கோவில் பணம் தண்டச்சோற்று தடிராமன்களுக்கா …???நமக்கு சமூகப் பொறுப்பில்லையா…..???

……………………………………..

……………………………………

…………………………………..

இரண்டு நாட்களுக்கு முன், ஒரு செய்தி படித்தேன்.
நீண்ட நேரம் மனதை என்னென்னவோ செய்தது….

25 வயதுள்ள 5 மாத கர்ப்பிணி மனைவி, 2 வயது பெண் குழந்தை
ஆகியோரை தவிக்க விட்டு விட்டு,
சுமார் 30 வயதுள்ள கணவன் திடீரென்று மாரடைப்பில்
இறந்து விடுகிறான்….

கையிலொரு பெண் குழந்தை, வயிற்றிலொரு குழந்தை
ஆகியோரை வைத்துக்கொண்டு, கணவனை திடீரென்று இழந்த
சோகமும் சேர்ந்து அந்தப்பெண்ணை துக்கமும், சோகமும்,
எதிர்காலம் பற்றிய பயமும் வதைக்கிறது….

எதிர்காலத்தை சந்திக்க துணிவில்லாத அந்தப்பெண்,
தன் 2 வயது பெண் குழந்தையையும் புடைவைத்தலைப்பால்,
வயிற்றுடன் இணைத்து கட்டிக்கொண்டு, ஆள் நடமாட்டம் இல்லாத
இடத்திலிருந்த ஒரு கிணத்தில் குதித்து தற்கொலை
செய்து கொள்கிறாள்.

என்ன கொடுமை இது…. இந்த சமூகத்தின் மீது அவளுக்கு
நம்பிக்கை இருந்தால், எதிர்காலத்தைப்பற்றிய அச்சம் இல்லாமல்
இருந்தால் அந்தப்பெண் இப்படிப்பட்ட ஒரு முடிவை
தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பாளா….?

இந்த முடிவினை எட்டும் முன்னர், அவள் மனம் என்ன பாடு
பட்டிருக்கும்…???

இந்தப்பெண்ணின் மரணத்துக்கு ஒருவிதத்தில் –
இந்த சமுதாயமும், நாமும் கூட காரணம் அல்லவா …???

………………

தமிழ் நாட்டில் 754 கோவில்களில் தினமும் மதியம்
பக்தர்களுக்கு இலவசமாக சோறு போடப்படுகிறது
(அன்ன தானமாம்…..)

8 கோவில்களில் நாள் முழுவதும், காலை 9 மணி முதல்,
இரவு 9 மணி வரை இலவசமாக சோறு போடப்படுகிறது…
(அன்ன தானமாம்….)

நான் கேட்கிறேன் – யார் உங்களை தானம் கேட்டார்கள்….?

கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய
வருபவர்கள், எங்களுக்கு இலவசமாக சோறு போடுங்கள்
என்று யாரையாவது கேட்டார்களா ….?
பின் எதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவில் இந்த திட்டம் …..?

எங்கேயாவது ஒரு கோவிலில், காலை முதல் இரவு வரை
இருந்திருந்து பார்த்தால் புரியும். பக்தர்கள் சாப்பிடுவது
200 பேர் என்றால், தண்டச்சோற்று தடிராமன்கள் 400 பேர்….
இவர்கள் எல்லாரும் பெரும்பாலும், அதே கோவிலில்
பணிபுரிபவர்கள், அவர்களது நண்பர்கள், உறவினர்கள்,
தெருவில் வேலையின்றி சும்மா அலைபவர்கள் – ஆகியோரே.

இந்த திட்டம் ஒரு உதவாக்கரை திட்டம்.
இதில் செலவழிக்கப்படும் பணத்தில் பெரும்பாலான பங்கு,
யார் யாருக்கோ – பங்காக போகிறது.

……………

சாமி கும்பிட வருபவர்களுக்கு சாப்பாடு போடுவது முக்கியமா ..?

