………………………………………………..

………………………………………………….

…………………………………………………..
கனவிலும் நான் நினைத்துப் பார்த்ததில்லை – காஞ்சி மஹா
பெரியவரின் அரிய தரிசனம் இவ்வளவு எளிமையாக எனக்கு
கிடைக்கும் என்று …! இதற்கெல்லாம் காரணமாக இருந்தது – ‘தி இந்து’ !
அது 1990. ‘ஹிந்து’. பத்திரிகையில் ஆர்ட்டிஸ்ட் வேலைக்கு ஆட்கள் தேவை.
எப்படியாவது அந்த வேலையை எனக்கு வாங்கித் தந்துவிட வேண்டும்
என்பதில் உறுதியாக இருந்தார் என் நண்பர் விஜய் ஆனந்த். அவர்
ஹிந்துவில்தான் வேலை பார்த்தார் :
“ஜெயேந்திரர் சிபாரிசு இருந்தால்
உனக்கு வேலை உறுதி.”
“அப்படியா ?”
“ஆமா ஜான், அவ்வப்போது ஜெயேந்திரர் ஹிந்து ஆபீசுக்கு வருவார்.
ஹிந்து ராம் முதல் எல்லோரும் வரிசையில் நின்று அவரை வரவேற்பார்கள்.”
“நிஜமாவா ? “
“ஆமாம். நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். அவர் சொன்னால் கட்டாயம் ஹிந்துவில் வேலை கிடைக்கும். எப்படியாவது ஜெயேந்திரரை பிடித்து விடு.”
எப்படி பிடிப்பது ?
சைதாப்பேட்டை நண்பன் சரவணனிடம் சொன்னேன்:
“ரொம்ப ஈசி ஜான்” என்றார் :
“Y.S. ராஜ் னு எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் இருக்கார். ஜெயேந்திரருக்கு
ரொம்பவும் நெருக்கமானவர். அவர் மூலமா ஈசியா பாத்துடலாம்.”
“அவர் என்ன பண்றாரு சரவணன்…?”
“ஹரிஜன முழக்கம் னு ஒரு பத்திரிகை நடத்தறாரு.”
எனக்கு ஷாக்.
‘ஹரிஜன முழக்கம்’ செய்கிறவர் எப்படி ஜெயேந்திரருடன் நெருக்கமாக
இருக்க முடியும்…?
பேசிக் கொண்டிருக்கும்போதே அந்த Y.S. ராஜ் வந்து விட்டார்.
நான் அவரை மேலும் கீழும் பார்த்தேன். அந்தக் கால கக்கன் போல,
இந்தக் கால நல்லகண்ணு போல மிக மிக எளிமையான ஒரு தோற்றம்.
இவர் எப்படி ஜெயேந்திரருடன் நெருக்கமாக..?
Y.S. ராஜ் என் கண்களை பார்த்தே கண்டு பிடித்து விட்டார்:
“யோவ் சரவணன். உம்ம ஃபிரண்டுக்கு எம் மேல நம்பிக்கை இல்லை
போல தெரியுது.”
நான் அசடு வழிந்து சமாளித்தேன்: “அப்படியெல்லாம்…இல்ல..!”
Y.S. ராஜ் சொன்னார் :
“ஜெயேந்திர சாமி இப்போ கும்பகோணம் விசிட் போய் இருக்கார்.
வர ஒரு வாரம் ஆகும். வேணும்னா நாம கும்பகோணத்துக்கே நேர்ல போய் பார்த்துட்டு வந்துடலாமா?”
நான் கொஞ்சம் யோசித்தேன். இந்த ஹரிஜன முழக்கத்தை நம்பி எப்படி கும்பகோணம்வரை போய் காஞ்சி மடாதிபதியை சந்திக்கப் போவது… ?
சரி. எல்லோரையும் நம்புவதும் ஆபத்து.
எவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து. போய்த்தான் பார்ப்போமே !
புறப்பட்டு விட்டோம்.
கும்பகோணம் அருகில், ஏதோ ஒரு கிராமத்து அக்கிரஹாரத்தில்
தங்கி இருந்தார் ஜெயேந்திரர்.
அவரை சுற்றி பெரும் கூட்டம்.
முண்டியடித்து நெருங்கினோம் .
அத்தனை கூட்டத்திலும் ஜெயேந்திரர் இந்த ராஜை கவனித்து விட்டார்:
“என்ன Y.S.ராஜ் , சௌக்யமா?”
“சௌக்யம் சாமி.”
Y.S.ராஜ் பெருமிதத்துடன் என்னைப் பார்த்தார்.
நாங்கள் அங்கேயே அசையாமல் நின்று கொண்டிருக்க, நகர்ந்து விட்டார் ஜெயேந்திரர். கும்பல் கூடவே தொடர, அருகிலிருந்த ஒரு வீட்டுக்குள் பக்தகோடிகளுடன் நுழைந்தார்.
