
இந்த வருடத்தின் இறுதி இடுகை இது.
இந்த ஆண்டு முழுவதும் என்னை ஓரளவிற்கு உருப்படியாக
செயல்பட வைத்த இறைவனுக்கும்,
எனக்கு உறுதுணையாக இருந்து உற்சாகமூட்டிக்கொண்டிருக்கும்
இந்த வலைத்தள நண்பர்களுக்கும் என் நன்றிகள்..
வருடக் கடைசியில் ஒரு சிறிய தத்துவ அலசல் !
–
வயதானவர்கள் பலரும் இறப்பை எண்ணி அச்சப்படுவதைப்
பார்க்கிறேன். நான் சந்திப்பவரிடையே அதைப்பற்றி விவரமாகப்பேசி
அவர்களது அச்சத்தைப் போக்க முயற்சி செய்கிறேன்.
கடவுள் அருளால் – எனக்கு இறப்பைப் பற்றிய அச்சம் இல்லை.
என்று வேண்டுமானாலும் கிளம்பத் தயாராக இருக்கிறேன்.
(Ready for take off at any time ……!!)
சாவைப் பற்றிய அச்சம் இல்லாமல் மனிதர் வாழப்பழக வேண்டும்.
ஒரு விழிப்புணர்வு – உயிரைப்பற்றிய, உடலைப்பற்றிய,
ஒரு விழிப்புணர்வு அவசியம் வேண்டும்.
அந்த விழிப்புணர்வு இருந்தால் அந்த அச்சம் போய் விடும்…!
மரணம் வாழ்வின் ஒரு பகுதி என்பதை உணர்ந்துகொண்டால்,
மரணத்தைப் பற்றிய அச்சம் மனிதனுக்கு இருக்காது !
அடுத்த கணத்திலேயே கூட உயிர் பிரியலாம் என்று
தெரிந்த பின்னரும்
ஒருவரால் அமைதியாக இருக்க முடியும் என்றால் –
அது தான் வாழ்க்கையின் உண்மையை உணர்ந்த நிலை.
இந்த நிலை சாத்தியமா என்று கேட்டால் – தகுந்த பயிற்சியும்,
மனப் பக்குவமும் ஏற்பட்டால் யாருக்கும் இது சாத்தியமே என்பேன் !
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர்
மிகச்சாதாரணமாக –
“உறங்குவது போலும் சாக்காடு – உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு ” – என்றார்.
உயிர் என்பது என்ன ?
அந்த உயிர் எங்கே இருக்கிறது – யோசியுங்கள்.
வெளியே உள்ள மூச்சுக்காற்றை உள்ளே இழுத்து அதை
மீண்டும் வெளியே விட்டு,
மீண்டும் உள்ளே இழுத்து மீண்டும் வெளியே விட்டு – இப்படி
மாறி மாறி செய்துக்கொண்டே இருப்பதை தான் உயிருடன்
இருக்கிறோம் என்கிறோம்.
இந்த தொடர் ஓட்டத்தில், இடையில் ஒரு முறை – ஒரே ஒரு முறை,
வெளியே போன மூச்சு மீண்டும் உள்ளே வரவில்லை என்றால் ?
அதையே மரணம் என்கிறோம்….!
ஆக உயிர் உடலுக்கு உள்ளே இருக்கிறதா?
இல்லை வெளியேவா ?
உயிர் போய் விட்டது என்கிறோமே. ஒவ்வொரு முறையும் –
நிமிடத்திற்கு சுமார் 20 தடவை அந்த உயிர் போய்ப் போய்த்தான்
திரும்பி வருகிறது.
அப்படிப் போன உயிர் ஒரு முறை திரும்பி
வரவில்லை என்றால் – அப்போது தான்,
அந்த தருணத்தை மட்டும் தான்
உயிர் போய் விட்டது என்கிறோம்.
உலகம் தோன்றிய நாள் தொட்டு இன்று வரை,
இறப்பினைச் சந்திக்காத மனிதர் யாரையாவது
நாம் சந்தித்ததுண்டா ?
வயதான, முதுமையால் -நோயால், வாடும் மனிதர்கள்
பலருக்கு உண்மையிலேயே – சாவு ஒரு விடுதலை – வரப்பிரசாதம் …!
ஆனால் பலரின் மனம் அதை ஏற்பது இல்லை …!!
