……………………………….

……………………………….
அமைதிப்படை …..நினைவிருக்கிறதா…???
50 வயதைக்கடந்த யாருக்கும் மணிவண்ணனை தெரியாமல்
இருக்க முடியாது…. 50 படங்கள் இயக்கியவர்… ஆனால், இயக்குநர்
என்பதை விட, நடிகராக அதிகம் புகழ்பெற்று, 400 -க்கும் அதிகமான
படங்களில் நடித்தவர்.
இயக்குநர், நடிகர் – மணிவண்ணன் என்கிற அற்புதமான மனிதர்
பற்றி சில வித்தியாசமான தகவல்கள் இங்கே…
1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும், மணிவண்ணன் தனது நடிப்பு வாழ்க்கைக்கு முன்னுரிமை அளித்தார்.
இவரது நடிப்பு வாழ்க்கையின் உச்சத்தில், இவர் நடித்த ஆறு படங்கள்
1998 ஜனவரியில் ஒரே நாளில் வெளியிடப்பட்டன என்றால் நடிகராக இவருக்கிருந்த டிமாண்டை புரிந்துகொள்ளலாம்.
மணிவண்ணன் துவக்கத்தில் இடதுசாரி கருத்துகளில் ஈடுபாடு
கொண்டிருந்தார். பின்னர், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெரும்
ஆர்வம் கொண்டிருந்தார்…. நல்ல …. நாத்திகர்.
மணிவண்ணன் குறித்தும், அவர் மறைந்த சமயத்தில், (ஜூன் 15, 2013)
நிலவிய சூழ்நிலை குறித்தும், ‘குருவை மிஞ்சிய சிஷ்யன் ‘
என்கிற தலைப்பில், எழுத்தாளர் அபராஜிதன் அவர்கள் எழுதியிருந்த
ஒரு கட்டுரையை பார்த்தேன்….
அதிலிருந்து சில பகுதிகள் மட்டும், கீழே -( அபராஜிதன் அவர்களுக்கு
நன்றியுடன்…)
……………………..
நாத்திக மணிவண்ணனின் வீடு ஆத்திகமும் கலந்துதான் இருக்கிறது..
ஒரு பக்கச் சுவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், டார்வின், காரல்மாக்ஸ், ஏங்கல்ஸ்,
தந்தை பெரியார், தம்பி பிரபாகரன் இவர்களைச் சுமந்து கொண்டு
நிற்கிறது. இதனாலேயே அந்த வீட்டுக்குள் யாரும் செருப்பு சுமந்து
நடக்கக் கூடாது என்பது விதியாம்..!
அதே சுவரின் அடுத்தப் பக்கம் தமிழகத்தில் இருக்கும் அனைத்து
சாமிகளின் புகைப்படங்களும் அணிவகுத்திருக்கின்றன..!
தன் பாதியான திருமதியாருக்கு உரிய மரியாதையும் அங்கீகாரத்தையும் கொடுத்திருக்கிறார் மணிவண்ணன்..! பக்திப் பழம் சொட்டுகிறது
வீட்டின் மற்ற பகுதிகளில்..!
மணிவண்ணனின் நடிப்பு ஸ்டைலும், பேச்சு ஸ்டைலும் வேறு யாராலும் பின்பற்ற முடியாதது …
படித்தவர்.. பல வரலாற்று நூல்களையும், அரசியல் நூல்களையும்
கரைத்துக் குடித்தவர்.. இதன் போக்கிலேயே தனது காலத்தில்
தான் நம்பிய அரசியல் கருத்துக்களை ஒளிவு மறைவில்லாமல்.. வெளிப்படையாக பேசியவர்.. ஈழம், காவிரி பிரச்சினை, தமிழ் தேசம் என்றெல்லாம் பல விஷயங்களை பேசினாலும் விஷயத்தோடு பேசியிருக்கிறார்..!
“வாங்க.. போங்க..” எந்த வயதினராக இருந்தாலும் இந்த
மரியாதையைக் கொடுக்க மணிவண்ணன் ஸார் தவறியதே இல்லை..!
சின்ன வயது கேமிராமேனாக இருந்தால்கூட அவர்களை தம்பிகளா
இப்படி வாங்க.. உக்காருங்க என்று “ங்க” போட்டுத்தான்
அழைப்பார். பேசுவார்..!
அன்றைய பொழுதில் பல பிரபலங்களும் வந்து அஞ்சலியை
செலுத்திக் கொண்டிருக்க ஒரேயொரு பிரபலத்தின் வருகைக்காக
இரவு 10 மணிவரையிலும் மீடியாக்கள் காத்திருந்தன. ஆனால் அந்த
இயக்குநர் இமயம் பாரதிராஜா வரவேயில்லை. இத்தனைக்கும்
தனது சிஷ்யன் மணிவண்ணனின் இறப்புச் செய்தி அவரின் காதுக்கு எட்டியபோது, அவர் அண்ணா சாலை அருகேயுள்ள பார்சன்
காம்ப்ளக்ஸில் இருந்த தனது அலுவலகத்தில்தான் இருந்தாராம்.
