…… விதி 370 ….!!!

…………………………………………………

…………………………………………………

ஆர்டிகிள் 370 நீக்கப்பட்டு, கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு,
அதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும்,
தொகுக்கப்பட்டு, தற்போது சுப்ரீம் கோர்ட் முன்பாக விவாதத்திற்கு
எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன….

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் டி.ஒய். சந்திர சூட் அவர்களின்
தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச்
இவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது…. இந்த வழக்கு
லைவ்’ஆக சுப்ரீம் கோர்ட் வெப்சைட்டில் பார்க்க கிடைக்கிறது…..

இதன் முடிவு எதுவாக இருக்குமென்பதை இப்போது எந்தவிதத்திலும்,
உறுதியாக சொல்ல இயலாது என்றாலும், தொடர்ந்து நடக்கும்
இரு தரப்பு விவாதங்கள், நீதிபதிகளின் குறுக்கு கேள்விகள்,
அவர்கள் இடையிடையே தெரிவிக்கும் கருத்துகள்
ஆகியவற்றைப் பார்க்கும்போது, காற்று எந்த திசை நோக்கி
வீசுகிறது என்பதை ஓரளவு யூகிக்க முடிகிறது….

இந்த நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்னதாக விதி 370 நீக்கப்படும்
நேரத்தில், விமரிசனம் தளத்தில் வெளிவந்த இடுகையொன்றை, இங்கு
வாசக நண்பர்களின் கவனத்திற்கு கொண்டு வருவது பயனுள்ளதாக
இருக்குமென்று நம்புகிறேன்.

………………………………………..

370-வது பிரிவு – நீக்கப்படுவதை வரவேற்போம்…
Posted on ஆகஸ்ட் 5, 2019
by vimarisanam – kavirimainthan

மிகுந்த சஸ்பென்ஸுடன் இருந்த காஷ்மீர் பற்றிய
அறிவிப்பு ஒருவழியாக இன்று வெளிவந்து விட்டது.

‘‘ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்
370-வது சட்டப்பிரிவை ரத்து செய்வது என மத்திய அமைச்சவை
முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா தாக்கல் செய்யப்டுகிறது’’
என்று பாராளுமன்றத்தில், உள்துறை அமைச்சர் திரு.அமீத் ஷா
அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.

பாஜக அரசு எடுத்துள்ள முடிவு என்பதாலேயே இதை எதிர்க்க
வேண்டிய அவசியமில்லை என்பது என் கருத்து.

இந்த நாட்டின் பொதுநலனை கருத்தில் கொண்டு பார்த்தாலும்
சரி – காஷ்மீர் மாநில மக்களின் நலனாக இருந்தாலும் சரி –
இது ஒரு வரவேற்கத்தக்க, நல்ல முடிவே.

கடந்த 70 ஆண்டுகளாக இது ஒரு முள்ளாகவே நமது
தொண்டையில் உறுத்திக்கொண்டிருந்தது.

அரசியல்வாதிகள் அல்லாத –
காஷ்மீர் தரை நிலவரம் புரிந்தவர்கள்
இதை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்.

நான் கடந்த முறை காஷ்மீர் சென்றபோது –
குறிப்பாக பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள்,
ஓட்டல்களில் பணிபுரிபவர்கள் என்று
பல தரப்பட்ட மக்களிடம் பேசிக்கொண்டிருந்தேன்…. அவர்களில்
பெரும்பாலானவர்களுக்கு – இந்தியா மீதோ,
இந்தியாவின் இதர மாநில மக்களின் மீதோ எந்தவித விரோதமோ,
எதிர்ப்போ இல்லை என்பதை என்னால் உணர முடிந்தது.

அவர்களின் முக்கியமான பிரச்சினைகள் – வேலையின்மை…
பிள்ளைகளுக்கு நல்ல உயர்கல்வி கிடைக்காமை., வறுமை
ஆகியவை தான்.

