கெஜ்ரிவாலை நம்பலாமா ..? டில்லியில் பாஜக என்ன செய்ய வேண்டும் …?

கெஜ்ரிவாலை நம்பலாமா ..? டில்லியில் பாஜக
என்ன செய்ய வேண்டும் …?

நான்கு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
வெளிவந்த நிலையில், டில்லியில் மட்டும்
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. யாரும் –
யாருடனும் சேரத்தயார் இல்லை –
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைக்க முடியாத நிலை.

மொத்தம் -70

பாஜக -32
ஆம் ஆத்மி -28
காங்கிரஸ் -8
ஜ.த.-1
சுயேச்சை -1

பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில்,
ஆம் ஆத்மி கட்சியும் ஒத்துழைப்பு தரத்தயாராக இல்லாத
போது – பாஜக ஆட்சி அமைக்க முயற்சி செய்யவே கூடாது.
(பாஜக வும் அதுபோன்ற விருப்பத்தை இதுவரை
தெரிவிக்கவில்லை.)

ஆம் ஆத்மி கட்சியோ – காங்கிரஸ், பாஜக ஆகிய இரு
கட்சிகளிடமும் ஆதரவு கோரவும் மாட்டோம் –
ஆதரவு கொடுக்கவும் மாட்டோம் என்று சொல்லி விட்டது.

இந்த நிலையில் – கவர்னர் ஆட்சியும்,
பின்னர் மீண்டும் தேர்தலும் தான் கண் முன்
தோன்றும் தீர்வு.

ஆனால் – இது சரியான முடிவாக இருக்க முடியாது.
உடனே இன்னொரு தேர்தல் என்பது –
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீர்ப்பு கொடுத்திருக்கும் டில்லி
மக்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையாகி விடும்.

டில்லி மக்கள் 70 இடங்களில், 60 இடங்களை
எதிர்க்கட்சிகளுக்கு கொடுத்ததன் மூலம் காங்கிரசுக்கு
எதிரான தங்கள் எண்ணத்தை தெளிவாக வெளிப்படுத்தி
இருக்கிறார்கள்.

எனவே காங்கிரஸ் அல்லாத – உருப்படியான ஒரு
ஆட்சியை அமைக்க வேண்டியது பாஜக மற்றும்
ஆம் ஆத்மி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் உள்ள
அடிப்படைக் கடமை. இதற்கு அவர்கள் கூட்டணி
அமைத்தால் தான் முடியும் என்பதில்லை.

வேறு என்ன செய்யலாம் ..?

aap manifesto
அதில் நுழையும் முன் –
ஆம் ஆத்மி கட்சியைப் பற்றியும்,
அதன் நிறுவனத்தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் பற்றியும்
சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

இரண்டு – மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அர்விந்த்
கெஜ்ரிவாலை பற்றி டில்லிக்கு வெளியே யாருக்கும் தெரியாது.
டில்லியில் அவர் பணியாற்றிய ஒரு தொண்டு நிறுவனத்தின்
காரணமாக சிலருக்கு மட்டும் தெரியும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு -மத்திய அரசில்
ஊழல்கள் வரிசையாக ஆதர்ஷ், 2ஜி, காமன்வெல்த்
கேம்ஸ் -என்று வெளிப்படத் துவங்கியதும் – இந்தியா
முழுவதும் மக்களும், மீடியாக்களும், கொதித்தெழுந்து
மத்திய அரசின் ஊழல் நடவடிக்கைகளை
எதிர்க்கத் துவங்கினார்கள்.

அண்ணா ஹஜாரே கடந்த 30 ஆண்டுகளாக
மஹாராஷ்டிராவில் ரலேகான் சித்தி கிராமத்தில்
இருந்து கொண்டு ஆற்றிய மக்கள் நலப்பணிகள் காரணமாக
மஹாராஷ்டிர மக்களின் அபிமானத்தையும்,
மரியாதையையும் பெற்றிருந்தார்.
அவர் டில்லியை மையமாகக் கொண்டு அகில இந்திய
அளவில் ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய அளவில்
செயல்பட வேண்டும் என்று பல சமூக ஆர்வலர்கள்
(team anna )விரும்பினர்.

