…
…

….
கடந்த நவம்பரில் 500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாக்காசாக
அறிவிக்கப்பட்டதையொட்டி, இந்த வலைத்தளத்தில் பல
இடுகைகள் எழுதப்பட்டன… பலவித கருத்துகள் பரிமாறப்பட்டன.
சாதாரண மக்கள், புழங்குவதற்கு பணம் கிடைக்காமல்,
மணிக்கணக்கில், நாள்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டிய
துர்பாக்கிய நிலை இருந்தது… துன்பப்பட்டவர்களில் நானும்
ஒருவன் என்கிற முறையில் நானும் கடுமையான
விமரிசனங்களை முன்வைத்தேன்.
ஆனால், பாஜக ஆதரவு நண்பர்கள் சிலர் மிகவும் கோபப்பட்டு,
re-act செய்தனர்… சிலர் மிதமாக, தற்போதைக்கு தொல்லைகளை எதிர்கொண்டாலும், எதிர்காலத்தில் நல்ல பலன்களை உருவாக்கும் என்பதால், ஆதரிப்பதாக எழுதினார்கள்.
இறுதி புள்ளி விவரங்களைப்பற்றி பலமுறை கேள்விகள்
எழுப்பப்பட்டபோதெல்லாம், இன்னமும் எண்ணி
முடிக்கப்படவில்லை என்பது பதிலாக இருந்தது.
வேண்டுமென்றே இறுதி புள்ளி விவரங்களை வெளியிடுவது
தாமதிக்கப்பட்டதோ என்கிற ஐயம் பலருக்கு உண்டானது.
இப்போது, இறுதியாக புள்ளி விவரங்கள் வெளியாகி விட்டன…
கூடவே, கடந்த காலாண்டுக்கான GDP rate 5.7 % ஆக குறைந்தது
என்கிற செய்தியும் வெளியாகி இருக்கிறது.
நான் பொதுவாகவே பாஜகவுக்கு எதிராக எழுதி வருகிறேன்
என்கிற கருத்து சில நண்பர்களுக்கு இருந்து வருகிறது.
எனவே, இந்த முறை நான் எழுதாமல், ஒரு நடுநிலை
பத்திரிகையாளரான திரு.ஆர்.வெங்கடேஷ் அவர்கள் எழுதி,
இன்றைய தினமலர் செய்தித்தாளில் வெளியாகி இருக்கும் ஒரு
கட்டுரையை கீழே பதிவிடுகிறேன்…
இப்போது இந்த இறுதி புள்ளி விவரங்கள் எல்லாம் வெளியான
பிறகாவது பாஜக ஆதரவு நண்பர்கள், பொறுமையாக யோசித்து
நமது கருத்துகள் எந்த அளவிற்கு நேர்மையாக இருந்தன
என்பதை ஏற்றுக் கொள்வார்களா…?
————————————————————
( நன்றி – பத்திரிகையாளர் – திரு.ஆர்.வெங்கடேஷ்,
மற்றும் தினமலர் நாளிதழ்…. )
கடந்த ஆண்டு, நவ., 8ல், பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட,
500 – 1,000 ரூபாய் நோட்டுகளில், 99 சதவீத நோட்டுகள் திரும்ப
வந்து விட்டன என தெரிவித்துள்ளது, ரிசர்வ் வங்கி. கறுப்புப்
பணம், கள்ள நோட்டு ஒழிப்பு ஆகியவற்றை, முதன்மை
காரணங்களாகச் சொல்லி துவங்கப்பட்ட இந்த நடவடிக்கையால்,
என்ன பலன்?
நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவிப்பது போல்,
‘இந்தியர்களில் பெரும்பாலானோர் நாணயமானவர்கள்;
ஒரு சிலர் தான், அயோக்கியர்கள்’ என, உலக நாடுகள் கண்டு
கொண்டது, முதல் பலன்.
