“ஆப்கே பைஸே – ஆப்கே ஹாத் மேன் “- அவசரமாக வந்துகொண்டிருக்கும் ஆபத்து ….

“ஆப்கே பைஸே – ஆப்கே ஹாத் மேன் “-   அவசரமாக
வந்துகொண்டிருக்கும் ஆபத்து ….

lpg-1

வடக்கே மத்திய அரசு இந்த வார்த்தைகளை பிரபலப்படுத்த
மிகத் தீவிரமாக முயன்று வருகிறது –

“ஆப்கே பைஸே – ஆப்கே ஹாத் மேன் –
அதாவது “உங்கள் பணம் – உங்கள் கைகளில்”

ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும்  “ஆதார்” கார்டுகளை உருவாக்கி,

அதன் மூலம் மத்திய அரசுத் திட்டங்களின்
மூலம் கொடுக்கப்பட்டு வரும் உதவிகள் அனைத்தும்
“பணமாக” –   “நேரடியாக” சம்பந்தப்பட்ட மக்களுக்கு, அதாவது –
அவர்களது வங்கி எண்ணுக்குப் போய்ச்சேரும்
திட்டம் தான் இது.

சோதனை முறையில், 6 மாதங்களுக்கு முன்பே  ராஜஸ்தான்
மாநிலத்தில், ஏற்கெனவே சில மாவட்டங்களில்
இதனை செயல்படுத்தத் துவங்கி விட்டது  அரசு.
வெகு விரைவில் இந்தியா முழுவதையும் அதிரடியாக
இந்தத் திட்டத்தைக் கொண்டு வர முயல்கிறது மத்திய அரசு.

அதாவது மத்திய அரசிடமிருந்து பொது மக்களுக்கு கிடைக்கும்
அத்தனை சலுகைகளும் –
முதியோர் பென்ஷன்,
மகாத்மா காந்தி தேசீய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்,
மாணவர்களுக்கான உதவித் தொகை – ஸ்காலர்ஷிப்,
பெண்களுக்கான உதவித்திட்டங்கள,
கர்ப்பிணிப் பெண்களுக்கான உதவித் தொகைகள்,
மாற்றுத் திறனாளிகளுக்கான (உடல் ஊனமுற்றோருக்கான)
உதவித் தொகைகள்,
மண்ணெண்ணை,சர்க்கரை  மற்றும் உணவுப் பொருட்களாக சலுகை
விலையில் மத்திய அரசு அளித்து வரும் உதவிகள்,
LPG சிலிண்டருக்கு (ஆண்டுக்கு 9) கொடுக்கப்பட்டு வரும்
மான்யம்

-இத்தனையையும் பொருட்களாக கொடுப்பதற்கு பதிலாக,
பணமாக தனி நபர்களின் வங்கிக் கணக்குக்கு போய்ச்சேரும்படி
செய்வது தான் இந்தத்  திட்டம் (என்று மத்திய அரசும் அதன்
மந்திரிகளும் சொல்லிக் கொள்கிறார்கள் !)
சுருக்கமாகச் சொல்வதானால்,
அடுத்த பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னால் –
மக்களுக்கு, மத்திய அரசு நேரடியாகக்
கொடுக்க விரும்பும் பணம் !! கை மேல் காசு –
கிடைத்தவுடன் ஓட்டு – போடுவார்கள் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு –
என்பது திட்டத்தை உருவாக்கியவர்களின் எண்ணம்.

இந்த அருமையான (!) திட்டம் உருவாகக் காரணமாக இருந்தது
திருமதி சோனியா காந்தியும், அவரது தலைமையிலான
National Advisory Counsil எனப்படும் குழுவும்.

இது பற்றிய  ஆதாரங்களுடன் கூடிய, விவரமான  இடுகை ஒன்றை
எழுத வேண்டும் என்று  கொஞ்ச நாட்கள் முன்பு ஆரம்பித்தேன்.
இடையில் நிதானமாக எழுதலாமென்று வேறு பக்கம் போய் விட்டேன்.

