……………………………..

……………………………..
கீழே – முதலில் இருப்பவை – என் கருத்து –
அதன் பிறகு கீழே இருப்பவை, பிரபல எழுத்தாளர்
பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரை.
…………
என் கருத்து –
சனாதனம் என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது,
ஜாதி முறைகளைத் தான்… ஜாதி உயர்வு, தாழ்வை ஒழிக்க வேண்டும்
என்று நேரிடையாக சொல்வதை விட்டு விட்டு, எதை எதையோ
இந்து மதத்திற்கு எதிராக ஏன் இவர்கள் சொல்ல வேண்டும்…..
…………
சனாதன தர்மத்தில், காலங்காலமாக –
சமூகத்தேவை ஏற்படும்போதெல்லாம், சீர்திருத்தங்கள்
கொண்டு வரப்பட்டிருக்கின்றன….
( ஒழிக்கப்பட்டு விடவில்லை…!!! ) என்பதை –
- சனாதனத்தை ஒழிக்க புறப்பட்டிருக்கும் புத்திர சிகாமணி
வயதிலும், அறிவிலும் – குறைந்தவர் என்பதால், அவரது
கவனத்திற்காக கீழ்க்கண்ட செய்திகள் தரப்படுகின்றன ….
1) உடன் கட்டை ஏறுதலை ஒழித்தவர் – ராஜாராம் மோகன்ராய் –
மற்றும் ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் வில்லியம் பெண்டிங் பிரபு….
வருடம் -1829 – இந்த திராவிட சிகாமணிகள் உதித்ததற்கு
100 ஆண்டுகளுக்கு முன்னரே…..
2) இந்து விதவைகள் மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது
1856-ல் – கல்வியாளர் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
அவர்களின் தீவிர முயற்சியால் ….வெள்ளையர் ஆட்சிக்காலத்தில்.
கொண்டு வந்தது டல்ஹவுசி பிரபு….
இதுவும் திராவிட சிகாமணிகள் உதித்ததற்கு 60-70 ஆண்டுகளுக்கு
முன்னரே….
3) தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது –
9 அக்டோபர் 1947 அன்று… இதை முதன் முதலில் சட்டசபையில்
1930 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி, இது நிறைவேற அரும்பாடு
பட்டவர் டாக்டர் முத்துலட்சுமி என்கிற பிராமணப் பெண்மணி.
4) பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்க சட்டம் கொண்டு
வரப்பட்டது “இந்து வாரிசு சட்டம், 1956” ஜவஹர்லால் நேருவின்
ஆட்சிக்காலத்தில் ….
5) ஒரு இந்து ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்துகொள்வதை
தடுக்க, இரண்டு திருமண தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது
ஜவஹர்லால் நேருவின் காலத்தில் – 18.5.1955 அன்று…
ஒரு ஆண் இந்துவுக்கு ஒரு மனைவிதான் என்றும் அதை மீறி
இரண்டாவது திருமணம் செய்தால் 7ஆண்டுகள் வரை கடுங்காவல்
சிறைத் தண்டனை மற்றும் அபராதம் என்றும் சட்டம் தடுத்தது.
“சின்னவீடு” வைத்துக் கொள்வது கூட விவாகரத்துக்கு ஒரு காரணம்
ஆக்கப்பட்டது.
( ஆனாலும், சிலரது தாத்தாக்கள், இதிலும்
சந்து, பொந்துகளைக் கண்டு பிடித்து தங்கள் விருப்பத்தை
நிறைவேற்றிக் கொண்டார்கள் என்பது வேறு கதை…!!!)
குழந்தை திருமணங்களையும் இந்த சட்டம் அடியோடு
தடுத்து நிறுத்தியது. திருமணம் செய்து கொள்ள ஆணுக்கு 18 வயதும்
பெண்ணுக்கு 15 வயதும் நிரம்பி இருக்க வேண்டும் என்று
நிர்ணயிக்கப்பட்டது. (பின்னர் 1978-ம் ஆண்டு வயது வரம்பு
ஆணுக்கு 21, பெண்ணுக்கு 18 என்று உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது)
………….
