………………………………………………

………………………………………………..
நேற்று மாலை சன் டிவி’யில் “லால் சலாம்” இசை வெளியீட்டு
விழாவில், ரஜினி பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தேன்….
ஔவை பாணியில் சொல்ல வேண்டுமானால், அரிது அரிது
உண்மை பேசுதல் அரிது….
அதனினும் அரிது பலருக்கு பிடிக்காத
உண்மைகளைப் பேசுவது…..
அதையும்விட கடிது சமூகத்தில் புகழ்பெற்ற மனிதராக இருக்கும்
ஒருவர் தன் இமேஜை பாதிக்கக்கூடிய உண்மைகளையும் தயங்காமல்
வெட்ட வெளிச்சமாக பேசுவது….
சிறிய வயதில் தான் ஆங்கில வகுப்பில், understand என்று
சொல்வதற்கு பதிலாக underwear என்று சொல்லி விட்டதையும்,
அதை வைத்து மற்றவர்கள் தன்னை ஏளனப்படுத்தியதையும், அதனால்
பிற்காலத்தில், தான் ஆங்கிலத்தில் பேசுவதற்கே எந்த அளவுக்கு
பயப்பட்டார் என்பதையும் தானாகவே முன் வந்து சொன்னார்.
ஆனால், முக்கியமாக நான் சொல்ல வந்தது இதைப்பற்றி அல்ல….
பல ஆண்டுகளாக, இந்த தளத்தில் வலியுறுத்தி எழுதப்பட்டு வரும்
மத நல்லிணக்கத்தின் அவசியத்தை மிகத் தெளிவாகப் பேசி
விளக்கினார்…. பாமரர்களுக்கும் புரியும்படி, பல்வேறு மதங்கள்
உருவான விதத்தையும், எத்தனை மதங்கள், எத்தனை மார்க்கங்கள் / வழிகள்
இருந்தாலும் – இறுதியில் அனைத்தும் போய்ச்சேருவது அந்த
ஒருவரிடமே என்பதையும் அழகாக விளக்கினார்…. இந்த கருத்தை
ரஜினி போன்றவர்கள் சொல்லும்போது, அது பரந்து, விரிந்த தாக்கத்தை
ஏற்படுத்தும். உச்சத்தில் இருக்கும் எத்தனை நடிகர்கள் இப்படி வெளிப்படையாக பேசுகிறார்கள்….???
ரஜினிக்கு இந்த தளத்தின் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகள்.
நான் இத்தோடு இடுகையை முடித்து விட்டால், படு போராக இருக்கும்.
எனவே, ரஜினி சம்பந்தப்பட்ட ஒரு ஜோக்’கையும் இங்கே பதிவது
கொஞ்சம் சுவாரஸ்யம் தருமென்று நினைக்கிறேன்.
கொஞ்சம் பழசு தான். எனவே சிலர் ஏற்கெனவே படித்திருக்கலாம்….
இருந்தாலும் இப்போதும் ரசிக்கும்படி இருப்பதால் -கீழே …
( ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம்
செய்யப்பட்டிருக்கிறது ..!!! )
…………………………………
அமிதாப் பச்சன் ஒரு நாள் ரஜினியிடம் கேட்டார் …
” ரஜினி, புகழ்பெற்ற மனிதர்கள் பலருக்கும் உன்னைப்பற்றி தெரியும்
என்கிறார்களே – அது நிஜமா…?” ….
ரஜினி சொல்கிறார் – ” யாரையாவது பெயர் சொல்லுங்களேன்…
அவர்களுக்கு என்னைத் தெரியுமா என்று பார்க்கலாம்…”
கடுப்புடன் அமிதாப் கேட்கிறார் …”ஓகே – டாம் க்ரூஸ் எப்படி…? “
ரஜினி சொல்கிறார் -“”ஆமாம், டாமும் நானும் பழைய நண்பர்கள்,
அவருக்கு என்னைத் தெரியும்… வாருங்கள் போய் பார்க்கலாம்…
அதை என்னால் நிரூபிக்க முடியும்”
அவரது பெருமையால் சோர்வடைந்த அமிதாப், ரஜினியையும்
அழைத்துக்கொண்டு ஹாலிவுட்டுக்கு பறந்து டாம் குரூஸின்
வீட்டுக்கதவைத் தட்டுகிறார்கள்;
டாம் குரூஸ் கத்துகிறார்: — “தலைவா! உங்களை பார்க்க மகிழ்ச்சியாக
உள்ளது….! நீங்களும் உங்கள் நண்பர்களும் உடனே உள்ளே வந்து
என்னுடன் மதிய உணவிற்குச் சேருங்கள்!” …
டாம், ரஜினியால் ஈர்க்கப்பட்டது தெரிந்தாலும் ,
அமிதாப் இன்னும் சந்தேகத்துடன் இருக்கிறார்.