இப்போது நிதியமைச்சர்  – ஆமாம் நாம் தேர்ந்தெடுத்து அனுப்பிய
நம்ம ஊர்க்காரர் தான் – விட்ட அவசர அறிக்கையை பார்த்தவுடன்
உடனடியாக இதை எழுத வேண்டும் என்று அவசரமாக  எழுதுகிறேன்.

முதலில் அறிக்கை விஷயம் – பிறகு, விவரங்கள் –

“ஆதார் கார்டு திட்டத்தின் கீழ்  சமையல் வாயு உபயோகிப்பாளர்கள்
அனைவரும் கொண்டு வரப்படுவார்கள். வருகிற ஜூலை மாதம் துவங்கி
படிப்படியாக, அடுத்த ஒரு வருடத்திற்குள் –  சமையல் வாயு சிலிண்டர்களை
உபயோகிக்கும்  17 கோடி குடும்பங்களும்
ஆதார் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும். அவர்களது மான்யத்தொகை
“”ஆப்கே பைஸே – ஆப்கே ஹாத் மேன் ”  திட்டப்படி, அவர்களது
வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும்.”

புதுச்சேரியில் இந்தத்திட்டம் அமுலுக்கு வந்து விட்டது.
தமிழ்நாட்டில்  பரீஷார்த்தமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலில்
அமுலுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்தியாவில் சமையல் எரிவாயுவை பயன்படுத்தும் குடும்பங்கள்
கிட்டத்தட்ட 17 கோடி. இந்தக் குடும்பங்கள் அனைத்துக்கும் வருடத்திற்கு
அதிகபட்சம்  9 LPG சிலிண்டர்கள் மானிய விலையில் மத்திய அரசால்
கொடுக்கப்படுகின்றன.
அதாவது நம் வீட்டில் சப்ளை செய்யப்படும் முதல் 9 சிலிண்டர்களுக்கு நாம் ரூபாய் 410/-  கொடுத்தால் போதுமானது.( மார்க்கெட் விலை கிட்டத்தட்ட
950/-ரூபாய்.)

அமைச்சர் அறிவித்திருக்கும் புதிய திட்டத்தின்படி வீட்டில் சிலிண்டர் சப்ளை வரும்போது நாம் ரூபாய் 410/- க்கு பதிலாக 950 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும்.   
நமது gas agency  கொடுக்கும் ஒரு படிவத்தில்,
நமது LPG கஸ்டமர் எண்,
நமது ஆதார் கார்டு எண் (கார்டு நகலுடன்),
நாம் வங்கிக்கணக்கு வைத்திருக்கும்
வங்கிக் கிளையின் விலாசம், அந்த வங்கியில்
நமது சேமிப்புக் கணக்கின் எண்
-ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
(இதைச் செய்யாத வரையில், மான்யத் தொகையைப் பற்றி
பேசவே நமக்கு தகுதி அதாவது  eligibility இல்லை !)

நாம் 950 ரூபாய் கொடுத்து ஒவ்வொரு சிலிண்டரையும் வாங்கிய பிறகு –
நமது gas agency அந்த விவரங்களை மாநில எரிவாயு மண்டல மையத்திற்கு
அனுப்பும். அதன் பிறகு –
அந்த மையம் அவற்றை மத்திய  எரிவாயு அமைச்சகத்திற்கும்,
பிறகு அங்கிருந்து அது
மத்திய நிதியமைச்சகத்தின் குறிப்பிட்ட பிரிவிற்கும் அனுப்பப்படும்.
பிறகு அந்த நிதியமைச்சகப் பிரிவு  அந்த விவரங்களை
“தகுந்த” முறையில் பரிசீலித்து,
மான்யத்தொகையை “ரிலீஸ்” செய்யும். அந்த விவரம் படிப்படியாக
சம்பந்தப்பட்ட வங்கிகளின் தலைமைக்கும்,
பிறகு அவற்றின் மூலம் சம்பந்தப்பட்ட வங்கிக்கிளைகளுக்கும்
அனுப்பப்பட்டு, அந்த மான்யத்தொகை ( ஒவ்வொரு தடவையும்
950-410 =   540 ரூபாய் ) நமது  அக்கவுண்டில் சேர்க்கப்படும் !