மீண்டும் துவக்கத்திற்கு வருகிறேன் –
ஜாதிகளை ஒழிக்கவேண்டும் என்று நிஜமாகவே
இந்த சிகாமணிகள் நினைத்தால் அதற்கு – மிகச்சுலபமான வழி –
- ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் இவர்கள் நாளையே ஒரு ஜி.ஓ.
வெளியிடலாம்….. - இனி, எந்த பள்ளியிலும், கல்லூரியிலும், தொழிற்சாலைகளிலும்,
வர்த்தக நிறுவனங்களிலும், ஜாதி பற்றிய விவரங்கள் எதுவும்
கேட்கக்கூடாது. - ஜாதி பற்றிய எந்தவித தகவல்களையும், தங்கள் ஆவணங்களில்
வைத்திருக்கக் கூடாது; - ஜாதி சங்கங்கள் அனைத்தின் அங்கீகாரங்களும் உடனடியாக
ரத்து செய்யப்படுகின்றன…. - இனி, பொதுவெளியில், பொதுமேடைகளில்,
அரசியல் கூட்டங்களில் – ஜாதி பற்றி பேசினால், அது சட்ட விரோதம்
என்று கருதப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்….. - எந்த டீக்கடைகளிலும், ஓட்டல்களிலும், இரட்டை டம்ளர் முறை
கடைபிடிப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக கடைக்கு
சீல் வைக்கப்படும். வியாபார லைசென்சு ரத்து செய்யப்படும். - சுடுகாடுகளில், இடுகாடுகளில் – அனைத்து ஜாதியினருக்கும்
ஒரே இடம் தான்….
இதைச் செய்வதற்கு, மாநில அரசுக்கு உரிய அதிகாரங்கள் ஏற்கெனவே
இருக்கின்றன…. அதைச் செய்வதை விட்டு விட்டு –
அரசின் மீது மக்களுக்கு பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கும்
- எதிர்ப்பை திசை திருப்ப
புத்திர சிகாமணி சனாதனத்தை துணைக்கு கூப்பிடுவானேன்.
………………………………………………………………………………………………………..…………
என் கருத்து மேலே முடிந்தது ….
இனி, கீழே இருப்பது திரு.பி.ஏ.கிருஷ்ணனின் கட்டுரை –
………………………………………………………………………..…..
சனாதனம் என்ற சொல்லுக்கு, பல விளக்கங்கள் இருக்கின்றன.
சனாதனத்தை ஆதரிப்பவர்கள் அளிக்கும் விளக்கத்திற்கும்,
அதை எதிர்ப்பவர்கள் அளிக்கும் விளக்கத்திற்கும் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. ஏற்பவர்கள் மத்தியிலும் ஏகப்பட்ட வித்தியாசங்கள்.
மஹாத்மா காந்தி தன்னை சனாதனி என்று அழைத்துக் கொண்டார்;
பல மதத் தலைவர்களும் தங்களை அவ்வாறு அழைத்துக் கொண்டனர்.
இவர்களின் அணுகுமுறைகளுக்கு இடையே இருந்த இடைவெளி
மிகவும் அதிகம்.
சுருக்கமாக சொல்லப்போனால், சனாதனம் என்ற சொல்லை,
காலத்தை கடந்தது என்று மொழி பெயர்க்கலாம்.
அதாவது காலத்தால் அழிக்க முடியாதது;
அதன் கொள்கைகள் மாறாத்தன்மை கொண்டவை என்று பொருள்.
மாறாத்தன்மை கொண்டவை என்பதை, கல்லில் அடித்தவை போல
மாறாதவை என்ற பொருளைக் கொள்ளக்கூடாது.
இதற்கு ஓர் உதாரணம் சொல்லப்போனால், சனாதனம்என்பது
மிகப் பழைய கத்தி போன்றது. அதன் பிடிகள், சில முறை மாற்றப்பட்டு இருக்கின்றன. அதன் உலோகப் பகுதி துருப்பிடிக்கும் போதெல்லாம்,
சாணை பிடிக்கப்பட்டிருக்கிறது.
வர்ணாசிரமம் என்பது, துாக்கி எறியப்பட்ட பழைய பிடி.
அதை பா.ஜ., உட்பட எந்த அரசியல் கட்சியும் துாக்கிப் பிடிப்பதில்லை.