‘அப்பழுக்கற்ற பொருளாதாரமாக’ நம் நாடு தலை நிமிர்ந்துள்ளது,
இரண்டாவது பலன். வரி செலுத்துவோரின் எண்ணிக்கை
உயர்ந்துள்ளதோடு, முறையான சேமிப்பு முறைகளுக்குள் மக்கள்
நகர்ந்துள்ளது, மூன்றாவது பலன்.
ரொக்கப் பொருளாதாரத்திலிருந்து, ரொக்கமற்ற
பொருளாதாரத்துக்கு, ‘டிஜிட்டல் எகானமிக்’ முறைக்கு, நாம்
வெகு விரைவாக முன்னேறி உள்ளது, நான்காவது பலன்.
( இந்த கருத்தை நான் முழுவதுமாக ஏற்கவில்லை…)
யாருடைய பணம் என்றே தெரியாமல் இருந்த அனாமத்து
தொகைகளுக்கு, உரிமையாளர்கள் யார் என, வெளிப்படையாக
தெரிய வந்திருப்பது, ஐந்தாவது பலன்.
( இந்த கருத்தையும் நான் முழுவதுமாக ஏற்கவில்லை…)
ஏராளமான பணம் வங்கிகளுக்குள் வந்து கொட்டியதால்,
தனியார் வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடனுக்கான,
‘ரெப்போ’ விகிதம், படிப்படியாக குறைந்துள்ளது, ஆறாவது பலன்.
வரி வருவாய் குறைந்து வந்த நிலையில், அரசு தொடர்ச்சியாக
புதிய நோட்டுகளை அச்சடித்து வெளியிட்டு வந்தது. இதனால்,
மக்கள் மத்தியில் ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்தது.
அதனால், ஒருவிதமான, ‘ரொக்க குமிழ்’ ஏற்பட்டது. பண
மதிப்பிழப்பு நடவடிக்கையால், இந்த குமிழ் பெரிதாகி, 2008ல்
ஏற்பட்ட, பொருளாதார தேக்கம் போன்ற பாதிப்பு ஏற்படாமல்
தடுக்கப்பட்டது, ஏழாவது பலன்.
கொஞ்சம் கூர்ந்து பார்த்தால், இவையெல்லாம் தற்செயலாக,
இடையில் கிடைத்த பலன்களாகவே தெரியும்.
( இது முற்றிலும் உண்மை…!!!)
அரசு அடைய நினைத்த பலன்களா இவை?
கறுப்புப் பணம் ஒழிந்ததா?
பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட போது, 3 – 4 லட்சம் கோடி
ரூபாய் அளவுக்கு, கறுப்புப் பணம் திரும்ப வராது என்ற
கணிப்பை, மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல்,
முகுல் ரோஹத்கி, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவ்வளவு
கறுப்புப் பணம் என்பதே எதிர்பார்ப்பு.
ஆனால், இப்போது, 99 சதவீத பணம் முழுமையாக திரும்பி
வந்துவிட்டது என்கிறது, ஆர்.பி.ஐ., இதற்கு என்ன அர்த்தம்?
இரு விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன.
ஒன்று, கறுப்புப் பணம் என்பது, ரூபாய் நோட்டுகளாக இல்லை.
அவை, கணக்கில் காட்டப்படாத சொத்துகளாக மாறிவிட்டன.
இரண்டு, கறுப்புப் பணத்தை பல்வேறு வழிமுறைகளை
கையாண்டு, வங்கிகளுக்குள் கொண்டு வந்து விட்டனர் கறுப்புப்
பணமுதலைகள்.
சுதந்திர தின உரையில் கூட, பிரதமர் மோடி, மூன்று லட்சம்
கோடி ரூபாய் அளவுக்கு, கறுப்புப் பணம் வங்கிக்குள்
வந்துவிட்டதை, பெருமையுடன் குறிப்பிட்டார்.
