என்ன நடந்தது ? – நிலக்கரி விவகாரத்தில் ஒரு விவரமான ரிப்போர்ட் …

செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும், இதைப்
பற்றி பல தகவல்கள் வெளியானாலும், நடந்தது என்ன
என்பது குறித்து அனைவருக்கும் சுலபமாக,  விவரமாக,
முழுவதும் புரியும்படி ஏனோ எந்த ஊடகமும் எடுத்துச்
சொல்லவில்லை.

விமரிசனம் வலைத்தள நண்பர்களின் வசதிக்காக,
எனக்குத் தெரிந்த வரை இங்கு விவரங்களைத் தொகுத்துள்ளேன்.
இதைக்கூட முழுமையான ரிப்போர்ட் என்று என்னால்
சொல்ல முடியாது. இன்னும் சில
தகவல்கள் மிஸ்ஸிங் !

இந்தியாவில்,  ஜார்கண்ட், ஒடிஷா,(தமிழகத்தில்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி) மத்திய பிரதேசம்,
மஹாராஷ்டிரா, ஆந்திரா போன்ற குறிப்பிட்ட சில
மாநிலங்களில் மட்டுமே நிலக்கரி கிடைக்கிறது.

1973-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி,
நிலக்கரி உற்பத்தியை நாட்டுடைமை ஆக்குகிறார்.
பொதுத்துறை நிறுவனமான, Coal India Limited
மூலமாக நிலக்கரி உற்பத்தியை தொடர்வது என்று
தீர்மானிக்கப்படுகிறது.

நிலக்கரி முக்கியமாக, அனல் மின் உற்பத்தி
நிலையங்களுக்கும், இரும்புத் தொழிற்சாலைகளுக்கும்
தேவைப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும்
நிலக்கரி இவற்றின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு
இல்லை. எனவே – இரண்டு கொள்கை முடிவுகள்
எடுக்கப்படுகின்றன.

ஒன்று – அனல் மின் உற்பத்தி நிலையங்கள் தங்களுக்கு
தேவையான நிலக்கரி இந்தியாவில் கிடைக்காத பட்சத்தில்,
அவற்றிற்கு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ள
அனுமதிப்பது.
இரண்டு – அரசு நிறுவனமான CIL மூலம் உள்நாட்டு
தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதால்,
நிலக்கரி சுரங்கங்களில் கரி எடுக்கும் உரிமையை தனியார்
துறையினருக்கும் கொடுப்பது.

தவறு இங்கு தான் உள் நுழைகிறது. தனியாருக்கு நிலக்கரி
சுரங்கங்களை (கோல் ப்ளாக்ஸ்) கொடுக்கும்போது,
வெளிப்படையாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள்
சரியாக உருவாக்கப்படவில்லை ( no transperancy ).
(அது தானே அரசியல்வாதிகளுக்கு சௌகரியம் !)

இந்த உரிமைகளை அளிப்பதற்காக ஒரு ஸ்க்ரீனிங் கமிட்டி
அமைக்கப்பட்டு, விண்ணப்பங்களை பரிசீலித்து,
முடிவெடுக்கும் அதிகாரம் அந்த கமிட்டிக்கு அளிக்கப்பட்டது.
விளைவு  – அரசியல்வாதிகளுக்கும், ஆளும் கட்சியினருக்கும்
வேண்டப்பட்ட  தனிப்பட்ட தொழில் அதிபர்களுக்கு
லைசென்சுகள்  வாரிக் கொடுக்கப்பட்டன.இந்த லைசென்சுகளுக்கு
எந்தவித கட்டணமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

(லைசென்சு பெற்ற உரிமையாளர்களில் காங்கிரஸ் தலைமைக்கு
பிடித்த  அம்பானி, டாட்டா, ஜிண்டால்  போன்ற பல பெரிய
பணத்திமிங்கிலங்களும் அமைச்சர்களுக்கு பிடித்த பல குட்டி
திமிங்கிலங்களும் உண்டு ! இந்த லைசென்சுகள்
கொடுக்கப்பட்டதற்கான தங்கள் நன்றியுணர்வை – காங்கிரஸ்
கட்சியின் தேர்தல் நேரத்து செலவுகளை கவனித்துக் கொள்வதன்
மூலம் இந்த பண உற்பத்தித் தொழிற்சாலைகள் ஈடு செய்யும் !)

