இதுவும் தமிழகத்தில் தான் நடக்கிறது…. சத்தமே இல்லாமல்…!!!





நம்மிடையே மீடியாக்களின் ஊடுருவல் / தாக்கம் (influence .. )
அளவு கடந்து போய் விட்டது. நாம் எதைப்பார்க்க வேண்டும்,
எதைக்கேட்க வேண்டும், எதை பயன்படுத்த வேண்டும்
என்பதில் துவங்கி இன்று எதைப்பற்றி சிந்திக்க வேண்டும்,
எப்படிச் சிந்திக்க வேண்டும் என்கிற நிலை வரையில் கொண்டு
போய் விட்டு விட்டது.

ஏழு கோடி மக்கள் வாழும் தமிழகத்தில், எங்காவது ஒரு
மூலையில் தினமும் எதாவது குற்றங்கள் – கொலை,
கொள்ளை,கற்பழிப்பு, ஜாதி மோதல்கள், விபத்துகள், அரசியல்
கட்சிகளின் போராட்டங்கள் என்று வித்தியாசமான பிரச்சினைகள்
இருக்கத்தான் செய்யும்….

ஆனால், எங்கே நெகடிவ் (எதிர்மறை) சமாச்சாரங்கள் கிடைக்கும்
என்று கழுகு போல் காத்து, பார்த்திருந்து – அதை பூதாகாரமாக்கி
திரும்ப திரும்ப தொலைகாட்சிகளில் பரவலாக, விவரமாக,
விவாதப்பொருளாக காட்டி, மக்களை எப்போதும் எதிர்மறை
சிந்தனையிலேயே வைத்து விட்டன இந்த மீடியாக்கள்.

இப்போதெல்லாம் நம்மில் பலரும் நேர்மறையாக (positive)
யோசிக்கும் பழக்கத்தையே விட்டு விட்டோம்…

நாட்டில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் நடக்கின்றன…
கற்றுக் கொள்ள வேண்டியவை, தெரிந்து கொள்ள வேண்டியவை
பின் தொடர வேண்டியவை – என்று நிறைய நல்ல செய்திகள்
இருக்கின்றன…. ஆனால், மீடியாக்கள் மக்களை அந்தப்பக்கம்
எல்லாம் போக விடாமல், காந்தம் போல் தாங்கள் காட்டும்
அவலங்களிலேயே உழல வைத்துள்ளன.

நான் என்னால் இயன்ற வரையில், இந்த வலைத்தளத்தில் –
நான் பார்க்க நேரிடும், படிக்க நேரிடும், தெரிந்து கொள்ள
நேரிடும் பல நல்ல செய்திகளை தகுந்த இடைவெளிகளில்
பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன்…. அவ்வப்போது அதை
செய்துகொண்டும் இருக்கிறேன்..

( ஆனால், தொடர்ந்து இதை மட்டுமே செய்து கொண்டிருந்தால்,
இந்த வலைத்தளத்தை நானும், நண்பர் அப்பண்ணசுவாமியும்
மட்டுமே படித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் உணர்கிறேன்.. 🙂 🙂 🙂 – அதனால் தான்… தகுந்த இடைவெளி….!!! )

இந்த இடுகையின் மூலம், நான், நமது நண்பர்களுக்கு சொல்ல
விரும்புவது – விழுப்புரம்-உளுந்தூர்பேட்டை அருகே
அமைந்துள்ள ஸ்ரீ சாரதா ஆசிரமத்தின் அற்புதமான சமூகத்
தொண்டு, செயல்பாடுகள் பற்றி –

—————————————————

அன்னை சாரதா தேவி அவர்களின் பெயரில் “ஸ்ரீ சாரதா
ஆசிரமம்” என்கிற பெயரில் இயங்கும் இந்த சமூக நல
நிறுவனத்தை நிர்வகிப்பது முற்றிலும் பெண் துறவிகளே
என்பது ஒரு வித்தியாசமான விஷயம்…

மனிதருக்கு செய்யும் சேவையே
மகேஸ்வரனுக்கு செய்யும் சேவை….

சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளில் சொல்ல
வேண்டுமானால் –

” one has to serve humanity, through that service bring happiness
around you and through that very service, elevate yourself also
morally and spiritually. If you want to do “real service”,
Renunciation must be the bedrock for service! ”

இந்த வார்த்தைகளினால் ஈர்க்கப்பட்டு – தமிழ்நாட்டின் பல
பகுதிகளையும் சேர்ந்த, உயர் கல்வித் தகுதியையும், வெளியே
பணியாற்றினால் நன்கு சம்பாதிக்கக்கூடிய திறனையும் உடைய
45 பெண்கள், தங்கள் சொந்த பந்தங்களையும், நல்ல வாழ்க்கை
வசதிகளையும் துறந்து சந்நியாச வாழ்க்கையை மேற்கொண்டு,
இந்த ஆசிரமத்தை நிர்வகித்து வருகிறார்கள்.

இவர்களில் 8 எஞ்சினீயர்களும், பல முதுகலைப்பட்டதாரிகளும்,
பல்வேறு தகுதிகளுடைய பட்டதாரிகளும் அடக்கம்.

இந்த ஆசிரமத்தின் முக்கிய நோக்கங்கள் –

கல்வி –

இதைச்சுற்றிலும் அமைந்துள்ள, ஏழ்மையான, பின் தங்கிய
கிராமங்களில் வாழும் மக்களுக்கு நல்ல கல்வியறிவும்,
ஆரோக்கியமும், உடல்நலனும், நல்ல பண்பாட்டுச் சூழலும்,
பொருளாதார உயர்வும், விவசாய முன்னேற்றமும், கிடைக்கச்
செய்வது…

ஆண்டு தோறும் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும்,
பெண்களுக்கும், படிப்பும், தொழிற்கல்வியும் கற்றுக்கொடுத்து,
அவர்களை தொழில் செய்யும் தகுதியுடன் உருவாக்குவது…

இங்கு இயங்குபவை –

ஸ்ரீ சாரதா சேவாலயா – என்னும் பிரிவு மூலம் –

எந்தவித ஆதரம் அற்ற சுமார் 150 கிராம பெண்களுக்கு,
கட்டணம் ஏதும் இல்லாமல், உணவு, உடை, தங்குமிடம்,
கல்வி, மற்றும் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.

வித்யார்த்தி ரக்ஷா யோஜனா – என்னும் பிரிவு மூலம் –

பிழைப்பிற்கு வேறு வழியின்று, பகலில் பலவிதமான
வேலைகளில் ஈடுபட்டிருக்கும், சிறுவர்களுக்கு, மாலை/இரவு
நேரங்களில் படிப்பு சொல்லிக் கொடுத்து சத்தான உணவும்
அளிக்கப்படுகிறது.

கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா – என்னும் பிரிவு மூலம்-

பள்ளிக்கூடம் பக்கமே எட்டிப்பார்த்திராத அல்லது
பாதியில் படிப்பை நிறுத்தி விட்ட வசதியற்ற கிராமத்து
பெண்கள் 100 பேருக்கு, உணவு, உறைவிடத்துடன் கூடிய
கல்விப்பயிற்சியும், தொழில்பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

தன்னலம் சிறிதுமற்ற பெண் துறவிகளின் நேரடிப்பார்வையில்,
அவர்கள் அன்பும், கருணையும் சேர்த்து ஊட்டி திறன்மிக்க
பெண்களாக உருவாக்கப்படுகிறார்கள்.

மருத்துவம் –

ஆசிரமத்தைச் சுற்றியுள்ள கிராம மக்களின் உடல்நலன் காக்க,
ஒரு நடமாடும் (mobile dispensary) மருத்துவமனையும்,

ஈசிஜி,ஸ்கேன்,எக்ஸ்ரே,மினி ஆபரேஷன் தியேட்டர் வசதிகளுடன்
கூடிய ஒரு மருத்துவ மனையும்,

புதுச்சேரி அர்விந்த் கண் மருத்துவமனையின் உதவியுடன்,
ஒரு கண்மருத்துவ மனையும் ….இயக்கப்படுகின்றன.

குடும்ப நலம் –

சுமார் 30 பேர் நிரந்தரமாக தங்கும், ஆதரவற்ற பெண்களுக்கான
ஒரு முதியோர் இல்லம்….

