தப்பான வழியை காட்டலாமா உச்சநீதி மன்றம் …?

தப்பான வழியை காட்டலாமா உச்சநீதி மன்றம் …?

bird5
சென்ற நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் –
உச்சநீதிமன்றத்தில்(சுப்ரீம் கோர்ட்)வழக்கு ஒன்றில் தீர்ப்பு
சொல்லப்பட்டது.

அந்த வழக்கில் தீர்ப்பு கூறும்போது, நீதிமன்றம்,
மத்திய அரசுக்கு சில விஷயங்களைச் சொல்லி அதற்கேற்ப
சட்டம் இயற்றுமாறு கூறி இருக்கிறது.

அப்படி என்ன சொல்கிறது உச்சநீதி மன்றம் ..?

“பல வெளிநாடுகளில் – திருமணம் செய்து கொள்ளாமலே
ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது சகஜமாக இருக்கிறது.
அவர்கள் சமுதாயத்தால் -இந்தப் பழக்கம்
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நம் நாட்டில், சமூகம் இந்த வழக்கத்தை ஏற்றுக்
கொள்ளவில்லை. ஆனாலும் கூட – ஆணும் பெண்ணும்
திருமணம் செய்து கொள்ளாமலே சேர்ந்து வாழ்வது
சட்டப்படி குற்றமும் அல்ல, அது ஒரு பாவமும்
அல்ல ..!!.
(neither a crime nor a sin..! )

தற்போதைய பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் சட்டம்
(Domestic Violence Act), திருமணம் செய்து
கொள்ளாமலே சேர்ந்து வாழும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு
கொடுக்கவில்லை. எனவே திருமணம் செய்யாமல்
சேர்ந்து வாழும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு
அளிக்க உரிய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வர
வேண்டும் !”

-எனக்கென்னவோ அபத்தமான ஆலோசனையாகவே
தோன்றுகிறது இது ..!
நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு, பெண்களுக்கே
கொடுமை செய்யும் அபத்தமான கட்டளை அல்லவா இது ?

பல நூறு ஆண்டுகளாக இந்திய சமுதாயத்தில் இருந்த
பல தார வழக்கத்திலிருந்து, பல சமூக ஆர்வலர்களின்
தீவிர முயற்சியால், பரந்த நோக்கு கொண்ட சில
குடும்பப் பெரியவர்களால், படிப்படியாக மீண்டு வந்திருக்கிறது
நமது சமுதாயம். ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட
பெண்களைத் திருமணம் செய்து கொள்வதும்,
ஒரே சமயத்தில் பல மனைவிகளுடன் குடும்பம் நடத்துவதும்,
இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு – 1950-கள் வரை
இங்கு சகஜமாகத்தானே இருந்தது ?    (  இன்றும் நமது வயதான
தலைவர்கள் பலருக்கு மனைவியரும், துணைவியரும்
இருப்பது இன்னும் இந்த வழக்கத்தை நமக்கு நினைவுபடுத்திக்
கொண்டே இருக்கிறதே ..!)

உடன்கட்டை ஏறுதல்,
தேவதாசி முறை,
பால்ய விவாகம்,
விதவைக் கொடுமைகள்,
பெண்களுக்கு சொத்துரிமை இல்லாமை,
பல தார திருமணங்கள் –

-பெண்களைத் துன்புறுத்தி வந்த இத்தகைய பல சமூக
வழக்கங்களிலிருந்து படிப்படியாக மீண்டு தான் இன்று
சமுதாயத்திலும், சட்டத்தின் முன்பும் – ஆண்களும்
பெண்களும் சரி சமம் என்கிற நிலைக்கு வந்திருக்கிறோம்.

அறியாப் பருவத்தில் பெண் குழந்தைகளுக்கு
திருமணம் செய்து வந்த பழக்கத்திலிருந்து விடுபடவும்,

பெண் குழந்தைகளுக்கு படிப்பு எதற்கு என்கிற
சமூகப் பார்வையிலிருந்து வெளிவரவும்,

விதவைப் பெண்களுக்கு மறுமணமா என்கிற
கேள்வியிலிருந்தும்,

பெண்கள் விவாகரத்து கேட்பதா என்கிற
கேள்வியிலிருந்தும்,

வெளியே வர எத்தனை எத்தனை ஆண்டுகள் ஆயின
நமக்கு ..!

இயற்கையாகவே பெண்களுக்கு சபலபுத்தி அபூர்வம்.
ஆனால் ஆண்களுக்கு சபலபுத்தி சகஜம்.
திருமணம் என்கிற வேலி தான் பெண்களுக்கு பாதுகாப்பு.

