…
…

…
– நாளுக்கு நாள் மாறும் தமிழக அரசின் அறிவிப்புகள்….
உத்திரவு ஒன்று –
‘தமிழகத்திலுள்ள அனைத்து மணல் குவாரிகளையும் அரசே ஏற்று
நடத்தும், அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆற்று மணல்
எடுப்பதற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படும்’
உத்திரவு இரண்டு –
தமிழக மக்களுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தமிழக அரசே மணல் குவாரிகளை ஏற்று நடத்துகிறது.
இப்போது 28 மணல் குவாரிகள் மூலமாக ஒரு நாளைக்கு 5 ஆயிரம் லோடு மணல் பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறை மூலம் வழங்கப்படும்…
உத்திரவு மூன்று –
மணல் தேவையை பூர்த்தி செய்ய, இன்னும் 70 இடங்களில்
புதிதாக மணல் குவாரிகள் திறக்கப்படும்.
இந்த மாற்றங்கள் – மக்களின் மணல் தேவையை பூர்த்தி செய்யவா
அல்லது எம்.எல்.ஏ.க்கள், மணல் காண்டிராக்டர்களின் கொள்ளை ஆசையை நிறைவேற்றவா…?
மக்களின் தேவையை பூர்த்தி செய்ய என்றால் மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை வெளியே எடுத்துச்செல்ல தமிழக அரசு தடை விதித்தது ஏன்…? சொல்லப்படும் காரணங்கள்
நியாயமானவையா…? திருப்தி அளிக்கக்கூடியவையா ..?
“அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும். தமிழ்நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்ய –
வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்வதற்குண்டான வழிவகைகளை, விதிகளை முறையாக வகுத்து விரைவில் அறிவிக்க வேண்டும்…..”
தட்டிக்கேட்க ஆளில்லாததால் தான்தோன்றித்தனமாக செயல்படுபவர்களை மண்டையில் குட்டுவது போல், தகுந்த சமயத்தில் தலையிட்டிருக்கும் மதுரை உயர்நீதிமன்ற உத்திரவை மனதார வரவேற்போம்.
– தமிழக அரசு நிச்சயமாக உடனடியாக, இதை எதிர்த்து, சென்னை
உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யும்…
உயர்நீதிமன்றத்திற்கு தமிழக மக்களின் சார்பில் ஒரே ஒரு வேண்டுகோள் –
இன்று மதுரை கிளையால் இடப்பட்ட உத்திரவிற்கு
ஒரே ஒரு திருத்தம் மட்டும் தேவை.
“அடுத்த 6 மாதங்களுக்குள் மூடப்பட வேண்டும்”
என்பதற்கு பதிலாக,
“உடனடியாக மூடப்பட வேண்டும்” என்று
ஒரு சிறு திருத்தம் மட்டும் அறிவிக்கப்பட்டால் போதுமானது.
தமிழக மக்கள் அனைவரும் நிம்மதி கொள்வார்கள்….
உயர்நீதிமன்றம் இருக்கும் திசையை நோக்கி,
நன்றியுடன் கும்பிடு போடுவார்கள்…!!!



உத்திரவு ஒரு விதத்தில் வரவேற்க தக்கது — இருந்தாலும் இந்த கட்டுமான துறை என்று ஒன்று இருக்கிறது — அதை நம்பி பல லட்ச தினக்கூலி தொழிலாள குடும்பங்கள் இருக்கின்றன என்பதை கருத்தில் கொள்ளாமல் ஒரு உத்திரவு என்பது — வேதனை அளிக்க கூடியது — மணல் கிடைக்க மாற்று வழி ஏற்படுத்தாமல் — தொடர் கட்டுமான வேலைகள் நடக்க ஆவண செய்யாமல் — உத்திரவு என்பது ஏற்புடையதா ….