ஒவ்வொரு தடவையும்,
ஒவ்வொரு சிலிண்டருக்கும் இதே மாதிரி …….
உரிய சடங்குகளைச் செய்ய வேண்டும் !
இதில் மயிரிழை தவறு செய்தாலும், அதாவது எங்கேயாவது ஒரு இடத்தில், ஒரு எண் மாறினாலும், பெயர், கஸ்டமர் எண் – வங்கிக் கணக்கு
ஆகியவை tally ஆகாது. எனவே மானியத்தொகை  நமக்குக் கிடைக்காது (  tally ஆகாத மான்யத்தொகை அரசாங்கத்திடமே தங்கி விடும் ! இதற்குத்தானே ஆசைப்படுகிறது மத்திய அரசு ! )

வீட்டிற்கு வரும் சிலிண்டருக்கு 410/- கொடுத்து வாங்கும் சுலபமான
முறையை விட்டு விட்டு – மான்யத் தொகையை பெற இப்படி
நாயாய், பேயாய்   
மக்கள் அலைய வேண்டும் என்பது தான் மத்திய அரசின் விருப்பமா ?

ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக விரிக்கப்படும் இந்த வலையில்
எவ்வளவு பேர் விழுவார்கள் ? கையில் காசு கிடைப்பதைப் பார்த்து
மக்கள் மயங்கி விடுவார்கள் என்று தப்புக்கணக்கு போடுகிறது
காங்கிரஸ் கட்சி.  தன் கைக்காசை செலவழித்து – பொருளை வாங்கிவிட்டு,  அந்தக் காசையே திரும்பப்பெற எவ்வளவு அலைய வேண்டி இருக்கிறது  என்பதை நிஜத்தில் அனுபவித்த பிறகு யார் ஏமாறுவார்கள்.

தேவையே இல்லாமல் –
மக்களின் எரிச்சலையும், கோபத்தையும் தான் உண்டுபண்ணப் போகிறது
மத்திய அரசின் இந்தத் திட்டம்.  ஆனால் அவர்களின் ஈகோ இதை
ஒத்துக் கொள்ளாது. அவஸ்தைப்பட வேண்டும் என்பது மக்களின்
தலையெழுத்தாகப் போகிறது.

– “ஆதார்” கார்டு பற்றி ஒரு சுருக்கமான விளக்கம்.  

ஆதார் அடையாள அட்டை என்பது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டு
வரும் ஒரு 12 இலக்க அடையாள எண் தாங்கிய ஒரு அட்டை.

“பிரத்யேக அடையாளத்திற்கான தேசிய ஆணையம்
(Unique Identification Authority of India)” என்கிற இந்த அமைப்பு, 2009ஆம் ஆண்டு  நந்தன் நீல்கேனியின் தலைமையில் உருவாக்கப்பட்டு இயங்குகிறது.

– நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் –
இது ஒரு அரசாங்க அமைப்பு அல்ல. ஆனால் இதன் செலவுகளை
மத்திய அரசு பார்த்துக் கொள்கிறது.

“ஆதார்” சம்பந்தப்பட்ட சட்ட வரைவு மசோதா ஒன்று 2010ல்
அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இன்னும் இது பாராளுமன்ற
நிலைக்குழு முன்னரே கொண்டு வரப்படவில்லை. இது குறித்த
விவாதங்களோ தீர்மானமோ எதுவும் பாராளுமன்றத்தில் இன்னும்
நடக்கவில்லை. எனவே சட்டபூர்வமான ஒப்புதல் இதற்கு
இன்னும் கிடைக்கவில்லை  என்று தான் சொல்ல வேண்டும்.
சட்டபூர்வமான ஒப்புதல் இல்லாமலே மிக அவசரமாகக்
காரியங்கள் நடைபெறுகின்றன         – ஏன் ?

துவக்கத்தில் சொல்லப்பட்ட காரணம் –
நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண்
வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை
உருவாக்குவது.   இது சரியான நோக்கம் தான். இதைச் செய்வதில்
எந்தவித தவறும் காண முடியாது.