பிறர் மனைவி/கணவர் என்கிற அந்தஸ்து தான் (status )
பலரைச் சபலம் என்னும் வலையில் சிக்கிக்கொள்ளாமல்
தப்புவிக்கச் செய்கிறது.
திருமணம் செய்து கொள்ளாமலே ஆணும் பெண்ணும்
சேர்ந்து வாழலாம் – குழந்தைகளையும் பெற்றுக் கொள்ளலாம்
என்றால் ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன்
ஒரே சமயத்தில் இணை சேர்வதையும், தனித்தனியே
குடும்பங்கள் நடத்துவதையும் தடுக்க சட்டபூர்வமாக
வழியேதும் இல்லை. எப்போது வேண்டுமானாலும்,
எவ்வளவு துணைவிகளுடன் வேண்டுமானாலும் சேர்ந்து
வாழலாம்.

மிஞ்சி மிஞ்சிப் போனால், அவ்வாறு இணை சேர்ந்து,
பின்னர் பிரியும்போது, சம்பந்தப்பட்ட பெண்களுக்கும்,
அவர்கள் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் (இயற்றப்பட
விருக்கும் (?) புதிய சட்டப்படி உரிய நஷ்ட ஈடு –
compensation or maintenance money
கொடுக்கப்பட வேண்டும். இதைத்தவிர வேறு எந்தவித
கட்டுப்பாடுகளும் ஆண்களுக்கு இல்லை.
adultary, bigamy போன்ற வார்த்தைகளுக்கு
சட்ட புத்தகத்திலும், சமூகத்திலும் வேலையே இருக்காது !

ஆனால் இதன் விளைவாக பெண்கள் கதி என்ன ஆகும் ?

இத்தகைய திருமணம் இல்லா உறவுகளில்
பிறக்கப் போகும் குழந்தைகள் யாரிடம் இருக்கும் ?
குழந்தைகள் – தாயின் ரத்தத்திலும் சதையிலுமிருந்து
உருவானவை. எனவே தான் உணர்வுபூர்வமாக குழந்தைகள்
தந்தையை விட, தாயுடனே அதிகப் பிணைப்புடன்
இருக்கின்றன. ஆக, பொதுவாக, இந்த விதத்தில்
பிறக்கும் குழந்தைகள் தாயுடன் தான் இருக்கும்.

பிரிந்த பிறகு, ஆண் வேறு துணை தேடிக்கொள்வான்.
பெண்ணின் கதி ? குழந்தை அல்லது குழந்தைகளுடன்
வரும் பெண்ணை முழுமனதுடன் ஏற்று குடும்பம் நடத்த
எத்தனை ஆண்கள் முன்வருவார்கள் ?

maintenance allowance கொடுக்க பண வசதி
இருந்தால் போதும் – ஆண்கள் எத்தனை துணைகள்
வேண்டுமானாலும், எத்தனை வயதில் வேண்டுமானாலும்
தேடிக்கொள்ளலாம்.

ஆனால் இளமைப் பருவம் கடந்த பெண்கள்,
குழந்தைகளுடன் இருக்கும் பெண்கள் – நம் சமூகத்தில்
புதிய துணைகளைத் தேடிக்கொள்ள முடியுமா ?
புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியுமா ?
குழந்தைகளின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள
மறுக்கக்கூடிய பெண்களும் சிலர் இருக்கக்கூடுமே –
இவ்வாறு மாறிக்கொண்டே இருக்கும் ஜோடிகளுக்குப்
பிறக்கும் குழந்தைகளின் நிலை என்ன ஆகும் ?
தாய், தந்தை இருவரின் அரவணைப்பும் இல்லாமல்
அந்தக் குழந்தைகள் எப்படி வளரும் ?
யார் பொறுப்பில் இருக்கும் ? அத்தகைய
குழந்தைகளின் எதிர்காலம் தான் எப்படி பாதுகாப்பாக
இருக்கும் ?

இப்படி உறவுகளை மாற்றிக் கொண்டே போகக்கூடிய
ஆண்களின், பெண்களின் – முதுமைக்காலம் எப்படி
இருக்கும் ? முதுமையாலும், இயலாமையாலும்,
நோய்நொடிகளாலும் அவதிப்படும் அந்த காலகட்டம்
எவ்வளவு கொடுமையாக இருக்கும் ?

ஏகப்பட்ட அனுபவங்களுக்கும், பரிசீலனைக்கும் பிறகு
தான், சமூகத்தில் குடும்பம் என்கிற சம்பிரதாயம்
உருவானது. இப்பேற்பட்ட குடும்பம் என்கிற அமைப்பை
உடைக்க ஒரு சட்டம் உருவாக வேண்டுமா ?
அதற்கு உச்சநீதிமன்றம் உத்திரவு போட வேண்டுமா ?

இப்படி ஒரு தளர்த்தல் தேவை என்று
உணரப்பட்டிருக்குமானால் –
சமுதாயம் ஏற்கெனவே அதைச் செய்திருக்குமே !
இவ்வளவு சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ள சமுதாயத்திற்கு
இதைச் செய்யத் தெரியாதா ?
சமுதாயம் தேவையென்று கருதாத ஒரு சட்டத்தை இயற்ற
நீதிமன்றம் ஏன் உத்திரவு போட வேண்டும் ?