அல்லது

ஆதரவற்ற பெண்களுக்கும், குழந்தைகளுக்கும்
பாதுகாப்பு தந்து, அவர்களை வாழ வைப்பது முக்கியமா …?

நாம் வணங்கும் அந்த இறைவன் நாம் எதைச் செய்வதை விரும்புவார் ..?

…………

இதற்கு பதிலாக, இந்த மாதிரி பெரிய கோவில்கள்
ஒவ்வொன்றிலும், ஆதரவற்ற பெண்கள், குழந்தைகளுக்கான
ஒரு இல்லம் துவங்கப்பட வேண்டும்.

அவற்றில் மேலே சொன்னது போன்ற –
ஆதரவற்ற நிலையில் உள்ள பெண்கள், குழந்தைகள்
எத்தனை பேர் வந்தாலும், அவர்களது பின்னணியை உறுதி
செய்துகொண்டு, சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.

அவர்களுக்கு அந்த ஆதரவற்றோர் இல்லங்களில், இருக்க
பாதுகாப்பான இடமும், உணவும் கொடுத்து-
அவர்களுக்கு உரியவிதத்தில் ஆறுதலும், ஆலோசனையும்
எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கையும்
தரப்பட வேண்டும் ( கவுன்சலிங் …)

அந்த பெண்கள், ஓரளவு மனம் தேறிய பிறகு, அவர்களின்
தகுதிக்கேற்ப – கல்வியோ, தொழில் பயிற்சியோ கொடுக்கப்பட்டு,
அவர்கள் சுயமாக சம்பாதிக்க வழிவகை செய்யப்பட வேண்டும்.
அந்த இல்லங்களே, அவர்களுக்கு வேலை தேட, கிடைக்க
முயற்சி செய்யலாம்…. சிறிய அளவில் வியாபாரம் செய்ய விரும்பும்
பெண்களுக்கு அந்த வகையிலும் உதவலாம்.

அந்த பெண்களுக்கே தன்னம்பிக்கை வந்து, சம்பாதிக்கும் திறனும்
இருந்தால், அவர்களை வெளியே தனியே வசிக்க அனுப்பலாம்.

தமிழகத்தில், கணவனை, தந்தையை இழந்த எந்தவொரு பெண்ணுக்கும் – தனக்கு எதிர்காலமே இல்லை; வாழ்க்கையே முடிந்து விட்டது
என்கிற பயம் தோன்றவே கூடாது.

இந்த சமுதாயம் தன்னை கைவிடாது என்கிற நம்பிக்கை –
இங்கே ஒவ்வொரு பெண்ணுக்கும் மனதில் இருக்க வேண்டும்.
இதற்கு திருக்கோயில்கள் பொறுப்பேற்க வேண்டும்.

இத்தகைய ஆதரவற்றோர் இல்லங்களை, அடிப்படையில்,
அந்தந்த கோவில் நிதிவளங்களின் மூலம் நிர்வகிக்கலாம்.
தனியே நன்கொடைகளும் பெறப்படலாம்.
கோவிலுக்கு சொந்தமான இடங்களை இந்த இல்லங்களை
அமைக்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
அந்தந்த கோவில்களின் – இறைவன்/இறைவியின் பெயரையே
அந்த ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வைக்கலாம்.

இங்கே ஒரு முக்கியமான விஷயம் கவனத்தில் கொள்ளப்பட
வேண்டும்…. இந்த இல்லங்கள், பாதுகாப்பாகவும்,
நம்பிக்கை தரும் விதத்திலும் செயல்பட வேண்டுமானால்,
இவற்றின் நிர்வாகம் முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தமே
இல்லாத, அரசியல் ஆர்வமோ, அபிலாக்ஷைகளோ சற்றும் இல்லாத –

உள்ளூர் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான,
பெரியவர்களின் நிர்வாகத்தில்/பொறுப்பில் இவை செயல்பட
வேண்டும். இவ்வாறு உதவுவதில் ஆர்வமுள்ள சில பெண்களையும்
நிர்வாகத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த யோசனையை நானும் சிலருக்கு அனுப்புவேன்.
இன்றில்லா விட்டாலும், நாளையாவது – உரிய நேரத்தில் –
இது யோசனை சரியான நபர்களின் பார்வைக்கு
போகுமென்று நம்புகிறேன்…. இதனை படிக்கும் நண்பர்களும்
இதுகுறித்து யோசிக்கலாம்…..செயல்படலாம்.

