கலெக்டர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய வழக்கு இனி என்ன ஆகும் ….. ???

………………………………………….

…………………………………………..

………………………………………….

தமிழகத்தில் செயல்படும் மணல் குவாரிகளில் கடந்த செப்டம்பர்
மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்ததாகக் கூறப்பட்டது. அதில்,

  • போலியான நடைச்சீட்டு,
  • அனுமதிக்கப்பட்ட அளவை மீறி மணல் அள்ளியது,
  • அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மணல் அள்ளியது போன்ற
    பல்வேறு விதிமீறல்கள் நடந்திருப்பதாகக் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள், கனிம வள, நீர் வளத்துறைச் சேர்ந்த சில முக்கிய அரசு அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் ஒருசில அதிகாரிகள் நடந்த தவறுகள் அனைத்தையும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்னும் ஒருசில அரசு அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை நீண்டது.

அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதிலும்,
போலியான நடைச்சீட்டு பயன்படுத்தப்பட்டதிலும்
அரசுக்குப் பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள்
மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பாக விளக்கம்
கேட்க திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்களை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பினார்கள். இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது.

அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராகத் தமிழக அரசு சார்பிலும், அந்த ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் சம்மனுக்குத் தடை விதிக்கச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், “பல்வேறு மாநிலங்களில் கனிம வளக் கொள்ளை தொடர்பாக ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் விற்பனை செய்யப்படுவதாக வரம்பு மீறி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிம வளம் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்குச் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறைக்கு அதிகாரம் கிடையாது” உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் கூறப்பட்டிருந்தன.

தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி நீதிமன்றத்தில், “அமலாக்கத்துறை சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்
தடைச் சட்டத்தில் சேர்க்கப்படாத சட்டத்தின் அடிப்படையில் விசாரணை
நடத்த முடியாது. அமலாக்கத்துறையின் நடவடிக்கை உள்நோக்கம்
கொண்டது. சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக விசாரணை
நடத்துவது மாநில அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அமலாக்கத்துறை கனிம வளக் குற்றங்கள் தொடர்பாக மாநில
அரசுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டுமே தவிர, நடவடிக்கை எடுக்க
முடியாது” என்றார்.

மேலும், “குவாரி உரிமைதாரர் செய்த தவறுக்கு அதிகாரிகளுக்குச்
சம்மன் அனுப்ப முடியுமா… யூகங்களின் அடிப்படையில் விசாரணை
நடத்த முடியாது. பல மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களைக்
கேட்டுப் பெறலாம். விசாரணைக்கு உதவும்படி கோரலாம்.
சம்மன் அனுப்ப முடியாது.

மணல் கொள்ளை பற்றி விசாரிக்க அமலாக்கத்துறைக்கு
அதிகாரமில்லை. மாநில அரசு விவகாரங்களில் தலையிடும்
வகையில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்குத் தடைவிதிக்க
வேண்டும்” என்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் பேசுகையில், “கனிம வளச் சட்டம் மட்டுமல்லாமல், இந்தியத் தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழும்
வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

சில விவரங்கள் மாநில அரசிடம் கேட்கப்பட்டன.
அவை வழங்கப்படவில்லை. 4,500 கோடி ரூபாய் சட்டவிரோதமாகப்
பணப் பரிமாற்றம் நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பான
விசாரணைக்கு உதவியாகவே விவரங்கள் கேட்கப்பட்டன. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் யாரும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கிடையாது. விசாரணைதான் நடக்கிறது” என்றார்.

மேலும், “கனிம வளச் சட்ட வழக்குகளை அமலாக்கத்துறை
விசாரிக்கவில்லை. ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறது. அந்த அதிகாரம் அமலாக்கத்துறைக்கு
இருக்கிறது. இதை மாநில அரசு தடுக்க முடியாது. ஊழல் நடைபெற்றதாகச் செயற்பொறியாளர் ஒருவர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்”
என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து வாதிட்டார்.

மேலும், அமலாக்கது துறை சார்பில் –
உயர்நீதிமன்றத்தில் –
“195.37 ஹெக்டேர் பரப்பளவில்
அனுமதிக்கப்பட்ட பகுதிக்கு மாறாக,
987.01 ஹெக்டேர் நிலப்பரப்பில் மண் அள்ளப்பட்டிருப்பதாகவும்,

4.05 லட்சம் யூனிட்டுக்கு பதில்
27.7 லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டிருப்பதாகவும்,
அதன் மூலம் 4,730 கோடி ரூபாய்
வருவாய் கிடைத்திருக்கிறது என்று புள்ளிவிவரங்களுடன்
தகவல் தெரிவித்திருக்கிறது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,
அமலாக்கத்துறை மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அனுப்பிய
சம்மனுக்குத் தடைவிதித்தும்,

  • அதேநேரத்தில், அமலாக்கத்துறை விசாரணைக்குத்
    தடை இல்லை என்றும் தெரிவித்தனர்.

நீதிமன்றம் –
அமலாக்கத்துறைக்கு ஆட்சேபனை மனு சமர்ப்பிக்கவும்,
மாவட்ட ஆட்சியர்களுக்கு விளக்கமளிக்கவும்
மூன்று வாரம் அவகாசம் வழங்கியிருக்கிறது.

வரும் டிசம்பர் 19-ம் தேதி மீண்டும் நடக்கும் விசாரணையில்
அமலாக்கத்துறை தரப்பில் சமர்ப்பிக்கப்படும் ஆட்சேபனை
மனுவைப் பொறுத்து – இந்த வழக்கின் போக்கு மொத்தமாக
மாறவும் கூட வாய்ப்பிருக்கிறது. இரண்டு தரப்பு பதில்களைப்
பொறுத்தே அடுத்தகட்ட நகர்வு இருக்கிறது…..!!!

.
……………………………………………………………………………………………………..…

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.