ஜாதி என்பது, அதற்கு பதிலாக வந்த பிடி; அதை தி.மு.க., உட்பட
எல்லா கட்சியும் துாக்கிப் பிடிக்கின்றன.
சமீபத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு என்று ஒன்று நடந்தது.
அம்மாநாட்டில், உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள், பெருத்த
சர்ச்சைக்கு உள்ளாகாமல் இருந்திருந்தால், இப்படி ஒரு மாநாடு
நடந்தது என்பதே, மக்களுக்கு தெரியாமல் போயிருந்திருக்கும்.
இதை முன்னின்று நடத்தியவர்கள், கம்யூனிஸ்டுகள்.
இவர்களுக்கு, சனாதனம் என்பது ஒரு வலுவான கருத்து.
மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த வலுவான கருத்தையும்,
மனிதன் இருக்கும் வரை ஒழிக்க முடியாது என்ற அடிப்படை கூட
புரியவில்லை என்பது, வியப்பாக இருக்கிறது.
நாஜி சித்தாந்தத்தின் அடிப்படையில் நடந்த ஹிட்லரின் ஆட்சி ஒழிந்து,
80 ஆண்டுகள் ஆகப் போகின்றன. ஆனால், இன்றளவும் அந்த சித்தாந்தம் பேசப்படுகிறது.
சனாதன ஒழிப்பு மாநாட்டின் தீர்மானங்களை படித்தேன்.
மொத்தம், 12 தீர்மானங்கள்:
………..
அவற்றில் சில…
● ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் இருக்கும் மனுவின் சிலை
அகற்றப்பட வேண்டும்
● அரசு அலுவலகங்களில் மதச்சார்பின்மையை
கடைப்பிடிக்க வேண்டும்
● அரசு அலுவலகத்தில் உள்ள எந்த வழிப்பாட்டு இடத்தையும்
அரசு நிர்வகிக்க கூடாது
● அமைச்சர்களும், அரசு அலுவலர்களும் மதம் சார்ந்த,
ஜாதி சார்ந்த நிகழ்வுகளில் பங்கெடுக்க கூடாது.
● பொது சுடுகாடு எல்லா ஊர்களிலும் வேண்டும்.
● கலப்பு திருமணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு
கட்டணமில்லா கல்வியும், வேலைவாய்ப்பில் முன்னுரிமையும்
வேண்டும்.
இவை அனைத்தும் நடந்தால் எனக்கு மகிழ்ச்சி தான்;
மக்களில் பலரும் மகிழ்ச்சி அடைவர். ஆனால், எந்த அரசும்
இவற்றை செயலாக்க முயற்சிகள் எடுக்கும் என்று தோன்றவில்லை.
காரணம், எளிமையானது. இவற்றில் எதுவும், அரசியல் கட்சிகளுக்கு
கிடைக்கும் ஓட்டுகளை பெரிதளவில் பாதிக்காது.
இனி கம்யூனிஸ்ட் இயக்கம் லும்பன் வர்த்தகத்தின் பிடியில்
சிக்கித் தவிக்கிறது என்பதற்கு சான்றாக, மற்றைய தீர்மானங்கள்,
கணபதி ஹோமத்திலிருந்து, பூப்புனித நீராட்டு விழா வரை
தீட்டை குறித்த தீர்மானங்கள்…
இச்சடங்குகள் அனைத்தும்,பார்ப்பனிய சடங்குகளாம்;
எனவே அகற்றப்பட வேண்டுமாம்.
தீட்டு, பார்ப்பனியத்திற்கு மட்டும் சொந்தமானது என்று நினைப்போர், அறிவார்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். இவர்களில் சிலர்,
தங்களைக் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்கின்றனர்
என்று ஆச்சரியமாக இருக்கிறது.
மரணம், மாதவிடாய், இறந்த மிருகங்களை சாப்பிடுதல் போன்றவை,
உலகெங்கும் ஆப்ரிக்கா, சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற
பல கலாசாரங்களிலும் தீட்டாக அறியப்படுகின்றன. புதுமனை
புகுவதிலும், பலதரப்பட்ட சடங்குகள் உலகெங்கும்
கடைப்பிடிக்கப்படுகின்றன.
