.
.
தமிழ்நாட்டில், இந்த தேர்தலில் போட்டியிட்ட
மொத்த கட்சிகளின் எண்ணிக்கை என்ன….?
அவை – எவை எவை என்பதை
யாராலும் சொல்ல முடியுமா…?
அனுபவசாலிகளான அரசியல்வாதிகளாலும்
கூட முடியாத காரியம் இது….. சுமார் 40 கட்சிகள்….!!!
எதை செய்து கிழிக்கப் போகின்றன இந்த கட்சிகள்..?
யாருக்காக உள்ளன இந்த கட்சிகள்…?
மக்களுக்காக உழைக்கவா …?
அப்படி என்ன மக்கள் சேவை செய்தன …?
இவற்றால், அவற்றை உருவாக்கினவரைத் தவிர …
வேறு யாருக்காவது எந்த பயனாவது உண்டா .. ?
ஜாதி, மதம், இனம், ஊர்,
பிடித்த சாமி, பிடித்த தலைவர் என்று
ஓவ்வொன்றின் பெயரிலும் ஒரு கட்சி.
அரசியலில் இருப்பவர்களில் பாதிப்பேர்கள் – தலைவர்கள் தான்….!
இன்றைய தினத்தில் மிகச்சிறந்த வியாபாரம் எது என்றால் –
அது அரசியல் தான்.
இந்த கட்சிகள் அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும்….
அதை தேர்தல் கமிஷனே செய்தால் நலம்.
5 சதவீதத்திற்கும் குறைவாக ஓட்டு வாங்கிய கட்சிகளின்
பதிவை ரத்து செய்து விட்டால், பாதி பிரச்சினை குறையும்.
—————————————————–
இரண்டு, மூன்று வருடங்கள் முன்பாக தமிழருவி மணியன் அவர்கள்
அரசியல் சார்பற்ற ஒரு இயக்கத்தை உருவாக்கியபோது
அவர் மீது கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
ஆனால், வெகு சீக்கிரத்திலேயே அவரும்
சாக்கடையில் சங்கமித்து விட்டார்.
நடந்து முடிந்த தேர்தலில், 25 இடங்களில்
அவரது கட்சியை போட்டி போட வைத்தார்….!!!
அவசர அவசரமாக நேற்று வந்த திரு.பொன்ராஜ்
(திரு.அப்துல் கலாம் அவர்களின் உதவியாளர் ) கூட,
கலாம் பெயரில் கட்சியை ஆரம்பித்தார் –
உடனடியாக, நேரடியாக தொபுகடீர் என்று
தேர்தலில் குதித்து விட்டார்….
ஏன் அய்யா ஏன் – மக்களுக்கு சேவை செய்கிறேன் என்று
இறங்கும் ஒவ்வொருவரும் – தேர்தலில் குதிப்பதையும்,
பதவி -அதிகாரத்தை பிடிப்பதிலுமேயே ஆர்வமாக இருப்பது ஏன்…?
———————————————————
அதிகார அரசியலில் –
தேர்தல் அரசியலில் –
ஈடுபடாமல்,
பலன் கருதாமல் – உண்மையிலேயே –
மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று
விரும்புகிற மனிதர்களே இல்லாமல் போய் விட்டார்களா என்ன …?

தமிழகத்தில் ஒரு புதிய சக்தி,
புதிய இயக்கம் உருவாக வேண்டும்.
அது ஒரு சமுதாய-அரசியல் மாற்றத்திற்கான
இயக்கமாக இருக்க வேண்டும்.
ஆனால், அதன் குறிக்கோள் – லட்சியம் –
தேர்தலில் இறங்காமல்,
ஆட்சி அதிகாரத்துக்கு போட்டியிடாமல் – வெளியிலிருந்தே
மக்களுக்கு சேவை செய்வதாக இருக்க வேண்டும்.
அதிகார ஆசை, பதவி மோகம் தான் –
அரசியல்வாதிகள் நிலைதடுமாற காரணம் ஆகிறது.
இயக்கத்தின் முதல் நோக்கமே –
மக்களிடையே நல்லொழுக்கத்தை பரப்புவதாக இருக்க வேண்டும்.
மது, சிகரெட், போதை வஸ்துக்கள் – பயன்பாட்டை
மக்கள் வெறுத்து ஒதுக்கும் ஒரு நிலையை உருவாக்குவதாக
இருக்க வேண்டும்.
பெண்களுக்கு சமுதாயத்தில் பாதுகாப்பை உறுதி
செய்வது தன் கடமை என்பதை ஒவ்வொரு இளைஞனின்
மனதிலும் பதிய வைக்க வேண்டும்.
நல்ல சுற்றுச்சூழலை உருவாக்குவது,
நீர்நிலைகளை உருவாக்கி பேணிக்காப்பது –
மழைநீரை பாதுகாப்பது ஆகியவற்றை தங்களது
அடிப்படை கடமை என்று ஒவ்வொருவரையும்
உணறச் செய்வதாக இருக்க வேண்டும்.