ஏற்கெனவே திருமணம் ஆனவர் என்று தெரிந்து கொண்டும்
இத்தகைய துணைவிகளாக இருக்க விரும்பி உடன்படும்
மிகச்சில எண்ணிக்கையிலான பெண்களைப் பாதுகாக்க
இத்தகைய சட்டங்கள் வந்தால் –

அது உண்மையில் மரபுகளை மீறத்துணியும் ஆண்களையும்
பெண்களையும் மேலும் ஊக்குவிப்பதாகவே முடியும்.
குடும்பங்களில் நிம்மதியும், அமைதியும், மகிழ்ச்சியும்
குலையும்.

உண்மையிலேயே பெண்களுக்கு மேலும் உதவக்கூடிய சட்டம்
ஒன்று தேவையென்றால் – அது, குடும்பச் சூழ்நிலைகளால்,
ஆண்களின் பொறுப்பற்ற தன்மைகளால் – பாதிக்கப்பட்டு
அதன் காரணமாக விவாகரத்து கோரும்
பெண்களுக்கு தகுந்த ஈட்டுத்தொகையுடன் விவாகரத்து
பெறும் முறையை மேலும் சுலபமாக்குவதாக இருக்க
வேண்டும். அதை விட்டு, திருமணம் செய்யாமலே சேர்ந்து
வாழ்வதை சட்டப்படியும் ஊக்குவிப்பது பெருங்கேட்டையே
உண்டு பண்ணும்.
நீதிமன்றம் உத்தேசிக்கும் சட்டங்களை யார் ஆதரிப்பார்கள் ?
அவர்கள் கூறும் காரணங்கள் என்னவாக இருக்கும் ?

அகில இந்திய அளவை விடுவோம் –
தமிழ் நாட்டைப் பொறுத்த வரை –
எனக்குத் தெரிந்த வரை –
பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போரில்-
நடிகர் கமலஹாசன், அவர் சகோதரர் சாருஹாசன்,
எழுத்தாளர்கள் ஞாநி,பிரபஞ்சன் ஆகியோரைத் தவிர
வேறு யாரும் –

விரும்பும் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கு குடும்பம்
என்கிற கட்டுப்பாடு தேவையில்லை என்று
வெளிப்படையாகக் கூறியதாக எனக்குத் தெரியவில்லை.

நான் கடந்த காலங்களில் – கமலஹாசன், ஞாநி ஆகிய
இருவருக்குமே மடல் அனுப்பி “குடும்ப அமைப்பு
வேண்டாமென்றால் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு
யார் பொறுப்பு ஏற்பார்கள் ? இதற்கு மாற்றாக நீங்கள் கூறும்
யோசனை தான் என்ன ?” என்று கேட்டிருக்கிறேன்.

ஆனால் இதுவரை விளக்கங்கள் ஏதும் வந்தது இல்லை..!
நான் ஒரு மிகச்சாதாரணமான மனிதன். எனக்கு பதில்
தர வேண்டாம். ஆனால் சமுதாயத்திற்கு அவர்கள் சில
ஆலோசனைகளை பொது மேடைகளில், மீடியாக்களில்
கூறும்போது அதற்கான விளக்கங்கள் தேவைப்படும்போது,
விளக்கம் கூறுவதும் அவர்கள் கடமை இல்லையா ?

இது ஒரு சமுதாயப் பிரச்சினை.
விவாதத்திற்குரிய பிரச்சினை.
நண்பர்கள் இது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று
மறுமொழியில் எழுதலாமே !

இந்த வலைத்தளத்திற்கு நிறைய பெண்கள் வருகை
தருகின்றனர். பொதுவாக அவர்கள் இந்த தளத்தில்
நிகழும் அரசியல் குறித்த விவாதங்களில் கலந்து
கொள்வதில்லை.

ஆனால் இது முக்கியமாக பெண்கள்,குழந்தைகள்
சம்பந்தப்பட்ட -சமுதாயப் பிரச்சினை. எனவே
பெண்களும் இந்த விஷயம் குறித்து தங்கள் கருத்துக்களை
மறுமொழி மூலம் பரிமாறிக் கொள்ளும்படி கேட்டுக்
கொள்கிறேன்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to தப்பான வழியை காட்டலாமா உச்சநீதி மன்றம் …?

  1. vinoth's avatar vinoth சொல்கிறார்:

    காவிரி மைந்தன் அவர்களே..
    —–
    இதை படித்து பார்க்கவும்…

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் வினோத்,

      5 வலைத்தளங்களுக்கான
      லிங்க் களை இங்கே
      கொடுத்திருக்கிறீர்கள்.