தீட்டு என்பது எல்லா மதங்களுக்கும் பொதுவானது.
உதாரணமாக இவை பைபிள் சொல்வன: –
லேவியரில், அசுத்தமான காட்டு விலங்கின் உடலையோ,
அசுத்தமான நாட்டு விலங்கின் உடலையோ,
அசுத்தமான ஊரும் பிராணிகளின் உடலையோ,
இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன்
அறியாமல் தொட்டால், அவன் தீட்டும், குற்றமும் உள்ளவனாவான்.
(எண்ணிக்கை) மனிதப் பிணத்தைத் தொடுபவன் எவனும்,
ஏழு நாட்களுக்குத் தீட்டுப்பட்டிருப்பான்.
இதே போன்று கணக்கற்ற இஸ்லாமிய ஹதீசுகளை
என்னால் மேற்கோள் காட்ட முடியும்.
தீட்டை ஒழிப்பதையும், சனாதனம் என்று இவர்கள் நினைத்துக்
கொண்டிருப்பதை ஒழிப்பதையும் ஒன்றாக நினைத்து, இதுபோன்ற
தீர்மானங்களை நிறைவேற்றுவது வேடிக்கை தான்.
ஹிந்து மதத்தில் தீட்டைக் குறித்த சடங்குகள் அதிகம் என்பதை
நான் மறுக்கவில்லை. ஆனால், அவை சமூகத்தால்
கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
நகர் மயமாதல் நடக்கும் போது, அவை மாறுதல்கள் அடைகின்றன.
இவர்கள் ஒன்றை மறந்து விட்டனர்… தமிழகத்திலிருந்து பிராமணர்கள்
தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். குறிப்பாக, சடங்குகளை நடத்தும் பிராமணர்கள்.
இன்னும் சில, 10 ஆண்டுகளில் –
இவர்களைத் தேடுவோரின் எண்ணிக்கை கூடுமே தவிர குறையாது.
சடங்குகளை தீர்மானிப்பவர்கள் சாதாரண மக்கள்;
எழுத்தாளர்களோ, கலைஞர்களோ அல்ல.
இன்னொரு விசித்திரமான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
பார்ப்பனச் சடங்குகளுக்கு மாற்றாக, புதிய பண்பாட்டு வாழ்க்கை
நெறிகளையும், கொண்டாட்டங்களையும் உருவாக்குவதற்கு
தமிழர் பண்பாட்டில் தோய்ந்த வல்லுனர் குழு அமைக்கப்பட வேண்டும்
என்று அத்தீர்மானம் சொல்கிறது.
தமிழர்களின் சடங்குகளில் உள்ளூர் மரபுகளையோ, ஜாதியையோ
கருத்தில் எடுத்துக் கொள்ளாத சடங்கு ஏதாவது இருக்கிறதா?
மேலும், மக்களிடமிருந்து பிறப்பது, சடங்கு;
குழு அமைத்து மக்கள் மீது திணிக்கப்படுவதல்ல…..!
இவர்களால் நிறைவேற்ற வேண்டிய ஆனால்,
- நிறைவேற்றப்படாத முக்கியமான தீர்மானங்கள் இரண்டு.
ஜாதிகள் ஒழிய அரசு தீவிர முயற்சி எடுக்க வேண்டியதை
வலியுறுத்தும் தீர்மானம் மற்றும் அதற்கான செயல்முறைகள்
என்னென்ன என்பதை அரசிற்கு பகிர்ந்துரைக்கும் தீர்மானம்.
இவை இரண்டும் நிறைவேற்றப்படவில்லை.
இவர்களுக்கு ஜாதியத்தை ஒழிப்பதில் உள்ளார்ந்த நம்பிக்கை
இல்லை என்பதைத் தான் மக்களுக்குத் தெளிவாகுகிறது
என்பதே உண்மை!
(நன்றி- எழுத்தாளர் – பி.ஏ.கிருஷ்ணன்)
.
…………………………………………….



அய்யா நாம எவ்வளதான் சொன்னாலும் இதை இந்த செம்மறியாட்டு மந்தைக்கூட்டம் நம்பாதே… நம்மள பாஜகன்னு தான் சொல்லுவாங்க