தமிழ் மக்கள், தமிழ்ச் சமுதாயம் –
நல்ல தரமான கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு,
ஆகியவற்றை பெறுவதை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.
இந்த லட்சியங்களை மக்களிடையே எடுத்துசென்று,
அவர்களை இவற்றின் அவசியத்தை உணறுமாறு செய்ய வேண்டும்.
இந்த லட்சியங்களை ஆட்சியில், அதிகாரத்தில், அரசில் –
பொறுப்பில் உள்ளவர்கள் ஏற்றுக் கொண்டு,
நடைமுறைக்கு கொண்டு வர மக்கள் சக்தியை திரட்டி
அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மறியல், கடையடைப்பு, பஸ், ரயில் நிறுத்தம் போன்ற
போராட்டங்களை நடத்துவதன் மூலம் அல்ல –
மக்கள் சக்தியுடன், அவற்றின் முக்கியத்தை உரிய முறையில்
சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதன் மூலம்….!
தேர்தலில் நேரடியாக போட்டியிடாமல் –
இந்த இயக்கம் வலியுறுத்தும் –
மக்களுக்கான,
சமுதாய நல திட்டங்களை
செயல்படுத்தாதவர்கள் ஆட்சிக்கு வர முடியாது –
வந்தாலும் நீடிக்க முடியாது என்கிற அளவிற்கு
இந்த இயக்கம் மக்களிடையே வலுப்பெற உழைக்க வேண்டும்.
தெருத்தெருவாக, கிராமம் கிராமமாகச் சென்று,
மக்களின் முக்கிய குறைகளை
கண்டறிய வேண்டும்.
அரசின் துணையில்லாமலே மக்களாகவே தீர்த்துக்கொள்ளக்கூடிய
பிரச்சினைகளை, அந்தந்த பகுதி மக்களின் ஒருங்கிணைப்புடன்,
நேரடியாக தீர்க்க முயற்சிக்க வேண்டும்.
பஞ்சாயத்து, அரசு இலாகாக்களின் ஒத்துழைப்பு தேவைப்படும்
இடங்களில், நல்ல முறையில் சம்பந்தப்பட்டவர்களை
அணுகி அவர்களின் ஒத்துழைப்பை பெற முயற்சிக்க வேண்டும்.
போராட்ட அணுகுமுறை – அதிகாரத்தில் உள்ளவர்களை
சங்கடத்திற்கு உள்ளாக்குவது என்றில்லாமல், காரியம் நிறைவேற
வேண்டும் என்கிற positive approach அணுகுமுறையை
மேற்கொள்ள வேண்டும்…
——————————-
இன்னமும் நிறைய “வேண்டும்” கனவுகள் இருக்கின்றன…!!!
” கனவுலகில் இருந்து எழுந்து, இறங்கி வா –
இதெல்லாம் நிஜத்தில் நடக்கக்கூடியதல்ல ? ”
என்கிறீர்களா….?
நடக்கும்….
நிச்சயம் நடக்கும்….
இன்றில்லா விட்டாலும் நாளையாவது …..!!!



நல்ல நோக்கம் அய்யா,
வாழ்த்துகள்.
இவ்வாறு ஒரு தனிமனிதனால் செய்ய முடியுமா?
அல்லது குழுக்கள் அமைத்து தன்னலம் இன்றி செயல் பட முடியுமா?
அவ்வாறு செயல் படும்பொழுது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் செயல்படவிடுவார்களா?
நான் நினைக்கிறேன் இது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஏற்பட வேண்டும். அல்லது அதற்கான விழிப்புணர்வை எற்படுத்த வேண்டும்.
நம் மக்காளால் ஒரு நல்ல தலைவர்களை கூட தேர்ந்தெடுக்க முடியவில்லை அவர்களால் எவ்வாறு சாத்தியமாகும்?
இத்தனை கட்சிகள் தேவையில்லை என்பதே என் கருத்தும். ஆனால் கட்சி அடையாளம் நிறைய பேருக்கு தொழில் மற்றும் பணப் பாதுகாப்பைத் தருகிறது என நினைக்கிறேன். உதாரணம், IJK – இந்திய ஜனநாயகக் கட்சி. ஒவ்வொரு முறையும் தேர்தல் நிதி கேட்டு பச்சமுத்துவை கட்சிகள் நெருக்கியதால் அவரே கட்சியை ஆரம்பித்து எனக்கும் தா எனக் கேட்க ஆரம்பித்துவிட்டார்.
கட்சிகள் இத்தனை இருக்க முக்கிய காரணம், கட்சிகள் எந்த சொத்தையும் வாங்கலாம், எவ்வளவு பணமும் சேர்த்தலாம், எந்த முறையிலும் சேர்த்தலாம். வருமான வரி கிடையாது. யாருக்கும் கணக்குக் காட்ட வேண்டியதில்லை. கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க இதைவிட எளிதான வழி இருக்கிறதா என்ன?