நிலக்கரி அமைச்சக அதிகாரிகள்  நீண்ட நாட்களாக
இதை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்புகின்றனர்.
2004-ல் நிலக்கரி அமைச்சக செயலாளர்
ஒரு அலுவலக குறிப்பு எழுதுகிறார். நிலக்கரி சுரங்கங்களுக்கான
உரிமைகள் வெளிப்படையான விதிமுறைகளுடன்
“பொது ஏல” அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டும் என்று.

இந்த குறிப்பு பரிசீலனைக்கு வரும் நேரத்தில் -பிரதமர்
மன்மோகன் சிங் தான் இந்த துறைக்கு அமைச்சர்.(அதற்கு
முன்னர் நிலக்கரி அமைச்சராக இருந்த சிபு சோரன்  –
கொலை வழக்கு காரணமாக ராஜினாமா செய்ய நேர்ந்ததால்
பிரதமர் மன்மோகன் சிங் – நிலக்கரித் துறையையும்
தானே வைத்துக் கொண்டார்.2004 முதல் 2009 வரை
மன் மோகன் சிங் தான் நிலக்கரி அமைச்சரும் !)

-இந்த நிலையில், பிரதமர் மன்மோகன்
சிங் அலுவலகத்தில் ஒரு முடிவு எடுக்கப்படுகிறது.
நிலக்கரி சுரங்கங்களை இதுவரை கேட்பவர்களுக்கெல்லாம்
“இனாமாக” வரைமுறை இன்றி கொடுத்து வருவது
28 ஜூன் 2004 முதல்  நிறுத்தப்பட வேண்டும்.
இந்த தேதிக்குப் பின்னர்
“பொது ஏலம்” விடப்பட்டு தான் நிலக்கரி எடுக்கும்
உரிமம் கொடுக்கப்பட வேண்டும்.

தன் அதிகாரம் எது வரை செல்லும் என்று தெரியாத
சிங்ஜி “தெரியாத்தனமாக” இந்த முடிவை எடுத்து விட்டார்.

“பல இடங்களிலும்” இருந்து “பல உருவங்களில்” எதிர்ப்பு –
நேரடியாகவும், மறைமுகமாகவும் !!
விளைவு – இன்று வரை இந்த தீர்மானம்
செயல்படுத்தப்படவில்லை.(காங்கிரஸ் தலைமைக்கு
இது பிடித்திருந்தால் எப்போதோ அமுலுக்கு வந்திருக்குமே !)

2004க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் மத்திய அரசு
மொத்தம் 218 கோல் ப்ளாக்குகளுக்கான அனுமதியை
கொடுத்துள்ளது. இதில் இரண்டு மட்டுமே 2010 மற்றும்
2011ல் கொடுக்கப்பட்டுள்ளது.

மற்றபடி மீதியுள்ள 216 சுரங்கங்களுக்கான அனுமதி
2004 முதல் 2009 வரையான கால கட்டத்திற்குள் – அதாவது
பிரதமர் மன்மோகன் சிங் நிலக்கரி அமைச்சராகவும்
இருந்த காலத்தில் – கொடுக்கப்பட்டுள்ளது.
(அல்லது அவர் கொடுக்க வைக்கப்பட்டுள்ளார் !)

இவற்றில் 21 உரிமைகள், பல்வேறு காரணங்களுக்காக
இடையில் ரத்து செய்யப்பட்டு விட்டன.

நிலக்கரி சுரங்கங்களுக்கான உரிமை (“இனாமாக”)
கொடுக்கப்படும்போது, அந்த தனியார் கம்பெனிகள் விரைவில்
உறுபத்தியை துவங்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
(அதிகபட்சம் 36-42 மாதங்கள் வரை என்று உற்பத்தி
துவக்கத்திற்கு கெடு விதிக்கப்பட்டது.)

ஆனால், பெரும்பாலான கம்பெனிகள் இன்னும் உற்பத்தியை
துவங்கவே இல்லை. அதாவது எந்த நோக்கத்திற்காக
(விரைவில் நிலக்கரி பயன்பாட்டிற்கு கிடைக்க வேண்டும்)
அவை கொடுக்கப்பட்டனவோ – அந்த நோக்கம்
நிறைவேறவில்லை.