அவர்கள் குரூஸின் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, அவர் ரஜினியிடம்
கூறுகிறார், குரூஸ், ரஜினியை தெரிந்து வைத்திருப்பது ஜஸ்ட் ரஜினியின்
அதிர்ஷ்டம் தான்…
அதற்கு ரஜினி சொல்கிறார் “இல்லை, இல்லை. வேறு யாரையும்
பெயரிடுங்கள்” ..
“ஜனாதிபதி ஒபாமா…?” – அமிதாப் வினவுகிறார் …
“ஆமாம்”, “எனக்கு அவரையும் தெரியும்” என்று ரஜினி கூறுகிறார்;
அவர்கள் வெளியேறி வெள்ளை மாளிகை செல்கின்றனர்….
ஒரு சுற்றுப்பயணத்திற்காக வெளியே வந்த ஒபாமா –
“ரஜினி, என்ன ஆச்சரியம், நான் ஒரு கூட்டத்திற்குச் சென்று
கொண்டிருந்தேன்; வெளியே வந்தால் நீங்கள் –
ஆனாலும் பரவாயில்லை; நீங்களும் உங்கள் நண்பரும் உள்ளே
வாருங்கள், முதலில் ஒரு கப் காபி சாப்பிட்டு விட்டு கிளம்பலாம்…. “.
அமிதாப் பச்சன் இப்போது மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஆனால் இன்னும் முழுமையாக நம்பவில்லை. அவர்கள்
வெள்ளை மாளிகை மைதானத்தை விட்டு வெளியேறிய பிறகு,
வேறு யாரையாவது பெயரிடுமாறு ரஜினி, அமிதாப்பிடம் கேட்கிறார்.
“போப்….?” அமிதாப் பச்சன் கேட்கிறார் …
“நிச்சயமாக!” என்று ரஜினி கூறுகிறார், ” எனக்கு போப்பை நீண்ட
நாட்களாக தெரியும்”.
ரஜினியும் அமிதாப்பும் வாடிகன் சதுக்கத்தில் பொது மக்களுடன்
கலந்து நின்றிருந்தனர். இவர்களுக்கெல்லாம் மத்தியில் போப்பின்
கண்ணில் அவர்கள் படவில்லை. எனவே ரஜினி சொல்கிறார் – “எனக்கு
எல்லா காவலர்களையும் தெரியும், அதனால் என்னை மேலே செல்ல
விடுங்கள், நான் மேலே போய் விட்டு, போப்புடன் பால்கனியில் வெளியே
வருகிறேன்.” வாடிகனை நோக்கிச் செல்லும் கூட்டத்தில் ரஜினி
சென்று மறைந்தார்.
அமிதாப் மேலே பார்க்கிறார்…. சற்று நேரத்தில், பால்கனியில் போப்,
ரஜினிகாந்த் – இருவரும் சேர்ந்து கை அசைக்கிறார்கள்…!!!
பின்னர் ரஜினி கீழே இறங்கி, அமிதாப் இருந்த இடத்திற்கு திரும்ப
வந்தபோது, அமிதாப் பச்சனுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்ததையும்,
அவரை, ஒரு மெடிகல் டீம் சூழ்ந்திருந்ததையும் பார்க்கிறார்.
அமிதாப் பச்சனின் பக்கம் சென்று, ரஜினி அவரிடம், “என்ன நடந்தது?”
என்று கேட்கிறார் அமிதாப் பச்சன் எழுந்து, ரஜினியிடம் –
“நீங்களும் போப்பும் பால்கனியில் வெளியே வந்து கை அசைக்கும் வரை
நான் நன்றாகத்தான் இருந்தேன்…
ஆனால், உங்கள் இரண்டு பேரையும் பார்த்து விட்டு, என் பக்கத்திலிருந்த
ஒரு இத்தாலியர் – என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்… அவ்வளவு தான்…
நான் மயங்கி சரிந்து விட்டேன்” என்கிறார்.
உடனே ரஜினி, பச்சனிடம் – “அப்படி அவர் என்ன கேட்டு விட்டார்…” ???
அந்த இத்தாலியர் கேட்டது இவ்வளவு தான் –
“பால்கனியில், ரஜினி நிற்கிறார் … தெரிகிறது.
ஆனால், கூடவே இன்னொருவர் நிற்கிறாரே அவர் யார் …..?”
.
……………………………………………………………………………………………………………….….



Thalaivar Rajini..SIMPLY GREAT!