.
………………………………………………………………………………………………………………….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to கோவில் பணம் தண்டச்சோற்று தடிராமன்களுக்கா …???நமக்கு சமூகப் பொறுப்பில்லையா…..???

  1. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    //சாமி கும்பிட வருபவர்களுக்கு சாப்பாடு போடுவது முக்கியமா ..?

    அல்லது

    ஆதரவற்ற பெண்களுக்கும், குழந்தைகளுக்கும்
    பாதுகாப்பு தந்து, அவர்களை வாழ வைப்பது முக்கியமா …?//

    நங்கநல்லூர் அனுமார் கோவில் ஆரம்பித்த பிறகு, அங்கு பக்தர்களுக்கு நிறைய பிரசாதம் தரும் முறை இருந்தது. காஞ்சி மஹாப்பெரியவா, கோவிலில் இதனை நடைமுறைப்படுத்தியவரிடம், பிரசாதம் என்பது மிகச் சிறிய அளவி கொடுக்கவேண்டும், அதிகமாகக் கொடுக்கக்கூடாது அது அன்னதானமாகிவிடும் என்றார். பிறகு ஒருநாள் சில பக்தர்கள், கோவில் in-chargeஐ அணுகி, தயிர்சாதம் தருவதோடு ஊறுகாய் கொடுத்தால் நல்லாருக்கும், புளியோதரைக்கு சிப்ஸ் கொடுத்தால் நல்லா இருக்கும் என்று சொன்னபோதுதான் காஞ்சி மஹாப்பெரியவா சொன்னதன் அர்த்தம் அவருக்குப் புரிந்ததாம்.

    நீங்கள் சரியான டாபிக்கை எடுத்திருக்கிறீர்கள். கோவில்களில் அன்னதானம் என்பது சுத்த ஹம்பக், பணத்தை எடுத்துக்கொள்ளும் வழி. 90 சதத்திற்கு மேல், தேவையில்லாதவர்களுக்குச் செல்கிறது அந்தப் பணத்தின் மதிப்பு. கோவில் சொத்து, கோவில்களுக்கு மாத்திரமே செலவழிக்கப்படவேண்டுமே தவிர கட்சிக்காரர்களின் இன்னோவாக்களுக்கல்ல. கோவிலுக்கான நிலங்கள் 1 ரூபாய் 2 ரூபாய் என்று குத்தகைக்குக் கொடுத்துக் கொள்ளையடிக்கப்படுகின்றன.

    கோவில் பணம் கோவிலுக்கு மாத்திரம்தான் செலவழிக்கப்படவேண்டும். அதிகமான பணம் வந்தால் (அதனை பிற வருமானமில்லாத கோவில்களுக்குச்) மற்ற கோவில்களுக்குச் செலவழிக்கலாம் (அதே ஆகமம், அதே நடைமுறை உள்ள கோவில்களுக்கு).

    ஒரு தேர்தலுக்குக் கோடி கோடியாகச் செலவழிப்பவர்கள் (எம்.பி. எலெக்‌ஷனுக்கு 50 கோடி மினிமமாம்), இந்த மாதிரி ஏழ்மையானவர்களுக்கு ஆதரவு தரவில்லையே என்று வெட்கப்படவேண்டும். ஆதரவற்றவர்களுக்கு, ஏழைகளுக்கு கோவிலில் ஊழியம் தரப்படவேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.