இயற்கையில் நிகழ்ந்தே தீரும் என்கிற ஒன்றிற்காக,
நம்மால் ஆகக்கூடியது இதில் ஒன்றுமே இல்லை
என்பதை உணர்ந்தால் போதும் – சாவைப் பற்றிய பயம் நீங்கி விடும்.
ஒரே ஒரு விஷயம் ….!
சாவு சுலபமானதாக இருக்க வேண்டும்.
நமக்கும் தொல்லை இல்லாமல் –
மற்றவரையும் தொல்லைப் படுத்தாமல் –
எப்போது போவதாக இருந்தாலும் சரி – அந்த உயிர் –
சட்டென்று போய் விட வேண்டும்.
–
மற்றபடி – நண்பர்களே,
இந்த ஆண்டு நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்.
இயன்ற வரையில் -பயன் இல்லாத விஷயம் எதையும்
இந்த வலைத்தளத்தில் பதிய வேண்டாம் என்பது
என்பது என் எண்ணம். ஓரளவு அதைச் செயல்படுத்தவும் முடிகிறது…!
தொடர்ந்து கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம்.
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
எல்லாரும் – நல்ல உடல் நலமும், மன அமைதியும், வளமும்,
பெற்று மகிழ்ச்சியான வாழ்வைப் பெறவும் —
இந்த நாடு –
லஞ்ச ஊழலற்ற,
மக்கள் அனைவருக்கும் ஒன்று சேர்ந்த ஒருமித்த வளர்ச்சியை தர,
புதிய பாதையில் பயணத்தைத் துவக்கி முன்செல்ல – வேண்டுவோம்.
–
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்



வைர வரிகள் ஐயா!
தங்களது இடுகைகளை தொடர்ந்து படித்து வருபவர்களில் ஒருவன்.
எல்லாம் வல்ல இறைவன், நம் அனைவருக்கும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் கூடிய நீடிய ஆயுளையும், வாழும் காலமெல்லாம் சத்தியம், சாந்தி, சமாதானத்துடன் வாழவும், நேர்வழியில் நின்று வாழவும், நமது முடிவு (இறுதிப்பயணம்) நல்ல முடிவாக அமையவும் கிருபை செய்வானாக என்ற பிரார்த்தனையுடன் வாழ்த்துகிறேன்.
நன்றி நண்பரே.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
ஐயா முதற்கண் வணக்கம்
ஓவ்வொரு செயலுக்கும் ஒரு காலம் அல்லது பருவம் உண்டு விதைத்தது முளைத்து தான் ஆக வேண்டும். அது வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். காத்திருப்பும் கவன குவிப்புமே தவத்தின் வெற்றி. இது என் வாழ்க்கையில் என்னுடே தழுவி வந்ததை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.
வேலையை மட்டும் நீங்கள் செய்யுங்கள். அந்த தாகத்திற்குரியது கட்டாயம் வந்தே தீரும்.
தவம் என்பது தற்போது தெருவிற்கு தெரு கூவி விற்கும் பல வகுப்புகள் போல அல்ல அது. தவம் உள்ளுக்குள் ஓட ஆரம்பித்து விட்டால் அதன் பிறகு வரும் செயல்கள் நாம் நினைத்த படி தான் முடிவுக்கு வரும். வெளியில் அமாவாசை நாள் என்றால் உள்ளுக்குள் அதன் தாக்கம் நேரடியாக இரண்டு நாட்கள் முன்பே ஆரம்பமாகி விடும். தலை பாரம் வயிற்று வலி இவைகள் அக்காலங்களில் சித்தனின் அவஸ்தைகள். யோக நிலைகளில் உள்ளுக்குள்ளும் அண்ட வெளிக்குள்ளுமாக தொடர்பு யோகியை உலுக்கி எடுக்கும் நாட்கள் வேதனைக்குரியவை. பௌர்ணமி நாளில் சக்தி ஒட்டம் உடம்பிற்குள் தலைகீழாக ஓட அரம்பிக்கும். புவி ஈர்ப்பு விசை அண்டத்தில் உள்ளதை பிண்டத்தில் கொண்டு வந்து விடும். அதன் அவஸ்தையை நான் உடம்பினுள் அவதிபட்டிருக்கிறேன். தவம் செய்யும் நேரங்களில் யோகம் கூடும் சமயங்களில் மொத்தென்று விழுந்திருக்கிறேன்.
—
*N * Vishnuvaradharajan *
நன்றி விசு.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
மது இல்லாமல் புத்தாண்டை இனிதே கொண்டாடுவோம்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
சைதை அஜீஸ்,
சரியாகச் சொன்னீர்கள்.
