எழுத்தாளர் பாலகுமாரன் சொன்ன ஒரு விஷயம்…..

எழுத்தாளர் பாலகுமாரன் சொன்ன ஒரு விஷயம்…..

எனக்கு பாலகுமாரன் அவர்களின் எழுத்து மிகவும்
பிடிக்கும். முக்கிய காரணம் – சமூக அக்கரை
உள்ள  எழுத்தாளர் அவர். அவர் எழுத்துக்கள்
எல்லாவற்றிலும், சமூகத்திற்கான செய்தி- message
– எதாவது நிச்சயம் ஊடுருவி இருக்கும்.
இளைஞனாக இருக்கும்போதே படிக்க ஆரம்பித்தது.
கடந்த சுமார் 30-35 ஆண்டுகளில் அவர் எழுதியவற்றில்
கிட்டத்தட்ட 90 % வரை நான் படித்திருக்கிறேன்
என்று சொல்லலாம்.

அண்மைக் காலத்தில் அவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு
நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருந்தார்.
ஒருவழியாக, கொஞ்சம் உடல்நலம் மேம்பட்டு
வீடு திரும்பி இருக்கிறார். நோயின் பாதிப்பிலிருந்து
அவர் இன்னும் விடுபடவில்லை. அவர் விரைவில்
முழு உடல் நலம் பெற வேண்டுகிறேன்.

வெளிவந்தவுடனேயே முதல் காரியமாக –
அவரது நோய்க்கான காரணத்தையும்,
அவர் பட்ட அந்த  அவஸ்தையை பற்றியும்,
விவரமாக எழுதி இருக்கிறார். அதைப் படிக்க
வாய்ப்பில்லாத நண்பர்களுக்காக, அந்த கட்டுரையிலிருந்து
சில பகுதிகளை மட்டும் இங்கு எடுத்துத்தர விரும்புகிறேன்.

கீழே –

—————————
என்னுடைய நுரையீரல்கள் சரியாக இல்லாது,
அதன் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட
சளி அடைப்புகள் சூழ்ந்து கொண்டன. நுரையீரல்கள்
முழுவதுமான திறனோடு வேலை செய்யவில்லை.
வயதான காரணத்தால், நுரையீரல்கள் மெல்ல மெல்ல
வேலை செய்யும் திறனை இழக்க, இந்த நுரையீரல்
அடைப்பும் சேர்ந்து கொண்டு என்னை பழி வாங்கியது.

மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஒரு பிடி சாதத்திற்கு
நான் அவஸ்தைப்படும்படி ஆயிற்று. முகம் முழுவதும்
மூடி, ஆக்ஸிஜனை வேகமாக செலுத்தினால் தான்
நான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை ஏற்பட்டது.
என்.ஐ.வி.என்கிற அந்த விஷயத்தோடு தான் இரவு
தூங்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது.

ப்ராங்கோஸ்கோபி என்று மூச்சுக்குழலுக்குள் கருவியை
விட்டு சோதனை செய்து – அங்கே அடி நுரையீரலில்
அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக
சளி இருப்பதை தெரிந்து கொண்டார்கள்.

இதை வேறு எப்படி சரி செய்வது ? வலியை பொறுத்துக்
கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால்
அவ்விதமே நடந்து கொள்ளலாம். ஆனால், ஒரு பிடி
மூச்சு பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவது
என்பது கடினமாக இருந்தால் என்ன செய்வது –
எப்படிச் சமாளிப்பது.  தினசரி மரண போராட்டமாக
அது மாறி விட்டது. மூச்சு வேக வேகமாக இழுத்து
இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான்
என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது.

பத்தொன்பது வயதிலிருந்து குடித்த சிகரெட்டுகள்
அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை
காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது.

ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு மைலாபூர் பூராவும்
சுற்றித்திரிந்த எனக்கு சிறை தண்டனை போல வீட்டில்
அதே அறையில் இருக்கும்படி நேரிட்டது. மிகப்பெரிய
வலி இல்லை. ஜூரம் இல்லை. ஆனால், அந்த ஆக்ஸிஜன்
குழாயை எடுத்து விட்டால் மூச்சுத் திணற ஆரம்பிக்கும்.
ஆக்ஸிஜன் இல்லாமல் நடக்க முடியாது. பேச முடியாது.
உணவு உண்ண முடியாது. எதுவுமே செய்ய முடியாது.

இது காலில் சங்கிலி கட்டி கையில் பெரிய இரும்பு
குண்டை கொடுத்தது போன்ற மிகப்பெரிய தண்டனை.
மரணம் எல்லாருக்கும் வரும். எந்த ரூபத்தில்
வேண்டுமானாலும் வரும். ஆனால், மூச்சுத் திணறி
இதோ.. இதோ .. என்று பயம் காட்டுகின்ற நிலைமை
யாருக்கும் வரக்கூடாது.

உள்ளுக்குள் போன மூச்சை வெளியே விட முடியாமல்,
வெளியே இருக்கின்ற பிராணவாயுவை உள்ளே இழுக்க
முடியாமல், திணறி கதறுகின்ற ஒரு வேதனை யாருக்கும்
வரக்கூடாது.

சிகரெட் இன்று உங்களை ஒன்றும் செய்யாது.
பிற்பாடு ஒரு நாள் மிக நிதானமாக கொல்லுகின்ற ஒரு
விஷம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பிராணாயாமம் கற்றுக் கொள்ளுங்கள்.
நன்கு பிராணாயாமம் கற்றுக் கொண்டவர்களுக்கு –
சிகரெட் ஆசை வராது.

(நன்றி – திரு பாலகுமாரன் அவர்களுக்கு )
—————————————–

இனி நான் சொல்வது –

எல்லாருமே விளையாட்டாகத் தான் சிகரெட் குடிக்க
ஆரம்பிக்கிறார்கள். ரத்தத்தில் கலந்து விடும்
நிகோடின் அதிலிருந்து அவர்கள் விடுபட முடியாதபடி,
அந்த பழக்கத்தை விட முடியாதபடி -தடுக்கிறது.

நெருப்பை தொட்டால் சுடுவது போல,
சிகரெட் பிடிப்பதன் பாதிப்பு உடனே தெரிவதில்லை என்பதால் –
நாம் யாரும் அதை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.