ஆனால் எந்தவித பொது விவாதமோ –
கலந்தாலோசனைகளோ  இல்லாமல் -இப்போது அவசரம்  அவசரமாக
மத்திய அரசு தன் திட்டங்களின் மூலமாக
மக்களுக்குச் செல்லும் உதவிகள் அனைத்தும் பணமாக,
ஆதார் கணக்குகளுக்கு போய்ச்சேரும் என்று அறிவித்திருக்கிறது.

அதை பிரபலப்படுத்தும் விதமாக உருவாக்கி இருக்கும்
கோஷம் தான் “ஆப்கே பைஸே – ஆப்கே ஹாத் மேன் ”
(தமிழில் – “உங்கள் பணம் -உங்கள் கைகளில்”)
ஏன் இப்படி ? இதற்கு அப்படி என்ன ஒரு  அவசரம் ?

எந்த கோணத்தில் பார்த்தாலும் இந்தியக் குடிமக்கள்
அனைவருக்கும் இதன் மூலம் பணம் கிடைக்கப்போவதில்லை.
எனவே -இதன் மூலம் எழும்பும் முதல் கேள்வியே -இந்த பணம்
கிடைக்காத  மற்றவர்கள் கேட்கக்கூடிய கேள்வி   –
“அப்படியானால் எங்கள் பணம் எங்கே ?
உங்கள் பாக்கெட்டிலா ?”

மக்களிடம் அரசின் மான்யங்கள் சென்றடைய,
இடையில் இன்னும் பல ஏஜென்சிக்களை உருவாக்குவது
குழப்பத்தைத் தானே உண்டு பண்ணும் ?
120 கோடி மக்களுக்கும் பயோமெட்ரிக் முறையில்
அடையாள அட்டையை உருவாக்குவதும்,
அத்தனை பேருக்கும் வங்கிக் கணக்குகளை துவங்குவதும்,
அரசு மான்யங்களை அந்த வங்கிக் கணக்கில் போடுவதும் –
இத்தனையும் இன்னும் ஒரு வருடத்திற்குள் – நடக்ககூடிய
காரியமா ?

நிச்சயமாக இயலாது. அப்படியென்றால் இதன் பின்னால்
மறைந்திருக்கும்  நோக்கம் என்ன ? சில இடங்களில், சில பேருக்கு
பணம் சென்றடையச் செய்து காட்டி விட்டு, மற்றவர்களிடம் –
எங்களுக்கு ஓட்டுப்போட்டால் உங்கள் அனைவருக்கும்
இதே போல் பணம் வரும் என்று காட்டவா ?

இந்தியாவில் வங்கிகளே இல்லாத கிராமங்கள் ஆயிரக்கணக்கில்
இருக்கின்றனவே ! 300-400 வீடுகள் உள்ள கிராமங்களில்
வசிப்பவர்கள் எல்லாம் வங்கிக் கணக்குகளை எப்படித்
துவக்குவார்கள் ?

அப்படியே பக்கத்து ஊர்களுக்குச் சென்று துவக்கி விட்டாலும்,
ஒவ்வொரு வாரமும் கூலியைப் பெற குடும்பத்துடன்
பக்கத்து ஊருக்கு பயணிக்க முடியுமா ? ( குடும்பத்தில்
ஒவ்வொருவருக்கும் தனித்தனி கணக்கு ஆயிற்றே !
புருஷன்-பெண்டாட்டிக்கு கூட தனித்தனி ஆதார் கணக்கு தான் !)