இதைத்தான் மத்திய நிதி அமைச்சர் பெருமையாக
“நிலக்கரியை வெட்டி எடுத்து விற்றிருந்தால் தானே
“அரசாங்கத்திற்கு இழப்பு” என்று சொல்லலாம்.இன்னும்
கரி வளம் முழுவதும் வெட்டி எடுக்காத நிலையில்
“அன்னை பூமியின் மடியில்”தானே இருக்கிறது. இதை
எப்படி நஷ்டம் என்று சொல்லலாம் என்று கேட்கிறார் !

Coal India அரசு நிறுவனம் மொத்த உற்பத்தியில்
80 %க்கு பொறுப்பு. 2004ஆம் ஆண்டில்  371 மில்லியன்
டன் ஆக இருந்த இதன்  நிலக்கரி உற்பத்தி, 7 ஆண்டுகளுக்கு
பிறகு, 2011-ல் மிக மிக குறைவாக அதாவது ஆண்டுக்கு
2.3 % என்கிற அளவிற்கு உயர்ந்து  436 மில்லியன்
டன்னில் வந்து நிற்கிறது.

தனியார் நிலக்கரி சுரங்கங்களின் மொத்த உற்பத்தி
2010-11-ல் 34.64 மில்லியன் டன் என்கிற அளவில்
இருந்திருக்கிறது. அரசாங்க நிறுவனமான Coal India
-வினால், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய முடியாது
என்கிற எண்ணத்தில் தான் தனியார் சுரங்கங்களுக்கு
அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த தனியார்
கம்பெனிகளும் உற்பத்தியை விரைவாக துவங்கவோ,
அதிகரிக்கவோ, எந்தவித அக்கரையையும் காட்டவில்லை.
காரணமென்ன ?(யோசியுங்கள் – சிம்பிள் !)

ஸீஏஜி (controller and auditor general )
1,86,000 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு என்கிற
முடிவிற்கு எப்படி வந்தார் ?

அரசு நிறுவனமான, CILன் உற்பத்தி/லாப கணக்குகளை  
ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொண்டார்.

CIL 2010-11-ல் ஒரு டன் நிலக்கரிக்கு  சராசரியாக
Rs 1,028.42 என்கிற அளவிற்கு விலை நிர்ணயம்
செய்திருந்தது.

இதில், அதன் உற்பத்திச் செலவு ஒரு டன்னுக்கு
Rs 583.01 என்றும், கணக்கீடு போன்ற வகைகளுக்காக
மேற்கொண்டு Rs 150/- சேர்த்துக் கொள்ளப்பட்டு,
மீதியை -(Rs 1,028.42 -583.01 + 150/- )
ஒரு டன்னுக்கு Rs 295.41 லாபம் என்று
காட்டப்பட்டிருக்கிறது.

தனியார் சுரங்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களிலுள்ள
நிலக்கரியின் மொத்த மதிப்பு சுமார் 6,282.5 மில்லியன் டன்.
அவர்களுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ள இந்த நிலக்கரியின்
(வெட்டி எடுக்கப்பட்ட மற்றும் வெட்டி எடுக்கப்படாத )
மொத்த லாப மதிப்பு  Rs 295.41 x 6,282.5 =
Rs 1,85,591.33-( அதாவது, கிட்டத்தட்ட 1.86
லட்சம் கோடிகள் )

இன்னும் பெரும்பாலான நிலக்கரி வெட்டி எடுக்கப்படவே
இல்லையே -“பூமித்தாயின் மடியிலே” தானே இருக்கிறது
என்று சொல்வது மெத்தப்படித்த வக்கீல்களின்
வெறும் வெட்டி வாதம். இத்தனை
நிலக்கரியையும் ஏற்கெனவே மத்திய அரசு அவர்களுக்கு
“தானம்”செய்தாகி விட்டது. எப்போது வெட்டினாலும்,
காசு அவர்களுக்கு தான். இன்னும் நாளாக, நாளாக
நிலக்கரியின் விலை ஏறும் – அவர்களுக்கு அதிக லாபம் !