அவர்களிடையே, இந்தியா மீதான விரோத மனப்பான்மையை
சுயநல அரசியல்வாதிகளும், பாகிஸ்தான் ஆதரவு
மனப்பான்மையுள்ள சிலரும் மட்டுமே ஊதிப்பெரிதாக்கி
வளர்த்து ஆதாயம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தங்களது சுயநலத்திற்காக –
காஷ்மீரத்து சாதாரண அப்பாவி மக்களை,
தொடர்ந்து வறுமையில் வாடவும்,
கல்வியறிவோ, வேலைவாய்ப்போ கிடைக்காமலும்,
புதிய தொழில்களோ, தொழிற்சாலைகளோ
அங்கு வந்து விடாமலும் செய்து அவர்களை
அல்லாட விட்டுக் கொண்டிருந்தார்கள்.

மனதளவில் சாதாரண காஷ்மீர் மக்களிடையே
இந்த இணைப்பிற்கு பெரிய அளவில்
எதிர்ப்பு இருக்க வாய்ப்பில்லை.
ஆனால், சூழ்நிலை காரணமாக அவர்கள் தங்களது
மன ஓட்டத்தை வெளிப்படையாக தெரிவிக்கவும்
மாட்டார்கள்.

துவக்கத்திலேயே தற்காலிகமான ஏற்பாடு என்று சொல்லப்பட்ட
இந்தப் பிரிவு நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே விலக்கிக்
கொண்டிருக்கப்பட வேண்டும். இப்போது கோடாலி கொண்டு
பிளந்தெடுக்க வேண்டியிருக்கிறது.

அப்போது இந்த சட்டப்பிரிவை கொண்டு வந்த நேருஜியை
நான் குறை கூற மாட்டேன்…. அப்போதிருந்த சூழ்நிலை வேறு.
ஆனால், குறைந்த ஆண்டுகளிலேயே இது விலக்கிக்
கொண்டிருக்கப்பட வேண்டும்…..

எப்படி இருந்தாலும் சரி… இந்த மசோதா பாராளுமன்றத்தின்
இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு விடும் சூழ்நிலையே
காணப்படுகிறது.

காஷ்மீர் மக்களை இந்த நாட்டின் இதர மக்களுடன் சேர்ந்து
விடாமல் தடுத்து வந்ததன் மூலம் – காஷ்மீரைச் சேர்ந்த
இரண்டு-மூன்று பெரிய அரசியல் குடும்பங்கள் மட்டுமே
இதனால் தொடர்ந்து ஆதாயம் பெற்று வந்தன என்பது உண்மையே.
அவர்கள் இதை தொடர்ந்து எதிர்க்கவும் செய்வார்கள்.

தொடர்ந்து பாகிஸ்தான் நம்மை ப்ளாக்மெயில் செய்யவும்,
தீர்க்கப்படாத காஷ்மீர் பிரச்சினை அவர்களுக்கு உதவி வந்தது.

—————————–

எதிர்க்கட்சிகள் நிச்சயமாக இதை வரவேற்காது.
எனவே, புதிய சட்டம் அமலுக்கு வருவதையோட்டி,
துவக்க காலங்களில் நிறைய சட்டம் ஒழுங்கு
பிரச்சினைகள் ஏற்படலாம்.

மத்திய அரசு மிக நியாயமாகவும், நிதானமாகவும்,
பொறுமையுடனும் செயல்பட்டு, காஷ்மீரின் சாதாரண
பொதுமக்களுக்கு பிரச்சினைகள் இல்லாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும்,
அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது.

இந்த மசோதா குறித்து, விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய
விஷயங்கள் இன்னும் இருக்கின்றன. நிதானமாகச் செய்வோம்.

உணர்வுபூர்வமாக பாதிப்புகளும், உளைச்சல்களும் இருந்தாலும்
கூட – எதிர்காலத்தில், காஷ்மீர் மக்களுக்கு இதனால் நிச்சயம்
நன்மையே உண்டாகும் என்று நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

எனவே, இந்த மாற்றத்தை வரவேற்போம்…
நமது சகோதரர்களாக காஷ்மீர் மக்களை அரவணைத்து
ஏற்றுக்கொள்வோம்.

.
————————————————————————————————————-

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.