வங்கி அமைப்புகளுக்குள்ளேயே வராது என, கருதப்பட்ட ஒரு
தொகை, வங்கிக்குள் வந்துவிட்டது என்றால், அதை,
இனிமேல் கணக்கில் காட்டப்படாத பணம் என்றோ, கறுப்புப்
பணம் என்றோ எப்படிச் சொல்ல முடியும்? வங்கி
அமைப்புளுக்குள்ளே, இவை வர முடியாது என்ற கணிப்பு,
இப்போது பொய்த்துப் போய்விட்டதே?
இனிமேல், இதில் அபரிமிதமாக பணத்தை வங்கியில்
செலுத்தியவர்களை இனங்கண்டு, அவர்கள் மீது வருமான
வரித்துறை விளக்கம் கேட்டு, நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும். இதற்கு, ‘பிக் டேட்டா’ தொழில்நுட்பத்தை
பயன்படுத்துங்கள் என, கேட்டுக் கொண்டிருக்கிறார் பிரதமர்.
‘தும்பை விட்டு வாலைப் பிடிப்பது’ போன்று இல்லையா இந்த
நடவடிக்கை?
கள்ள நோட்டு ஒழிந்ததா? வங்கிகளுக்கு வந்து சேர்ந்த ரூபாயில்,
7,62,072 நோட்டுகளே, போலி நோட்டுகள் என தெரிவித்துள்ளது,
ஆர்.பி.ஐ., 2015 – 16ம் நிதியாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட, 6,32,000
போலி நோட்டுகளை விட இது, 20.4 சதவீதம் அதிகம்.
சரி, இரண்டு கேள்விகள். எப்படி இந்த நோட்டுகள்
வங்கிகளுக்குள் வர முடிந்தது? வங்கிக் கிளைகளில் பணத்தை
பெறும் போதே, அவை நிராகரிக்கப்பட்டு இருக்க வேண்டாமா?
கண்டு பிடிக்கப்பட்ட போலி நோட்டுகளின் மதிப்பு வெறும்,
42 கோடி ரூபாய். 15.28 லட்சம் கோடி ரூபாயில், இது வெறும்,
0.0007 சதவீதம்.
கொசுவை அடிக்க கோடாரியா தேவை?
இதையெல்லாம் விட முக்கியமானது, பண மதிப்பிழப்பு
நடவடிக்கையால், நம் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு.
2017 – 18 முதல் காலாண்டில், நம் மொத்த உள்நாட்டு
உற்பத்தி, 5.7 சதவீதத்துக்கு சரிந்துள்ளது.
சேவை துறையைத் தவிர, இதர துறைகளில் வளர்ச்சியே
இல்லை; உற்பத்தித் துறையில் பெரும் சரிவு;
வேலைவாய்ப்பு இல்லை. இவையெல்லாம், பண மதிப்பிழப்பு
நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகள் என்கின்றனர்,
பொருளாதார வல்லுனர்கள்.
புதிய, 2,000 நோட்டுகளை அச்சடித்து வெளியிட நமக்கு ஆன
செலவு, 7,965 கோடி ரூபாய். மொத்த நோட்டுகளில், திரும்ப
வராமல் போன பணத்தின் மதிப்பு, 16 ஆயிரம் கோடி ரூபாய்.
இவற்றோடு, வங்கிகளில் வங்கி வந்து தேங்கிப் போன
தொகைக்கு அளிக்கப்பட்ட வட்டியையும் சேர்த்தால், நமக்கு
ஏற்பட்ட இழப்பு, 30 ஆயிரம் கோடி ரூபாய்.
இவற்றையாவது தோராயமாக அளவிடலாம்.
நீண்ட வரிசையில் நின்றதால் ஏற்பட்ட மரணங்களும்,
உழைப்பு இழப்பும் கணக்கிட முடியுமா என்ன?
இன்றைக்கு புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துவிட்டன;
இயல்புநிலை திரும்பிவிட்டது என, சொல்லலாம்.
