விஜய்காந்த் …நெய்க்கு தொன்னை ஆதாரமா இல்லை தொன்னைக்கு நெய் ஆதாரமா ..!!..???

விஜய்காந்த் …நெய்க்கு தொன்னை ஆதாரமா
இல்லை தொன்னைக்கு நெய் ஆதாரமா ..!!..???

Vijaykanth-k
——–
ஒரு தமாஷான சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது
தமிழ் நாட்டில்.
விஜய்காந்த்தின் கட்சியில் இன்னமும் இருந்துகொண்டே
அதிமுகவுக்கு ஆதரவாகச் செயல்படும்
6 MLAக்களில் முக்கியமானவரும்,
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,
விஜய்காந்தின் பால்ய நண்பரும்,
கட்சியின் முன்னாள் பொருளாளருமான –
சுந்தர்ராஜன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அந்த பேட்டியிலிருந்து சில பகுதிகள் –
———
“விஜய்காந்தோட நடவடிக்கைகள் பிடிக்காம நாங்க
வெளியே வந்து ஒரு வருஷம் ஆகப்போகுது.
எங்க தொகுதி மக்களுக்காக நாங்கள் வைத்த
கோரிக்கைகளை ஏற்று, பல நல்ல திட்டங்களுக்கு
அதிக நிதி ஒதுக்கிய நன்றிக்காக நாங்கள் அம்மாவை
வெளிப்படையாக ஆதரிக்கிறோம்.

இது விஜய்காந்தை பொறுத்த வரையில் கட்சியின்
கட்டுப்பாட்டை மீறிய செயல். கட்சியின் கட்டுப்பாட்டை
மீறிய எங்களை இன்னும் ஏன் கட்சியை விட்டு விலக்காமல்
வைத்திருக்கிறார் விஜய்காந்த் ?
இது கட்சிக்கு அவர் செய்யும் துரோகம் அல்லவா ….!
(இது எப்படி இருக்கு ? விஜய்காந்த் அவரது கட்சிக்கே
துரோகம் செய்கிறார்….!)

ரொம்ப நேர்மையானவர் போல் மேடையில் பேசும் அவர்,
அரசியல் கட்சிகளின் சட்டப்படி, தலைமைக்கு
கட்டுப்படாமல் வெளியேறி வந்து விட்ட எங்களை நீக்குவது
தானே முறை ? ஏன் செய்யவில்லை ?
அவர் கேட்ட விளக்க கடிதங்களைக் கூட நாங்கள்
மதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது எதிர்க்கட்சித்
தலைவர் அந்தஸ்து போய்விடும் என்பதால் தானே இன்னும்
எங்களை நீக்காமல் இருக்கிறார்? இது சட்டத்தை
அவமதிக்கும் செயல் இல்லையா…!.. ?

இதன் மூலம் அரசாங்கத்தை ஏமாற்றி –
தன் பி.ஏ.வுக்கும், டிரைவருக்கும் அரசு சம்பளத்தை
வாங்கிக் கொண்டிருக்கிறார்.
அவர் ரோஷக்காரராக இருந்தால்,தன் சொந்தப்பணத்தில்
தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சம்பளம்
கொடுக்க வேண்டியது தானே ?
வள்ளல் போல வெளியில் பேசுவார். ஆனால்,
அவர் எப்படிப்பட்டவர் என்பது, கூடவே இருந்த
எனக்குத்தான் தெரியும். வரும் சட்டமன்ற கூட்டம்
கூடுவதற்கு முன் அவர் எங்களை கட்சியில் இருந்து
நீக்க வேண்டும். இல்லையென்றால் நடக்கிறதே வேறே !
நீதிமன்றத்தை நாடுவோம் !
அது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் !!”

நான், ராவுத்தர், சேனா பிலிம்ஸ் முதலாளி போன்ற
25க்கும் மேற்பட்ட சிறுவயது சிநேகிதர்களால் தான்
திரையுலகில் விஜய்காந்த் வளர்ச்சி பெற முடிந்தது.
இப்போது எங்களை விஜய்காந்த் அருகிலேயே
அண்டவிடாமல் செய்து விட்டது பிரேமலதா குடும்பம்.