      தயவுசெய்து இந்த மாதிரி மற்ற
      வலைத்தளங்களுக்கு
      போக இங்கே லிங்க் ஏற்படுத்த
      வேண்டாம்.

      இந்த இடுகையில் உள்ள பொருள் குறித்து
      உங்களுக்கு எதாவது கருத்து சொல்ல
      வேண்டுமானால், அதைச் சுருக்கமாக
      உங்கள் வார்த்தைகளிலேயே இங்கே
      சொல்லவும்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  2. Mrs Renuka Natarajan's avatar Mrs Renuka Natarajan சொல்கிறார்:

    இந்த ஜட்ஜ்மெண்ட் பற்றி பேப்பரில்
    படித்தபோதே நீங்கள் சொல்வது போல
    எல்லாம் எனக்கும் தோன்றியது. ஆனால்
    சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்ட் பற்றி எல்லாம்
    விவாதம் செய்வது தவறு என்று தோன்றுகிறது.
    அதனால் விவரமாக எழுத முடியவில்லை.
    நீங்கள் சொல்லும் கருத்துக்கள் மிகவும் சரி
    என்பதுடன் நிறுத்திக்கொள்கிறேன்.
    உங்கள் வலைத்தளத்தில் வரும் கட்டுரைகள்
    எல்லாம் நன்றாக இருக்கின்றன.தொடர்ந்து
    இது போல் பொதுவான விஷயங்கள் பற்றி
    நிறைய எழுதுங்கள்.மிகவும் நன்றி.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      சகோதரி ரேணுகா நடராஜன்,

      உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

      நீதிமன்ற தீர்ப்புக்களுக்கு உள்நோக்கம்
      கற்பிப்பது தான் தவறு.

      சாதாரணமாக சரி-தவறு என்று விமரிசனம்
      செய்வதில் தவறு இல்லை.

      தொடர்ந்து உங்கள் கருத்துக்களை
      அவ்வப்போது பகிர்ந்து கொள்ளுங்கள்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  3. Ramya's avatar Ramya சொல்கிறார்:

    Hello Sir,
    Allowing a man to have relationship with more than one woman is reminiscent of male chauvinistic attitude.
    In such a case the victim is neither the man/woman but it is the children who are born into a bad situation. Since this will have a long term impact on the children, law needs to be enacted to protect children born in such a circumstance.Father and Mother(if an earning member) should be asked to submit a sum as fixed deposit for child’s future and education. But monetary matters apart,there is no guarantee to ensure a proper family setup for the child.
    On a larger scale,both the gender must be deterred from entering illegal relations. This is possible only with the help of a suitable law and its enforcement.
    Thanks
    Ramya

  4. vinoth's avatar vinoth சொல்கிறார்:

    @kavirimainthan
    வினவு தளத்தில் நடந்த விவாததை தான் லிங்க் கொடுத்தேன்.
    அதாவது .. எதிர் காலத்தில் குடும்பம் என்ற அமைப்பு இருக்காது ..

    பெண்களின் நலனுக்காக நீங்கள் பேசுவதால்..
    உண்மையில் பெண்களை அடிமைபடுத்துவது திருமணமும் குடும்பமுமே..

    பெண்களின் சுமை , கண்ணிருக்கு முக்கிய காரணம், முதலாளீத்துவமும்,
    அரசமைப்பும் அதை பாதுகாக்க்கும் சூழ்ச்சியாக உள்ள சாதிய, மத இன வேறுபாடுகளூமே.
    அவை வீழும் அறிகுறிகளே இத்தகைய நீதிமன்ற தீர்ப்புகள்…

    தீர்ப்புகளால் சமுதாயம் மாறவில்லை.. சமூதாயத்தால் தான் தீர்ப்புகள் மாறுகின்றன.
    1950 களில் விவாகரத்தும் ஜீவனாம்சமுமே மிகபெரிய போரட்டம் ஆனால் இன்று?
    1980ல் சேர்ந்து வாழ்ந்ததோம் என்று நீதி மன்றம் சென்றிருக்க முடியுமா?
    நீதி மன்றம் தான் வழக்கு நடத்தி விசாரித்து தீர்பளீத்திருக்குமா?

    சமூகம் மாறிவருகிறது காவிரி மைந்தன் அவர்களே.
    சுய சார்புடைய ஆண்/பெண் திருமணம் என்ற சில நிமிட சடங்குக்காக ..
    கசந்து விட்ட வாழ்கையை காலம் முழுவது சுமக்கவோ…

    அல்லது என்னவென்று தெரியாமல் ஏற்றுகொள்ளவோ தயாரில்லை.
    இது சமூக மாற்றம். சமூகத்தை ஒட்டி தான் அரசு அமைப்பு இயங்குகின்றது
    100% அடக்கியாள நினைத்தால் ஆட்சி அரை நிமிடம் கூட இருக்காது என்பது
    அரசுக்கு தெரிவதால் தான் … இந்த மாற்றம்.