ஜஸ்டிஸ் சந்தோஷ் ஹெக்டே, கிரண் பேடி, பிரசாந்த்
பூஷன்,ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்ஜி ஆகியோரும், கூடவே
அர்விந்த் கெஜ்ரிவாலும் அதில் அடங்குவர்.

இதில் – கெஜ்ரிவால் தன் தனிப்பட்ட ஆளுமைத்திறன்,
புத்திசாலித்தனம், பேச்சுத் திறமை, வயது
ஆகிய காரணங்களால் முன் வரிசையில் நின்றார்.

India Against Corruption இயக்கம்
மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றது.
ஊழல் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும்
விரைவாக விசாரித்து தண்டிக்க “ஜன் லோக்பால்” சட்டம்
தேவை என்பது முதல் பெரிய கோரிக்கையாக மத்திய அரசின்
முன் வைக்கப்பட்டது.

அதை ஏற்று செயல்பட மத்திய அரசு வெளிப்படையாக
முன்வராத நிலையில் – அதனைத் தொடர்ந்தும்,
அதன் பிறகும் – டில்லியில் நடந்த அண்ணா ஹஜாரேயின்
உண்ணாவிரத போராட்டங்கள் இந்தியாவையே குலுக்கியது.

இந்தியாவின் பெரிய நகரங்கள் அனைத்திலும்
அண்ணா ஹஜாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கத்திற்கு
படித்த, நடுத்தர மக்களிடையே மிகப் பெரிய, பரவலான
ஆதரவு உண்டானது. (இதை நான் விவரமாக சொல்ல
வேண்டிய அவசியம் இல்லை – அனைவருக்கும்
தெரிந்ததே ). இந்த இயக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய
இமேஜ் உருவானது. மீடியாக்களும் ஆதரவு கொடுத்தன.
ஆனால் – ஒரு கட்டத்தில், தடாலென்று
உண்ணாவிரதங்களால் பலன் ஏதும் கிடைக்கவில்லை.
இந்த இயக்கமே
தீவிர அரசியலில் இறங்குவது தான் ஊழலை ஒழிக்க
ஒரே வழி என்கிற கருத்தை கெஜ்ரிவால் முன் வைத்தார்.
அண்ணா ஹஜாரே இதை அரசியல் இயக்கமாக மாற்ற
ஒத்துக்கொள்ளாத நிலையில் –

கெஜ்ரிவால் தானும், தன்னைச் சேர்ந்தவர்களும்
புதிய அரசியல் கட்சியை -ஆம் ஆத்மி பார்ட்டி (சாதாரண
மனிதனின் கட்சி) என்கிற பெயரில் துவக்குவதாகவும்,
மிகுந்த வேதனையுடன், வேறு வழியின்றி
அண்ணா ஹஜாரேயைப் பிரிவதாகவும்,
வரவிருக்கும் டில்லி சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சி
போட்டியிடும் என்றும் அறிவித்தார்.

(டில்லிக்கு வேண்டுமானால் இது புதிதாக இருக்கலாம்-
ஆறு பத்தாண்டுகளுக்கு முன்னரே தமிழகம்
இத்தகைய ஒரு சூழலை சந்தித்து விட்டது …! )

ஓட்டு அரசியலில் தனக்கு சம்மதமில்லையென்றும்,
புதிய அரசியல் கட்சிக்கு தன் பெயரையோ,
India Against Corruption இயக்கத்தையோ
பயன்படுத்தக் கூடாது என்று அண்ணா ஹஜாரே
கண்டிப்பாகவே தெரிவித்து விட்டார்.

இங்கு ஒரு முக்கியமான விஷயம் கவனிக்கப்பட
வேண்டி இருக்கிறது.
அண்ணா ஹஜாரே மட்டுமல்ல.
ஊழல் ஒழிப்பு இயக்கம் அரசியல் கட்சியாக மாறினால்,
ஓட்டு பெறுவதற்காக
பல விஷயங்களில் விட்டுக்கொடுக்க
(compromise பண்ணிக்கொள்ள ) வேண்டி இருக்கும்.
எனவே அரசியல் அதிகாரங்களிலும், தேர்தல்களிலும்
தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் –