கட்சியில் மூன்று பேர் குழுவால் நொந்து போனவர்களைப்
பற்றி விஜய்காந்திற்கு எதுவும் தெரியாதா ? இதே கதியில்
போனால், விஜய்காந்த் கதி அதோ கதி தான்.

மக்கள் அளித்த அங்கீகாரத்தை சரியாகப் பயன்படுத்திக்
கொள்ள விஜய்காந்துக்கு தெரியவில்லை. பெரிய பெரிய
தலைவர்கள் அமர்ந்த அந்த எதிர்க்கட்சித்தலவர் பதவியின்
மதிப்பும் தெரியவில்லை.

விஜய்காந்த் தைரியமானவராக இருந்தால் உடனடியாக
எங்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும்.
இல்லையென்றால் அவரைப்பற்றிய பல ரகசியங்களை
நான் சொல்ல வேண்டிய நிலை வந்து விடும்.
இவ்வளவு நாள் பொறுத்துப் போனேன்.
இனியும் முடியாது !!!”

————-

அரசியல் கட்சிகளில் தலைமைக்கு
விரோதமாக சிலர் செயல்புரிவதும்,
தலைமை அவர்களை கட்சியை விட்டு வெளியேற்றுவதும் –
பின்னர் வெளியேற்றியது செல்லாது,
எங்களை வெளியேற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை
என்று போட்டிக்குழு சொல்வதும்,
வெளியேற்றத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்வதும்,
போட்டி கட்சியை அந்தக் குழுவினர் அதே பெயரில்
ஆரம்பிப்பதும் – இதையெல்லாம் நாம் இந்திய அரசியலில்
ஏற்கெனவே பலமுறை பார்த்து விட்டோம்.

ஆனால் –இது ஒரு வித்தியாசமான ஸீன் …!

கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கு லாயக்கான
அனைத்தையும் ஒரு குழு செய்கிறது.
சட்டமன்றத்தில் –
சொந்த கட்சிக்கு எதிராக செயல்படுகிறது.
எதிராக ஓட்டு போடுகிறது.
எங்களை கட்சியை விட்டு வெளியேற்று பார்க்கலாம்
என்று சவால் விடுகிறது.
பிறகு – வெளியேற்று என்று கெஞ்சுகிறது.
பின்னர் இப்போது வெளியேற்றுகிறாயா இல்லையா
என்று மிரட்டுகிறது.
கடைசியாக – வெளியேற்றுகிறாயா இல்லை கோர்ட்டுக்கு
போகட்டுமா என்று மிரட்டுகிறது. எங்களை ஏன் கட்சியை
விட்டு வெளியேற்றவில்லை என்று நீதி கேட்டு (!)
கோர்ட்டுக்கு போவார்கள் போலிருக்கிறது.

கடைசியாக இன்னொரு அஸ்திரமும் வீசப்படுகிறது.
உடனடியாக வெளியேற்றாவிட்டால் உங்களைப்பற்றிய
ரகசியத்தை எல்லாம் வெளியே சொல்லி விடுவேன் என்கிறது.
வேடிக்கையாக இல்லை …?
“அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்கிற கவுண்டமணி
டயலாக்கை நீங்கள் சொல்வது தெரிகிறது.

ஆனால் இது சகஜம் இல்லை. அதைவிட கொஞ்சம் அதிகம் !!
எப்படி என்கிறீர்களா ?

இரண்டு கேள்விகள் –

1) இத்தனைக்கு பிறகும் இவர்களை கட்சியை விட்டு
விஜய்காந்த் ஏன் வெளியேற்ற மாட்டேனென்கிறார் ?

2) விஜய்காந்த் வெளியேற்றா விட்டாலென்ன –
இவர்களாகவே ராஜினாமா செய்து விட்டு
வெளியேற வேண்டியது தானே ?
யார் தடுக்கிறார்கள் ?