கே.எம்.சார்,
இன்றைய நிலையில், பலர் சமூக சேவையில் இறங்குவதே
பணம் பண்ணுவதற்கு தான் என்கிறபோது, நீங்கள்
சொல்கிற மாதிரி நேரடி அரசியலில், தேர்தலில், பங்கெடுக்கக்கூடாது
என்கிற கட்டுப்பாட்டுடன் ஒரு இயக்கத்தை துவக்கக்கூடிய எவரும்
தமிழ்நாட்டில் என் கண்ணில் பட்ட வரை யாரையும் காணோம்.
நிறைய லட்சியங்களைப் பேசிய தமிழருவியே தேர்தல் மாயையில்
மயங்கி விழுந்து விட்டாரே ?
எனக்குத் தெரிந்து இத்தகைய லட்சியங்களோடு இயக்கம் ஒன்றை
துவக்கி நடத்த பொருத்தமான ஒருவர் இருக்கிறார்.
ஆனால், அவர் அதற்கான வயது தனக்கில்லை என்பார்.
உங்களுக்கும் தெரிந்தவர் தான் 🙂
சிந்தனை நன்றாக இருக்கிறது. நானும் சில நாள் தூக்கம் வராதபோது இப்படிப்பட்ட சிந்தனைகளை நினைப்பேன். அப்போது எனக்கு நினைவிற்கு வருவது எம்.எஸ் உதயமூர்த்தி அவர்கள்தான். அவரும் தமிழர்களைக் கடைத்தேத்தலாம் என்று முயன்றார். வெற்றி பெற முடியவில்லை.
உங்கள் சிந்தனைகள் நன்றாக, படிக்க இனிமையாக இருக்கின்றன. ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது.
Our politicians will not allow. Even if somebody takes initiative, camels will occupy the tent.
மொத்த சிஸ்டம் மாறவேண்டும்.
எல்லோருக்கும் வாழ்க்கை நடத்தப் பணம் வேண்டும். கொஞ்சமாவது. எந்தப் பதவியிலும் இல்லாத அரசியல்வாதி அந்த கொஞ்சமாவது பணத்தை எப்படி சம்பாதிப்பார்? பொதுவில் வசூலித்து மாத மாதம் தங்கள் அரசியல் வாதிகளுக்குக் கொடுப்பது கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டுமே. மற்றவர்கள் அப்படிக் கொடுக்கிறார்களா என்று தெரியவில்லை.
நாமெல்லாம் மாத வருமானம் வரும் தொழிலில் இருந்து கொண்டு , வருமானம் வர வாய்ப்பில்லாத நேர்மையான அரசியல்வாதி ஒருவர் வந்து நம்மை உய்விக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?
அவ்வாறான ” இயக்கங்கள் ” செயல்பட அரசியல்வாதிகளும் — அதிகார வர்க்கங்களும் விடுவார்களா .. ? மக்களின் சிந்தனை தற்காலத்தில் வேறுவிதமாக மாறியிருக்கும் போது — அவர்களின் ஆதரவு எந்தளவுக்கு கிடைக்கும் … ? சுயசார்பு நிலை — தன் குடும்ப நலன் என்பதே முக்கிய காரணிகளாக இருக்கும் போது — பொது நலனுக்கான போராட்டம் எப்படி சாத்தியம் — ? தற்போதுள்ள சமூக நலன் சார்ந்த இயக்கங்கள் கூட ” ஆளும் கட்சியின் எதிர்ப்பு ” ஒன்றையே ஆயுதமாக கொண்டு செயல்படுவது வேடிக்கையல்லவா .. ? எப்போதும் தங்களின் இயக்கத்தின் பெயர் ஊடகங்களில் வெளிவர ஒரே வழி ஆளும் கட்சியின் எதிர்ப்பு தான் என்று நினைத்து களத்தில் உள்ள இயக்கங்கள் சாதித்தது என்ன … ? ஜீவாதார உரிமைகள் பறிபோகும் நிலையிலும் — போராட துணியாத மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுமா — ஏற்படாமல் போனது எதனால் …. ? பல கேள்விகள் — விடை கிடைக்க —- நானும் காத்திருப்பேன் இந்த கனவோடு : // நடக்கும்….
நிச்சயம் நடக்கும்….
இன்றில்லா விட்டாலும் நாளையாவது …..!!! //
ஐயா
சிவாஜி படத்தில் ரஜினி செய்ததை நீங்கள் சொல்வதற்கு பொருந்துகிறது.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே.
இது ஒரு starting problem தான் என்பது என் கருத்து.
யாராவது ஒருவர் செயலில் இறங்கத் துணிய வேண்டும்.
தகுதியான நபர், செயலில் இறங்கும்போது,
ஆதரவு அளிக்க நிறையே பேர் முன்வருவார்கள் என்பதையே
உங்கள் மறுமொழிகள் உறுதிபடுத்துகின்றன.
காத்திருப்போம்….!!!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்