எந்த கட்சி அதிகாரத்திற்கு வந்தாலும்,
எந்த ஆட்சி ஊழலில் ஈடுபட்டாலும்,
அவர்களை எதிர்த்து நேர்மைக்காகவும்,
நியாயத்திற்காகவும் -செயல்படக்கூடிய
ஒரு சுதந்திரமான மக்கள் சக்தி இயக்கமாகவே எப்போதும்
இருக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின்
விருப்பமாக இருந்தது.(என்னுடைய விருப்பமும் அதுவே)

கெஜ்ரிவாலின் நோக்கம் குறுகியதாக இருந்ததாகவே
தோன்றுகிறது. அவருக்கு பொறுமை இல்லை. உடனடியாக
அரசியலில் இறங்கி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதில்
ஆர்வம் காட்டினார். அவர் கூறிய காரணங்கள் ஏற்றுக்கொள்ள
கூடியதாக இல்லை.

டில்லி மாநில சட்டமன்ற தேர்தலில் ஈடுபடுவதன் மூலம்
அகில இந்திய அளவில் ஊழலை எப்படி ஒழிக்க முடியும் ?

“ஜன் லோக்பால்” என்பது மத்திய அரசால்,
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு
அகில இந்திய தேவை. அந்தத் தேவை
டில்லி சட்டமன்றத்தை கைப்பற்றுவதன் மூலம்
எப்படி நிறைவேறும் ?

கெஜ்ரிவால் பெற்ற புகழ் – அண்ணா ஹஜாரேயின்
தலைமையில் நிகழ்ந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில்
பங்கு கொண்டதால் வந்த புகழ்.அந்த புகழையும்,
அண்ணா ஹஜாரேயுடன் தனக்கு இருந்த நெருக்கத்தையும்
முதலீடாக்கியே கெஜ்ரிவால் தன் கட்சியைத் துவக்கி
இருக்கிறார்.

லட்சக்கணக்கான மக்கள் மிகத்தீவிரமாக பங்குகொண்ட
அண்ணா ஹஜாரேயின் போராட்டங்கள் அனைத்தும்
டில்லியில், ஜந்தர்மந்தரிலும், ராம்லீலா மைதானத்திலும்
நடைபெற்றதால் டில்லி மக்களின் மனதில் கெஜ்ரிவாலின்
பின்னணியில் அந்த போராட்டங்கள் இன்னும் நினைவில்
நிற்கின்றன.
இப்போது கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டில்லியில்
பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கான காரணங்களை
கீழ்க்கண்டபடி வரிசைப்படுத்த இயலும் –

1)ஊழல் ஒழிப்பு இயக்கத்தின் போராட்டங்கள் இன்னும்
டில்லி மக்களின் மனதில் நிற்பது. அதில் முக்கிய பங்கு
ஏற்றவர் என்கிற முறையில் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு
ஏற்பட்டிருக்கும் செல்வாக்கு –
(கெஜ்ரிவால் கட்சியினரின் வெள்ளைத் தொப்பி
ஒன்றே போதுமே அண்ணா ஹஜாரேயை நினைவுபடுத்த.!)

2) நிஜமாகவே அவர் கட்சியை வெளிப்படைத்தன்மை
உடையதாக அமைத்திருப்பது –

3) கட்சியின் நன்கொடை விவரங்களை,
இதர நடவடிக்கைகளை – வெளிப்படையாக
வலைத்தளத்தில் ஏற்றி இருப்பது –

4) இவற்றை   மட்டும்   நினைத்து டில்லி மக்கள்
கெஜ்ரிவாலுக்கு ஓட்டளிக்கவில்லை. இன்னொரு
முக்கியமான விஷயம் இருக்கிறது. அதை மீடியாக்கள்
கவனிக்கவில்லை.