எங்கோ படித்தேன் -சிகரெட் பழக்கத்தை விடுவது பற்றி
அறிவுரை கூறியதற்கு  –
ஒருவர் சொன்னாராம் –

“இது என்ன பெரிய காரியம் –
நான் பல முறை விட்டிருக்கிறேனே !”– என்று.

அப்படித்தான் –ஏகப்பட்ட பேர் விடுவதாகச் சொல்லி
மறுநாளே மீண்டும் துவங்கி விடுகிறார்கள்.

சிகரெட்டை நிச்சயம் விட்டு விட முடியும் –
மன உறுதியோடு, தீர்மானமாக இருந்தால்.
தடாலடியாக, உடனடியாக முடிவெடுங்கள் –
இனி சிகரெட் “பிடிப்பது இல்லை” என்று.
4 நாட்கள் உறுதியாக இருங்கள் – போதும்.

25 ஆண்டுகளுக்கு மேல் “பிடித்து”,”விட்டவன்” என்கிற
உரிமையில் நான் இதைச் சொல்லலாம் அல்லவா ?

ஆமாம் – நான் எப்படி இதிலிருந்து விடுபட்டேன் ?
பயமுறுத்துவதற்கு பாலகுமாரன் கட்டுரை கூட
அப்போது இல்லையே !

என் மனைவியோ, குழந்தைகளோ,
மற்ற உறவினர்களோ, நண்பர்களோ –
வேறு யாரும் என்னிடம் இதை ஒரு குறையாகவே
கருதவில்லை. இந்த பழக்கத்தை விடச்சொல்லி யாரும்
என்னிடம் சொன்னது கூடக் கிடையாது !
பின் எப்படி விட்டேன் ?

அப்போது என் குழந்தைகளின் பள்ளிப் பருவம் –
வளர்ந்து கொண்டிருந்தார்கள்.
அவர்களைப் பொறுத்த வரைஅவர்களது அப்பா
ஒரு ஐகான். “Appa is great ! எல்லா
அப்பாக்களையும் விட உசந்தவர்” என்கிற நினைப்பு
அவர்களுக்கு !

நான் அதற்கு தகுதியானவனா ?

இளம் வயதிலேயே -நான் நல்லவனாக இருக்க வேண்டும் –
நாலு பேருக்கு உபயோகம் உள்ளவனாக இருக்க வேண்டும் –
என்கிற எண்ணத்தை வளர்த்து வந்தேன். அரசாங்க
உத்தியோகத்தில் இருந்தபடியால், எனக்கேற்ற அளவிற்கு
சில  கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டேன்.அதற்கேற்ப
ஒரு நண்பர் குழுவையும் உருவாக்கிக் கொண்டேன்.
அவர்களையும் சேர்த்துக்கொண்டு, மன நிறைவோடு,
என்னால் இயன்ற அளவிற்கு சமூகப் பணியில்
ஈடுபட்டு வந்தேன்.

ஒரு நாள் யோசித்தேன். இப்போதைக்கு
என் குழந்தைகளுக்கு –
என் சிகரெட் பழக்கம் பற்றி  அபிப்பிராயம்
ஒன்றும்இல்லை.
ஆனால் இவர்கள் வளர்ந்த பிறகு .. ?
அவர்கள் மனதில் என்னைப்பற்றிய இமேஜ் அப்படியே
இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் !

சிகரெட்டைத் தவிர வேறு எந்த குறையும்
சொல்ல முடியாத அளவிற்கு உண்மையிலேயே
நான் ஒரு நல்ல மனிதனாகவே இருந்தேன்.

எனவே –  என்னிடமிருந்த ஒரே கெட்ட பழக்கத்தை
அன்றே, அப்போதே – விட்டுத் தொலைத்தேன்.
20 வருடங்களுக்கு மேலாயிற்று !
என் குழந்தைகள்  என்னைப்பற்றிய மதிப்பீட்டில்
ஏமாற மாட்டார்கள் என்கிற மனத்திருப்தி எனக்கு !

யோசியுங்கள் நண்பர்களே –
பாலகுமாரன் கட்டுரைக்காக இல்லா விட்டாலும் கூட,
உங்கள் குழந்தைகளுக்காகவாவது இந்த பழக்கத்தை
விட்டு விடலாம் அல்லவா ?

————————
பிராணாயாமம் பற்றி –
பல பேர் இது ஏதோ பெரிய வித்தை என்று
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
யார் வேண்டுமானாலும்,
எப்போது வேண்டுமானாலும், எவ்வளவு நேரம்
வேண்டுமானலும் இந்த எளிய மூச்சுப் பயிற்சியை
செய்யலாம். குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு
15 நிமிடமாவது செய்தால் நல்லது.

முறைப்படி முழுவதும் கற்றுக் கொள்ள
வலைத்தளத்திலேயே நிறைய விவரங்கள்
கிடைக்கின்றன.

நான் எளிமையாக – என்ன செய்ய வேண்டும் என்பதை
லாஜிகலாக மட்டும் இங்கே சொல்கிறேன்.

1) சாதாரண வேகத்தில் மூச்சுக் காற்றை –
மூக்கின் வழியாக உள்ளே இழுக்க வேண்டும்.

2) உள்ளே இழுத்த மூச்சுக்காற்றை நுரையீரலிலேயே
கொஞ்ச நேரம் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

3) பிறகு மெதுவாக, மிக மிக மெதுவாக மூச்சை
வெளியே விட வேண்டும்.

இந்த மூன்று செய்கைகளையும் முறையே 2 : 4 : 8
என்கிற விகிதத்தில் செய்யலாம்.

கொஞ்சம் கூட, குறைய போனால் ஒன்றும் தவறில்லை.
ஆரம்பித்தால் போதும் – சுலபமாகப் பழகி விடும்.

இதன் மூலம் நிகழ்வது என்ன ?
நுரையீரலின் கொள்ளளவை, கொஞ்சம் கொஞ்சமாக
அதிகரிக்க, நுரையீரல் விரிவடைய – பயிற்சி எடுக்கிறோம்.
அதிகம் பிராணவாயுவை (ஆக்ஸிஜன்)
உள் வாங்கிக் கொள்கிறோம். இதன் மூலம்
நுரையீரலின் செயல்பாடு, பயன் -அதிகரிக்கிறது.