    //“குடும்ப அமைப்பு
    வேண்டாமென்றால் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு
    யார் பொறுப்பு ஏற்பார்கள் ? இதற்கு மாற்றாக நீங்கள் கூறும்
    யோசனை தான் என்ன ?” என்று கேட்டிருக்கிறேன்.//

    இது மட்டுமல்ல குடும்பம் சிதையும்போது இன்னம் வயதானவர், நோயாளிகள், மன நிலை பிறழ்தோர், சுய வருமானம் அற்றோர் என பலரையும் பரமரிக்கவேண்டும்.

    அதை செய்ய ஊராட்சி நகராட்சி போன்ற உள்ளூர் அரசுடன் இணைந்த ஒரு சமூக அமைப்பை உருவாக்கி அதையே பொறுபேற்க செய்யவேண்டும் எதிர்கால குழந்தகள் அனைவருமே அதன் தயாரிப்பாக இருப்பர்.

    முழு உலகுமே இந்த முறையில் இயங்கும் நாள் அருகில் தான் இருக்கின்றது.

    அன்றே சாதி, மத இன வேறுபாடற்ற மானிட சமூகம் மலரும். பெண் விடுதலை சாத்தியப்படும்.

    இதையே அங்கும் எழுதி இருந்தேன். படித்து பார்த்துவிட்டு சரியா தவறா என்று எழுதி இருக்கலாம்.

    முழுமையாக படித்து பதிலளித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்க்கும்.
    படிக்காமல் லிங்க்குகளை எடிட் செய்து விட்டீர்கள் ……

    விமரிசனம் உங்கள் தளம்….. இதை பற்றி விசமர்சனம் செய்தால் உங்கள் மனம் புண்படும் என்பதால் … இத்துடன் விட்டுவிடுகிறேண்.

    @Renuka Natarajan
    //சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்ட் பற்றி எல்லாம்
    விவாதம் செய்வது தவறு என்று தோன்றுகிறது.
    அதனால் விவரமாக எழுத முடியவில்லை.//

    நெற்றிகண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டது..
    அதுவும் முழுமுதற்கடவுளான சிவனை எதிர்த்து வாதிட்ட தமிழ் பரம்பரை
    சுப்ரிம் கோர்ட்டு சொல்வது தவறு என்று சொல்லகூட திராணியற்றதாய் மாறிவிட்டதே…

    சுப்ரீம் கோர்ட்டில் இருப்பது கடவுளர் அல்லர். சுப்ரிம் கோர்ட் தீர்ப்பும் எற்கபடாமல் மேல் முறையீடு செய்யப்பட்ட வராலாறு கேள்விபட்டதில்லைய ரேனுகா அவர்களே?

    தவறு என்பதை தவறு என்று சொல்லவேண்டும் ..
    அப்போது தான் தவறு செய்பவர்கட்கு
    இதை அனைவரும் பார்க்கின்றனார் என்பது புலப்படும்
    அடுத்தமுறை அது போல் செய்ய யோசிப்பார்.

    இல்லை எனில் அவர் அடுத்த செயலை வலிவுடன் செய்வர்..
    பாதிப்பு நமக்கும் வரும்.

    உங்களின் வார்த்தகைளில் இருந்து நீதி மன்ற தீர்ப்பான சேர்ந்து வாழ்தலை
    நீங்கள் ஏற்றுகொள்ளவில்லை என்பது புரிகிறது..
    எதிர்காலத்தில் அதுவே வாழ்கை முறையாகும்.
    திருமணம் , குடும்பம் வழகொழியும். என்னை பொறுத்தவரை..
    நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு பகுதி சரி. இன்னம் விளக்கபடவேண்டியது நிறைய உள்ளது.
    பெண்கள் தவறே செய்யதவர் போலவும் எப்போதும் ஆண்கள் தவறு செய்பவர்போலவும் இருக்கிறது தீர்ப்பு..

    இது குறிப்பிட்ட வழக்கு வேண்டுமானல் பொருந்தலாம் . சட்டம் என்று வரும்போது தவறு செய்யும் பெண்களையும் தண்டிக்க வழிவகை செய்யவேண்டும்.

    இல்லையெனில் வரதட்சனை சட்டம் போல், குடும்பவன்முறை தடுப்பு சட்டம்போல் ,
    கள்ள காதலை எதிர்க்கும் கணவனை மிரட்டவும் கிரிமினல் பெண்கள் வரதட்சனை சட்டத்தை பயன்படுத்துவதுபோல் இதுவும் ஆகிவிட கூடும்.