டில்லி மக்களுக்கு உடனடியாக பலன் அளிக்கக்கூடிய
பல சலுகைகளை அவர் அறிவிப்பில் அள்ளி வீசினார் –
-மின்சக்தி விலையை (electricity bill )
பாதியாக (50 %) குறைப்பதாக,

– டில்லி முழுவதும் இலவசமாக
அத்தனை குடும்பங்களுக்கும்
தினமும் குறைந்த பட்சம் 700 லிட்டர்
நல்ல தண்ணீர் அளிப்பதாக,

-காய்கறிகளின் விலையை பாதியாக
(50%) குறைப்பதாக,

-பெண்களுக்கான தனி கமாண்டோ உதவி,

-தரமான இலவச சுகாதார, கல்வி வசதிகள்,
சாதாரண மக்களுக்கு கட்டுப்படக்கூடிய செலவில்
வீட்டு வசதிகள்…

-காண்ட்ராக்ட் வேலைகள் ஒழிக்கப்பட்டு,
ஊழியர்கள் அனைவரும் நிரந்தரமாக
அரசு வேலையில் அமர்த்தப்படுவதாக…

கெஜ்ரிவால் வெற்றி பெற இந்த வாக்குறுதிகளும்
மிகப்பெரிய காரணங்களாக இருந்துள்ளன.

இந்த நிலையில் கெஜ்ரிவாலைப் பற்றிய சில தகவல்கள்
பாதகமாகவும் உள்ளன-

– பிற்காலத்தில், தீவிர அரசியலில் இறங்குவது என்கிற
உள்நோக்கத்துடனே அண்ணா ஹஜாரேயின் இயக்கத்தில்
முக்கிய பங்கேற்றார் என்கிற கணிப்பு.

-அவரது தற்போதைய டில்லி சட்டமன்ற வேட்பாளர்கள்
சிறப்பானவர்கள் அல்ல என்கிற தகவல். (குறைந்த பட்சம்
இரண்டு போக்கிரிகள், 8 கோடீஸ்வரர்கள் )

– டில்லி முதலமைச்சர் ஆவது என்கிற அளவிற்கு
தன் வட்டத்தை, எல்லையை குறுக்கிக் கொண்டது.

– நன்கு ஆங்கிலம் பேசத்தெரிந்த இவர், பெரும்பாலும்
இந்தியிலேயே பேசுகிறார். டில்லி ஆங்கில
தொலைக்காட்சிகளில், ஆங்கில பேட்டிகளிலும் கூட –
வேண்டுமென்றே இந்தியில் பதில் அளிக்கிறார்.

இதற்கான காரணம் – இது தனது தற்போதைய
ஆதரவாளர்களுக்கு போய்ச்சேர வேண்டும் என்பதாகத்
தான் இருக்க முடியும். அகில இந்தியா என்கிற பார்வை
இருந்தால் – இவர் ஆங்கிலத்தில் கேட்கப்படும்
கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் தான் பதில் சொல்லி
இருப்பார் ?
– எப்போது delhi chief minister candidate
என்கிற உருவாக்கத்துக்குள் தன்னை இருத்திக் கொண்டாரோ
பிறகு இவர் அகில இந்திய அரசியல் பேசுவது இயலாத
காரியம். அகில இந்திய அளவில் இவரது கட்சியை
விரிவாக்குவதும் நடக்கவே இயலாத ஒரு விஷயம்.

(- சென்னையில் ஆம் ஆத்மி பார்ட்டிக்கு என்ன ஓட்டு
கிடைக்கும் ? -யோசிக்கவே முடியவில்லை !)

– எந்த ஒரு முயற்சியையும் துவக்கி,பாதியில் விட்டு
விட்டு அடுத்த விஷயத்திற்கு போய் விடுகிறார் –
(வாத்ரா ரியல் எஸ்டேட் விவகாரங்கள்,
சல்மான் குர்ஷித்/மனைவி சம்பந்தப்பட்ட
மாற்றுத் திறனாளிகளுக்கான நிதியில் சுரண்டல்,
HDFC வங்கியில் ஹவாலா மோசடி,
அம்பானி சகோதரர்களின் ஸ்விஸ் வங்கிக் கணக்கு…)
எல்லாமே துவக்கியதோடு சரி …! மேலே தொடரவே
இல்லை.

– இதில் மிகப்பரிதாபமான விஷயம் –
இவரை உருவாக்கிய அண்ணா ஹஜாரே, ரலேகான் சித்தி
கிராமத்தில் “ஜன் லோக்பால்” சட்டத்தை கொண்டு வர
வலியுறுத்தி –

இன்று முதல் மீண்டும் கால வரையற்ற உண்ணாவிரதம்
துவங்குகிறார். கெஜ்ரிவாலும் அவரது ஆதரவாளர்களும்
இதைக் கண்டு கொள்ளவே இல்லை …!
அவர்கள் அந்த அளவிற்கு டில்லி அரசியலில் “பிஸி”.!

