ராம் ஜெத்மலானி – ஆசீர்வாதம் ஆசாரி –
குறுக்கு விசாரணை –
கனிமொழிக்கு பலன் உண்டா ?

2ஜி வழக்கு, குறுக்கு விசாரணை தொடர்பான
செய்திகள்,செய்தித்தாள்களில், அதுவும் தமிழில்,
விவரமாக வெளிவருவதில்லை. எனவே –
அது குறித்த, சில சுவையான விவரங்களை
இங்கு கொடுக்கிறேன்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில்,கனிமொழியின் சார்பாக
ஆஜராகும் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி
இந்தியாவின் முன்னணி வக்கீல்களில் ஒருவர்.
அவர் குறுக்கு விசாரணையில் சிக்கிய யாரும்
அநேகமாக, முழுசாக வெளியே வந்ததில்லை.
ஆனால் -அரசு தரப்பில் முக்கிய சாட்சியான,
முன்னாள் அமைச்சர் ராஜாவிடம் செயலாளராக
பணிபுரிந்த – ஆசீர்வாதம் ஆசாரியை
ராம் ஜெத்மலானி பல விதங்களிலும் கிடுக்கிப் பிடி
போட்டு பார்த்தும், சிக்காமல் வழுக்கிக் கொண்டு
வெற்றிகரமாக வெளியே வந்து விட்டார் ஆசாரி.
ஆசாரி நம்பகத்தன்மை இல்லாதவர் – அவர்
சிபிஐ யிடம் ராஜாவுக்கு எதிராக கொடுத்திருக்கும்
வாக்குமூலம் நம்பகத்தன்மை அற்றது என்று
கோர்ட்டில் உறுதிப்படுத்த பல கோணங்களிலும்
வலையை வீசினார் ஜெத்மலானி.
முதலில் – ஆசாரி சிபிஐ யிடம் வாக்குமூலம்
கொடுத்ததற்கு காரணம் –
அவர் முன்பு பணி
புரிந்து வந்த ரெயில்வே துறையில், அவர் மீது
வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக எழுந்த
வழக்கைத் தீவிரமாக்குவதாக சிபிஐ கொடுத்த
அச்சுறுத்தல் என்றும்,
பின்னர் – காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிர
அரசியலில் ஈடுபட விரும்பியதால், அவர்கள்
சொல்லிக் கொடுத்தது போல் செய்தார் என்றும்,
பின்னர் – ஆசாரி ஆடம்பரமான வாழ்க்கை
நடத்தும் பின்னணிக்கு காரணம் தவறான
முறைகளில் அவர் சம்பாதித்த பணம் என்றும்,
பின்னர் – 2.5 யிலிருந்து 4 லட்சம் ரூபாய்
வரை விலைமதிப்பு இருக்கக்கூடிய
விலையுயர்ந்த CLR செல்போனை அவர்
வைத்திருப்பது எப்படி என்றும்,
பின்னர் – ஆசாரி தன் மனைவிக்கு அமைச்சர்
ராஜாவின் செல்வாக்கை பயன்படுத்தி வேலை
வாங்கியது எப்படி என்றும்,
பின்னர் – ஆசாரி செப்டம்பர் 2007 க்குப் பிறகு
ராஜாவிடம் பணி புரியும்போது, சிபிஐ க்காக
ஒற்று வேலை புரிந்தார் என்றும்,
பின்னர் – ஒய்வு பெற்ற டெலிகாம் செயலாளர்
மாத்தூருக்கும் – அமைச்சர் ராஜாவுக்கும் பகை
என்று அவர் வாக்குமூலத்தில் சொல்லி இருப்பது
சிபிஐ சொல்லிக்கொடுத்தது என்றும்,
பல விதங்களிலும் – துளைத்து துளைத்து,
எரிச்சல் ஊட்டக்கூடிய வகையிலும், அச்சுறுத்தும்
வகையிலும், கொக்கி போட்டு தூண்டி விடக்கூடிய
விதத்திலும் கேள்விகள் கேட்டாலும் –
அநியாய நிதானத்துடன் பதில் சொல்லி விட்டு
காயம் படாமல் வெளியே வந்து விட்டார் ஆசீர்வாதம்
ஆசாரி. ராம் ஜெத்மலானியிடம் இருந்து இவ்வளவு
சாமர்த்தியமாகத் தப்பிய ஆசாரியை ஆச்சரியத்துடனே
பார்க்கிறார்கள் மற்ற வக்கீல்கள் !