நான் பரபரத்தேன்: “நாம உள்ளே போவோமா?”
“கொஞ்சம்பொறுங்க. ‘அவா’ எல்லாம் பாத்து முடிக்கட்டும்.”
முடித்தார்கள். ஜெயேந்திரர் எழுந்து வெளியே வந்து விட்டார் :”என்ன ராஜ்,
ஏன் உள்ளே வரல?” அப்படியே என் பக்கம் திரும்பி,”சரி, இவர் யாரு?”
தயாராக என் கையில் வைத்திருந்த பயோடேட்டா, ஜெயேந்திரர் கைகளுக்கு
மாறியது. அதை நோட்டமிட்டபடியே, “ஹிந்துவிலயா ? ஆர்டிஸ்ட் வேலையா?”
என்னை நிமிர்ந்து பார்த்து, “பொம்மை போடுறவரா ?
என்னை நன்னா வரைவேளா !”
அவர் என்ன சொன்னாலும் சிரிப்பதெற்கென்றே அவரைச் சுற்றி நின்ற
ஒரு கூட்டம், இதற்கும் சிரித்து வைத்தது.
“ரெண்டு பேரும் சாப்டேளா? சாப்ட்டுட்டு வாங்க. பேசலாம்!”
பரிமாறினார்கள்.
பத்து நிமிடங்களில் பர பரவென்று சாப்பிட்டு விட்டு, ஜெயேந்திரர்
இருந்த வீட்டுக்குள் நுழைந்தோம்.
தன் கையில் வைத்திருந்த ‘ஹரிஜன முழக்கம்’ இதழை எடுத்து
ஜெயேந்திரரிடம் கொடுத்தார் Y.S. ராஜ்.
ஜெயேந்திரர் அதை புரட்டிக் கொண்டே, “நான் சொல்றதை எல்லாம் உங்க பத்திரிகையில அப்பப்போ எழுதிண்டு இருக்கேளா?”
“எழுதறேன் சாமி. ஏழாம் பக்கம் பாருங்க. “
ஜெயேந்திரர் தன் பக்கத்தில் நின்றவர்களைப் பார்த்தார்.
கவரோ எதுவோ, Y . S. ராஜின் கைகளுக்கு மாறியது.
ஜெயேந்திரர் என்னை நோக்கி புன்னகைத்தார்: “கவலைப்படாம போய்ட்டு
வாங்கோ. வேற ஒரு விஷயமா நான் ஹிந்துவில அவாளை சந்திக்க
வேண்டியிருக்கு. அப்போ உங்க வேலை விஷயத்தையும் சொல்லிடறேன்.”
Bio data வை பத்திரமாக மடித்து தன்னிடம் வைத்துக் கொண்டார்.
ஒரு சில நாட்களில் இண்டர்வியூ நடந்தது. அதில் கலந்து கொண்ட சிலருக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரும் வந்தது. ஆனால் எனக்கு வரவில்லை.
சோகத்துடன் Y.S. ராஜிடம் இதை சொன்னேன். நம்ப மறுத்தார்.
“வாங்க இப்போவே காஞ்சிபுரம் போவோம். சாமி அங்கே மடத்திலதான்
இருக்காரு.” காஞ்சிபுரம் போனோம்.
காஞ்சி மடத்தில் சரியான கூட்டம். அப்படி இருந்தும் ஜெயேந்திரர் எங்களை
கவனித்து விட்டார். கைகளால் கொஞ்சம் நேரம் காத்திருக்கும்படி சைகை
செய்தார். புரிந்து கொண்ட நாங்கள் , கூட்டம் குறையும்வரை காத்திருந்தோம்.
அருகில் அழைத்தார் . புன்னகைத்தார். ரகசிய குரலில் கேட்டார் :
“ஆர்டர் வந்துடுத்தா?”
‘இல்லை’ என்பதை நான் சொன்னவுடன் அவர் புன்னகை முகம்
ஏமாற்றத்தால் மாறியது. “அப்படியா ? நிச்சயமா செய்றேன்னு
ரொம்ப நம்பிக்கையா சொன்னாளே?”
Y.S. ராஜ் கொஞ்சம் உரிமைக் கோபத்தோடு, “சாமி, நீங்க சொல்லியும் …
உங்க ஆளுங்க ?”
ஜெயேந்திரர் சிறிது நேர மௌன சிந்தனைக்குப் பின், வேதனை சிரிப்போடு சொன்னார்: “நீங்க வெளியே இருந்து பிராமின்னு மட்டும் பாக்கறேள்.
இங்கே ஐயர், ஐயங்கார்னு… சரி, விடுங்கோ.
வேற வழியை பார்க்கலாம்.”