    @ramya
    //On a larger scale,both the gender must be deterred from entering illegal relations. This is possible only with the help of a suitable law and its enforcement.
    Thanks//

    தெளிவான பார்வை கொண்டவர் என்பதை துல்லியமாக பதிவு செய்துள்ளீர்கள் ரம்யா.
    தவறு யார் செய்தாலும் தடுக்கபடவேண்டும். ஆனால் வரும் காலம் சமூகம்., அதை தொடர்ந்து சட்டமும் இதை செய்யும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் வினோத்,

      உங்கள் மறுமொழிக்கு விளக்கம் தர விரும்புகிறேன்.
      ஆனால் அதற்கு கீழ்வரும் தகவல்கள் தேவைப்படுகின்றன.
      கொடுக்க முடியுமா ?

      உங்கள் வயது..?
      திருமணம் ஆகி விட்டதா -இல்லையா ?
      ஆகி விட்டது என்றால் – குழந்தைகள் உண்டா?
      உண்டென்றால் எத்தனை ? எந்த வயதில் ?
      தனியாக வசிக்கிறீர்களா ?
      அல்லது தாய், தந்தை, சகோதர சகோதரிகள்
      யாருடனாவது சேர்ந்து வசிக்கிறீர்களா ?

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • Vinoth's avatar Vinoth சொல்கிறார்:

        எனக்கு வயது 37 . திருமணம் ஆகி 2 பையன்கள் 8 & 2 வயதில் .. தாய் தந்தையருக்கு நான் ஒரே மகன் .

        நாம் மனைவி குழந்தகளுடன் தனி குடும்பமாக வசிக்கிறேன்.

        நன்ற்,
        வினோத்

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          தகவல்களுக்கு நன்றி வினோத்,

          எல்லாம் தெரிந்தவன் என்கிற அர்த்தத்தில் –
          நான் இதை எழுதவில்லை –
          உங்களை விட வயதில் மூத்த ஒரு சிந்தனையாளன்,
          வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களிலும் விதம் விதமான போராட்டங்களை சந்தித்து, அவற்றால் செதுக்கப்பட்டவன்
          என்கிற முறையில் தான் இதை எழுதுகிறேன்.

          நானும் இளமையில் கம்யூனிச சித்தாந்தங்களால்
          கவரப்பட்டு தீவிரமாகச் செயல்பட்டவன் தான்.

          வயதாக ஆக, வாழ்க்கையில், தொழிலகத்தில்,
          பல்வேறு சம்பவங்களில், பெற்ற அனுபவங்கள்
          இவை நடைமுறைக்கு ஒத்துவராதவை என்பதை
          நன்றாகவே புரியவைத்தன. அபூர்வமாக ஒரு சிலருக்கு
          இது கைகூடி வந்தது. தனிப்பட்ட முறையில் அவர்கள்
          வெற்றி பெற்றார்கள் -ஆனால் சித்தாந்தம் தோல்வி
          அடைந்து விட்டது.

          இந்த உலகில் நடைமுறை வாழ்க்கை முற்றிலும்
          வேறுபட்டது. நீங்கள் சொல்லும் எதுவுமே
          நடைமுறையில் சாத்தியமில்லை.

          700 கோடி மக்கள் வாழும் இந்த உலகத்தின்
          எந்த மூலையிலாவது, நீங்கள் சொல்கிறபடி ஒரு
          வாழ்க்கை முறை அங்கீகரிக்கப்பட்டு, நடைமுறையில்
          இருக்கிறதா சொல்லுங்கள் பார்ப்போம். யாராவது
          இத்தகைய முறைகளை பரீட்சித்து பார்த்திருக்கிறீர்களா
          சொல்லுங்கள் பார்ப்போம்.

          ஏன் – உங்களாலேயே இதுபோல் வாழ முடியுமா ?
          உங்கள் குழந்தைகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்து
          விட்டு அதைப்பற்றி எந்தவித வாட்டமும் இல்லாமல்
          வாழ உங்களால் முடியுமா ?
          உங்களால் உங்கள் தாய் தந்தையைப் பற்றி,
          மனைவியைப் பற்றி – கவலைப்படாமல், அக்கரை
          கொள்ளாமல் இருக்க முடியுமா ?

          அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அத்தை, மாமா, தாத்தா, பாட்டி என்கிற உறவுகள் இல்லாமல் வாழ்வதும் ஒரு வாழ்க்கையா ?
          எதற்காக அத்தகைய ஒரு வாழ்க்கை ?

          உங்கள் மனைவியிடம் இது போன்ற விஷயங்களை
          என்றாவது பேசி இருக்கிறீர்களா ? உங்கள் பெற்றோர்களிடம்
          பேசிப்பார்த்திருக்கிறீர்களா ? அவர்கள் இத்தகைய
          ஒரு வாழ்க்கை முறையைப் பற்றி எத்தகைய கருத்து
          கொண்டிருக்கிறார்கள் ?

          120 கோடி இந்திய மக்களை விடுங்கள்.
          குறைந்த பட்சம் 100 பேரை இந்த வாழ்க்கை முறையை
          ஏற்றுக் கொள்ளும்படி செய்ய உங்களால் முடியுமா ?