ராஜஸ்தானில் – மாதிரியாக உருவாக்கிய ஊரிலேயே
மண்ணெண்ணைக்கான காசு 4 மாதமாகியும் இன்னும்
அவர்கள் கணக்கில் வந்து சேரவில்லையாம். ரேஷன்கடையில்
மண்ணெண்ணை விலை 15 ரூபாய் என்றால் – வெளியே
40 ரூபாய். ஒரு லிட்டருக்கு 25 ரூபாய் அதிகம் வீதம்
பத்து லிட்டருக்கு மாதம் ஒன்றுக்கு 250 ரூபாய் வீதம்
அவர்கள் கடன் வாங்கிச் செலவழித்து மண்ணெண்ணை
வாங்கி இருக்கிறார்கள். 4 மாதத்தில் 1000 ரூபாயாக
அது பாக்கி நிற்கிறது. இப்போது அரசு மான்யத்தை நம்பி
மண்ணெண்ணை வகையில் மட்டும் அவர்களுக்கு 1000 ரூபாய் கடன் !

இது எத்தனை நாளைக்கு ஓடும் ?
எத்தனை பேரால் தாக்குப் பிடிக்க முடியும் ?
மேலும் 40 ரூபாய்க்கும் – 15 ரூபாய்க்கும்
இடைப்பட்ட தொகை தான்  மான்யமாக அளிக்கப்படவிருக்கிறது.
இதற்கிடையில் மார்க்கெட்டில் விலை 50 ரூபாயாக
உயர்ந்து விட்டது ! அப்படியானால் ஒவ்வொரு லிட்டருக்கும்
மீதி 10 ரூபாயை கிராமத்தான் கையிலிருந்து கொடுக்க
வேண்டும்  – இது எந்தவிதத்தில் மக்களுக்கு பயனுள்ள திட்டம் ?

——————————————————
முதலில் இந்த ஆதார் அட்டை  அனைவருக்கும் கிடைக்க
வழி உண்டா ?

அட்டைக்கான தயாரிப்பு நிகழும் சில இடங்களில் மக்கள்
படும் வேதனையை பத்திரிகையாளர்கள் இன்னும் கவனிக்கவில்லை.
மீடியாக்கள் இதுகுறித்து கவலையே படவில்லை !

1) ஆதார் அட்டையை தயார் செய்யும் பணி – தனியார் ஏஜென்சியிடம்
விடப்பட்டுள்ளது.  எனவே இது செயல்படும் முறையே நம்பகத்தன்மை
உடையதா என்கிற கேள்வி எழுகின்றது.

2) குடும்பம் முழுவதும் ஒரே சமயத்தில் வந்தால் தான்
விவரங்களைப் பதிவோம் என்று கூறுகிறார்கள். இங்கு வந்தால்
குறைந்த பட்சம் 4 மணி நேரமாவது காத்திருக்க வேண்டி இருக்கிறது.
குடும்பத்தில் 7 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் ஒன்று சேர்ந்து
வரவேண்டும்  என்று வலியுறுத்துவதால் – விவரங்களைப் பதிவதே மிகப்பெரியஅவஸ்தையாகிறது.   கண்கள் தனியாக, புகைப்படம் தனியே,
பத்து விரல்களின் பதிவுகள்  தனித்தனியே – இத்தனையும் தேவைப்படுகிறது.

3) கண்களில் குறைபாடு ( கேடராக்ட் அல்லது பார்வையின்மை)
இருப்பவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. அடுத்து –
விரல்களோ, கையோ இல்லாத மாற்றுத்திறனாளிகளும் வருகிறார்கள்.
அவர்களும் தள்ளுபடி செய்யப்படுகிறார்கள். இத்தகைய குறைபாடு
உள்ளவர்களுக்கு என்ன மாற்று ஏற்பாடு என்பது இதுவரை
சொல்லப்படவில்லை.

4) வீடு வாசல், நிரந்தரமான  இடம் – இல்லாதவர்கள்,
நடைபாதைகளில் வசிக்கும் குடும்பங்கள்  நகரங்களில்
எவ்வளவோ இருக்கின்றன. இவர்கள் எப்படி ஆதார் கார்டு
பெறுவார்கள் ? இவர்களால் என்ன ஆதாரத்தைக் காட்ட முடியும் ?

—————————————-

நல்லது செய்யா விட்டாலும் பரவாயில்லை.
இருப்பதையும் பிடுங்கிக் கொண்டு
மக்களை வதைக்காமலாவது இருக்க முடியாதா இவர்களால் ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to “ஆப்கே பைஸே – ஆப்கே ஹாத் மேன் “- அவசரமாக வந்துகொண்டிருக்கும் ஆபத்து ….