பிராணவாயுவை அதிகம் எடுத்துக் கொள்வதால் –
ஒட்டுமொத்தமாக, தேக ஆரோக்கியம் கூடுகிறது.

கடவுள் நம்பிக்கைக்கும் -இதற்கும் – எந்தவித சம்பந்தமும்
கிடையாது. எனவே நாத்திகர்களும் தாராளமாக இதைச்
செய்யலாம். உடல் பயிற்சி போல – இது ஒரு
மூச்சுப் பயிற்சி அவ்வளவே !

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

36 Responses to எழுத்தாளர் பாலகுமாரன் சொன்ன ஒரு விஷயம்…..

  1. தமிழன்பன்'s avatar தமிழன்பன் சொல்கிறார்:

    காவிரிமைந்தன் அய்யா,

    இந்த வலைத்தளத்தின் மூலம் நீங்கள் ஆற்றும் சமுதாயப்பணி
    அற்புதம். அளவிடற்கரியது. உங்களது ஒவ்வொரு இடுகையும் அற்புதமான தகவல்களை படிப்பவர்களுக்குத் தருகின்றன.
    உங்கள் பணியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டிக்
    கொண்டே இருக்கலாம்.
    பொதுவாக எல்லாவற்றையும் படிப்பவன் நான். ஆனால்
    பிராணாயாமம் என்கிற பெயரை வைத்தே அது ஏதோ வைதீக
    தொடர்பு உடையது என்று நினைத்து இது வரை அதைப் பற்றி
    தெரிந்து கொள்ள அக்கரை இல்லாமல் இருந்து வந்தேன்.
    இவ்வளவு உபயோகமான அதை இவ்வளவு எளிமையாகப் புரிய
    வைத்து விட்டீர்கள். நன்றி.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  2. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    மிகவும் நல்ல, பயனுள்ள தகவல் நண்பரே. வாழ்த்துக்கள்.

  3. ramanans's avatar ramanans சொல்கிறார்:

    பிராணாயாமம் செய்வது பற்றிய சூட்சுமமான ஒரு தகவலும் உண்டு. பொதுவாக பூமியில் பிறக்கும் மனிதன் (ஏன் எல்லா உயிரினமும் கூட) இத்தனை வருடம் வரை வாழ்வார்கள் என்று ஒரு கணக்கு உண்டு. மனிதனுக்கு 60 வயது, 80 வயது வரை ஆயுள் என்று ஒரு கணக்கு உண்டு. ஆனால் உண்மையில் மனிதனின் ஆயுளை நிர்ணயிப்பவை வயதல்ல. தாயின் கருவறையிலிருந்து வெளி வந்தது முதல் அவன் விட ஆரம்பிக்கும் சுவாசமே!

    வலது மூக்கு துவாரத்தால் இத்தனை சுவாசம், இடது மூக்கு துவாரத்தால் இத்தனை சுவாசம், இரண்டு துவாரங்களாலும் இத்தனை சுவாசம் விட வேண்டும் என்று ஒரு கணக்குண்டு. இது பூமியில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். அந்த மூச்சு விடுவதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நீண்ட நாள் வாழலாம்.

    பண்டைக்காலத்தில் சித்தர்கள், யோகிகள், முனிவர்கள் மக்களுக்கு நன்மை செய்வதற்காக இந்த முறைகளைப் பின்பற்றி மூச்சுப் பயிற்சிகள் செய்து நீண்ட காலம் வாழ்ந்து சேவை செய்தனர்.

    இது ஒவ்வொரும் பின்பற்றக் கூடியது. அவசியம் பின்பற்ற வேண்டியது. இதன் மூலம் உடலுக்கும் நன்மை. மனதுக்கும் தெளிவு.

    இந்த சுவாசப் பயிற்சிகளை பூரகம், கும்பகம், ரேசகம் என்று சொல்வார்கள். சுவாசம் வெளியேறும் நாடியை இடைகலை, பிங்கலை என்று சொல்வார்கள்.

    “சர நூல்” போன்றவற்றில் இதுபற்றிய விவரங்கள் உள்ளன.

    மற்றுமொரு முக்கியமான உண்மை. இந்த மூச்சுப் பயிற்சிகளின் மூலம் மூளையின் செயல்படாத பல பகுதிகள் (மனிதன் 8% மட்டுமே பயன்படுத்துக்கிறான்) செயல்படத் துவங்குகின்றன. இதனால் பல்வேறு ஆற்றல்கள் (சித்திகள்) மனிதனுக்குக் கிடைக்கின்றன. அக்காலத்து சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும், யோகிகளுக்கும் பல்வேறு ஆற்றல்கள் கைவர இவை மிகவும் உதவிகரமாக இருந்தன.

    ஆகவே மூச்சுப் பயிற்சி என்பது மிகவும் அவசியமானது. ஒவ்வொருவருக்கும் தேவையானது.

    அதுபற்றிய விழிப்புணர்வு தந்தமைக்கு மிக்க நன்றி காவிரி மைந்தன்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக ரமணன்,

      உங்களிடமிருந்து மேற்கொண்டு விவரங்கள் அவசியம்
      வரும் என்று எழுதும்போதே எதிர்பார்த்தேன்.
      கூடுதல் தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே.