ஆனால், 2016 நவ., 8ல் ஏற்பட்ட பாதிப்பின் வலி –
இன்னும் எத்தனை காலாண்டுகள் நீடிக்கப் போகிறதோ என்ற
அச்சம் எழாமல் இல்லை.
——————————————————————



”எனக்கு 50 நாட்கள் மட்டும் கொடுங்கள்; இந்த முடிவு தவறாகப் போனால் என்னைப் பொதுவிடத்தில் வைத்து தூக்கிலிடுங்கள்” – உணர்ச்சி பொங்க கண்களில் வழியும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் — சோகமாக கூறினார் மாண்புமிகு பாரத பிரதமர் மோடி.அவர்கள் …..
அது நவம்பர் 13-ம் தேதி, 2016-ம் வருடம்….. ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய்த் தாள்கள் செல்லாது என அறிவித்த ஐந்தாம் நாள் மேற்படி “மேதகு” கோவாவில் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றச் சென்ற போது தான் பொங்கினார் ….ஆனால் நாடெங்கும் மக்கள் வங்கிகளின் வரிசையில் நிற்கும் போது தங்கள் உழைத்து சிறுக – சிறுக சேமித்த மற்றும் சம்பாதித்த காசு திடீரெனச் செல்லாததாக அறிவிக்கப்பட்ட அதிர்ச்சியில் பலர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்…..
வெறும் ஐம்பதே – ஐம்பது நாட்கள் பொறுத்துக் கொண்டால் ”டைரக்ட்டாக” சொர்க்கம் தான் என அறிவைக்கப்பட்ட கூட்டங்கள் பல …ஆனால் ” நேர்மையின் உறைவிடமானவர்கள் ” அந்த டைலாக்கை மறந்து பல மாதங்கள் கடந்து விட்டன … அதை மக்களும் மறக்க வேண்டும் என்பதில் கண்ணும் – கருத்துமாக பல வித புது – புது சட்டங்களை கொண்டு வந்து மக்களை அடுத்த கட்ட நினைவுகளுக்கு அழைத்து சென்றதை யாரும் மறுக்க முடியாது …
மத்திய பாரதிய ஜனதாவின் நடவடிக்கையின் விளைவாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததும் — லட்சக்கணக்கான அன்றாட
வருமானம் பெரும் இந்தியர்கள் வேலையிழப்புக்கு ஆளானதும்,–
நூற்றுக்கணக்கனோர் உயிரிழந்ததும், — கருப்புப் பண முதலைகள் –பெரும் கார்போரேட்டுகள் சட்டப்பூர்வமாக கருப்பை வெள்ளையாக்கியதுமே நடந்துள்ளது….. என்பது உண்மைதானே …. ?
கருப்பு பணம் ஒழிப்பு — டிஜிட்டல் பரிவர்த்தனை போன்றவை நிறைவேற்றப்பட்டு விட்டதாக ” காதில் பூ சுற்றினால் ” யாரும் தடுக்க முடியாதல்லவா … பதவி அவர்களிடம் … அப்படித்தானே …. ?
அய்யா…! இடுகைக்கு தாெடர்பில்லாத செய்தி : பாலபாரதி, புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி பற்றி கூறியுள்ளது வைரலாகி சந்தி சிரிக்கிறது …. ஏதாவது ஒரு கட்சி ஆரம்பித்தால் பாேதும் பாேல தெரிகிறது … அனைத்தையும் சாதித்துக் காெள்ளலாம் என்று புரிகிறது … ஜாதிக்கட்சி தலைவர்கள் அந்த மக்களுக்கு செய்கிறார்களாே இல்லையாே .. தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் காெள்கிறார்கள் … அப்படிதானே …?
செல்வராஜன்,
டாக்டர் கிருஷ்ணசாமி ஏற்கெனவே பாஜக ஜமக்காளத்தில் இடம் பிடிக்க துண்டு போட்டு விட்டார். எனவே, அவர் இப்படித்தான் பேசுவார்.