செல்லா நோட்டு பிரச்சனையில் இருந்தே மிகவும் பாதிக்கப்பட்ட கட்டுமான துறை மேலும் பாதிப்புக்கு உள்ளாகும் — 3 யூனிட் மணல் ரூ 10000 க்கு கிடைத்து வந்த நிலையில் ஜெயலலிதா இறப்புக்கு பின் படிப்படியாக உயர்ந்து தற்போது 3 யூனிட் ரூ. 32000 -ல் மாதத்திற்கு இரண்டு லோடுகளாவது கிடைத்து வந்தது — வாரத்தில் இரண்டு – மூன்று நாட்களுக்காவது வேலை வாய்ப்பு பெற்ற தொழிலார்கள் இப்போது அதற்கும் வழியில்லாமல் ஊற்றி மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதை வருத்தமுடன் கூறியே ஆக வேண்டும் ….
தனியார் கட்டுமானங்கள் மட்டுமின்றி — அரசு சார்ந்த கட்டுமானங்களும் பாதிக்கும் நிலை ஏற்படும் … தவிர அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் கேரளாவுக்கு இங்கிருந்து சென்ற { கடத்தி } மணல் தற்போது நிறுத்தப்பட்டாலும் — ” மணல் கொள்ளையர்கள் ” எந்த விதத்திலாவது திருடி அண்டை மாநிலங்களுக்கு கடத்துவதும் — இங்கே அதிக விலைக்கு விற்கவும் வழிகோலும் என்பதை மறுக்க முடியாது — ஆட்டம் கண்டுள்ள ரியல் எஸ்டேட் முழுவதும் முடங்கும் அபாயம் கண்டிப்பாக ஏற்படும் … இனி நிறைய மணல் கொள்ளைகள் நடக்க ஆரம்பிக்கும். ஏற்கனவே பெரிய கொள்ளையாக இருக்கும் மணலை திருடும் மாபியாக்கள் இன்னும் பெரிய அளவில் மறைமுகமாக கொள்ளையடிப்பது கன ஜோராக நடக்கும் …..அரசும் — நீதி துறையும் ஒரு இடைக்கால நடவடிக்கை உடனே எடுத்தால் பல ” பட்டினி சாவுகளை ” தடுக்கலாம் — இல்லையேல் ….
மத்திய அரசு கூறுவதைப்போல ” வறுமையின் காரணமாக பிச்சை எடுப்பதில் ” தவறில்லை — குற்றமில்லை — என்பதை கடைபிடிக்க வேண்டிய நிலை பல லட்சம் பேர்களுக்கு ஏற்படும் — அப்படியேற்பட்டால் — அதையே காரணமாக கொண்டு சட்டமாக்க எளிதான வழி கிடைக்குமல்லவா …. ?
// செல்லா நோட்டு பிரச்சனையில் இருந்தே மிகவும் பாதிக்கப்பட்ட கட்டுமான துறை மேலும் பாதிப்புக்கு உள்ளாகும்… //
இந்த ஆட்சிகளில், மேலும் கீழும், இருப்பவர்கள் யாரும் சிந்திக்கவே மாட்டார்களா?
ஆற்று மணலுக்கு மாற்றாக ஏற்கெனவே “M.Sand” அறிமுகத்திற்கு வந்து பல இடங்களில் பயன்படுத்தவும் துவங்கி விட்டார்கள். எனவே, இறக்குமதி மூலமாகவும், M.Sand பயன்பாட்டை அதிகரிப்பதன் மூலமாகவும்,
இந்த பிரச்சினையின் தீவிரத்தை தற்காலிகமாக குறைக்க முடியும்.
ஏற்கெனவே தமிழக ஆறுகள் அனைத்தும் சுரண்டப்பட்டு, அதல பாதாளத்திற்கு போய் விட்டதாலும், மணல் மாஃபியாக்களின் கொள்ளைகளாலும் தான் அரசின் மீது யாருக்கும் நம்பிக்கை இல்லாமல் போய் விட்டது. குவாரி முறை முற்றிலுமாக வெறுக்கப்படுகிறது.
நியாயமான முறையில், ஒழுங்கு விதிகளை கடுமையாக கடைபிடித்து மணல் குவாரிகளை நிர்வகித்திருந்தால், இந்த பிரச்சினையே ஏற்பட்டிருக்காது.