      இந்த வலைத்தளம் வலிமை பெறுவது இது போன்ற
      பின்னூட்டங்களால் தான்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  4. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    இந்த பழக்கம் ஒரு ஸ்டேட்டஸ் ஸிம்பல் என்று ஆகிவிட்டது.
    அதாவது அறைக்கால் சட்டையிலிருந்து முழுக்கால் சட்டை அணிவது போல…
    அதே கால கட்டத்தில் ஏற்படும் ஒரு பழக்கம் இது.
    “நான் வளர்கிறேன், தம்பி” எனும் மனநிலையை கொடுப்பது இந்த புகை பழக்கம்.
    இதே கால கட்டத்தில், நான் 8ஆம் வகுப்பு படிக்கும் போது, என்னுடைய ஆங்கிலப்பாட ஆசிரியர் திரு. ராமசந்தர் ஒரு நாள் ஒரு குண்டை தூக்கிப்போட்டார் வகுப்பில்!
    அதாவது, புகை பிடிப்பதில் ஒரு நன்மை உண்டு என்றார்.
    (அந்த வயதில் திருட்டு தம் அடிக்க அனைவரும் திட்டம் தீட்டும் காலம் அது)
    என்னடா இது, வாத்தியாரே இப்படி இதில் நன்மை இருக்கு என்கிறாரே என்று யோசிக்கும் போதே அவர் தொடர்ந்து என்ன பயன் என்றும் கூறினார்.
    “புகை பிடித்தால் தலை முடி எப்போதும் நறைக்காது” என்றார்.
    அதற்கு அவர் கூறிய அத்தாட்சி, தன் தலை முடி.
    தான் புகை பிடிக்காததால் தன் தலை முடி நரைத்துவிட்டது என்றும் கூறி நிறுத்தினார். மாணவர்கள் அனைவருக்கும் ஒரே சந்தோஷம். ஆஹா இவ்வளவு நல்ல விஷயமாக இருக்கிறதே புகைபிடித்தல் என்று ஒவ்வொருவரும் அடுத்தவர் முகத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போது தன் அமைதியை கலைத்தார் ராமச்சந்திரன் சார்.
    “ஆனால் தலை முடி நரைக்கும் முன் அவர் இறந்துவிடுவார்” என்று முடித்தார்.
    வகுப்பறையே ஸைலென்ட்.
    அந்த வார்த்தை என் மனதில் பசுமரத்தாணி போல என் மனதில் பதிந்து, இன்று வரை நான் தம் அடிக்கவில்லை என்பதை அந்த ஆசிரியருக்கு காணிக்கையாக்குகிறேன். ஹீம்….. ஆனால் என்ன… தலை முடியும் தாடியும் கூட நரைத்துவிட்டது.
    ஹிஹீஹிஹ்

    • bagath's avatar bagath சொல்கிறார்:

      Nice comment.. I also follow..

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் அஜீஸ்.

      நீங்கள் எனக்கு மிகவும் பரிச்சயமாகி விட்டவர் –
      உங்கள் எழுத்துக்களின் மூலம் ! நன்றி.
      தொடர்ந்து அனுபவங்களை பங்கு போட்டுக்
      கொள்ளுங்கள். அனைவரும் பயன் பெறுவோம்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  5. Prakash's avatar Prakash சொல்கிறார்:

    Aramayana idukkai anbarae…

  6. anbeshivam's avatar anbeshivam சொல்கிறார்:

    அருமையான பதிவு. பாலகுமாரன் நிச்சயம் பல பேர்களின் வாழ்க்கை சீரடைவதற்கு உதவியிருக்கிறார். அவ்வகையில் நானும் ஒருவன்.

  7. bagath's avatar bagath சொல்கிறார்:

    Thiru K.M avarkale.. Thangalathu anaithu pathippukalum miga arumai.. Thangalathu intha pathippin moolam, Smoking habit how dangerous is.. I can understand & share this msg to my friends too.. thnaks for your social awareness.. Is there any chance to see your photograph?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி நண்பர் பகத்.

      இந்த வலைத்தளத்தின் மூலம் நம்பகமான,
      பயனுள்ள தகவல்களை கூடிய வரை அதிக மக்களிடம்
      கொண்டு சேர்க்க வேண்டும் என்று தான்
      முயற்சி செய்கிறேன். அதில் நீங்களும் உதவி
      செய்வதற்கு நன்றி.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  8. Padmanabhan Potti's avatar Padmanabhan Potti சொல்கிறார்:

    நண்பர்களே நான் கூறுவது கதையல்ல. உண்மை சம்பவம். எனது வாழ்க்கையில் நடைபெற்றது. மற்றவர்களுக்காக கூறுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்தமைக்கு காவேரி மைந்தனுக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் எட்டாவது வகுப்பு படிக்கும் போது ஆங்கில ஆசிரியர் எதேனும கேட்க்கும் கேள்விகளுக்கு நானும் என்னுடன்
    இரு நண்பர்களும் பதில் கூறாமையால் வெளியே அனுப்பப்படுவோம். உடனே வெளியே வந்து காலணாவுக்கு
    சொக்கலால் பீடியை வாங்கி பள்ளியின் அருகிலுள்ள தோப்பில் போய் ஆனந்தமாக புகை பிடிப்போம். இதுபோல்
    அடிக்கடி நடக்கும். இதை தெரிந்து கொண்ட வேறொரு நண்பன் ஆசிரியரிடம் கூறிவிட்டான். அன்றுமுதல் வெளியில் அனுப்பமாட்டார் அதற்க்கு பதில். பெஞ்சு மீது ஏறி நிற்க சொல்வார். வேறொன்றும் கூறமாட்டார். காரணம் அவரும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர். இது நடந்தது 1953 –ல் ஆகும்.நண்பர்கள் உயர்ந்த நிலையில் வந்து ரிடையரும்
    ஆகி விட்டார்கள். அதன்பிறகு அவ்வப்போது சிகரெட் ஆக புகை பழக்கம் மாறியது. உத்தியோகத்துக்காக வெளியூர்
    சென்றபோது ஒருநாளைக்கு அதிகபட்சம் 5 – பாக்கெட்கள் வரை புகைக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டேன். சாப்பாடு குறைந்து டீயும் சிகரெட்டும் தொடர்ந்தது. விடுமுறையில் வந்திருந்தபோது ஒருநாள் வாந்தி எடுத்தேன்.
    வயிறு எக்கிப்பாய் சுருங்கி விட்டது . நிமிர்ந்து நிற்க முடியாமல் கீழே விழுந்து விட்டேன்.. உடனே ஆஸ்பத்திரி கொண்டு சென்றார்கள். எல்லா பரிசோதனைகளையும் செய்த டாக்டர் ஒருமணி நேரத்தில் ஆப்பரேஷன் செய்யவேண்டும் இல்லைஎன்றால் பிழைக்கமாட்டார் என கூறியுள்ளார். குடும்பத்தில் அனைவரின் ஒப்புதலுடன்
    ஆப்பரேஷன் செய்யப்பட்டது. இரண்டு நாள் மயக்க நிலையில் மூன்றாவது நாள் விழித்தவுடன் மூக்கிலும்
    வாயிலும் ட்யூபுகள் சொருகப்பட்டு பச்சை நிறத்தில் திரவம் கீழே பாட்டிலில் போய்க்கொண்டிருந்தது. பத்து நாட்கள் இதே நிலை நீடித்தது. அதன்பிறகும் பத்துநாட்கள் மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ்
    ஆகி டாக்டரை பார்த்தபோது புகை பிடித்தலை நிறுத்தியே தீர வேண்டும். இல்லை என்றல் இங்கு வரவேண்டியிருக்காது. என நண்பரான டாக்டர் கூறினார். இது நடைபெற்றது 1994 -ல் ஆகும். அன்றுமுதல்
    புகை பிடிப்பதை அறவே நிறுத்தி விட்டேன். 75 — கிலோ இருந்த எடை 60 –கிலோவுக்கு குறைந்து தற்போது
    70 — கிலோவுக்கு கூடியுள்ளது. சாப்பிடவும் முடிகிறது. விளையாட்டாக தொடங்கிய புகை பிடித்தல் பழக்கம்
    வினையாக மாறிவிட்டது.

    • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

      எந்த தயக்கமும் இன்றி உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி நண்பரே.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      பத்மனாபன் போத்தி,

      இந்த விஷயத்தை நீங்கள் இங்கு வெளிப்படையாக
      பகிர்ந்து கொள்வதன் மூலம் மிகப் பெரிய சேவை
      செய்திருக்கிறீர்கள். உங்களுக்கும் ஒரு பெரிய
      relief கிடைத்திருக்கும் – இல்லையா ?
      நன்றி நண்பரே.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

    • Re. Ko. Rasuthi (Malaysia)'s avatar Re. Ko. Rasuthi (Malaysia) சொல்கிறார்:

      Valthukkal sar. Sila years ago, naam santhithu ullom. Virumbinal thodarbu kollungkal. Nantri. Re. Ko. Rasu

  9. PK's avatar kpoornima சொல்கிறார்:

    Hello Sir,
    This is fantastic, MY father is always
    Great & Best!
    Thanks for inspiring to learn abt pranayama!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      welcome my dear young friend –

      Your Father should defenitely be a lucky person
      to have you as his daughter !
      thanks for your nice words,

      with all best wishes,
      Kavirimainthan

  10. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    நல்ல பயனுள்ள இடுகை..நன்றி காவிரிமைந்தன்

    நண்பர் சைதை அஜீஸ் சொன்னதின் தொடர்ச்சி..
    சிகரெட் தொடர்ந்து புகைத்தால்..
    1)தெருவில் செல்லும்போது நாய் கடிக்காது.
    2)இரவில் வீட்டிற்கு திருடன் வரமாட்டான்
    3)தலைமுடி நரைக்காது..
    காரணம்..
    1)கையில் தடி இல்லாமல் நடக்க முடியாததால்..
    2)இரவு முழுதும் தூக்கம் இன்றி இருமிக்கொண்டே இருப்பதால்.
    3)நண்பர் சொல்லிவிட்டார்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பரே –

      தமிழில் “குசும்பு” என்கிற ஒரு வார்த்தையை
      எப்படிப் புரிய வைப்பது என்று நீண்ட நாட்களாக
      யோசித்துக் கொண்டிருந்தேன்.

      நீங்கள் பின்னூட்ட சக்கரவர்த்தி – கண்பத் !

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

        மிக்க நன்றி..
        பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்!
        நான் அடிக்கடி சொல்வதுபோல பதிவு செய்யப்படும் விஷயங்கள் “ஊட்டம்” மிக்கதாக இருந்தால் ,”பின்னூட்டம்” தானே நன்றாக அமையும்.உங்கள் நற்பணியில் எனக்கும் ஒரு சிறு இடம் கொடுத்திருப்பது என்னை நெகிழவைக்கிறது.

  11. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    நன்றி ஐயா, மிக மிக பயனுள்ள கட்டுரை. என்னுடைய நண்பர் ஒருவர் புகை பிடிப்பார். அவரை அது குறித்து எதிர் கொண்ட போது தான் பிடிப்பது ‘mild ‘, ‘lite ‘ வகையை சேர்ந்தது என்றும் அதனால் பாதிப்பு மிகவும் குறைவு என்றும் சொன்னார். எனக்கு மனம் ஒப்பவில்லை. எனவே இந்த ‘lite ‘ வகை சிகரெட்டுகள் பற்றி தேடி படித்தேன். மிரண்டு போய் விட்டேன்.

    1 ‘lite ‘ வகை சிகரெட்டுகள் சாதாரண சிகரெட்டுக்கு இடப்படும் புகையிலையை CO2 (கரியமில வாயு) உடன் சேர்த்து அதி உயர் வெப்பத்தில் பதப்படுத்தும் போது புகையிலை ‘foam ‘ போல உப்பி விடுகிறது. பின் அதை வெட்டி பேப்பர் சுருளில் அடைக்கிறார்கள். இதனால் புகையிலை அளவு சிறிது குறையும். ஆனால் இவ்வாறான சிகிரட்டை உள் இழுப்பது சாதாரண சிகிரட்டை விட சற்று கடினம். எனவே புகைப்பவர் ஒவ்வொரு முறையும் சற்று பலமாக உள் இழுப்பதால் புகை நுரை ஈரலில் அடிவரை பரவுகிறது. இதனால் பாதிப்பு சாதாரண சிகிரட் அளவோ இல்லை அதை விட அதிகமாகவே இருக்கும்.

    பொதுவாக ‘lite ‘ சிகிரட்களின் பெட்டியில் தார் அளவு குறைவாக அச்சிடப்படிருக்கும். இந்த தார் அளவு தர கட்டுபாட்டு நிறுவனங்களில் உள்ள சோதனை சாலையில் அளவிடப்பட்டு சான்றிதழ் பெறப்படுகிறது. இந்த சோதனை சாலைகளில் சிகிரட்டை புகைக்கும் இயந்திரங்கள் உள்ளன. அவைக்கு ஒரு சிகிரட்டை பற்ற வைத்து அதில் செருகி விட்டால் அது புகையை உள்ளிழுத்து அதில் உள்ள கூறுகளை அளவிட்டு கூறி விடுகிறது. இந்த சிகிரெட் கம்பனிகள் எப்படி சட்டத்திற்குட்பட்டு இயந்திரத்தை ஏமாற்றுகின்றன என்பது குறித்து ஒரு கட்டுரை படித்தேன்.

