40 வருடங்களுக்கு முன் – அயோத்தி எப்படி இருந்தது …???

………………………………….

அயோத்தி ராமர் – சீதா

………………………………….

அயோத்தி அனுமன் காடி

………………………………………

அயோத்தி கனக பவனம்

………………………………………

சரயு நதி –

…………………………………….

அயோத்தி குறித்து 40 ஆண்டுகளுக்கு (8-4-1984) முன்பு
ஆனந்த விகடன் வாசகர் ஒருவரால் எழுதப்பட்டு, விகடனில் கவர்
ஸ்டோரியாக வெளியான கட்டுரை இது.
அதை இப்போது மீண்டும் பிரசுரித்திருக்கிறது விகடன் தளம்.
(விகடனுக்கு நன்றி சொல்லிக்கொண்டு அதை நாம் இங்கே படிக்கலாம்…)

இதனை அப்போது எழுதியவர் – திருமதி சுஜாதா கிருஷ்ணமூர்த்தி.

……………….

ஸ்ரீராமன் பிறந்த அயோத்தியை நகரம் என்பதைவிட கிராமம் என்று
கூறலாம். காசியிலிருந்து சுமார் 4 முதல் 4:30 மணி நேர பிரயாணம்,
லக்னோ நகரத்திலிருந்து இரண்டரை மணி நேர பிரயாணம்.
புண்ணிய நதியான சரயு அயோத்தியைச் சுற்றி ஓடுகிறது. இங்குள்ள
கோயில் சுவர்களில், ‘ராம் ராம்’ என்று எழுதப்படாமல் சீதாராம் என
இணைத்தே எழுதப்பட்டிருக்கிறது.

முகத்தில் பயபக்தி, நெற்றியில் பெரிய திருமண், தலையில் சிறிய சிகை,
வாய் நிறைய சீதாராம் நாம சங்கீர்த்தனம் இதுதான் அயோத்தியில் காணும் மக்களின் தோற்றம். அயோத்தியாவில் நூற்றுக்கணக்கான கோயில்கள் இருக்கின்றன. அயோத்தியா நகரமே ஸ்ரீராமரின் அடையாளங்களைக் கொண்டிருக்கிறது.

முதலில், ‘அனுமன் காடி’ எனப்படும் கோயிலை தரிசிப்போம்.
அயோத்தியையே ஆட்சி செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த
கோயிலாம் இது. சுவாமி அபய ராமதாஸ் அவர்களால் கட்டப்பட்டுள்ள
இந்தக் கோயில் ஒரு சிறிய மலையின் மீது அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்தக் கோயில் நாகர்கள் என வழங்கப்படும் சுமார் 500 சாதுக்களால் நிர்வகிக்கப்படுகிறது. யாத்திரிகர்கள் இந்தக் கோயிலுக்கு வரத்
தவறுவதில்லை. கோயிலெங்கும் வானரக் கூட்டம் அனுமனுக்குத்
துணையாக உள்ளன.

இதற்கு அருகிலேயே பத்து நிமிட நடையில் உள்ளது கனக பவனம்.
இந்தக் கோயிலின் விஸ்தாரமும் அழகும் சொல்லி முடியாது. ராமர் சீதை
லட்சுமணர் விக்ரகங்கள் சலவைக் கற்களால் ஆனவை. வெளிப்புறம்
குளத்துடன் கூடிய பெரிய தோட்டமும் உண்டு.

இந்தக் கோயில் கைகேயியால் சீதைக்கு சீதனமாக வழங்கப்பட்டதாம்.
வெளியில் உள்ள தோட்டத்தில்தான் சீதை தோழியருடன் விளையாடுவது
வழக்கமாம். இதற்கு அருகிலேயே உள்ள இடம் ஸ்ரீராமர் அவதரித்த
புண்ணிய பூமி, இதை, ‘ஸ்ரீராமஜென்ம பூமி’ என அழைக்கிறார்கள். எல்லா நற்குணங்களுக்கும் தர்மங்களுக்கும் இருப்பிடமான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி
பிறந்த புண்ணிய மண்ணில் நின்று கொண்டிருக்கிறோம் என்று நினைத்ததும்
உடல் ஒரு கணம் நடுக்கத்துடன் சிலிர்த்தது. இவ்விடத்திலேயே வாழக்
கொடுத்து வைத்தவர்கள் எவ்வளவு புண்ணியம் செய்தவர்கள்!