ஆனால், இன்னொன்றும் சொல்ல வேண்டும். தமிழகத்தில், இந்த சாவை வைத்து திமுக உள்ளிட்ட சில கட்சிகள் அரசியல் செய்வதில் முனைந்துள்ளன. கட்சிகள் மட்டுமல்ல, திருவாளர் கமல்ஹாசனும் கூட. இவர்கள் யாருக்குமே அந்த யோக்கியதை இல்லை.
-காவிரிமைந்தன்
I am deeply disappointed that Anitha’s death is discussed in your comments sections only. You too,,,
நண்பரே,
இந்த சின்ன பெண்ணின் இறப்பு எனக்கு அடக்கவொணா கோபத்தை
ஏற்படுத்துகிறது….நிச்சயமாக இது அவளின் முடிவாக இருக்க முடியாது.
அவளைச் சுற்றி இருந்த, அவளை வழிநடத்திய சில சுயநலவாத
சக்திகளின் செயல்பாட்டின் விளைவு இது….
அவர்களின் முயற்சிக்கு துணைபோக நான் விரும்பவில்லை.
இது கொள்கை அளவில் மிகப்பெரிய அளவில் கொண்டு செல்லப்பட வேண்டிய விஷயம்… காலம் வரும்…
-காவிரிமைந்தன்
“ஜாதிக்கட்சி தலைவர்கள் அந்த மக்களுக்கு செய்கிறார்களாே இல்லையாே .. தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் காெள்கிறார்கள் ” – எல்லா அரசியல்வாதிகளும் இந்த லட்சணம்தான். இதில் கருணானிதி இன்னும் அதிகம். மறைந்த காளிமுத்து அவர்களின் மகளுக்கு ‘மருத்துவ சீட்’ கிடைத்தது, காளிமுத்து ‘மொழிப்போராட்ட தியாகி’ என்ற விதத்தில்-கொடுத்தது கருணானிதி. அன்புமணி டாக்டர் சீட் கிடைத்தது எந்த ‘சாதி சான்றிதழ்’, ‘ராமதாஸ் மருத்துவ சீட் பெற்றது எந்த சாதி சான்றிதழை வைத்து என்றெல்லாம் யாரும் ஆராயமாட்டார்கள் என்பதால், அரசியல்வாதிகள் செய்யும் பகல் கொள்ளை யாருக்கும் தெரிவதில்லை.
அனிதாவின் இறப்பு அரசியல், சசி பெருமாளின் இறப்பைப் போல். அதற்குமேல் இதில் ஆத்திரப்படுவதற்கோ உணர்ச்சிவசப்படுவதற்கோ எதுவுமே இல்லை. நான் நினைத்ததுபோலவே இந்த மரணத்தில் எல்லாமும் நிகழ்ந்தன. ஸ்டாலினுக்கும், வைகோவுக்கும் திருமாவுக்கும் மற்றவர்களுக்கும் அடுத்த மரணம் வரும்வரை இதனை வைத்துப் பொழைப்பை ஓட்டவேண்டும்.
இதற்காக உணர்ச்சிவசப்படுபவர்களும் அதே வகையைச் சார்ந்தவர்கள்தான். சசிபெருமாளின் மரணத்தின்போது டாஸ்மாக், மது அப்படி இப்படி என்று பேசின்வர்களெல்லாம் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
மனித உயிரின் மதிப்பு தெரியாதவர்கள் மருத்துவராகி என்ன சாதிக்கப்போகிறார்கள்?
Dear Tamilan,
Thileepan also was a doctor. Will you say the same on his death too??
திரு வெங்கடேஷ் அவர்களின் கருத்துக்கு சாதாரண இந்தியன் நிலையில் பதில் எழுதுவதுதான் சரியாக இருக்கும்.