  1. anvarsha's avatar anvarsha சொல்கிறார்:

    இது மத்திய அரசுக்கு இன்னுமொரு தெலுங்கானா பிரச்சனையாக நாடு தழுவிய அளவு பெரிய பிரச்சனையாக உருவாகும். இது போன்ற மக்கள் எதிரிகள் ஒழிய அப்போது நடக்கும் போராட்டங்கள் ஏதுவாகும்!

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    இன்னும் ஒரு ஆண்டு பொறுமை காப்போம்.பணம் வாங்கி கொண்டு ஒட்டு போட்டு ,இந்திய அரசை தேர்தெடுக்கும் “அறிவு ஜீவிகளுக்கு” வலைத்தளம் என்று ஒன்று இருப்பதே தெரியாது.எனவே இங்கு கரடியாக கத்தியும் பயனில்லை.மீண்டும் எதாவது தகிடுதத்தம் செய்து இந்த ஊழல் அரசே மீண்டும் பதவிக்கு வந்தால் இந்தியாவின் எதிர்காலம் அழியும் அப்படி இல்லாமல் மாற்று அரசு எந்த மாநில கட்சிகளின் ஆதரவும் இன்றி வந்தால் ஓரளவு நம்பிக்கையுடன் இருக்கலாம்.ஆனால் என்னை பொறுத்தவரை நம் நாட்டில் தேர்தல் என்று ஒன்று நிகழும் வரை நமக்கு விடிமோட்சமே இல்லை.தற்போதைய சட்ட திட்டங்களின் அடிப்படையில் நம் மக்களுக்கு ஜனநாயகம் என்றால் என்ன என்பது தெரிய இன்னும் ஒரு முப்பது ஆண்டுகளாவது ஆகும்.

  3. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு சுத்தமாக இல்லை. ’மோடி’யைத் தவிர நம்பகமான, நேர்மையான தலைவர் யாரும் கண்ணில் படவில்லை. என்ன ஆகப் போகிறதோ? 😦

  4. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக விரிக்கப்படும் இந்த வலையில்
    எவ்வளவு பேர் விழுவார்கள் ? கையில் காசு கிடைப்பதைப் பார்த்து
    மக்கள் மயங்கி விடுவார்கள் என்று தப்புக்கணக்கு போடுகிறது
    காங்கிரஸ் கட்சி. தன் கைக்காசை செலவழித்து – பொருளை வாங்கிவிட்டு, அந்தக் காசையே திரும்பப்பெற எவ்வளவு அலைய வேண்டி இருக்கிறது என்பதை நிஜத்தில் அனுபவித்த பிறகு யார் ஏமாறுவார்கள்.

    அருமையான பதிவு. வருடத்திற்கு 9 சிலிண்டர்கள் தான்; இன்னும் என்னென்னவோ சதித் திட்டங்கள். தயவு செய்து இந்த பதிவை ஆழ்ந்து படித்துப் பாருங்கள்.

    நன்றி திரு காவிரி மைந்தன், உங்கள் பதிவை தொடர்ந்து படிக்கிறேன். மின்சாரம் பெரும் பிரச்னையாக இருக்கிறது. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

  5. Satishkumar's avatar Satishkumar சொல்கிறார்:

    நன்று. எல்லோருக்கும் உள்ள சந்தேகங்களை தெளிவாக விளக்கிவிட்டீர்கள்.

  6. venkataramani r's avatar venkataramani r சொல்கிறார்:

    ஆதார் அட்டைகள் வழங்குவதில் சில குறைகள் (குளறுபடிகள்?!!)
    இருக்கலாம். அதற்காக அத்திட்டமே ஒட்டை என்பதான வாதம்
    சரியல்ல.