விக்ரமாதித்த அரசர் காலத்தில் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டு மேலே
கோயிலும் கட்டப்பட்டதாகச் சொன்னார்கள். இந்தக் கோயிலில் உள்ள
தூண்களில் காணப்படும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் சிறப்பு
மிக்கவை. இந்த இடம் ரயில் நிலையத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் அமைந்துள்ளது (அப்போதைய நிலவரம்).

முக்கியமான கோயில்களில் வரிசையில் அடுத்ததாக ஸ்ரீமணி ராமதாஸ்
சாவணியை குறிப்பிட வேண்டும். ஸ்தாபகர் மணி ராமதாஸ்ஜி மகாராஜாவின் பெயரில் வழங்கப்படுகிறது. 200 ஆண்டு காலப் பழைமை மிக்கது. இங்கு
ராம நாமத்தை ஜபிக்க வரும் சாதுக்களுக்கும் ஏழை பக்தர்களுக்கும்
தொண்டு புரிவது இந்த நிறுவனத்தின் சிறப்பு அம்சம்.

சுமார் 500 சாதுக்களுக்கு இருப்பிடம் கொடுத்து தினம் மதியம் இலவச
உணவும் வழங்கப்படுகிறது. சமையல் செய்யும் இடத்தைச் சென்று பார்த்தோம், தலையைச் சுற்றும் அளவுக்கு பூதாகரமான அடுப்புகள். மேலும் ஏழை மாணவர்களுக்கு உணவு உடை இருப்பிடம் மருத்துவ வசதி ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகிறார்கள்.

இங்கு உள்ள அனுமார் சிலை வந்த அதிசயத்தை வால்மீகி பவனத்தில்
முக்கிய பங்கு வகிக்கும் ஸ்ரீ அனந்த ராமதாஸ் கூறினார். அடியார் ஒருவர்
அனுமார் சிலை செய்து ஓர் இடத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக மாட்டு
வண்டியில் எடுத்துக்கொண்டு போனாராம். சாவணிக்கு நேராக வந்தவுடன்
வண்டி நொறுங்கி விக்ரகம் கீழே விழுந்து விட்டதாம். இதைக் கண்ட சுவாமி
மணி ராமதாஸ் அவர்கள் அந்தச் சிலையை வாங்கி சாவடியில் பிரதிஷ்டை
செய்து விட்டார். ஜாதி மத வேறுபாடு இன்றி ராம நாமத்தை சொல்லும் அடியார்களுக்கு, அன்புடன் தொண்டு புரியும் கோயிலில் ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி,
தானே வந்து குடியேறியதில் வியப்பில்லை.

சாவணியை விட்டு வெளியே வந்த நாங்கள், எதிரே கம்பீரமாக இருந்த
ஸ்ரீமத் வால்மீகி ராமாயண பவனத்திற்குள் நுழைந்தோம். இதுவும்
ஸ்ரீ மணி ராமதாஸ் சாவணி நிறுவனத்தினரால் பராமரிக்கப்படுகிறது
மகந்த் நிருத்திய கோபால் தாஸ் இதன் தலைவர். வால்மீகி பவனத்தின்
எழில் மிகு முகப்பும், சிற்பத்துண்களும் பிரமாண்டமானக் கூடமும்
சலவைக் கல்லால் ஆன வால்மீகி, லவன், குசன் ஆகிய சிலைகளையும்
காணக் கண் கோடி வேண்டும்.

இங்கு சுமார் 3,000 நபர்கள் அமர்ந்து உணவு அருந்தலாம், அவ்வளவு
பிரமாண்டமான வளாகம். வால்மீகி ராமாயணத்தின் 24,000 சுலோகங்களும்
சலவைப் பலகைகளில் பொறிக்கப்பட்டு சுவர்களை அலங்கரிக்கின்றன.
தினமும் ராமாயண பாராயணமும் பிரவசனங்களும் நடைபெறுகின்றன.
முதல் மாடியில் ஒரு பெரிய நூலகம் நிறுவியிருக்கிறார்கள். அதில்
பல்வேறு மொழிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராமாயணப்
புத்தகங்கள் இருக்கின்றன. ராமாயண ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இவ்விடம் ஒரு பெரிய வரப்பிரசாதமாகும்.

