு
நாயுடுவைப் பொறுத்தளவில், அவருக்கு பா.ஜ.க-வின் தயவு தேவைப்படுகிறது. அதனால்தான், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேசிய ஜனநாயக் கூட்டணியிலிருநது 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியேறிய நாயுடு, தற்போது மீண்டும் அந்தக் கூட்டணிக்குள் சொல்ல
வேகம் காட்டுகிறார்.

கடந்த சில வாரங்களாக, தெலுங்கு தேசம், பவன் கல்யாண் தலைமையிலான
ஜன சேனா, பா.ஜ.க ஆகிய கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிவந்தன.
ஆந்திராவில் 8-10 மக்களவைத் தொகுதிகளை பா.ஜ.க கேட்பதாகவும்,
ஆனால், 4 – 5 தொகுதிகளை மட்டுமே தரமுடியும் என்பதில் தெலுங்கு தேசம்
உறுதியாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டு, மூன்று தொகுதிகள் கிடைத்தால்கூட
போதும் என்று பா.ஜ.க கணக்குப் போடுகிறதாம். இங்கே என்ன சிக்கல்
என்றால், தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக கூட்டணி சேர்ந்தால்,
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பா.ஜ.க-வையும் பகிரங்கமாக எதிர்க்கவும், விமர்சிக்கவும் தேவை ஏற்படும். அப்படியொரு சூழல் வந்தால்,
ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டுக்கு அமலாக்கத்துறை செல்லும்
என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆந்திரா அரசியல்
அதிரிபுதிரியாக மாறும்.!

.
……………………………………………………………………………………………..…………………………

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.