புனிதமான உறவை ஏன் இப்படி கொச்சைப் படுத்துகிறார்கள் ?

புனிதமான உறவை ஏன் இப்படி
கொச்சைப் படுத்துகிறார்கள் ?

கடந்த 10 நாட்களாக மீடியாவில்
எங்கே பார்த்தாலும் ஷோயப் -சானியா -ஆயிஷா
திருமண விவகாரம் தான்.

இந்தப் பெண்ணை நான் பார்த்ததே இல்லை.
இவர் வீட்டிற்குச் சென்றதும் இல்லை.
இவருடன் திருமணம் செய்ததாகக் கூறுவது பொய்.
சானியாவுடன் எனக்கு நடக்கப்பொவது தான்
என் முதல் திருமணம்

ஷோயபின் முதல் கட்ட வாக்குமூலங்கள்.

1990-ல் துபாயில் முதன் முதலாகச் சந்தித்தோம்.
ஒருவரை ஒருவர் விரும்பினோம்.
நான் குண்டாக இருப்பது தான் அவருக்கு கொஞ்சம்
சங்கடமாக இருந்தது.
1992-ல் திருமணம் செய்து கொண்டோம்.
இது வரை 14 முறை சந்தித்திருக்கிறோம்.
ஒருமுறை அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் டீம்
முழுவதையுமே எங்கள் வீட்டிற்கு அழைத்து
வந்திருந்தார்.
அவருடன்  ஓட்டலில் தனியே
தங்கி இருந்திருக்கிறேன்.
எங்களுக்குள் உடல் ரீதியான உறவு ஏற்பட்டது.
அவரால் நான் கர்ப்பம் தரித்தேன்.
கர்ப்பம் கலைந்து விட்டது.
டாக்டரே சாட்சி.
அவர் கையெழுத்திட்ட நிக்காஹ் நாமாவே சாட்சி.
–  இது  ஆயிஷாவின் வாக்குமூலம்.

யாருடைய போட்டோவையோ காட்டி ஏமாற்றி
விட்டார்கள். நான் திருமணம் செய்துகொண்டது
இந்தப் பெண்ணை அல்ல. இவர் எனக்கு
அக்கா போலவும், அத்தை போலவும் இருக்கிறார்.
நான் வீட்டிற்குச் சென்ற 4 முறையும் இவர்
வெளியில் போயிருப்பதாகக் கூறி இவரைக்
காட்டாமலே ஏமாற்றி விட்டார்கள்.
நான் போட்டோவைப் பார்த்து நிக்காஹ் நாமாவில்
கையெழுத்துப் போட்ட பெண் வேறோருவரைத்
திருமணம் செய்து கொண்டு விட்டார்.
எனவே ஆயிஷாவை விவாகரத்து செய்யும்
பேச்சுக்கே இடமில்லை.

–  இது ஷோயபின் அடுத்த கட்ட,
முரண்பட்ட  வாக்குமூலம்.

எனக்கு எல்லாம் முன்பே தெரியும்.
யார் எதிர்த்தாலும் –
யார் என்ன சொன்னாலும் –
எது எப்படி இருந்தாலும் கவலை இல்லை.
எனக்கும் ஷோயபுக்கும்
ஏப்ரல் 15-ல்  திருமணம் நடப்பது உறுதி.

இது சானியா மிர்சாவின் வாக்குமூலம்

என்ன கேவலம் இது.
திருமணம் என்பது இவ்வளவு மோசமாகப்
பேசப்படும் கேலிக்கூத்தா ?

அது என்ன ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர்
பார்க்காமலே திருமணம் செய்து கொள்வது ?

டெலிபோனிலேயே திருமணம் செய்வதும்,
டெலிபோனிலேயே  விவாகரத்து செய்வதும் –
சமுதாயம் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் ?

ஷோயப் சொல்வது உண்மையானால் – அவருக்கு
பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

ஆயிஷா சொல்வது உண்மையானால் – பெண்ணாக
இருப்பதால் அவருக்கு இன்னும் பெரிய அநீதி
இழைக்கப்படுகிறது.

இடையில் இந்த விவகாரத்தை ஏதோ இரண்டு
நாடுகளுக்கு இடையே ஏற்படும் பெரிய போர் போல-
ஷோயபிற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும்
பாகிஸ்தான் அரசு செய்யும் என்று அந்நாட்டு
அரசாங்கம் அறிவிப்பதும் –

என்ன பைத்தியக்காரத்தனம்  இது ?

எத்தகைய திருமணமாக இருந்தாலும் – ஒன்று
சட்டப்படி நடந்திருக்க வேண்டும். இல்லையென்றால்
சம்பிரதாயப்படி நடந்திருக்க வேண்டும்.

இது சட்டப்படி நடக்கவில்லை.
சம்பிரதாயப்படி நடந்திருந்தால், இரு தரப்பிலும்
மதப் பெரியவர்கள் யாராவது கையொப்பம்
இட்டிருக்க வேண்டுமே.

அந்த சமுதாயத்தைச் சேராத  எனக்கே இந்த விஷயம்
அவமானகரமானதாக இருக்கிறதே –

அந்தப் பெரியவர்கள் ஏன் இன்னும்  வாய் மூடி மௌனம்
சாதிக்கிறார்கள் ?

எந்த சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்,
பிறப்பு, இறப்பு, திருமணம் ஆகியவற்றை
கட்டாயமாக முறைப்படி பதிவு செய்ய வேண்டும் என்கிற
விதியை பின்பற்றினால் இத்தகைய அவலங்கள்
ஏற்படுமா ?

திருமணச் சடங்குகளை அவரவர் சம்பிரதாயப்படி
எப்படி வேண்டுமானலும் செய்யட்டும்.
ஆனால் பதிவு
மட்டும் கட்டாயம் என்று இனியாவது அரசாங்கம்
வலியுறுத்த வேண்டும்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டாயப் பதிவு, டெலிபோன் திருமணம், தமிழ், திருமணத்திற்கு முன், பெண்ணியம், பொது, பொதுவானவை, விவாகரத்து, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to புனிதமான உறவை ஏன் இப்படி கொச்சைப் படுத்துகிறார்கள் ?

  1. ஜெகதீஸ்வரன்'s avatar ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

    கல்யாணம் முடுஞசு போச்சு. இனி சானியாவை நான் பார்த்தேயில்லையென சொன்னாலும் சொல்லுவார்….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.