இரண்டாவது மாடியில் ராம நாம வங்கி உள்ளது. இங்கு ராம நாமத்தை
எழுதி டெபாசிட் செய்யலாம். குறைந்தபட்சம் ஒரு லட்சம் ராம நாமத்தை
டெபாசிட் செய்ய வேண்டும் என்கிறார்கள். நோட்டுப் புத்தகத்தில் ஸ்ரீராம
நாமத்தை எழுதிக் கொடுத்தால் ஏற்றுக்கொள்ளுகிறார்கள். அதற்கான
பாஸ் புத்தகமும் வழங்கப்படுகிறது. நாம் டெபாசிட் செய்யும் ராம நாமத்தை
பாஸ் புக்கில் வரவு வைத்துக் கொள்கிறார்கள். நாட்டின் பல்வேறு
மூலைகளில் இருந்தும் இந்த பேங்கிற்குத் தபால் மூலமாக டெபாசிட்டுகள் வருகின்றன. இதன் பெயர் ஸ்ரீசீதா ராம நாம பேங்க்.

கட்டுக்கட்டாய் ராம நாமங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன.
ஒரு கோடி டெபாசிட் செய்தால் ராமர் பெயர் பொறித்த தங்கமெடல்
வழங்குகிறார்கள். பேங்கின் தற்போதைய மொத்த டெபாசிட் 45 கோடியாம்!
ஜாதி மத மொழி வேறுபாடு இன்றி இவர்கள் ராம நாமத்தைப் பரப்புவதையே
முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆர்வம் உள்ளவர்கள் எந்த
மொழியில் வேண்டுமானாலும் எழுதி அனுப்பலாம். முகவரி
(ஸ்ரீ சீதா ராம நாம பேங்க், ஸ்ரீமத் வால்மீகி ராமாயண் பவன், அயோத்தியா,
PIN – 2224123 பைசாபாத், உத்தரப் பிரதேஷ்).

ராம நாம நோட்டுப் புத்தகங்கள் தவிர அந்த அறை முழுவதும் ராமர் சீதை
படங்கள் நிறைய காணப்பட்டன. அருகில் சென்று பார்த்த போது அத்தனை படங்களும் ராம நாமத்தைக் கொண்டே உருவாக்கப்பட்டிருந்தன.
பக்தியுடன் வரையப்பட்ட இத்தகைய படங்களை அலட்சியம் செய்யாமல்,
அங்கு வருபவர்களின் தரிசனத்திற்காகக் காட்சியாக வைத்திருக்கிறார்கள்.

இறுதியாகத் திறந்தவெளி மேல்மாடிக்குச் சென்றோம். அங்கு நின்றால் அயோத்தியாவின் முழுத் தோற்றத்தையும் கண்டு களிக்கலாம்.
அயோத்தியாவைச் சுற்றி ராமரது வில் போன்ற வடிவத்துடன்
ஓடிக்கொண்டிருக்கும் சரயு நதி, மனதை அப்படியே அள்ளி வாரிக்
கொண்டு போகிறது.

அடுத்தது நாங்கள் சென்றது பழைமையான ஸ்ரீநாகேஸ்வர நாதர் கோயில்.
இது சரயு நதிக்கரையில் அமைந்திருக்கிறது. இங்கு உறையும்
சிவபெருமானை தரிசிக்க அருகில் உள்ள கிராமங்களில் இருந்து வண்டி கட்டிக்கொண்டு வருகிறார்கள். சரயுவில் குளித்துவிட்டு வந்து பூஜை
செய்கிறார்கள். சிவராத்திரி அன்று கோயில் கொள்ளாத கூட்டம் வருமாம்.
சரயு நதியில் குளிக்க இடமே இருக்காதாம்.

மேற்கூறிய கோயில்களைத் தவிர பல முக்கியமான கோயில்களும் உண்டு.
ஸ்ரீராம வல்லவபா குஞ், பக்த மால், தபசிஜி கி சாவணி, மணி பர்வத்,
அஸ்வதி பவன், ஜானகி பவன், கௌசலேந்த்ர சதன், அனுமந்த நிவாஸ்,
லக்ஷ்மண கில்லா, கலே ராம மந்திர் ஆகியவை முக்கியமானவை.