மது இல்லாமல் கொண்டாட்டமே இல்லையென்று பலர்
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மதுப்பழக்கம் உள்ளவரின் குடும்பம், அவர்கள் எவ்வளவு
தான் செல்வம் படைத்தவர்களேயானாலும்,
மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
குடும்பத்தினரின் நலனில் அக்கரையுள்ளவர்கள்,
தங்கள் குடும்பத்தினருக்காக –
மதுப்பழக்கத்தை மறந்து விட வேண்டும்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
இந்தப் புத்தாண்டில் உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறுவதாக!
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர் செல்லப்பா.
ஆனால் – ஆசைகள் அற்றுப் போக வேண்டும்
என்று தான் முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
எனவே ஆசைகள் இல்லாமல் வாழ – வாழ்த்துங்களேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நன்றி பரமசிவம்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அருமை. நன்றி. வாழ்த்துகள்.
அருமையான கருத்து. அப்படியே வழிமொழிகிறேன். எனக்கு இன்னும் இளவயதுதான் என்றபோதிலும் தங்களது மனப்பான்மையே எனக்கும் உண்டு. வாழ்வின் மீது வெறுப்பினால் அல்ல; வாழ்வை நன்கு புரிந்துகொண்டமையால். இன்னும் அதிக வருடங்கள் வாழ்ந்தாலும் சந்தோசமே; நாளையே அவன் அழைத்துக்கொண்டாலும் சந்தோசமே! இருக்கும்வரை நாமும் மகிழ்ச்சியாய் இருந்து நம்மை சார்ந்தோரிடமும் அன்பு செய்து நிறைவாய் வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்.
விமரிசனம் தள வாசகர்கள் அனைவரும், கா.மை ஐயா அவர்களுக்கும், இத்தளத்தை நினைத்தவுடனேயே நினைவுக்கு வரும் சைதை அஜீஸ், கண்பத் ஆகிய நண்பர்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
நண்பர் ரிஷி,
இளமையில் இந்த பக்குவம் வருவது மிகவும் அரிது.
வாழ்க்கையைப் பற்றிய யதார்த்த நிலையை உணர்பவர்களுக்கும்,
மற்றவர்களைப் பற்றிய கவலையும் உடையவர்களுக்கு
இத்தகைய சிந்தனைகள் வரும்.
இளம் வயதிலேயே இத்தகைய பக்குவத்தைப் பெற்ற
நீங்கள் நிச்சயம் சமுதாயத்திற்கு மிகவும் பயனுடையவராக இருப்பீர்கள்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
பின் குறிப்பு –
ஆமாம் – நீங்கள் ஏன் ரிஷி என்று புனைப்பெயர்
வைத்துக் கொண்டீர்கள் – சொல்லலாம் என்றால்
சொல்லுங்களேன்..!
கா. மை ஐயா அவர்களுக்கும், இத் தள வாசகர் குடும்பத்திற்கும் வரும் புதிய ஆங்கில புத்தாண்டில் எல்லா வித நன்மைகள் பெருக, மகிழ்ச்சி பொங்க, ஆரோக்கியம் சிறப்புற வாழ்த்துக்கள்.
நன்றி எழில்.
இன்னும் அதிக அளவில் உங்கள் பின்னூட்டங்களை
எதிர்பார்க்கிறேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
–
தங்களின் அன்பான ஊக்குவிப்புக்கு நன்றி ஐயா. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.
YOU ARE RIGHT. IF WE ARE LUCKY, DEATH WILL BE WITHOUT MUCH PAINFUL AND WITHOUT GIVING TROUBLE TO ANYBODY. I AM ALSO OLD MAN WITH SIMILAR THOUGHTS.
IN MY OPINION, THIS IS THE ONLY TAMIL BLOG, WITH NEUTRAL THOUGHTS, WITHOUT SPREADING HATRED TOWARDS ANY SECTION OF SOCITY , WRITING WITHOUT FEAR.
WE WISH YOUR SERVICE SHOULD CONTINUE. WE PRAY GOD FOR YOUR GOOD HEALTH.
திரு கோபாலசாமி,
தங்கள் கருத்துக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும்
மிக்க நன்றி நண்பரே.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Dear sir,I wish more useful article comes out from you by the the grace of God.A.Jayaraman
thank you for the good wishes Jayaraman.
with all best wishes,
Kavirimainthan