எனவே – அர்விந்த் கெஜ்ரிவால் சம்பந்தப்பட்ட வரையில்
அவரது உள்நோக்கம் சந்தேகத்திற்குரியதாகவே இருக்கிறது.

அர்விந்த் கெஜ்ரிவால் கேள்விக்குரியவர் தான் ..!
ஒரு வேளை நமது சந்தேகம் தவறாகக் கூட இருக்கலாம்.

இந்த சந்தேகத்தை அவரது எதிர்கால நடவடிக்கைகள்
மட்டும் தான் தீர்த்து வைக்க முடியும்.

அவர் நேர்மையாக,
நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை தான்,
அவற்றை செயல்படுத்த முடியுமென்று நம்பித்தான்
கொடுத்தாரா அல்லது தேர்தலில் ஜெயிக்க வேண்டும்
என்பதற்காக அவை அள்ளி விடப்பட்டனவா ?

டில்லியைப் பொறுத்த வரையில் பாஜக கெஜ்ரிவால்
எந்த அளவிற்கு உண்மையானவர் என்பது நிரூபணமாகும்
வரையில் பொறுமையாக இருக்க வேண்டும்.

அவர் தன் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு சந்தர்ப்பத்தை
ஏற்படுத்திக் கொடுத்து, அவர் செய்கிறாரா இல்லை
நழுவி விடுகிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள
வேண்டும்.
அர்விந்த் கெஜ்ரிவால் உண்மையானவராக இருந்தால் –
தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அவருக்கு
ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்துப் பார்க்க வேண்டும்.
இது டில்லி மக்களின் விருப்பம் கூட என்பதை
பாஜக கருத்தில் கொள்ள வேண்டும்.

தற்போது, பாஜக வால் ஆட்சிப் பொறுப்பை ஏற்க
முடியாத நிலையில், அடுத்த பெரிய கட்சி என்கிற
முறையில் ஆம் ஆத்மி கட்சியை மைனாரிடி அரசாக
பொறுப்பேற்க வழி விட வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சி ஆதரவு கேட்டாலும், கேட்காவிட்டாலும்
பாஜக இதைச் செய்ய வேண்டும்.

ஆம் ஆத்மி கட்சி டில்லியில் ஆட்சி அமைக்க தான்
தடையாக இருக்காது என்றும் –
குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு
பாஜக சட்டமன்றத்தில் அந்த ஆட்சிக்கு
எதிராக செயல்படாது
என்றும் வாக்கு கொடுத்தால் இது நடக்கலாம்.

இதை ஆம் அத்மி கட்சி தட்டிக்கழிக்காமல்
ஆட்சிப் பொறுப்பை ஏற்க முன்வர வேண்டும்.
டில்லி மக்களுக்கு தான் கொடுத்த வாக்குறுதிகளை
நேர்மையாக நிறைவேற்ற முன்வர வேண்டும்.

இதை கூட்டணி என்றோ, உள்ளேயிருந்தோ, வெளியே
இருந்தோ ஆதரவு என்றெல்லாமோ வகைப்படுத்த வேண்டிய
அவசியமே இல்லை.

ஆறு மாதங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆட்சி செய்ய
வாய்ப்பு கொடுத்து, தன் வாக்குறுதிகளை அது எந்த
அளவிற்கு செயல்படுத்துகிறது என்று பார்க்கலாம்.

இது -சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக
தீர்ப்பளித்த டில்லி மக்களுக்கு செய்யப்படும்
ஒரு நியாயமாக இருக்கும்.

கெஜ்ரிவால் எந்த அளவிற்கு உண்மையானவர் என்று
தெரிந்து கொள்ளவும் இது உதவும்.
அவர் தவறானவர் இல்லை என்றால் – அவர் அரசியல்
பொறுப்புகளுக்கு வருவதில் எந்த தவறும் இல்லை.