ஏப்ரல் மாதம் ஸ்ரீ ராமநவமி இங்கு கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் கொண்டாடப்படுவது சரவண ஜுலா என்ற
பண்டிகை. அலங்காரம் செய்யப்பட்ட ராமர் சீதையை ஊஞ்சலில் வைத்துப்
பாட்டு நடனம் ஆகியவற்றுடன் ஊர்வலமாக அழைத்துப் போகிறார்கள்.
கார்த்திகை மாதம் வரும், பௌர்ணமியை, ‘கார்த்திக் பூர்ணிமா’ என்று
கூறுகிறார்கள். அப்போது பக்தர்கள் இங்கு ஒரு மாதம் தங்கி விரதம்
இருக்கிறார்கள். கார்த்திகை மாதக் குளிரிலும் விடியற்காலை சரயுவில்
நீராடுவதும் கார்த்திகை பூர்ணிமாவின் சிறப்பான அம்சம்.

எல்லாவற்றையும் விட மிக சுவாரசியமானது, பரிக்ரமா பண்டிகை.
சுக்லபட்ச நவமி அன்றும் ஏகாதசி அன்றும் இருமுறை கொண்டாடப்படுகிறது அப்போது அயோத்தியாவை பிரதக்சிணம் செய்கிறார்கள். விடியற்காலை
இரண்டு மணிக்கு, மக்கள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பி விடுகிறார்கள்.
வயோதிகர்கள் முதல் குழந்தைகள்வரை இந்த பிரதட்சிணத்தில் ஆர்வமுடன்
கலந்து கொள்கிறார்கள். இவர்கள் ராம நாமக் கீர்த்தனைகளை
பாடிக்கொண்டு போவது மனதை உருக்கும் ஓரு காட்சி ஆகும்.

மேலும் ஸ்ரீராம விவாகம், அனுமன் ஜயந்தி, துளசிதாச ஜயந்தி, ஜகத்குரு ஸ்ரீராமாச்சாரிய ஜயந்தி, ராமாயண மேளா, மணிப்பர்வத மேளா ஆகிய
விழாக்களும் உண்டாம். புனிதத்தில், காசி ஷேத்ரத்திற்கு இம்மியளவும்
குறையாத அயோத்தியாவில், தரிசனத்திற்குக் கணக்கில் அடங்காக்
கோயில்கள், தங்குவதற்குப் பல மடங்கள், விடுதிகள், ஸ்நானத்திற்குப்
புனித நதியான சரயு, ஜபிக்க ராம நாமம், லயிக்க நாம சங்கீர்த்தனம்
எல்லாம் இருக்கின்றன. ஆன்மிக சாந்திக்கு வேறு என்ன வேண்டும்?!


……………………………………………………………………….


இந்த கட்டுரையை 1984-ல் எழுதிய திருமதி சுஜாதா கிருஷ்ணமூர்த்தி
அவர்கள் தற்போது எழுதியிருப்பது –

……………….


இந்த கவர் ஸ்டோரியை இந்தியாவின் ஏதோ ஓரு மூலையில் இருந்து
ஆனந்த விகடனுக்கு எழுதுவேன் என்பது, நானும் என் குடும்பத்தினரும்
நினைத்து பார்க்காத ஒன்று. இதை எழுதும் போது எனது வயது 22.
அப்போது எனக்கு இந்தி தெரியாது. தனியாகச் சென்று இந்த ஸ்டோரிக்கு
வேண்டிய விவரங்களை சேகரித்து வந்தது ஓரு தனி அனுபவம்.
இந்தக் கட்டுரையைப் படித்து விட்டுப் பல அன்பர்கள், வாசகர்கள்
ராம நாம வங்கி பற்றி விசாரித்த கடிதங்கள் பலவற்றை விகடன் நிர்வாகம்
எனக்கு அனுப்பியது, நான் செய்த கொடுப்பனைதான்! ஸ்ரீ ராமர் அருளால்
இதை எழுதி, லட்ச கணக்கானவர்களை படிக்க வைத்தது, ஈரேழு
ஜன்மத்திற்கும் மறக்க முடியாத வரம். ஸ்ரீராம ஜெயம்!

.
……………………………………………………………………………………………………………………………………

.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.