    முதலாவதாக இந்த ‘lite ‘ வகை சிகிரேட்டின் பில்ட்டர் அருகே நுண்ணிய துளைகளை போட்டு விடுவார்களாம். அதனால் இயந்திரம் உள் இழுக்கும் போது புற சூழலில் உள்ள காற்றும் சேர்ந்து உள்ளே செல்வதால் அதில் உள்ள இரசாயனகள் நீர்த்து விடுகின்றன. அதே சிகிரட்டை மனிதன் பிடிக்கும் போது அவன் உதடும் அவன் விரல்களும் அந்த துளைகளை மூடி விடுமாம். அவனுக்கு புகை எந்த கலப்படமும் இன்றி உள் செல்கிறது. ஏன் இப்படி என்று கேட்பீர்கள். என்ன தான் ‘lite ‘ என்று போட்டாலும் அதில் ‘கிக்’ இல்லாவிட்டால் மனிதன் அந்த சிகிரட்டை மீண்டும் வாங்க மாட்டானாம். ஆகவே ‘lite ‘ என்பது இயந்திரத்துக்கே தவிர மனிதனுக்கு அல்ல.

    இன்னொரு வகை ஏமாற்றுதல் எப்படி என்றால் ‘lite ‘ வகை சிகரெட்டுகள் செய்யப்படும் பேப்பர் சதா சிகிரெட்டை விட சீக்கிரம் எரிந்து முடிந்து விடுமாம். இப்போ இந்த சிகிரட்டை இயந்திரத்தில் செருகினால் அது சீக்கிரம் எரிந்து முடிந்து விடுவதால் இயந்திரம் உள் இழுத்த புகையின் அளவு குறைவாக இருக்கும் இதனால் அதில் உள்ள தார் போன்ற இரசாயங்களின் அளவும் குறைவாக இருக்கும்.

    இதை விட முக்கியம் இயந்திரம் இழுப்பது போல் மனிதன் சிகிரட்டை ஒன்று போல் உள் இழுப்பதில்லை.மனிதன் நேசத்துடன் ரசித்து, ஊண்றி, உறிஞ்சி புகையை இழுப்பதால் பாதிப்பு, சோதனை சாலையில் தெரியப்படுத்துவதை விட அதிகம் தான்.

    நான் இதை இங்கு எழுத காரணம், இபோதெல்லாம் படித்த முட்டாள்கள் நான் சாதா ‘coke குடிப்பதில்லை. மாறாக diet coke இல்லை sugar free coke என்று சொல்வது பேஷன் ஆகி போய் விட்ட நிலையில், ஏன் நண்பனை போல் நான் குடிப்பது lite சிகிரெட் என்று தங்களை தாங்களே ஏமாற்றி கொள்ள கூடாது என்பதற்காக தான்.

    இதை எழுத வாய்பளித்த கா மை ஐயாவுக்கு நன்றிகள் கோடி

    • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

      அருமையான ,பயனுள்ள விவரங்கள்.
      மிக்க நன்றி எழில்!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      அருமை – எழில் !

      “லைட்” பற்றி நல்ல “ஹெவி”யான தகவல்.
      இன்னமும் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும்
      நண்பர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய ஒரு
      விஷயம் இது.

      எழில் – நிறைய படிக்கிறீர்கள் போலிருக்கிறது.
      எந்த தலைப்பில் எழுதினாலும், கூடுதல் தகவல்
      தர உங்களால் முடிகிறது !

      நல்ல பழக்கம் – தொடர வாழ்த்துக்கள்.

      அன்புடன்,
      காவிரிமைந்தன்

      • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

        நன்றி ஐயா! எனது சிறு வாசிக்கும் ஆர்வத்துக்கு கிடைத்த முதலாவது மிக பெரிய அங்கீகாரமாக உங்கள் வார்த்தைகளை கருதி மகிழ்கிறேன். .

        இணையத்தில் பல வலை பூக்களை படித்தாலும், நான் கருத்து எழுதும் ஒரே தளம் உங்களுடையது மட்டுமே. காரணம். சமூக நன்மை கருதி நீங்கள் ஆற்றும் இந்த அரிய பணியில் என்னாலும் எள்ளளவு பங்களிக்க முடிகிறது என தோன்றும் மன திருப்தி தான்.

        மேலும் பல படித்தறிந்தவர்களும் பட்டறிந்தவர்களும் அரிய கருத்துக்களை பின்னூட்டமாக இடுவதால், நல்ல நட்பு வட்டாரத்தில் இருப்பது போன்ற நல்ல உணர்வு ஏற்படுகிறது.

        சகலதிற்கும் காரண கர்த்தாவாகிய உங்களுக்கு மீண்டும் நன்றிகள்!

  12. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    Very useful post by you, KM, and equally beneficial inputs from other commentators. I had a boss who was a chain smoker for years. I observed that he didn’t smoke for one full day. Upon my enquiry, he said that the previous day was his daughter’s birthday and he asked her what gift he could give her. She just made only one request, that he should leave his cigarette addiction. That prompted him to stop smoking totally, and since then, until I was working with him, I didn’t see him smoking. Apparently, love and affection for his daughter won him over to stop his decades-old habit. Btw, Balakumaran and I were colleagues years back in TAFE; both of us moved on with our lives.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      That is excellent of you
      Mr.Chandramouli… !

      Day by day – I find that wonderful
      inputs are being offered by the
      friends who visit this blog-site.

      As Mr.Ezhil has rightly said – well
      read, knowledged and experienced
      people who visit this Blog – take
      lot of liberty, develop a feeling of
      oneness -and offer very valid inputs
      thro’ their comments.

      It makes value additions to the
      Blog and makes it more useful
      and rich in contents.

      I am very happy about this.

      Please continue to share your
      feelings and experience
      in this column.