    ஆதார் அட்டையில் “இந்திய”குடிமகன்கள் (மகள்களும்தான்) எல்லோருக்கும்
    ஓர் எண் வழங்க்கப்படும். அவ்வட்டையில் குறிப்பிட்ட அங்க அடையாளம்
    (முக்கியமாக கண்கள்) மற்றும் பெருவிடரல் ரேகை இருக்கும். இவை
    என்றும் மாறாதது. ஆதார் அடிப்படையிலான அரசின் சலுகைகள் ஒழுங்கு
    படுத்தப்பட வாய்ப்புள்ளது. இந்தியாவில் ஒரு மாநிலத்தில் அரசின்
    சலுகைகளைப் பெறும் ஒரு நபர், வேறு எந்த மாநிலத்திலும் அரசின்
    சலுகைகளைப் பெற இயலாது. குறிப்பாக இரு முகவரியில் ஒரே ஆளுக்கு
    ரேஷன் கார்டுகள் அதற்குண்டான “மலிவு” பொருட்கள், சமையல் எரிவாயு
    ஆகியவற்றின் சப்ளை ஒழுங்கு படுத்தப்பட வாய்ப்புள்ளது.

    கடந்த தி.மு.க ஆட்சியில் தமிழகத்திலே உலா வரும் போலி ரேஷன்
    கார்டிகளை களைய அரசு முயன்றது. எல்லா மாவட்டங்களிலும் பல
    இலட்சங்களை செலவு செய்து ஆய்வு மேற்கொண்டு, உண்மையில்
    போலிகள் அடையாளம் காணப்பட்டது. ஆயினும், அவற்றை பொது
    வினியோக துறை பதிவேடுகளில் இருந்து அகற்ற இயலவில்லை.
    காரணம் என்ன?

    ஏன் அது பற்றி பின்னால் வந்த அதிமுக அரசும் கவனம் செலுத்தவில்லை.
    மாதந்தோறும் வழங்கப்படும் “இலவச அரிசியை” எத்தனை பேர்
    உண்மையில் வங்கி பயனடைகிறார்கள். உண்மையில் வேண்டுவோர்
    வாழும் பகுதிகளில் “இலவச” அரிசி (விலையில்லா அரிசி?!) வினியோகம்
    முறையாக நடக்கிறதா?

    டன் கணக்கில் பிடிபடும் கடத்தல் அரிசி முட்டைகள் மற்றும் லாரிகள்
    புரோக்கர்கள் பின்னணியில் உள்ளவர்கள் யார்? ஸ்மார்ட் கார்டுகள்
    வந்தால், இவர்கள் அப்புறப்படுத்த படுவார்கள் என்கிற காரணத்தால்
    அரசியல்”வாதிகள்” வேண்டுமானால் ஆதாரை குறை சொல்லாலாம்.
    தாங்களுமா? குறைகளைக் களைய வழி இருந்தால் சொல்லுங்கள்.

  7. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் வெங்கட் ரமணி,

    “ஆதார்” கார்டு அது ஒருவாக்கப்பட்டதன் purpose க்காக மட்டும்
    பயன்படுத்தப்படுவதை நான் குறைசொல்லவில்லை.

    அரசு மான்யங்களை காசாகக் கொடுக்கும் அயோக்கியத்தனத்தைத் தான்
    கண்டிக்கிறேன். ஏன் – (அனைத்து குடிமக்களுக்கும் கொடுத்த பிறகு )
    அதே ஆதார் கார்டின் அடிப்படையில் இப்போது போலவே
    ரேஷன் பொருட்களோ, LPG சிலிண்டர்களோ மான்ய விலையில் கொடுக்கலாமே !
    அதென்ன முதலில் நாம் காசு கொடுத்து வாங்குவது – பிறகு
    அரசாங்கம் (6 மாதமோ – ஒரு வருடமோ கழித்து) re-imbursement செய்வது ?

    இடையில் மார்க்கெட் விலையேற்றம் எப்படி compensate செய்யப்படும் ?

    நான் நிறைய கேள்விகளை எழுப்பி இருக்கிறேன்.
    தயவுசெய்து பொறுமையாகப் படித்துப் பாருங்கள் –
    பல கேள்விகளுக்கு நியாயமான விடையே கிடைக்காது.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.