நிலக்கரி லைசென்சு வாங்கிய அன்றிலிருந்தே –
அந்த கம்பெனிகளின் பங்குச்சந்தை மதிப்பு பல நூறு மடங்கு
உயர்ந்து விட்டது. எப்போது விற்றாலும் லாபம்  –
இன்னும் நாள் கழித்து விற்றால் இன்னும் அதிக லாபம் !!!

இதில் மாநில அரசுகளின் பங்கு என்ன என்றும் ஒரு
கேள்வி எழுகிறது.

நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ள மாநிலங்களில்,
அந்தந்த மாநில அரசுகள் பரிந்துரை செய்யும்
கம்பெனிகளுக்கு(ம் -!) உரிமம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதாவது தங்கள் கோட்டாவை பூர்த்தி செய்துக் கொள்ளும்போது,
மாநில அரசுகளுக்கும் கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கிறது
மத்திய அரசு.

சில விஷயங்களில், மாநில முதலமைச்சர்களின்
விருப்பங்கள் – தலையீடுகள் இருந்திருக்கக்கூடும்
என்பது உண்மை தான். ஆனாலும் மாநில அரசுகள்
எந்த அடிப்படையில் பரிந்துரை செய்திருக்கின்றன என்று
கவனித்தால், பெரும்பாலும் – தங்கள் தங்கள்
மாநிலங்களில், அனல் மின் உற்பத்தி நிலையங்கள்
அமைக்க முன்வரும் நிறுவனங்களுக்கும், முதலாளிகளுக்குமே
பரிந்துரை செய்திருக்கின்றன.

நிலக்கரி சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி
தங்கள்  மாநில அனல் மின் உற்பத்தி திட்டங்களுக்கு
முன்னுரிமையில் கொடுக்கப்பட  வேண்டும் என்கிற
நோக்கத்தில் செயல்பட்டிருப்பது தெரிகிறது.
இதில் சம்பந்தப்பட்ட ஆளும் கட்சி முதல்வர்களுக்கும்
சில பயன்கள் கிடைத்திருக்கலாம்- ஆனால் உறுதியாகச்
சொல்ல முடியாது. பொது நோக்கம் வெளிப்படையாகத்
தெரிகிறது.

இந்த விஷயத்தில் கூட, மத்திய அரசு சுரங்க உரிமைகளை
ஏலத்தில் விடுவது என்கிற கொள்கை முடிவை அமுல்படுத்தி
இருந்தால், இந்தவித குறைகள் கூட ஏற்பட வாய்ப்பு
இருந்திருக்காது. வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை
மாநில அளவிலேயே மின் உற்பத்திக்கு பயன்படுத்த
முன்வருவோர் மட்டும் தகுதியுடையவர்கள் என்று நிபந்தனை
விதித்து ஏலம் விட்டு உரிமைகளை கொடுத்திருக்கலாமே !

ஓரளவு எழுதி இருக்கிறேன். இன்னமும் விவரங்கள்
கிடைத்தால் – பின்னர் சேர்க்கிறேன்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to என்ன நடந்தது ? – நிலக்கரி விவகாரத்தில் ஒரு விவரமான ரிப்போர்ட் …