      With all best wishes,
      Kavirimainthan

  13. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    நல்ல பதிவு. ramanans நல்ல பின்னூட்டம். ஆனால், பிராணாயாமம்
    செய்வது எப்படி என்கிற புத்தகத்தை/சிடியை வாங்கி வைத்துக்
    கொண்டு பிராணாயாமம் பழகிவிட முடியுமென்று நான் கருதவில்லை.
    இடதில் வாங்கி வலதில் விடுவது என்பது சொல்வதற்கும்
    எழுதுவதற்கும் வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம். ஆனால்
    பிராணயாமம் “மிக சுலபமான” பயிற்சியல்ல. உபதேசம் பெற்று
    தொடர்ந்து செய்து வ்ருபவர்களுக்கு வேண்டுமானால் எளிதாக
    இருக்கலாம். உண்மையில் மிகுந்த சிரத்தை தேவைப்படுகின்ற
    காரியமாகும்.

    ஆயின் இப்போதெல்லாம் நிறைய “சத் குருக்கள்” ஊருக்கு ஊர்
    போஸ்டர் ஒட்டி ஆள் சேர்த்து, மிக மிக லகுவான காரியம் போல்,
    பயிற்றுவித்து வருகிறார்கள்.

    உயிரினங்களின் (மனிதனின்) வாழ்நாளை மூச்சுக் காற்று மட்டுமா
    தீர்மானித்து விடுகிறது? நல்ல பழக்க வழக்கங்கள், பூர்வ புண்ணிய
    கர்மாக்களுக்கு அதில் பங்கில்லையா?

    இந்தியா சிமெண்ட் சீனுவாசனின் மகன் போதை அடிமையாவதும்,
    ஓரின சேர்க்கை ஆளாக இருப்பதும், சீனுவாசனின் கர்மா என்றால்,
    பாலகுமாரனின் மூச்சுத்திணறலுக்கு யாருடைய கர்மா காரணம்?

    தவிர, விசிறி சாமியாரின் அந்தரங்க (அப்படி ஒன்றிருந்ததா?) பக்த
    கோடிகளின் பிரதான (?!) சீடரல்லவா இவர். அவர்தான், இவரின்
    மூலாதரத்தில் மூண்டெழும் கணலை எழுப்பிவிட்டிருக்கிறாரே.
    (காபி வித் அனுவில் அண்ணாரின் வாக்குமூலம் சாட்சி) பின்னர்
    எவ்விதம் இத்துன்பம்?

    மனிதனுக்கு மரணம் சம்பவிக்கும் முன்னர் அவனுக்கு நோயினால்
    ஏற்படும் கடும் துன்பமெல்லாம் அவனது கர்மாவினால் உண்டாவது.
    அனுபவித்துத் தான் ஆக வேண்டும். யாராய் இருந்தாலும். அதுவே
    ஈஸ்வரனின் நீதி.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் வெங்கட்ரமணி,

      நாம் இந்த இடுகையில் எடுத்துக்கொண்ட விஷயம் –
      சிகரெட் பழக்கத்தினால் வரும் துன்பங்கள்/நோய்க்
      கொடுமைகள் பற்றி. இது மருத்துவ சம்பந்தப்பட்ட
      ஒரு உண்மை.

      அதேபோல் பிராணாயாமம் என்கிற மூச்சுப்பயிற்சியும்
      மருத்துவ விஞ்ஞானம் தான். அதனால் – நுரையீரலின்
      செயல்பாடு வலுவடைகிறது என்பது விஞ்ஞானபூர்வமாக
      நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

      சிகரெட்டினால் வரக்கூடிய துன்பங்களும், அதைத்தவிர்க்க
      பிராணாயாமம் பழகினால் பெறக்கூடிய நன்மைகளும் பற்றி
      இங்கே ஒரு கோடு போட்டுக் காட்டப்படுகிறது. இதைப்படித்து
      ஆர்வம் கொள்பவர்கள் பிராணாயாமம் பழகும் விதத்தை –
      ஏற்கெனவே தெரிந்தவர்களிடமிருந்து – சுலபமாக – ஆமாம்
      சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம்.
      நிச்சயமாக – இது கடினம் அல்ல.

      எப்படிச் செய்தால் அதிகம் அனுகூலம் பெறலாம் என்பதை
      பழக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

      இதைப்பற்றி எல்லாம் – தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள
      ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் இதை
      எழுதினேன். அது கஷ்டம் இது கஷ்டம் என்று பயமுறுத்தினால்
      யாருக்கு இதில் ஆர்வம் வரும் ?

      நீங்கள் “கர்மா” பற்றி சொல்லி இருக்கிறீர்கள் –
      இது நம்பிக்கை சார்ந்த மிகப் பெரிய விஷயம்.
      தெரிந்து கொள்ள, விவாதிக்க – நிறைய இருக்கிறது.
      இங்கு முடியாது.
      ஆனால் சிம்பிளாக ஒரு வார்த்தை – எப்படிப்பட்ட
      “கர்ம வினை”களின் தீவிரத்தையும் இப்பிறப்பில் நாம்
      மேற்கொள்ளும் புண்ணிய காரியங்களின் மூலம் குறைக்க
      முடியும் என்று காஞ்சி முனிவர் சொன்னதை நீங்கள்
      அறிந்து தான் இருப்பீர்கள்.
      யார் மீதோ உள்ள கோபம் -இங்கே வெளிப்படுகிறது.
      போகட்டும் விடுங்கள் !

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  14. Ilippu's avatar Ilippu சொல்கிறார்:

    The ratio should be 2:8:4 in other words the holding time is 4 times the inhalation;
    exhalation is twice as long as inhalation.

  15. prakash's avatar prakash சொல்கிறார்:

    மூச்சு விடுவது எப்படி ?
    நேரம் காலம் தெரியாம கணினி முன் அமர்ந்து வேலை செய்யலாம். படிக்கலாம் அல்லது ஓய்வில் இருக்க்லாம். என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அப்போது அல்லது எப்பவாவது மூச்சைக்கவனித்து இருக்கிறோமா?

    அதென்ன மூச்சைக் கவனித்தல்? மூச்சைக் கவனித்தால் மனம் அடங்கும் என்கிற நுட்பங்களுக்குள் நாம் செல்ல வேண்டுமா? மேலோட்டமாக பார்த்தால் போதாதா.?