மறுநாள் மணிவண்ணனின் உடல் தகனம் செய்யப்பட்ட நாளில்
தேனிக்கு பயணமாகிவிட்டாராம் தனது சீரியலின் படப்பிடிப்புக்காக..!
ஒரு குரு இந்த அளவுக்கு பிடிவாதம் பிடிக்க.. அந்த சிஷ்யன்
அப்படியென்ன தப்பு செஞ்சுட்டார்..?
நெய்வேலியில் நடந்த காவிரி பிரச்சினைக்கான ஆர்ப்பாட்டத்தின்போது தன்னைத் தவிர வேறு யாரும் அறிக்கைவிடக் கூடாது.. மீடியாக்களிடம்
பேசக் கூடாது.. தானேதான் தலைமை தாங்குவேன் என்றெல்லாம்
சொல்லி ஒட்டு மொத்தத் தமிழ்த் திரையுலகத்தினரை பாரதிராஜா டென்ஷனாக்கிக் கொண்டிருந்த நேரத்தில், ம.தி.மு.க.வில் இருந்த காரணத்தினாலும், தமிழ்ப் பற்றாளர் என்ற முறையிலும் மணிவண்ணன்
அந்தப் போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றி பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தது குருவுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை..
சிஷ்யன் தன்னை மிஞ்சிவிட்டானே என்ற கோபம் ஒரு குருவுக்கு
வரவேகூடாது.. ஆனால் இந்தக் குரு கொஞ்சம் வித்தியாசமானவர்
என்பதால் அனைத்திற்கும் கோபப்பட்டார். இந்தக் கோபத்தில்தான் மணிவண்ணன் அவரிடமிருந்து தூர தேசத்திற்கு தள்ளி வைக்கப்பட்டார்..!
அடுத்த வினை.. மணிவண்ணனின் மகள் ஜோதி திருமணத்தின்போது
நடந்தது..! அன்றைய திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுத்து
திருமணத்தை நடத்திவைக்கும் பொறுப்பு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு
சென்றது..
இதைத் தெரிந்து கொண்ட பாரதிராஜா கடும் கோபத்துடன்
கல்யாணத்துக்கு போகவே கூடாது என்றுதான் இருந்தாராம்..
கடைசியில் வரவேற்புக்கு மட்டும் வந்து தலையைக் காட்டிவிட்டு
அவசரமாக வெளியேறிவிட்டார்..!
தான் பார்த்து, தன் செலவில் கல்யாணம் செய்து வைத்தவனின் மகள் கல்யாணத்தில் தனக்கு இரண்டாமிடமா என்ற கோபம் கொப்பளித்த்து குருவுக்கு..!
ஆனால் சிஷ்யனோ “இது ஒருவகை நன்றிக் கடன்..” என்றார்.
‘கொடி பறக்குது’ படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது
வில்லன் அரசியல்வாதி கேரக்டர் யார் என்றே முடிவு செய்யாமல்
ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளையே படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
அந்தப் படத்தில் வசனம் எழுதிய கையோடு, இணை இயக்குநராகவும் பணியாற்றிக் கொண்டிருந்த மணிவண்ணனின் மாடுலேஷனை
கவனித்த ரஜினி,
“அந்த அரசியல்வாதி கேரக்டருக்கு நம்ம மணியையே நடிக்க வைச்சா
என்ன..? வசன உச்சரிப்புல பின்னுறாரே..?” என்று அழுத்தமாக சிபாரிசு செய்ய.. பாரதிராஜாவால் தட்ட முடியாத நிலையில் நடிகரானார் மணிவண்ணன்.
அதன் பின்பு அவர் சம்பாதித்த சொத்துக்கள் எல்லாம் அடுத்தடுத்த வருடங்களில் இருந்து கடைசிவரையிலும் அவர் நடித்த 400 படங்களின்
மூலமாக வந்ததுதான்..! இந்த நன்றிக் கடனுக்காகத்தான் தாலி எடுத்துக் கொடுக்கும் பாக்கியத்தை ரஜினிக்கு தந்தார்..! இதுவும் வினையானது..!
இந்தக் கதையை மீடியாக்களிடம் சொல்லி, “இதுல என்ன ஈகோ
வேண்டிக் கிடக்கு..? நான் என் நன்றியைத்தானே செலுத்தினேன்..?”