பாஜக வும், மக்கள் ஆதரவான செயல்பாடுகளுக்கு
தங்கள் கட்சி குறுக்கே இல்லை என்பதை தெளிவுபடுத்தலாம்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to கெஜ்ரிவாலை நம்பலாமா ..? டில்லியில் பாஜக என்ன செய்ய வேண்டும் …?

  1. GOPALASAMY's avatar GOPALASAMY சொல்கிறார்:

    THIS IS THE CORRECT AND PRACTICAL SOLUTION. BJP SHOULD GIVE UNCOONDITIONAL SUPPORT TO KEJRIVAL FOR SIX MONTHS AND KEJRIVAL SHOULD COME FORWARD TO TAKE UP THE CHALLENGE.

  2. naren's avatar naren சொல்கிறார்:

    Super article.

  3. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    எல்லாம் சரி ஐயா, அந்த மோடி அலை மோடி அலை என்று சொல்லிக்கொண்டிருந்தார்களே அது என்னாச்சு? அந்த அலை துடைப்பக்கட்டைக்கு முன்னாலேயே புஸ்ஸாயிடுச்சு!
    நீங்க சொல்ற லாஜிக்-பிரகாரம் பார்த்தால், முதல் இரு கட்சிகளும் ஆட்சி அமைக்க விரும்பாதபட்சத்தில் மூன்றாவது “மிகப்பெரிய” கட்சியான காங்கிரஸ்ஸை அழைத்து அடுத்த ஆறு மாதங்களுக்கு டெல்லியை ஒப்படைத்துவிடலாமா?
    நம்ம ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலவீனம் இதுதான்.
    டெல்லி தேர்த்தல் முடிவுகள் நம் ஜனநாயகத்தில் சிறிதேனும் மாற்றம் ஏற்படுத்துமேயானால் கேஜ்ரிவாலால் கிடைக்கும் நன்மையாக இருக்கும். தேர்தல் கமிஷன் கவனிக்குமா?

    • எழிலன்'s avatar எழிலன் சொல்கிறார்:

      திரு சைதை அஜீஸ்,

      உங்கள் மறுமொழியில் கருத்தூட்டத்தை விட
      வெறுப்பூட்டம் தான் அதிகம் தெரிகிறது.
      அஜீஸ் என்று பெயரிருந்தாலே இப்படித்தான்
      எழுதுவீர்களா ?
      திரு.காவிரிமைந்தன் கூறியிருப்பது மிக நல்ல யோசனை.
      நீங்கள் ஏன் உல்டா பண்ணுகிறீர்கள் ?
      தேர்தல் கமிஷனுக்கு இதில் என்ன சம்பந்தம் ?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் அஜீஸ்,

      மீண்டும் ஒரு முறை உங்கள் பின்னூட்டத்தைப்
      படித்துப் பாருங்கள். உங்களுக்கே அது திருப்தி
      அளிக்கிறதா ?

      -வாழ்த்துக்களுடன்,

      காவிரிமைந்தன்

      • சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

        ஐயா
        நீங்கள் செருப்புக்கேற்ப காலை வெட்டிக்கொள்ளலாம் என்கிறீர்கள். நானோ செருப்பு வாங்கியதிலேயே தவறு இருக்கு. அதை மாற்றலாம் என்கிறேன். அவ்வளவுதான் வித்தியாசம். அதுபோக கடந்த சில நாட்களாக ஒரு அலை அடிக்கிறது. அதனால் எல்லாம் பறக்கப்போகிறது என்று அனைத்து ஊடகங்களிலும் வந்துகொண்டிருந்ததே அதை பற்றியும் நீங்கள் சிறிது அலசியிருந்தால் மேலும் சிறப்பாக இருக்குமே என்றுதான் அப்படி பின்னூட்டிருந்தேன். ஆனால் பாருங்கள்… அஜீஸ் என்று பேரை பார்த்தாலே எப்படி கோபங்கொள்கிறார்கள் எழில் போன்றோர். கூல்டவுன் திரு எழில். உங்களுக்கு பிடித்த மாதிரியெல்லாம் என்னால் பின்னூட்டம் போட முடியாது. எனக்கு எது தோணுதோ அதுவே என்னுடைய பின்னூட்டம். வாழ்க வளமுடன்!

        • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

          அஜீஸ்… சற்று நிதானமாக பின்னூட்டம் இட்டவரின் பெயரை படியுங்கள். அவர் நானல்ல!

  4. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    I agree withh your suggestion but the unconditional support should be for atleast 30 months and not just 6 months.

  5. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    காவிரிமைந்தன் ஐயா… அற்புதமான அலசல். நியாயமான சந்தேகங்கள், ஒரு பத்திரிக்கை அலசாத அளவுக்கு நேர்த்தியான கட்டுரை. ஆனால் உங்கள் யோசனை (எதிர்பார்ப்பு) தான் சற்று யோசிக்க வைக்கிறது!

    1. பாஜக எந்த காரணத்துக்காக ஆட்சி அமைக்கவில்லையோ அதே காரணத்துக்காக ஆஆக ஆட்சி அமைக்காமல் போகலாம்
    2. நீங்கள் சொல்லியிருக்கும் அதே 6 மாத கால ஆட்சி கெடுவை ஆஆக பாஜக வுக்கு வழங்கலாம். (நேற்றைய பிரஷாந்த் பூஷன் பேட்டியை பார்க்க)
    3. ஒருவேளை நீங்கள் சொன்னது போலவே பாஜக, ஆஆக வுக்கு ஆட்சி செய்ய வாய்ப்பு கொடுத்து, ஆஆக திறம்பட ஆட்சி செய்து மக்களிடம் நற் பெயர் வாங்கினால் பாஜக வின் எதிர் காலம் என்ன?
    4. பொது தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கையில் பாஜக, ஆஆக வை ஆட்சியில் அமர்த்தி ஆஆக நல்லாட்சியால் வளர்ந்து விட்டால், அது பாஜகவுக்கு, காங்கிரச்சை விட பெரிய தலைவலியாகி போகலாம் அல்லவா!

    இன்று டில்லியில் குதிரை பேரம் நடக்காமல் இருப்பதன் காரணமே மக்கள் ஆஆக வுக்கு இவ்வளவு ஆதரவு கொடுத்ததன் மூலம் பெரிய கட்சிகளுக்கு ஏற்படுத்தப் பட்டிருக்கும் நெருக்கடி என்றே தோன்றுகிறது.

    ஆகவே டில்லியில் முறைப்படி நடக்க வேண்டியது பாஜக வை ஆட்சியில் இருத்த ஆஆக ஆதரவளித்து தங்களை முதலில் பொறுப்புள்ள எதிர் காட்ச்சியாக நிலை நிறுத்துவதே. அதை பாஜக ஏற்கா விட்டால் தேர்தலை மீண்டும் நடத்தலாம்.

  6. kinarruthavalai's avatar kinarruthavalai சொல்கிறார்:

    திரு அஜிஸ் சொன்னது போல நமது constitution இப்படித்தான் என்றால் நிச்சயமாக மாற்றியமைக்கப் படவேண்டியது முக்கியம். இந்த நிலைமையை ஏன் நமது அரசியல் சட்டம் வகுத்தவர்கள் நினைத்து பார்க்கவில்லை? அல்லது நினைத்து பார்த்ததால்தான் இந்த நிலமையில் மறுதேர்தல் நடத்தப் படவேண்டும் என்று சொல்லியிருந்தால் நாம் ஏன் மீண்டும் ஒரு செலவு, மக்களுக்கு கஷ்டம் என சொல்லவேண்டும்? அவர்களுக்கு தெரியாததா? இவ்வளவு பேசும் நாம் இரு கட்சி முறை இப்போவாவது கொண்டு வர வேண்டும் என்று கேட்பதில்லையே? நமது அரசியல் அமைப்பில் நல்லதொரு உருப்படியான மாற்றங்கள் கொண்டு வர வேண்டியது இன்று காலத்தின் கட்டாயம் என நினைக்கிறேன்.

  7. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நன்றி எழில்.

    என் யோசனையின் அடிப்படை –

    பாஜக எப்படி ஆட்சி செய்யும் என்பதை நாம்
    ஓரளவு பார்த்திருக்கிறோம். எனவே டில்லி நிலைமைக்கு
    அது first choice இல்லை.