  1. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    நிலக்கரி சுரங்க விவரங்கள் தோண்ட தோண்ட வந்து கொண்டேயிருக்கிறது. அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக சுருக்கி எழுதுகிறேன் முதலாவதாக .சிபு சோரன் என்ற ஆமை புகுந்த அரசு துறையும் நிர்வாகவும்
    எப்படியிருக்கும். அது அவருடைய ராசி. எதிர் கட்சிகளின் கோரிக்கைப்படி மன்மோகன் சிங்க் ராஜினாமா செய்வாரா? ஆனால் அதற்கும் சோனியாவின் உத்திரவு வேண்டுமே. ராகுல் பிரதம ராக வேண்டும் என கருதினால்
    ஒரு வேளை மன்மோகன் சிங்கை ராஜினாமா செய்ய சொல்வார். நிலக்கரி சுரங்க ஊழல் நடக்கவே இல்லை. அது
    அந்தந்த இடத்தில் அப்படியே உள்ளது என கூறுகிறார். பசி. சுரங்க ஒதுக்கிடு செய்தவர்கள் உற்பத்திக்கான கால நிர்ணயம் செய்துள்ளார்கள? அதில் விசேடம் என்னவென்றால் பாஜக – வின் சத்தீஸ்கர் மாநிலத்திலும் ஊழல் நடந்துள்ளதாகவும் பாஜக இரட்டைவேடம் போடுவதாகவும் ஒருகூச்சல் கேட்க்கிறது. ஊழல் நடக்கவில்லையெனில் மத்திய அரசு எதுக்காக தனியார் நிறுவனங்களுக்கான உரிமங்களை ரத்து செய்வதற்கு ஆலோசிப்பதாக அறிக்கை விடுகிறார்கள். ஒதுக்கீடு செய்யப்பட்ட 57– சுரங்கங்களில் ஒன்றுதான் உற்பத்தியை
    துவங்கியுள்ளதாக அமைச்சர் ஜெய்ஸ்வால் கூறி தணிக்கை அதிகாரியின் கருத்துடன் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறுகிறார். தணிக்கை துறையின் மூன்று முக்கிய அறிக்கைகளில் சுரங்கங்களை ஏலத்தில் விடாமல் தனியாருக்கு கொடுத்ததில் ஊழல், அல்ட்ரா மெகா மின்சார உற்பத்தி நிலையம் அமைப்பதில் ஊழல் , மற்றும் டில்லி விமான நிலையம் கட்டும் திட்டத்தில் ஊழல் என அடுக்கடுக்காக கூறியுள்ளது. மேலும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி கொடுத்த வகையில் ரூபாய் முப்பது ஆயிரம் கோடி லாபம் பார்த்துள்ளது. நிலக்கரி சுரங்கங்களில் பரிதாபத்துக்குரிய சில விஷயங்கள் என்னவென்றால் பதினான்கு வயது சிறுவர்களும் 400 –அடி ஆழத்தில் பத்துக்கு பத்து அடி இடத்தில் வேலை செய்து வருகிறார்கள். உற்பத்தியாகும் மொத்த நிலக்கரியில் 25 -30 — சதா வீதம் சட்டவிரோதமாக சுரங்கங்களிலிருந்து எடுக்கப்படுகிறது மேலும் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார்
    7,20,௦௦௦000 டன் நிலக்கரி கடத்தப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூபாய் 600 – கோடி ஆகும். உலகிலேயே வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்திய சுரங்கங்களில்தான் நிலக்கரி இருப்பு அதிகமுள்ளது. தற்போதைய மதிப்பீடு சுமார் 250 பில்லியன் டன்கள் ஆகும். இதை வைத்து கொண்டு இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வேலை வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுக்கலாம், அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கலாம். உலகம் முழுவதும் நிலக்கரியை ஏற்றுமதி செய்யலாம் என கல்வியாளர்கள் கூறுகிறார்கள். பொதுதுறைக்கென ஒதுக்கப்பட்ட முக்கியமான 13 கனிமங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டது. பன்னாட்டு நேரடி முதலீடு 1993 -ல் 50 சதவீதவும், 2000 -ல் 74 சதவீதவும் , 2006 -ல் 100 சதவீதவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும்
    10 ,௦௦௦ 000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு வரை நிலம் வைதுக்கொள்ள தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
    மேலும் தனியாருக்கு சாதகமாக 1999 -ல் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு சுரங்கம் மற்றும் கனிமங்கள் ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி சட்டம். மேலும் பல்வேறு சட்ட விதிகள். பாஜக-வினர்
    பிரதமர் ராஜினாமா செய்யவேண்டும் என கோருவதில் தவறே இல்லை.

  2. ரமேஷ்'s avatar ரமேஷ் சொல்கிறார்:

    அருமையான இடுகை காவிரிமைந்தன் சார்.
    எந்த மீடியாவிலும் இத்தனை விவரங்கள் கிடைக்கவில்லை.

    இன்று மாலை டிவியில் விவாதம் பார்க்கும்போது,
    இந்த விவரங்கள் புரிந்திருந்தது மிகவும் உதவியாக
    இருந்தது. நன்றி. தொடர்க உங்கள் நற்பணி.

  3. subra36's avatar subra36 சொல்கிறார்:

    a good report. FM statement seemsto safe guard some people.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.