          இவையெல்லாம் நினைப்பதற்கு புரட்சிகரமாகத் தெரியும்.
          ஆனால் அத்தோடு சரி. நடைமுறைக்கு உதவாது.

          உன் ஜாதி பெரியதா – என் ஜாதி பெரியதா,
          உன் மதம் ஒசத்தியா – என் மதம் ஒசத்தியா –
          என்பது போன்ற எதற்கும் உதவாத அற்ப விவாதங்களில்
          ஈடுபட்டு நம் சக்தியை வீணாகச் செலவழிக்காமல் –

          ஜாதி, மத வேறுபாடும், உயர்ந்தவன்-தாழ்ந்தவன்
          என்கிற வித்தியாசங்களும், ஏழை-பணக்காரன் என்கிற
          பாகுபாடும் இல்லாத ஒரு சமுதாயத்தை நிச்சயம்
          நம்மால் உருவாக்க முடியும். அதற்கு தன்னலமற்ற
          மக்கள் நிறைய பேர் உருவாக வேண்டும் – அந்த
          லட்சியத்திற்காக அயராமல் உழைக்க வேண்டும்.

          ஏற்கெனவே பலர் அந்த விதத்தில் செயல்பட்டுக்கொண்டு
          தான் இருக்கிறார்கள். நீங்களும் அந்த வரிசையில்
          சேர்ந்து கொண்டு நடைமுறை சாத்தியமான ஒரு நல்ல
          சமுதாயத்திற்காக லட்சிய தாகத்துடன் உழையுங்கள்.

          -வாழ்த்துக்களுடன்,
          காவிரிமைந்தன்

          • vinoth's avatar vinoth சொல்கிறார்:

            தங்கள் பதிலுக்கு நன்றி
            நான் சொன்னது எதிர் கால சாத்திய கூறு …
            இது நிகழ 50 வருடம் கூட ஆகலாம்.

            இதை பற்றி மற்றவர்கள் கருத்தை கேட்போம்..
            நான் கேட்ட அளவில் .. என் மனைவி உட்பட..
            யாரும் இப்படி நிகழ சாத்தியம் இல்லை என்று சொல்லவில்லை.

            பார்ப்போம் .. காலம் யார் கையிலும் இல்லை.
            முடிந்தால் .. இந்தமாதிரி நிகழ சாத்தியம் இருக்கிறதா.. என்று ஒரு இடுகை வைத்து

            வாசகர் என்ன பதிலளிக்கின்றனர் என்றூ பாருங்கள்.
            நன்றி
            விணொத்

  5. vinoth's avatar vinoth சொல்கிறார்:

    லிங்க் கொடுக்க காரணம் நேரம் கருதி… அதஏ பொருளை மீண்டும் டைப் செய்யும் நேரம் ..
    முதலில்யே விவாதித்த விஷயம் என்பதால்.

    ஒத்த மற்றும் எதிர் கருத்துகளை அவர்கள் வார்த்தைகளிலேயே படிக்க வாய்ப்பு கிடைக்கும்
    என்பதாலும்..

    அதற்கும் மறு மொழி கொடுக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதாலுமே…
    ஒரு முழு விவாதமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது ..

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் வினோத்,

      இந்த வலைத்தளத்தில் எழுதப்படும் கருத்துக்களால்,
      உண்டாகும் விவாதம் இங்கு தான் நடைபெற வேண்டும்.
      நீங்கள் வேறு எங்காவது எழுதி இருப்பதை போய்ப்பார்த்து விட்டு வந்து என்னாலும் சரி, மற்ற நண்பர்களாலும் சரி, இங்கு விவாதம் செய்ய முடியாது.

      இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • Vinoth's avatar Vinoth சொல்கிறார்:

        தளத்தின் மாடரேட்டர் என்றமுறையில் கொள்கை வகுப்பு உங்கள் உரிமை..
        எனது கருத்தை சொன்னனேன் இறுதி முடிவு உங்களுடையதே..
        நன்றி
        வினோத்

  6. palaniappan's avatar palaniappan சொல்கிறார்:

    தவறு யார் செய்தாலும் தடுக்கபடவேண்டும். ஆனால் வரும் காலம் சமூகம்., அதை தொடர்ந்து சட்டமும் இதை செய்யும்

  7. புரட்சி தமிழன்'s avatar புரட்சி தமிழன் சொல்கிறார்:

    சேர்ந்து வாழ்பவர்களுக்கு குடும்ப அட்டைக்கு பதிலாக ரேசன் அட்டை வழங்கப்படுமா? ஒருவர் எத்தனைபேருடன் சேர்ந்து வசிக்கிறார் என்று அரசு ஏதாவது கணக்கு வைத்துக்கொள்ள ஏற்ப்பாடு செய்துள்ளதா? ஒரு பெண் திருமணமாவதற்கு முன் தந்தை பெயரையும் திருமணமான பின் கணவன் பெயரையும் பயன்படுத்துவார்கள் சேர்ந்துவாழ்பவனை என்னவென்று அழைப்பது, ஒரு பெண் அல்லது ஆண் எத்தனைபேருடன் ஒரே நேரத்தில் சேர்ந்து வாழலாம் இதற்க்கு ஏதாவது நிபந்தனை உண்டா? திருமணமாகமல் சேர்ந்துவாழ்ந்த பெண் வேறு ஒருவனை சேர்ந்து வாழ்ந்ததை மறைத்து திருமணம் செய்து கோண்டு பின்னாலில் அது கணவனுக்கு தெரியவந்தால் அந்த பெண் செய்தது குற்றமா இல்லையா?.