என்று மணிவண்ணன் சொன்ன பின்பு, இது பெரிதாகி பேச்சுவார்த்தை
அற்ற நிலைமைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தது..!
நெய்வேலி கூட்டத்தை புறக்கணித்து ரஜினி சென்னையில் தனியே
ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதும் பாரதிராஜாவுக்கு கடும் கோபத்தை எழுப்பியது. இதற்காகவே பல முறை ரஜினியைத் தாக்கி பாரதிராஜா அறிக்கை கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது
ஒரு முறை “கொடி பறக்குது படத்துல எல்லாம் ரஜினியை நடிக்க
வைச்சப்போ அவர் கன்னடர்ன்னு தெரியலையா..? அப்போ அவரை
வைச்சு நாம சம்பாதிச்சிட்டு… இப்போ நாம வசதியா வந்த பின்னாடி
அவர் கன்னடன்னு, தெலுங்கர்ன்னு பேசுறது பச்சை சந்தர்ப்பவாதம்..”
என்று பாரதிராஜாவுக்கு பதிலடியே கொடுத்தார் மணிவண்ணன்.
கொஞ்சம், கொஞ்சமாக தலையெடுத்துக் கொண்டிருந்த தனது சீடன்
சீமான் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்தார். சீமான் தொடர்புடன்
ஈழம், காவிரி, தமிழகம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலெல்லாம்
பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்ததும் சிஷ்யனை யார் என்று
கேட்கும் நிலைமைக்கு குருவையும் கொண்டு போனது..!
ராமேஸ்வரத்தில் தமிழ்த் திரைப்படத் துறையினர் நடத்திய
ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த
சீமானின் தம்பிமார்கள் காட்டிய ஆவேசத்தையும், எழுச்சியையும்
பார்த்து பயந்துதான் போனார் பாரதிராஜா. இது அவர் கூட்டிய
கூட்டமல்ல.. சீமான் கூட்டிய கூட்டம் என்பதுபோலாகிவிட..
குருவுக்கு சீமானைவிட அவரைத் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கும்
தனது சிஷ்யன் மணிவண்ணன் மீதுதான் கோபம் அதிகமானது..!
ஆனாலும் 4 வருடங்களுக்கு முன்னால் பாரதிராஜா தலைமையேற்று
நடத்திய ஈழப் போரின் இறுதிக் கட்ட ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் மணிவண்ணனும் கலந்து கொண்டு “புலி நம்ம தேசிய விலங்கு..
அதை ஆதரிக்க வேண்டியது நமது கடமை.. தம்பி பிரபாகரன்
நம்ம அண்ணன் மாதிரி.. அவரும் ஒரு புலிதான்.. அப்போ அவரையும்
ஆதரிக்க வேண்டியது நம்ம கடமை..” என்றெல்லாம் முழங்கி
விட்டுத்தான் சென்றார்..!
அடுத்தடுத்த கூட்டங்களில் இவருக்கு அழைப்பு இல்லாவிட்டாலும்கூட இன்னொரு பக்கம் சீமானின் மேடைகளில் ஈழத்திற்காக தொண்டை
கிழிய பேசி தனது நேரத்தை செலவிட்டவர் இந்த இயக்குநர்..!
உள்ளொன்று வைத்து பிறிதொன்றை பேசத் தெரியாத அவருடைய
குணம் மட்டும்தான், கடைசியில் அவருக்கு பெரிய மன பாரத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்..!
அதே கூட்டத்தில்தான் தன்னை இயக்குநராக்கியது இசைஞானி இளையராஜாதான் என்று அழுத்தமாக பதிவு செய்திருந்தார்
மணிவண்ணன்.
‘ஜோதி’ என்றொரு படத்தை மோகன், அம்பிகா நடிப்பில் உருவாக்கி
அது பாதியிலேயே நின்று போன நிலைமையில் தவித்துக் கொண்டிருந்த மணிவண்ணனை கலைமணியிடம் அறிமுகப்படுத்தி வைத்து,
“இவரை வைச்சு படமெடு. நான் உடனே மியூஸிக் போட்டுத் தரேன்..”
என்று இளையராஜா வாக்குறுதி அளிக்க, கலைமணியின் தயாரிப்பில் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தை இயக்கி பெரும்
வெற்றி பெற்றார் மணிவண்ணன்.
இந்த நன்றியையும் இசைஞானிக்கு இவர் தெரிவிக்க..
போதாதா குருவுக்கு..?! இதற்குப் பிறகு ‘ஜோதி’யையும் முடித்து
வெளியிட்டார். இந்த பாதிப்பில்தான் தன்னுடைய முதல் குழந்தைக்கு
‘ஜோதி’ என்றே பெயரிட்டாராம்..!
.
………………………………………………



……
……………..