நாங்கள் விடை பெற்று வந்து விட்டோம். மடத்துக்கு வெளியே
வரும் வழியில், ஒரு மண்டபத்தின் தூண் ஒன்றின் அருகே மக்கள்
பெரும் கூட்டமாக நின்றிருந்தார்கள்.
அருகில் போய் எட்டிப் பார்த்தேன் .
ஆனந்த அதிர்ச்சி !
மஹா பெரியவர்.
கனமான மூக்கு கண்ணாடி ,
கையில் ஒரு குச்சி. ( அதற்கு தண்டமோ என்னவோ பெயர் சொல்வார்கள்)
எவரிடமும் பேசாமல் அமைதியாக தரையில் ஒரு தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்.
மஹா பெரியவரின் அந்த அரிய தரிசனம் இவ்வளவு எளிதாக கிட்டும்
என நிச்சயமாக நான் எதிர்பார்க்கவே இல்லை.
இவரைப் பற்றி எவ்வளவு உயர்வாக கேள்விப்பட்டிருக்கிறோம் ?
படித்திருக்கிறோம் ? இவர் பார்வை பட்டால் , பாவங்கள் எல்லாம் தீரும்
என்று சொல்வார்களே !
ஒரு நொடி அவர் பார்வை நம் மீது படாதா என நான் எண்ணிய,
ஏங்கிய அடுத்த வினாடி, பெரியவர் சற்றே திரும்பி நான் நின்ற திசையை
உற்று நோக்கினார்.
அவர் என்னைத்தான் பார்க்கிறாரா, வேறு எங்கும் பார்க்கிறாரா ?
தெரியவில்லை.
ஆனாலும் எனக்குள் ஏதோ ஒரு சொல்ல இயலாத பரவச உணர்வு.
பாவங்கள் எல்லாம் பொசுங்கிப் போனது போல ஒரு பாவனை.
ஏதோ ஒரு பாரம் என்னை விட்டு நீங்கியது போல ஒரு நிம்மதி.
அது பிரமையாக கூட இருக்கலாம்.
நான் வெகு நேரம் அசைவற்று நின்றேன்.
“போகலாமா ?” என்றார் Y.S.ராஜ்.
புறப்பட்டோம்.
வெகு நாட்களுக்குப் பின், இந்த சந்திப்பு சம்பவத்தை என் நண்பர்கள்
சிலரிடம் நான் பகிர்ந்து கொண்டபோது, நியாயமான கேள்வி ஒன்றை
கேட்டார்கள்: “சரி ஜான், மஹா பெரியவரை பார்த்ததாலே உனக்கு
என்ன பலன் கிடைச்சுது ?”
ஆம். உள்ளுக்குள் உயர்வதை விட, உலகியல் ரீதியான பலன்களையே
உயர்வாக நாம் எதிர்பார்க்கிறோம். இது உலக இயல்பு .
அந்த சந்திப்பு நடந்த அடுத்த சில நாட்களில் ‘கல்கி’ பத்திரிகையில்
இருந்து எனக்கு ‘லே அவுட் ஆர்ட்டிஸ்ட்’ வேலைக்கு அழைப்பு வந்தது.
எப்போதோ கல்கி அலுவலகம் போய் சீதா ரவியை ( கல்கியின் பேத்தி)
பார்த்து, விசிட்டிங் கார்ட் கொடுத்து விட்டு வந்திருந்தேன்.
இப்போது கூப்பிடுகிறார்கள்.
அடுத்த சில மாதங்கள் ‘கல்கி’ கொடுத்த ஊதியம்தான்
என் குடும்பத்துக்கு சோறு போட்டது.
சிந்தித்துப் பார்த்தேன்.
நான் மஹா பெரியவரின் பக்கத்தில் போகவும் இல்லை ;
அவரிடம் ஒரு வார்த்தை பேசவும் இல்லை; அவர் சிபாரிசு கடிதம் எதுவும்
கொடுக்கவும் இல்லை.
ஆனாலும் பெரியவர் சந்திப்புக்குப் பின்னர்தான் கல்கியில் இருந்து
என்னை அழைத்தார்கள்; ஆர்ட்டிஸ்ட் வேலை கொடுத்தார்கள்.
இந்த இரண்டு விஷயங்களுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா என
அதன் காரண காரியங்களை ஆராயும் அளவுக்கு ஆழ்ந்த அறிவு
எனக்கு இல்லை.
எனக்கு தெரிந்ததெல்லாம் –
“தெய்வம் என்றால் அது தெய்வம்
அது சிலை என்றால் வெறும் சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை.”
நம்பிக்கையே வாழ்க்கை.
ஜனவரி 8 (1994)
மஹா பெரியவர் முக்தி தினம்.
……
John Durai Asir Chelliah
……………………………….
( நன்றி – ஜான் துரை ஆசிர் செல்லையா அவர்களுக்கு….)
…………………………………………………….



[…] […]