தேவைப்படும் கிராம மக்களுக்கு இலவசமாக சத்துணவு
அளிக்கும் ஸ்ரீ அன்னபூரணி செண்டர்…

குடும்பப் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு,
கனிவுடனும், அக்கறையுடனும், ஆலோசனை கூறி உதவவும்,
சுயவேலை வாய்ப்பு திட்டங்களின் மூலம்
அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ளவும்,

அவர்களிடையே எழுச்சியும், உற்சாகமும் ஏற்படுத்த –
கலாச்சார நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், யோகா
மற்றும் இதர பயிற்சிகள்….அளிக்கவும் – சாரதா சேவா சமிதி….

நீர் பராமரிப்பு –

மழை நீர் சேகரிப்பு முறைகளையும், பழைய குளங்கள்,
குட்டைகள், ஏரிகள், வாய்க்கால்களை மீட்டு – உயிர்ப்பித்து,
குடிநீர் மற்றும் பாசன நீர் வசதிகளை பெருக்கும் முறைகளை
விஞ்ஞானபூர்வமாக கிராமத்து மக்களுக்கு சொல்லிக் கொடுத்து,
அவர்களுடன் சேர்ந்து இயங்கி, பல நீர்நிலைகள் மீட்பது….

இவை அனைத்தையும் தாண்டி –
ஒரு மிகப்பெரிய விவசாயப்புரட்சியையே உருவாக்கிக்
கொண்டிருக்கிறது இந்த ஆசிரமம்.

இடுகை நீண்டு விட்டதால், அதுபற்றிய விவரங்களுடன்
அடுத்த இடுகையில் சந்திப்போம்….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to இதுவும் தமிழகத்தில் தான் நடக்கிறது…. சத்தமே இல்லாமல்…!!!

  1. இன்றில்லாவிட்டாலும்'s avatar இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

    மிகவும் சிறந்த ஒரு இடுகை (போதிய இடைவெளியில்). சில இடுகைகள் வெறும் வெட்டி பேச்சுக்கு தான் வழி வகுக்கிறது. அது போல இல்லாமல் நமது உள்சிந்தனைக்கு தீனி போட்டு நாள் எண்ணங்களை வளர்க்கும் இது போன்ற இடுகைகள் வரவேற்கப்படுகிறது நம் ஆழ்மனம் மூலமாக.
    இப்படி பட்ட நற்செயல்கள் பல இடங்களில் எந்நேரமும் நடந்து கொண்டே இருக்கிறது. என்ன தான் அவ்வப்போது சில தர்மங்களும் தானங்களும் செய்தலும், தினம்தோறும் தொடர்ந்து சில நற்செயல்கள் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கிறது. மிக்க நன்றி காமை ஐயா அவர்களே!

  2. இளங்கோ's avatar இளங்கோ சொல்கிறார்:

    கே.எம்.சார்,

    // ( ஆனால், தொடர்ந்து இதை மட்டுமே செய்து கொண்டிருந்தால்,
    இந்த வலைத்தளத்தை நானும், நண்பர் அப்பண்ணசுவாமியும்
    மட்டுமே படித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் உணர்கிறேன்.. 🙂 🙂 🙂 – அதனால் தான்… தகுந்த இடைவெளி….!!! ) //

    நண்பர் அப்பண்ணசுவாமி அவர்களின் பெயருக்கு அடுத்து இளங்கோவின்
    பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்களேன். 🙂

  3. B.AMARASURYA's avatar B.AMARASURYA சொல்கிறார்:

    ungal vasagan ennaiyum serthu kolungal

  4. paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

    அய்யா..! சென்னை .. திருச்சி பழைய என்.ஹெச்.சாலையில் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள சாலையாேர கிராமமான “எடைக்கல்” என்ற ஊரில் விவேகாந்தா குருகுலம் என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறு பள்ளிதான் இன்று ஆல் பாேல் தழைத்து ஸ்ரீ சாரதா ஆஸரமம் என்று அனைவரும் பாேற்றும் வகையில் வளர்ந்தள்ளது …

    ஆரம்பத்தில் இடம் வாங்கவும் .. கிணறு தாேண்டவும் … கூரைவேய்ந்த கட்டடம் உருவாகவும் அன்று இருந்த இளம் ஆண்துறவிக்கு உறுதுணையாக இருந்த உளுந்தூர்பேட்டை மற்றும் உள்ளூர் மக்களை மறக்க முடியாது … குறிப்பாக சிறு லேத் பட்டறைவைத்திருந்த நண்பரும் …பஞ்சாயத்து ஒன்றிய அலுவலகத்தில் பணியில் இருந்த நண்பரும் …முக்கிய பங்காற்றியவர்கள்….