பதில் 1 –

விஜய்காந்த் இவர்களை வெளியேற்றாததற்கு காரணம்
என்ன என்பதை சுந்தர்ராஜனே கூறி விட்டார்.
அது தான் அசல் காரணம்.

பதில் 2 –

சரி -இவர்களாகவே வெளியேறாதது ஏன் ?

கட்சித்தாவல் தடைச்சட்டத்தின்படி, ஒரு கட்சியின்
மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் –
மூன்றில் ஒரு பகுதிக்கு மேல் கூட்டாக விலகினால்,
அவர்கள் MLA பதவியை இழக்க மாட்டார்கள்.
கட்சியில் பிளவு என்று ஏற்றுக் கொள்ளப்படும்.

அதற்குக் கீழாக எண்ணிக்கை இருந்தால் -சாதாரணமாக,
அவர்கள் அனைவரும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்
பதவியை இழக்க நேரிடும். ஆனால் இது automatic
ஆக நடக்காது. இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டிய
பொறுப்பு அவைத்தலைவருடயது.(சபாநாயகர் )
அவைத்தலைவர் மனது வைத்தால் –
இது அடுத்த தேர்தல் வரை கூட இழுத்தடிக்கப்பட
வாய்ப்பு இருக்கிறது !
(விஜய்காந்த் கட்சியின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின்
எண்ணிக்கை -29. இப்போது வெளியேறி இருப்பவர்களின்
எண்ணிக்கை -6. இது பத்தாக உயரும் நிலை வரும்போது
நிச்சயம் தாங்களாகவே வெளியேறி விடுவார்கள் ..! )

தாங்கள் MLA பதவியை இழந்தாலும் பரவாயில்லை
ஆனால் விஜய்காந்த் எதிர்க்கட்சித்தலைவர் பதவியை
இழந்தால் போதும் என்று ரிஸ்க் எடுத்து அல்வா சாப்பிட
சுந்தர்ராஜன் குழுவினர் தீவிர முயற்சி எடுப்பது
தெரிகிறது.

ஆனால் விஜய்காந்தோ – மானம் மரியாதை போனால்
போகிறது; எதிர்க்கட்சித்தலைவர் பதவி மட்டும்
போய்விடக்கூடாது என்பதில் இவர்களை விட உறுதியாக
இருப்பது தெரிகிறது.

நமக்கென்ன போச்சு –
யார் ஜெயித்தால் என்ன ?
பொறுமையாக வேடிக்கை பார்ப்போம் !!!
(அதைத்தானே பெரும்பாலான நம் மக்கள்
எப்போதும் செய்து வருகிறார்கள்…!)

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to விஜய்காந்த் …நெய்க்கு தொன்னை ஆதாரமா இல்லை தொன்னைக்கு நெய் ஆதாரமா ..!!..???

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    இதையெல்லாம் பார்த்து ரசிக்க நாம் புண்ணியம் செய்திருக்கவேண்டும்

  2. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    வண்டியை பட்டையை கிளப்பி போயிக்கிட்டே இருக்கீங்க.

    இதை கொஞ்சம் படித்துப் பாருங்க.

    அதிர்ஷ்டத்தை அலறவைக்கும் விஜயகாந்த்

    http://deviyar-illam.blogspot.in/2013/10/blog-post_18.html

  3. ராமச்சந்திரன் பிரபு's avatar ராமச்சந்திரன் பிரபு சொல்கிறார்:

    காவிரிமைந்தன் உங்கள் எழுத்து வித்தியாசமாக இருக்கிறது.
    நம்பகமான செய்திகளை அடிப்படையாக வைத்து எழுதுகிறீர்கள்.
    உங்கள் கருத்துக்களை அநேக சமயங்களில் அப்படியே ஏற்றுக்கொள்ள முடிகிறது.நீண்ட நாட்களாக
    நான் உங்களை தொடர்ந்து படித்து வருகிறேன்.
    இப்போது தான் மறுமொழியில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
    உங்களுக்கு என் வாழ்த்துக்களும் நன்றியும்.