‘இந்தியர்களில் பெரும்பாலானோர் நாணயமானவர்கள்;
ஒரு சிலர் தான், அயோக்கியர்கள்’ என, உலக நாடுகள் கண்டு
கொண்டது, முதல் பலன். – ‘ஒரு சிலர்’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, ‘வங்கி அதிகாரிகள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், புரோக்கர்கள்தான்’ என்று மாற்றினால் இதனை ஒத்துக்கொள்ளலாம். எப்படி ரெட்டி, கர்னாடக அமைச்சர், சேலம் பாஜக பிரமுகர் போன்ற பலருக்கு கோடிக்கணக்கான புது நோட்டுக்கள் சென்றன? பஸ் டெப்ப்போக்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவங்கள் எத்தனை பழைய நோட்டுக்களைக் கொடுத்தன என்று ஆய்வு செய்தாலே அதில் செய்யப்பட்ட அயோக்கியத்தனம் தெரிந்துவிடும். சாதாரண பொதுஜனங்கள் ஏடிஎம் மற்றும் பல்வேறு இடங்களில் 2000 ரூக்காக வரிசையில் அல்லல்படவில்லையா?
வரி செலுத்துவோரின் எண்ணிக்கை – இதற்கும் 500/1000 செல்லாது என்று சொன்னதற்கும் சம்பந்தம் கிடையாது. அரசு புது ரூபாய் நோட்டுக்களைத் தயாரிக்க முடியாததாலும், ஏடிஎம்கள் புதிய நோட்டுக்களை ஏற்றுக்கொள்ளாது, அதற்கு நிறைய காலமெடுக்கும் என்பதைப் பிறகு புரிந்துகொண்டதாலும் அரசு எலெக்டிரானிக் பேமென்டை பிறகு ப்ரொமோட் செய்தது. இது ஆரம்பத்தில் டிமானிடைசேஷன் அஜென்டாவில் இல்லை.
இதர துறைகளில் வளர்ச்சியே இல்லை; உற்பத்தித் துறையில் பெரும் சரிவு; வேலைவாய்ப்பு இல்லை. – இது டிமானிடைசேஷன் போதும், பணம் வங்கிகளுக்கு வராமல் இருந்தபோதும் நடந்தது (6 மாதங்கள்?). அப்போதும் சேவை மையம் நடத்துபவர்களில் நிறையபேரிடம் புது நோட்டுக்கள் புழங்கின. இதில் பாதிக்கப்பட்டவர்கள் அப்பாவி ஆட்டோ, சிறு தொழில் செய்பவர்கள், அன்றாடங்காய்ச்சிகள் போன்றோர்.
மோடி அவர்கள் எடுத்தது நல்ல நினைப்போடுதான். ஆனால் நினைத்த அளவு அது ஒன்றும் செய்துவிடவில்லை. இதில் கசப்பானது, ஒரு அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ, புரோக்கர்களோ, கண்டுபிடிக்கப்பட்டாலும் தண்டிக்கப்படவில்லை. இது ஒன்றே, இந்தத் திட்டம் தோல்வி என்று சொல்வதற்குப் போதுமானது.
மற்றபடி, வங்கிப் பணப் பரிவர்த்தனை போன்ற பலவும், டிமானிடைசேஷன் போது, கண்டுபிடித்த புதுப் புது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகக் கொண்டுவரப்பட்டவை. திட்டம் நல்ல திட்டம் ஆனால் அது பயன் தரவில்லை. வெற்று அரசியல் திட்டமாகப்போய்விட்டது.
கே.எம்.சார்,
பாஜக தலைவர்களும் சரி, அவர்களின் ஆதரவாளர்களும் சரி
கண்மூடித்தனமாக பேசுபவர்களே. அவர்களிடம் இந்த
புள்ளி விவரங்கள் எல்லாம் எடுபடாது. அவர்களைப் பொருத்த வரையில் மோடிஜி தப்பே பண்ண மாட்டார்.