மணல் குவாரிகளை நிர்வகிப்பதை நேர்மையான சுற்றுப்புற சூழல் ஆர்வலர்கள், சம்பந்தப்பட்ட இடங்களின் கிராம மக்கள் ஆகியோர் கொண்ட கமிட்டியிடம் விடப்பட்டாலும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
ஆற்று மணலுக்கு மாற்றாக எம்.சாண்ட் { கருங்கல் தூள் — குவாரி டஸ்ட் } என்பது நடைமுறையில் இருக்கிறது — தமிழகத்தில் எம்.சாண்ட் தயாரிப்பு நிறுவங்கள் 120 இருக்கின்றன — இவைகளும் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு தயாரிக்க முடிவதில்லை இந்த 120 -லும் — 50 க்கு மேற்பட்டவை தரமற்றதை தயாரிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன — தரமானதா என்று கண்டறிய : —
எம்-சாண்ட் இரண்டு வகையில் ஆய்வு செய்யப்படுகிறது. சாதாரண ஆய்வுக்கு ரூ.2 ஆயிரம் கட்டணம். இந்த ஆய்வில் சல்லடை ஆய்வு (Sieve Analysis), நுண்ணிய துகள்கள் ஆய்வு (Fine Particles Analysis), வடிவம் குறித்த ஆய்வு (Shape Analysis) ஆகியன அடங்கும். இந்த ஆய்வு முடிவு ஒரே நாளில் கிடைத்துவிடும்.
விரிவான ஆய்வுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் கட்டணம். இந்த ஆய்வில், இந்திய தர நிர்ணய அமைப்பின் வரையறையின்படி அதாவது IS 383: 2016 என்ற குறியீட்டின்படி உறுதித்தன்மை, தண்ணீர் உறிஞ்சும் தன்மை, குளோரைடு மற்றும் சல்பேட் அளவு உள்பட 12 வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். விரிவான ஆய்வு முடிவுகள் கிடைக்க ஒரு மாதம் வரை ஆகும். .. தற்போது தான் தமிழக அரசு கனிம நிறுவனம் மூலம் { அக்டொபர் 02 — 2017 } ஆய்வை அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ள கூறியுள்ளது — முதகட்டமாக வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே சுமார் 50 ஹெக்டர் நிலம் தேர்வு செய்துள்ளார்கள் . இதில், எம்.சாண்ட் தயாரிப்பதற்கான ஆய்வு பணிகளை விரைவில் தொடங்கஇருக்கிறார்கள் ….. அரசு எம்.சாண்ட் குவாரிகளை அமைத்து குறிப்பிட்ட விலைக்கு மக்களுக்கு கொடுத்தால் தான் ஓரளவு கட்டுமான துறை தப்பிக்கும் ….
தற்போது தனியார்கள் ரூ. 60 — 70 க்கு ஓரு கன அடி எம்.சாண்ட் விற்கிறார்கள் — அதுவும் தொடர்ச்சியாக கிடைப்பதில்லை … இறக்குமதி மணல் என்பதும் — மாபியாக்களிடம் சிக்காமல் இருக்குமா என்பதே கேள்விக்குறி — அவர்களது விருப்பம்போல விலையை வைப்பார்கள் — இதையெல்லாம் கட்டுப்படுத்த அரசு நிர்வாகம் — மக்கள் நலனில் அக்கறையுள்ள அமைப்புகளை ஏற்படுத்தினால் தான் உண்டு — இல்லையேல் மீண்டும் ” கபளீகரம் தான் ” ….
ஆறுகளை காப்பாற்றவும் — மணல் பற்றாக்குறையை போக்கவும் அரசு ஒரு தீவிர நடவடிக்கை உடனடியா எடுக்க வேண்டும் — அடுக்கு மாடி கட்டுபவர்கள் — மஹா கட்டுமானங்கள் போன்றவற்றிற்கு ” எம். சாண்ட் ” மற்றும் இறக்குமதி மணல் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் — மக்கள் தங்கள் இருப்பிடங்கள் இரண்டு மாடிகளுக்கு அதிமானால் அவர்களும் எம்.சாண்ட் போன்றவற்றை தான் உபயோகிக்க வேண்டும் என்றும் ஒரு அவசர சட்டமே கொண்டு வந்து முறைப்படுத்தினால் — இயற்கையை காப்பாற்ற முடியுமல்லவா …. ?