    விஜய்காந்த் பற்றி என் கருத்து :
    விஜய்காந்த் எதையும் திட்டமிட்டே செய்பவர். 20 ஆண்டுகளுக்கு முன்னரே அரசியலில் நுழைவது என்று தீர்மானித்து, ரசிகர் மன்றங்களை வளர்த்து, ஆண்டுதோறும் பிறந்தநாள் கொடைகளை கொடுத்து, கொடியை அறிமுகப்படுத்தி, திரைப்படங்களின் மூலம் அதை பிரபலப்படுத்தி ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார் என்பதையும் உறுதிப் படுத்திக்கொண்டு சரியான நேரம்
    காலம் பார்த்து தான் நுழைந்தார்.

    இன்று வரை தன் கைக்காசை பத்திரமாக வைத்துக் கொண்டு,
    மற்றவர்களை விட்டு பணம் வசூலித்தே கட்சியை நடத்துகிறார்.
    வேட்பாளர்களிடம் பணம், மாவட்ட செயலாளர்களிடம் பணம்
    என்று எல்லா பதவிகளும் பணம் உள்ளவர்களுக்கு தான்.
    பத்தில் ஒன்று மட்டும் ரசிகர் மன்றத்தாருக்கு ரிசர்வேஷன் உண்டு.

    அடுத்து பார்லிமெண்ட் தேர்தலில் காங்கிரஸ், பிஜெபி
    இரண்டில் யாருடன் சேர்ந்தால் அதிக லாபமோ அவர்களுடன்
    சேர விரும்புகிறார். பிறரைக் கவரும் ஒரு வித ஆற்றல்
    ஓரளவு இவருக்கு இருக்கிறது. ஆனால் ஆட்சியை செலுத்தும்
    நிர்வாகத் திறமை கிடையாது. தப்பித்தவறி இவரிடம்
    எதாவது அதிகாரம் வந்தாலும், அதை உண்மையில்
    பயன்படுத்துவது இவரது மனைவியும், மைத்துனருமாகவே
    இருக்கும்.
    நன்றி.

    ராமச்சந்திரன் பிரபு

  4. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    விஜயகாந்த் கடவுளால் தமிழகமக்களுக்கு அனுப்பப்பட்டவர்.பல்லாண்டுகாலமாக இரண்டு கழகங்களையும் திட்டி தீர்த்துக்கொண்டிருந்த நமக்கு இவர்களை விட்டால் இவர் என காட்டி பயமுறுத்தி இருகோடுகள் தத்துவத்தின் மூலம் இரு கழகங்களே தேவலை என நிலைக்கு கொணர,விஜயகாந்த் கடவுளால் தமிழகமக்களுக்கு அனுப்பப்பட்டவர்

  5. bagawanjee's avatar bagawanjee சொல்கிறார்:

    நெய்க்கு தொன்னை ஆதாரமா இல்லை தொன்னைக்கு நெய் ஆதாரமா ..!!..???
    ஆக மொத்தத்தில் இரு தரப்புமே பதவிக்காக ,மக்களை மடையர்கள் ஆகிக் கொண்டிருக்கிறார்கள்!
    நமக்குள் என்ன ஒற்றுமைப் பாருங்கள் ,மேலே சொன்ன பழமொழி இன்றைய என் பதிவிலும் இடம் பெற்று இருக்கிறது !

  6. nparamasivam's avatar nparamasivam சொல்கிறார்:

    பண்ருட்டியார் முன்பு MGRக்கு செய்ததை அறிந்தும் அவரை தன்னுடைய கட்சியில் துணை தலைவராக வைத்து உள்ளதில் இருந்து விஜய காந்த் அவர்கள் அரசியல் அறிவு தெரிகிறது. தமிழக மக்கள் மிகவும் …………கொடுத்து வைத்தவர்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.