    போதும் . மேலோட்டமாகவே பார்ப்போம். நாம் உட்கார்ந்து செய்யக்கூடிய வேலை எதுவாயினும் உடல் பொதுவாக நிமிர்ந்த நிலையில் இருக்காது என்பதைக் கவனியுங்கள். மூச்சு எண்ணிக்கை அல்லது மூச்சின் நீளம் குறையக் காரணம் பல இருந்தாலும் முக்கியமானது நேராக உட்காராமைதான் 🙂

    மூச்சுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். செத்தா போய்விட்டுவோம்? உடல் அதற்குத் தேவையான அளவு மூச்சை எடுத்துக்கொள்ளத்தானே செய்யும் என்றால் ஆமாம். ஆனால் அந்த மூச்சு உயிரோடு இருக்கப் பயன்படுமே தவிர நம்மை உயிர்ப்போடு வைத்திருக்காது.

    மூச்சு இழுத்துவிடுவதில் உடனடி பலனை இரத்தம் பெறுகிறது. இரத்தம் வளமானாலே நோய் என்பது உங்களை விட்டு தூர விலகிவிடும்.

    மூச்ச இழுன்னு சொன்னா நமக்குத் தெரிஞ்சதெல்லாம் டாக்டர் நெஞ்சுல ஸ்டெதஸ்கோப்ப வச்சுக்கிட்டு மூச்ச இழுக்கச் சொன்னதும், வயித்த எக்கி நெஞ்சுக்கூட்ட உயர்த்தி தம் கட்டி மூச்ச்ச இழுக்கறதுதான் தெரியும் :). இப்படி இழுக்கும்போது நுரையீரல் நிறைய காற்று நிரம்புவது போல் தெரிஞ்சாலும் உண்மையில் சற்றே அதிகம் இழுக்கிறோமே தவிர முழுமையாக காற்றை இழுப்பதில்லை.

    சரி மூச்சை சரியான விதத்தில் இழுப்பது எவ்வாறு? தபால்ல நீச்சல் பழகுவதுபோல இந்த இடுகையில், எழுத்தில், எப்படி மூச்சு விட்டுப் பழகுவது?:)

    முதலில் நிமிர்ந்து அமர்ந்து கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு, நுரையீரலில் காற்றை இழுப்பது என்பதற்கு பதிலாக, மூக்கின் வழியே காற்றை ஊற்றுவதைப் போன்ற உணர்வுடன் காற்றை மிக மெதுவாக இழுத்துப் பாருங்கள்.

    இதைச் சரியாகச் செய்கிறோமா என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்தானே., எவ்வாறு?…

    காற்று நுரையீரலின் கீழ்பகுதியில் நிறையும் போது அடிவயிற்றின் முன்புறங்கள் முன்னோக்கி வரும். அடுத்து இயல்பாக நெஞ்சுக்கூடு, விலா எலும்புகள் விரிவடையும். மேலும் காற்று நிறைய நிறைய உடல் இன்னும் நிமிர்ந்து அடிவயிற்றின் கீழ்பாகம் சற்றே உள்நோக்கி நகரும். இந்த நிலையில் காற்று இழுப்பது தானாக நின்றுவிடும். மிகச்சில நொடிகள் இயல்பாக தம் கட்டாமல் காற்றைப் பிடித்து வைத்துவிட்டு இயன்ற அளவு மெதுவாக மூச்சுக்காற்றினை வெளியேற்றவும். வெளியேற்றும்போது அடிவயிற்றினை சற்று இறுக்கி காற்றை வெளியேற்ற வேண்டும் காற்று வெளியே போனதும் நெஞ்சினையும் அடிவயிற்றினையும் நன்கு தளர்த்தி விட்டுக்கொண்டு மறுபடியும் துவங்கவும்.

    இப்படி நேரம் கிடைக்கும்போதெல்லாம் செய்து வாருங்கள். உணவு உண்டவுடன் மிதமாகச் செய்யுங்கள். கிடைக்கும் நன்மைகளை எனக்கு நீங்கள் பட்டியல் இடுவீர்கள்.:))

    சாதி, மதம், இனம், அரசியல் தாண்டி உடல்நலம், மனநலம் என்பது எல்லோருக்கும் பொதுதான். அதுபோல் காற்று எல்லோருக்கும் பொதுதான். அதை முறையாக பயன்படுத்திப்பாருங்களேன் இலவசமாக 🙂

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக நண்பர் பிரகாஷ்.

      மிகவும் பொருத்தமான, நல்லதொரு
      பின்னூட்டம்.

      என்ன – இந்த topic போட்டவுடன் இந்த பின்னூட்டம்
      வந்திருந்தால் இன்னும் நிறைய பேர் படித்திருப்பார்கள்.
      இவ்வளவு நாட்களாக எங்கே இருந்தீர்கள் பிரகாஷ் ?

      அடிக்கடி அவசியம் வாருங்கள். கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.
      நன்றி.

      – வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

        //அதுபோல் காற்று எல்லோருக்கும் பொதுதான். அதை முறையாக பயன்படுத்திப்பாருங்களேன் இலவசமாக //
        நான் வன்மையாக கண்டிக்கிறேன் நண்பர் பிரகாஷை!
        எப்படி “இலவசம்” எனும் வார்த்தையை பயன்படுத்தலாம்?
        அதுதான் “அகராதி”யில் விலையில்லா… அப்படின்னு மாத்தியாச்சே!
        எப்படியோ நல்ல செய்தியை விளக்கியதற்கு நன்றிகள்.
        better late than never
        hats off to Mr. prakash

        • prakash's avatar prakash சொல்கிறார்:

          மிக தாமதமாக மறுமொழி இட்டதற்கு மன்னிக்கவும் !. அடுத்த முறை கண்டிப்பாக சீக்கிரமாக மறுமொழி இடுவேன். உங்களது பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. அடுத்த முறை உங்களது உபயோகமான பதிவுகளுக்கு எனது உபயோகமான மறுமொழி உடனே வரும்.

      • prakash's avatar prakash சொல்கிறார்:

        மிக தாமதமாக மறுமொழி இட்டதற்கு மன்னிக்கவும் !. அடுத்த முறை கண்டிப்பாக சீக்கிரமாக மறுமொழி இடுவேன். உங்களது பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது. அடுத்த முறை உங்களது உபயோகமான பதிவுகளுக்கு எனது உபயோகமான மறுமொழி உடனே வரும்.

        நன்றி !

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.