    ஆனால் – ஆம் ஆத்மி கட்சி ஏகப்பட்ட
    எதிர்பார்ப்புக்களிடையே வந்திருக்கிறது.
    அது வந்தது காங்கிரஸ், பாஜக இரண்டுக்கும்
    மாற்றாக இன்னொரு கட்சி வேண்டும் என்று
    டில்லி மக்கள் விரும்பியதாலா –

    அல்லது ஆஆக டில்லி மக்களுக்கு அளித்துள்ள
    எக்கச்சக்கமான சலுகைகளை/வாக்குறுதிகளை நம்பியா
    என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.

    மேலும், அவை ஆஆக உண்மையிலேயே நிறைவேற்ற
    முடியும் என்று நம்பி கொடுத்த வாக்குறுதிகளா
    அல்லது எப்படியும் பதவியைப் பிடிக்கும் அளவிற்கு
    ஜெயிக்க மாட்டோம் எனவே அள்ளி விடுவோம் என்று
    அள்ளிவிட்ட வாக்குறுதிகளா என்பதும் தெரியவில்லை.

    எப்படி இருந்தாலும் சரி-
    தானாகப் போய் மற்ற கட்சிகளின் ஆதரவை நாடாமல், பதவிப் பொறுப்பை ஏற்கக்கூடிய வாய்ப்பு வலியக்
    கிடைத்தால், அதை ஏற்றுக்கொண்டு,
    தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற
    ஆஆகட்சி செயல்பட வேண்டும்.

    நேற்றிரவு, காங்கிரஸ் கட்சி – எந்தவித நிபந்தனைகளும்
    இன்றி, ஆஆக கேட்கா விட்டாலும் கூட, தான் வெளியிலிருந்தே ஆதரவு அளிப்பதாக கூறி இருக்கிறது.

    இப்போதாவது கெஜ்ரிவால் கட்சி பொறுப்பேற்க முன்வர
    வேண்டும்.

    இல்லையென்றால் – அது நழுவுவதாகவே அர்த்தம்
    என்பது என் கருத்து.

    ஆம் ஆத்மி கட்சி வளர்ந்தால், பாஜக வுக்கு நஷ்டம்
    என்று ஏன் கவலைப்பட வேண்டும் ?
    உண்மையிலேயே அது நல்ல கட்சியாக உருவானால் –
    வளர்ந்து விட்டுப் போகட்டுமே -ஒரு நல்ல கட்சி
    வளர்ந்தால் நல்லது தானே ?

    ஒருவேளை அது போலியாக இருந்தால் –
    அதையும் ஆரம்பத்திலேயே நாம் புரிந்து கொள்வது
    நல்லது அல்லவா ?

    நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே …?

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  8. GOPALASAMY's avatar GOPALASAMY சொல்கிறார்:

    Regarding kejrival, now he can form the govt as congress is ready to give unconditional support to him. It is better for delhi people and may be a role model for entire india.
    Sorry for using this to write about tejpal.
    In goa think fest, it appears yogendra yadhav and prasanth bushan also partcipated and enjoyed(the intelluctual company).
    1. why no TV channels and magazines were ready to talk about kejrival and tepal link? kejrival never condemned tejpal’s act.
    2. i heard Subramaniyam samy released the copy of the letter from PM to UPA chairman about tejpal’s request . Is it true?
    Sri. KM , can you get more information?

  9. BC's avatar BC சொல்கிறார்:

    அருமையான ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றீர்கள்.
    ஆம் ஆத்மி என்ற இந்தியாவில் உள்ள கட்சி குறிப்பிடும் அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது அந்த கட்சி அதன் தலைவர் கெஜ்ரிவாலை நம்பலாமா என்று மீகுந்த பொறுப்புணர்வுடன் ஆராய்கிறீர்கள். பார்க்கவே மிக நன்றாக இருக்கிறது. ஆனால் இதே நீங்கள் இலங்கை என்று உங்கள் பக்கத்து நாடு என்று வரும் போது இலங்கை அரசை தமிழ் பேசும் யாராவது ஒருவர் விக்னேசுவரனோ யாராவது ஒருவர் எதிர்க்கிராரோ அவரை உத்தமபுத்திரனாக சித்தரிக்க தொடங்கி விடுவீர்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.