” உனக்கும் கீழே உள்ளவர் கோடி ” …

……………………………………………….

……………………………………………….

ஒரு சிறுவனின் ஜாதகத்தை பார்த்து விட்டு, ஒரு ஜோதிடர் கணித்த
கணிப்பு இது. “நான் சொல்வதை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
இவன் ஜாதகப்படி, திரை உலகத்துக்கும் இவனுக்கும் கொஞ்சம் கூட
சம்பந்தமே கிடையாது.”

இப்படி அந்த ஜோதிடர் சொன்னதைக் கேட்டு, அந்த சிறுவனின் தாய்
கவலை அடைந்தார். ஏனென்றால் சினிமாவுக்கு போய் ஜெயித்துக் காட்டுவேன்
என்று ஒற்றைக் காலில் நின்று அடம் பிடித்தான் அவருடைய மகன்.

ஜோதிடர் சொன்ன எதிர்மறையான கருத்தைக் கேட்டு அந்தப் பையன்
வருத்தம் கொள்ளவில்லை; வைராக்கியம் கொண்டான்.

அந்த ஜோதிடரின் இடத்தில் வைத்தே அவரிடம் சவால் விட்டான்.

“ஜோதிடர் அய்யா, நல்லா கேட்டுக்கோங்க. உங்கள் ஜோதிடத்தை நான் பொய்யாக்கிக் காட்டுகிறேன். சினிமாவில் நிச்சயமாக ஜெயித்து
காட்டுகிறேன். உங்கள் கணிப்பு தப்பு என்பதை கட்டாயம் நிரூபிப்பேன்.”.

ஜோதிடரிடம் சவால் விட்டுச் சொன்னதை நிறைவேற்றியும் காட்டினான்.

அந்தச் சிறுவன்தான் பின்னாளில் பின்னணி பாடல்களில் தனி முத்திரை
பதித்த பி.பி. ஸ்ரீனிவாஸ்.

…………………………………….

பி.பி.ஸ்ரீநிவாஸ் ( 22 செப்டம்பர், 1928 – 14 ஏப்ரல், 2013) அவர்களின்
முழுப்பெயர் “பிரதிவாதி பயங்கர ஸ்ரீநிவாஸ்.
அவரது தந்தை பிரதிவாதி பயங்கர பணீந்திரசுவாமி – தாயார் சேஷகிரியம்மா;
மிக ஆசாரமான தெலுங்கு வைஷ்ணவ குடும்பம்.
தந்தை ஒரு அரசு ஊழியர். மகன் ஒரு அரசு அதிகாரியாக வேண்டுமென்று
மிகவும் விரும்பினார்.

பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள், பி.காம். பட்டதாரி. பலமொழிகளைக் கற்றவர்.
பல கலைகளையும் கூட….. கவிதைகள்/பாடல்கள் இயற்றுவார்.
ஆர்மோனியம் வாசிப்பார். அழகாக கர்நாடக சங்கீதமும் பாடுவார்.
பி.பி.ஸ்ரீநிவாஸுக்கு திரையுலகில் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தவர்
அவரது மாமா கிடாம்பி கிருஷ்ணசாமி. அவர் ஒரு நாடக நடிகர்- நல்ல
பாடகரும் கூட. சிறு வயதில், அவர் பி.பி.ஸ்ரீநிவாசுக்கு ஒரு நாடகத்தில்
பாட வாய்ப்பு கொடுத்தார்….அப்போது முதல் அவரை தொற்றிக் கொண்டது
திரையுலக ஆசை.

பையன் வளர்ந்த பிறகு, அவரது மாமா, அவரை சென்னையில் ஜெமினி ஸ்டூடியோவிற்கு அழைத்துச்சென்று, அங்கே ஏற்கெனவே பணியாற்றி வந்த வீணை வித்வான் ஏமனி சங்கர சாஸ்திரி மூலம்,

அதிபர் எஸ்.எஸ். வாசன் அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
எஸ்.எஸ்.வாசன் முன்னிலையில், பி.பி.எஸ். தனக்கு மிகவும் பிடித்த
முகமது ரஃபி அவர்களின் ஹிந்தி பாடல் ஒன்றை பாடிக்காண்பித்தார்.
“Huye Hum Jinke Liye Barbad”, தீதார் (1951)…
(நான் இந்தப் படத்தை 1953-ல் பார்த்திருக்கிறேன்… அந்த காலத்தில்,
இது எனக்கும் மிகவும் பிடித்த ரஃபி பாடல்….)

அதிலிருந்து துவங்கியது பி.பி.எஸ்ஸின் திரையுலக பயணம்.
…………….

…………………..…………….
( பி.பி. ஸ்ரீனிவாஸ் – அவர்களை நான் 3 தடவை நேரில்
பார்த்திருக்கிறேன். ஒரு நிகழ்ச்சியில் பார்வையாளராக அவரது
அருகிலேயே 3 சீட்டுகள் தள்ளி அமர்ந்து கவனித்திருக்கிறேன்.
பிற்காலங்களில் – தலையில் மைசூர் பாணி தலைப்பாகை,
சட்டை பாக்கெட்டில் -கலர் கலராக பேனாக்கள்,
மூக்குக் கண்ணாடி – இவையெல்லாம் அவரது
ட்ரேட் மார்க் அடையாளங்கள்… )
……………….

டிஎம்எஸ் கொடி உச்சத்தில் பறந்து கொண்டிருந்த காலத்திலேயே,
தனக்கென்று ஒரு தனிக்கொடியை பறக்க விட்ட தனித்துவமான
பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ்…

ஜெமினி கணேசனுக்கு அவரை விட பொருத்தமான பின்னணிக்குரல்
வேறு எதுவும் அமையவில்லை என்றே சொல்லலாம்.
(ஏ.எம்.ராஜா-வைத் தவிர….!!! )

பி.பி. ஸ்ரீனிவாஸின் சில பாடல்கள் மறக்கவே முடியாதவை ….. !

………………

………………………………………..

‘இனிமைக்கு இன்னொரு பெயர் பிபி ஸ்ரீநிவாஸ்’ என்று எல்லோரையும்
சொல்ல வைத்தார் பி பி ஸ்ரீநிவாஸ்.

சின்ன வயது ஜோதிடர் சம்பவம் பற்றி, பிற்காலத்தில் அவரிடம் கேட்டபோது, “ஜோதிடம் உண்மையோ பொய்யோ, எனக்கு தெரியாது.
ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்வேன்.

நாம் உண்ணும் ஒவ்வொரு தானியத்திலும் நம் பெயர்
எழுதியிருந்தால்தான் நாம் சாப்பிட முடியும்.
( துளசிதாசர் சொன்ன வார்த்தை அது –
“தான் தான் மே லிகா ஹை – கானே வாலே கா நாம்” ….)


அது போலத்தான் நான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் ஆண்டவன்
என் பெயரை எழுதியிக்கிறான். அதில் எனக்கு உறுதியான நம்பிக்கை
இருக்கிறது” என்று சொன்னார் பிபி ஸ்ரீநிவாஸ்.

அதனால்தான் ஏ எம் ராஜா பாட வேண்டிய ‘காலங்களில் அவள் வசந்தம்’
பாடலை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பி பி ஸ்ரீநிவாஸ் பாட வேண்டிய
சூழல் ஏற்பட்டது. அந்தப் பாடலை பாடிய பிறகு, அவரது புகழ் நினைத்தே
பார்க்க முடியாத உயரத்திற்கு சென்றது.
( வலைத்தளத்தில் படித்தவற்றையும், எனக்குத் தெரிந்தவற்றையும் சேர்த்து எழுதியது…)

.
………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.