இரண்டு நாட்கள் நடந்த விசாரணையின் ஊடே
ஆசீர்வாதம் ஆசாரி கொடுத்த தகவல்கள் —
ஜெத்மலானி சொன்னது போல் தன் செல்போனின்
விலை 2.5 முதல் 4 லட்சம் ரூபாய் வரை அல்ல.
வெறும் 4,914 ரூபாய் மட்டுமே.
(முதல் நாள் – அந்த செல்போன் தன் மனைவிக்கு
லண்டனில் வசிக்கும் அவரது சகோதரர் கொடுத்தது
என்றும் அதன் விலை தனக்கு தெரியாது என்றும்
சொல்லி இருந்தார் !)
இலாகா பூர்வமாக தன் மீது எத்தகைய வழக்குகளோ,
விசாரணைகளோ இல்லை.
சிபிஐ தனக்கு சொல்லிக்கொடுத்து –
தான் எதையும் சொல்லவில்லை.
ராஜா தன் சகோதரர் போன்றவர். அவரிடம்
10 வருடங்கள் பணி ஆற்றி இருக்கிறார். எனவே
அவரைப் பற்றி நன்கு தெரியும்.
ராஜாவும்- கனிமொழியும் மிக நெருக்கமாக
பழகி வந்தார்கள். இருவரும் ஒருவர் இருப்பிடத்திற்கு
மற்றவர் சர்வ சகஜமாக போய் வந்து கொண்டிருந்தனர்.
கலைஞர் டிவியை, டாட்டா நெட்வொர்க்கில்
இணைக்க ராஜாவின் உதவியை கனிமொழி நாடினார்.
வழக்கு எங்கு போய் முடியும் என்பதை ஓரளவு
ஊகிக்க முடிந்தாலும் கூட, குறுக்கு விசாரணை
என்பது எப்போதுமே, அதுவும் இது போன்ற
வழக்குகளில் விறுவிறுப்பாகத் தான் இருக்கும்.
இதில் ஒரு தமாஷான நிகழ்வும் இருந்தது.
பதில் சொல்ல அவகாசம் எடுத்துக் கொள்ள ஆசாரி
ஒரு தந்திரம் செய்தார். ஜெத்மலானியின்
முக்கால்வாசி கேள்விகளுக்கு – சரியாகப் புரியாதது
போல், மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் என்றே
கேட்டுக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் இந்த
தந்திரத்தை கவனிக்காத ஜெத்மலானியும் சீரியசாக
மீண்டும், மீண்டும் அதே கேள்விகளைக்
கேட்டுக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்திற்கு மேல், விஷயம் புரிந்த ஜெத்மலானி
கடுப்படைந்து – நீதிபதியிடம் புகார் செய்தார்.
—————————
தேவை இருக்குமானால், அவ்வப்போது இது குறித்து
எழுதுகிறேன்.



” நிச்சயம் உண்டு” என்கிறது டெல்லி குருவி. பார்க்கலாம்.
இந்த நிகழ்வுகளை பார்க்கும்போது மீடியா எனப்படும் இந்த மாய விழிகள் (நமது விமரிசனம் போன்ற சிலவற்றை தவிர) கண்களை மூடிக்கொண்டு வேலை பார்க்கிறது. மேலும் தனது பர்சையும் நிரப்பிகொள்கிறது பின்வாசல் வழியாக