    சாெற்ப மாணவர்களாேடு துவங்கப்பட்ட குருகுல கல்வி சாலையில் … கல்வி .. தியானம் .. யாேகா … நன்னெறி பயிற்சிகளாேடு.. விவசாயம் சார்ந்த தாேட்டக்கலை மற்றும் பலதும் கற்பிக்கப்பட்டு வந்ததால் விரைவில் பிரபலமாகி ஏழை எளிய சிறுவர்களின் பயிற்சிக்கூடமாகி … பாகுபாடு இன்றி பலரும் விரும்பி படிக்க வந்த நிலையை எட்டியது என்பது நிதர்சனம் …

    தற்பாேது பிரபலமான கல்விக்கூடமாக மட்டுமின்றி ஜீவாதார விவசாயத்திற்கும் உதவும் வகையில் தமிழ்நாட்டு பாரம்பரிய விதைகளை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கி வரும் நிறவனமாக மிளிர்கிறது … இங்கே175 வகையான நெல் விதைகள் பாதுகாக்கப்பட்டு வேண்டுவாேருக்கு அளித்து பசுமை புரட்சியையும் புரிந்து வருவதை அனைவரும் பாராட்டியே தீரவேண்டும் … வளர்க இவர்களின் தாெண்டு … மனதுக்கு இதமான ஒரு நல்ல பதிவை அளித்த தங்களுக்கு … நன்றி … தாெடருங்கள் இது பாேன்று…!!!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      செல்வராஜன்,

      நீங்கள் இந்த ஆசிரமத்தின் துவக்க காலத்தில் அந்த பக்கத்திலேயே
      வசித்தவர் என்பதால் உங்களுக்கு இதன் வளர்ச்சி குறித்து நன்றாக தெரிந்திருக்கும்.

      இந்த ஆசிரமம் மேற்கொண்டு வரும் பசுமைப்புரட்சி குறித்து, விரைவில்
      விவரமாக எழுதுகிறேன்.

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

      • paamaranselvarajan's avatar paamaranselvarajan சொல்கிறார்:

        அய்யா ..! பக்கத்து ஊரை சேர்ந்நதவன் என்பது உண்மை … இருந்தாலும் வேலை நிமித்தமாக அந்த லேத் ஒர்க் ஷாப்பற்கு செல்லும் பாேதுதான் இளம் துறவியின் அறிமுகம் கிடைத்தது …அதன் பின் என்னால் இயன்ற உதவிகளையும் …. முதல் கான்கிரீட் வகுப்பறை மற்றும் அலுவலகத்திற்கு தேவையான ” வரைப்படங்களை ” யும்
        தயாரித்தளித்தவன் என்பதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன் …. அங்கே நடக்கும் பெளர்ணமி இரவு தியானங்களிலும் பல தடவை கலந்துக் காெண்டவன் என்பதையும் நினைத்து பார்ப்பதே … ஒரு … சுகானுபவம் அல்லவா …!!!

  5. இன்றில்லாவிட்டாலும்'s avatar இன்றில்லாவிட்டாலும் சொல்கிறார்:

    செல்வராஜன் ஐயா,
    தனக்கு உண்டான கடைமைகளை செய்யாமல் ஐந்தாண்டு சாதனை, மூன்றாண்டு சாதனை என்று பெருமை பீத்திக்கொள்ளும் இந்தியாவில் இந்த நேர்பலனற்ற சிறந்த செயல்களை செய்து விட்டு அதை பெரும் பாக்கியம் என்றும் சுகானுபவம் என்றும் தன்னடக்கமாக சொல்லிக்கொள்ளும் நீங்கள் உயர்ந்த மனம் கொண்டவர். உங்களை போல சிலரை முகமே பார்க்காமல் அகத்தின் அழகை ரசிக்க வைத்த இறைவனுக்கும் காமை ஐயா அவர்களுக்கும் நன்றி!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.