    • Vinoth's avatar Vinoth சொல்கிறார்:

      குடும்ப அமைப்பு மாறும்போது இதை போல பல கேள்விகட்கு விடை கண்டறிபப்பட வேண்டும்.

      குடும்ப அட்டை.. ரேசன் தேவைப்படுமா என தெரியவில்லை. ஏனேனில்.. குடும்பத்தின் பொறுப்பை அரசை போன்ற அமைப்பே மேற்கொள்ள வேண்டி இருக்கும். மேலும் சேர்ந்து வாழ்பவர் பொருளாதார சுயசார்புடைவர்களாக இருப்பர்.. அவர்கட்கு உதவிகள் தேவைபடாது.. அவர்களே அனைவருக்கும் உதவவேண்டிய கடைமை உள்ளவராவர்.

      பெண் பெயர் .. மூக்கிய பிரச்சனையாக இருக்கபோவதில்லை..ஏனேன்றால்.. இப்போது இந்த பெண் இன்னாரின் மகள்… இன்னானின் மனைவி என அடையாளம் காட்டவே பெயர் மாற்றம் தேவைப்படுகின்றது .. இதன் மூலமும் சொத்துடைமையே.. தன் சொத்து தன்க்கு பின் தன் வாரிசுக்கு மட்டும் போக விரும்புபவர்.. தன்க்கு மட்டும் வாரிசை பெற்று தர பெண்ணை அடிமையக்கும் முறையே திருமணம்..

      அதை உலகிற்கு அறிவிக்கவே… இந்த சொத்து இன்னருடையது .. என்று அறிவிக்கவே பெயர் மாற்றம். ஒர் நிறுவனம் விற்கப்பட்ட பின் வாங்கியவர் தன் நிறுவத்தின் பெயரில் அதை நடத்துவதில்லையா அதேபோல்..

      இதில் அப்படிபட்ட ஏதும் இல்லை என்பதால் பெயர் மாற்றம் தேவைப்படுமா என தெரியவில்லை.

      மூலமான கேள்வியை நீங்கள் விட்டுவிட்டீர்கள்.. குடும்பம் சிதைய ஆரம்பமாக கலப்பு மணம், சாதி தவிர்ப்பு மணம் சகஜமாவதுபோல் விவாகரத்து சகஜமாவது போல்.. சில காலத்தில் சேர்ந்து வாழ்வதும் பிரிவதும் சகஜமாகும்.

      அப்போது சாதி மத இன.. அடிப்படைகள் தகரும்.. மிக முக்கியமாக சொத்துகள் அனைத்தும் பொதுவாகும்.. அதன் முதல் பகுதியாக பெண்கள் வழி சொத்துரிமை உண்டாகும் . பின் பொது சொத்தாகும்.

      அனைத்து அரசுகளுக்கும், முதலாளிகளுக்கும் தூக்கதை கெடுக்கும் கசப்பு மருந்து இது.. ஆனால் கண்ணில் அலைபாயும் பெண்களுக்கும், வறிவர்களுக்கும் அமிர்தம் போன்றது.

      சேர்ந்து வாழ்வதில் பல பல சிக்கல்கள் வரும்..

  8. Vinoth's avatar Vinoth சொல்கிறார்:

    சேர்ந்து வாழ்வதில் பல பல சிக்கல்கள் வரும்..

    அனைத்திற்கும் விடைகண்டறியப்படும்.

  9. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    நண்பர் வினோத்…
    மன்னிக்matravarகவும்..விநோதமாக இருக்கிறது உங்கள் கோட்பாடு..
    எதிர்காலத்தில் உறவுமுறைகள் முற்றிலும் அழிந்து விடும்.ஒரு ஆணும் பெண்ணும் மனம் இசைந்து “சேர்ந்து வாழ்ந்து” குட்டி போடுவர்.அவைகளை அரசே பொறுப்பேற்று வளர்க்கும்.அவைகளுக்கு தன தாய் தந்தை விவரங்கள் தெரியாது.
    இதனால் சகோதர சகோதரிகளும் “சேர்ந்து” வாழும் வாய்ப்பும் அதிகம் ஏற்படும்.
    தலை சுற்றுகிறது..ஆண்டவன் காப்பாற்றுவாராக,,

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.